Tuesday, 26 May 2009

[பாடம்-3] கல்வி.

கல்வியின் சிறப்பு.

54. 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதுஅவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.'' அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

கல்வியை உரத்த குரலில் போதிப்பது.

55. 'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்

மக்களின் அறிவுத் திறனைச் சோதிப்பதற்காக ஒரு தலைவர் மக்களிடமே கேள்வி கேட்பது.

56. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டபோது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' எனத் தோழர்கள் கேட்டதற்கு, 'பேரீச்சை மரம்' என்றார்கள்'' என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

கற்பித்தல்.

57. நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியிலுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் 'உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத்(ஸல்) அவர்கள்)' என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி(ஸல்) அவர்களை 'அப்துல் முத்தலிபின் பேரரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாது' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பியதைக் கேளும்' என்றார்கள். உடனே அம்மனிதர் 'உம்முடையதும் உமக்கு முன்னிருந்தோரதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு அவர்கள் 'அல்லாஹ் சாட்சியாக ஆம்!' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர், 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம் (இறைவன் மீது சாட்சியாக' என்றார்கள். உடனே அம்மனிதர் 'நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்' என்று கூறிவிட்டு 'நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சகோதாரன்' என்றும் கூறினார்'' என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

58. 'நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் தம் மடல் ஒன்றைக் கொடுத்து அனுப்பி அதனை பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறு அம்மனிதர் பஹ்ரைன் மன்னரிடம் ஒப்படைத்தார். அவர் அதை (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடம் ஒப்படைத்துவிட்டார். அதனைக் கிஸ்ரா படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்து எறிந்தான். '(இச்செய்தியைக் கேள்விப்பட்டதும்) நபி(ஸல்) 'அவர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டும்'' என்று அவர்களுக்கு எதிராக (இறைவனிடம்) பிரார்த்தித்தார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

59. நபி (ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்கமாட்டார்கள்' என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்'' என்பதாகும். நபி(ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது'' என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

ஓர் அவையில் கடைசியில் அமரலாம். வட்டமாக அமர்ந்து இருப்பவர்களுக்கிடையில் இடைவெளி இருந்தால் அதிலும் அமரலாம்.

60. 'நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்'' என அபூ வாக்கித் அல் லைஸீ (ரலி) அறிவித்தார்.

''நேரில் கேட்டவரை விடக் கேட்டவரிடம் கேட்கும் எத்தனையோ பேர் நன்கு புரிந்து கொள்கிறார்கள்'' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.

61. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், 'இது எந்த நாள்?' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். 'இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?' என்றார்கள். அதற்கு 'ஆம்' என்றோம். அடுத்து இது 'எந்த மாதம்?' என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மௌனமாக இருந்தோம். 'இது துல்ஹஜ் மாதமல்லவா?' என்றார்கள். நாங்கள் 'ஆம்!' என்றோம். அடுத்து '(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்' என்று கூறிவிட்டு 'இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்' என்றார்கள்'' என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

மக்கள் சலிப்படையாதிருக்க நபி (ஸல்) அவர்கள் பக்குவமாகப் போதனை செய்ததும், கல்வி புகட்டியதும்.

62. 'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாள்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்'' என இப்னு மஸ்வூத் (ரலி) கூறினார்.

63. 'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ் (ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் யாருக்கு மிகப் பெரும் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்.

64. 'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும்வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என முஆவியா (ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

கல்வியில் விளக்கம் பெறுவது.

65. நான் இப்னு உமர் (ரலி) உடன் மதீனா வரை சென்றபோது அவர் வாயிலாக 'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு பேரீச்ச மரக் குருத்து கொண்டு வரப்பட்டது. அதைக் கண்டதும் 'மரங்களில் ஒரு வகை மரமுள்ளது அது முஸ்லிமுக்கு உவமானமாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூறிட எண்ணினேன். ஆனால் அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் மிக்க இளையவனாயிருந்ததால் மௌனமாயிருந்து விட்டேன். அப்போது நபி(ஸல்) 'அது பேரீச்ச மரம்!'' என்றார்கள்' என்ற ஒரே ஒரு ஹதீஸைத் தவிர (வேறெதனையும்) அறிவித்தாக நான் கேட்டதில்லை'' என முஜாஹித் அறிவித்தார்.

கல்வி மற்றும் ஞானத்தில் தாமும் பிறரைப் போன்று சிறந்து விளங்க ஆர்வம் காட்டுதல்.

66. 'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

''இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று

67. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அணைத்து 'இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

சிறுவர்களின் கேள்வித் திறன் எப்போது சீராகும்?

68. 'நான் பெட்டைக் கழுதை ஒன்றின் மீது சென்று கொண்டிருந்தேன். அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மினாவில் தடுப்பு எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) தொழுது கொண்டிருந்தார்கள். கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினிடையே கடந்து சென்று ஒரு வரிசையில் நானும் புகுந்து கொண்டேன். என்னுடைய அச்செயலை யாரும் ஆட்சேபிக்கவில்லை'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

69. 'நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்'' என மஹ்மூது இப்னு ரபீவு (ரலி) கூறினார்.

கற்போர் மற்றும் கற்பிப்போரின் சிறப்பு

70. 'அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

கல்வி மறைவதும் அறியாமை வெளிப்படுவதும்.

71. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ் (ரலி) அறிவித்தார்.

72. 'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்'' என அனஸ் (ரலி) அறிவித்தார்.

கல்வியின் சிறப்பு.

73. 'நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒரு பால் கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீத மிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப் பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'கல்வி' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

பிராணிகளின் மீதும், ஏனையவற்றின் மீதும் நின்ற நிலையில் தீர்ப்பளித்தல்.

74. 'நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் நின்றிருந்தார்கள். மக்கள் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்' என்றார். அதற்கவர்கள் 'பரவாயில்லை நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்' என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்' என்றார். அதற்கு நபியவர்கள் 'பரவாயில்லை எறிந்து கொள்ளும்!' என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் 'பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்' என்றே பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்''என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

கை அல்லது தலையினால் சைகை செய்து தீர்ப்பு வழங்குதல்

75. '(ஒரு காலத்தில்) கல்வி பறிக்கப்பட்டு விடும். அறியாமையும் குழப்பங்களும் பரவிவிடும். கொந்தளிப்பு மிகுந்து விடும்'' அப்போது 'இறைத்தூதர் அவர்களே! கொந்தளிப்பு என்றால் என்ன?' என வினவப்பட்டதற்கு, தம் கையால் கொலை செய்வதைப் போல் நபி (ஸல்) பாவனை செய்து காட்டினார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

76. 'ஆயிஷா (ரலி) தொழுது கொண்டிருந்தார். மக்களும் தொழுதார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். ஆயிஷா (ரலி) வானை நோக்கிச் சுட்டிக் காட்டினார். (தொழுகையில் பேசக் கூடாது என்பதால்), 'ஸுப்ஹானல்லாஹ்' என்றும் கூறினார். அப்போது 'இது (ஏதாவது) அடையாளமா?' என நான் கேட்டதற்கு, ஆயிஷா (ரலி), 'ஆமாம் அப்படித்தான்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்று கொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் மயக்கமுற்றேன். (மயக்கத்தைப் போக்க) என்னுடைய தலையின் மீது தண்ணீரை ஊற்றினேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் உரையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, 'எனக்கு இது வரை காட்டப்படாத சுவர்க்கம், நரகம் உட்பட அத்தனைப் பொருட்களையும் இந்த இடத்திலேயே கண்டேன். மேலும் எனக்கு அறிவிக்கப்பட்டது. நிச்சயமாக நீங்கள் உங்கள் மண்ணறைகளில் மஸீஹுத் தஜ்ஜால் என்பவனுடைய குழப்பத்துக்கு நிகரான சோதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். (அப்போது மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்) 'இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?' என்று கேட்கப்படும். நம்பிக்கையாளர் 'அவர்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அவர்கள் எங்களுக்குத் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள்; நாங்கள் (அவர்களின் அழைப்பை) ஏற்றோம்' அவர்களைப் பின்பற்றினோம்; அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள்தாம்' என்று மும்முறை கூறுவார். அப்போது '(சுவனப் பேரின்பங்களைப் பெறத்) தகுதி பெற்றவராக நீர் (நிம்மதியாக) உறங்குவீராக!' என்றும் 'நிச்சயமாகவே நீர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாமறிவோம்' என்றும் கூறப்படும். நயவஞ்சகனோ 'எனக்கு எதுவும் தெரியாது மக்கள் அவரைப் பற்றி ஏதோ சொல்லிக் கொண்டிருக்கக் கேட்டிருக்கிறேன். எனவே நானும் அது போன்று கூறினேன்' என்பான்' என்று கூறினார்கள்'' என அஸ்மா (ரலி) அறிவித்தார்.

ஒரு சட்டப் பிரச்சினை(யின் தீர்வு)க்காகப் பயணம் மேற்கொள்வதும் அதைத் தன் குடும்பத்தினருக்குக் கற்றுக் கொடுப்பதும்.

77. 'நான் அபூ இஹாப் இப்னு அஜீஸ் என்பவரின் மகளை மணந்தேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து, 'நான் உக்பாவுக்கும் அவர் மணந்துள்ள பெண்ணுக்கும் (அவர்களின் குழந்தைப் பருவங்களில்) பாலூட்டியிருக்கிறேன்' என்றார். அதற்கு நான் 'நீங்கள் எனக்குப் பால் கொடுத்ததே எனக்குத் தெரியாது. மேலும் (இத்தகவலை) எனக்கு (இதற்குமுன்) நீங்கள் சொல்லவுமில்லையே' என்று கூறினேன். உடனே (மக்காவில் வாழ்ந்திருந்த நான்) மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களை நோக்கிப் பயணமானேன். அங்கு சென்று அவர்களிடம் இந்தப் பிரச்சினை பற்றி விளக்கம் கேட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீர் அந்தப் பெண்ணுக்குச் சகோதரன் என்று) சொல்லப்பட்டுவிட்ட நிலையில் எப்படி (உறவு கொள்வீர்)?' என்று கேட்டார்கள். உடனே நான் அப்பெண்ணை விவாகரத்துச் செய்துவிட்டேன். அந்தப் பெண்ணும் வேறொரு கணவனை மணந்தார்'' என உக்பா இப்னு அல்ஹாரிஸ் (ரலி) அறிவித்தார்.

முறை வைத்துக் கற்றல்.

78. 'நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார். அவரின் முறை வந்தபோது என்னுடைய அன்சாரித் தோழர், சென்றுவிட்டு வந்த என் வீட்டுக் கதவை மிக வேகமாகத் தட்டினார். 'அவர் அங்கே இருக்கிறாரா?' என்றும் கேட்டார். நான் பதறிப்போய் வந்தேன். அப்போது அவர் (நபி (ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) 'ஏதோ ஒரு பெரிய காரியம் நடந்திருக்கிறது' என்றார். உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுது கொண்டிருந்தார். 'நபி(ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் விவாகரத்துச் செய்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர் 'எனக்குத் தெரியவில்லை' என்றார். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று 'தங்களின் துணைவியர்களை விவாகரத்துச் செய்து விட்டீர்களா?' என்று நின்ற நிலையில் கேட்டேன். அதற்கவர்கள் 'இல்லையே' என்றார்கள். உடனே நான் 'அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று சொன்னேன்'' என உமர் (ரலி) அறிவித்தார்.

அறிவுரை கூறும் போதும் கல்வி கற்றுக் கொடுக்கும் போதும் தமக்குப் பிடிக்காத ஒன்றைக் காணும்போது கோபமடைதல்.

79. 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! இன்னார் (தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக் கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையைப் பெறவே முடிவதில்லை' என்று கூறினார். (இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள்.) அவர்கள் தங்களின் உரையில் அன்றைய தினம் கடுமையாகக் கோபப்பட்டது போல் கோப்பட்டதை நான் பார்த்ததே இல்லை! (அவ்வுரையில்) 'மக்களே! நீங்கள் நிச்சயமாகவே வெறுப்புக் கொள்ளும்படியே நடந்து கொள்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துபவர் அதை இலகுவாக்கட்டும். ஏனெனில், தொழவந்தவர்களில் நோயாளிகள், நலிவுற்றவர்கள், தேவைகளுடையவர்கள் இருப்பார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மஸ்வூத்(ரலி) கூறினார்.

80. 'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வழியில் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி (சட்டம்) கேட்டதற்கு, 'அதனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பற்றி, அந்தப் பொருளிருக்கும் பாத்திரத்தைப் பற்றி, பொருளுக்குப் போடப்பட்டிருக்கும் உறையைப் பற்றி (அதன் முழு விவரங்களை) நீர் அறிந்து வைத்துக் கொள்! பிறகு ஓராண்டு காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்துவீராக! அதற்குப் பிறகு அதனை நீர் பயன்படுத்திக் கொள். அதன் உரிமையாளர் அதனைக் கேட்டு வந்தால் அதனை அவரிடம் ஒப்படைத்து விடு!' என்று கூறினார்கள். 'அப்படியானால் வழி தவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றிய சட்டம் என்ன?' என்று அவர் கேட்டார். உடனே தம் கன்னங்கள் இரண்டும் சிவந்து போகும் அளவு அல்லது அவர்களின் முகம் சிவந்து போகும் அளவுக்கு - கோபப்பட்டவர்களாக, 'கால் குளம்புகளும் அதற்கான தண்ணீரும் அதனுடன் இருக்க அதனை நீர் ஏன் பிடிக்கப் போகிறீர்? அது நீர் நிலைகளுக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும். மரங்களை மேய்ந்து கொள்ளும். எனவே, அதனை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும்வரை அதன் போக்கில் விட்டுவிடுவீராக!' என்று கூறினார்கள். 'அப்படியானால் வழி தவறி வந்து விடும் ஆட்டின் சட்டம் என்ன?' என்று கேட்டார். 'அது உமக்கே உரியது. அல்லது (அதனைப் பிடிக்கும்) உம்முடைய அந்த சகோதரருக்குரியது. (அவ்வாறு அதனைப் பிடிக்காவிட்டால்) அது ஓநாய்க்குச் சொந்தமாகி விடும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜைத் இப்னு காலிது அல் ஜுஹைனீ (ரலி) அறிவித்தார்.

81. 'நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் 'நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்' எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். 'யார் என்னுடைய தந்தை?' என்று கேட்டதற்கு அவர்கள் 'ஹுதாபாதான் உம்முடைய தந்தை' என்றார்கள். உடனே வேறொருவர் எழுந்து 'என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க 'உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் என்பவர் தாம்' என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மெய்யாகவே மகத்துவமும், கண்ணியமும் மிக்க இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்' என்றார்கள்'' அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.

தான் சொல்வது நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக ஒரு செய்தியை மும்முறை கூறுதல்

82. 'நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்'' அனஸ் (ரலி) அறிவித்தார்.

அடிமைப் பெண்ணுக்கும், தம் குடும்பத்தாருக்கும் ஒருவர் கல்வி கற்றுக் கொடுத்தல்.

83. 'மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.

தலைவர் பெண்களுக்கு அறிவுரை வழங்குவதும், அவர்களுக்கு போதனை செய்வதும்.

84. 'பெண்களுக்கு (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கருதி, பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால் (ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்'' இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் பற்றிய செய்திகளின் மீது பேரவாக் கொள்ளுதல்.

85. 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?' என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'அபூஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து - தூய்மையான எண்ணத்துடன் 'வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்' என்று கூறினார்கள்'' அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

கல்வி அகற்றப்படுதல்.

86. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

கல்விக்காகத் தனியே ஒரு நாளைப் பெண்களுக்கென ஒதுக்கலாமா?

87. '(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் 'உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்' என்று கூறினார்கள்'' அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.

87. 'பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது.

கேட்ட செய்தியை (தெளிவாகப்) புரிந்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் அதைப் பற்றிக் கேட்பது

88. 'நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். '(மறுமையில்) விசாரணை செய்யப்பட்டவர் தண்டிக்கப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'மிக எளிதான விசாரணையாகவே விசாரிக்கப்படுவார்' என்று அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:08) கூறவில்லையா?' என ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்க நபி(ஸல்) அவர்கள், 'அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். எனினும், எவனிடம் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவன் அழிந்துவிடுவான்' என்று கூறினார்கள்'' என இப்னு அபீ முலைக்கா அறிவித்தார்.

''இங்கே வருகை தந்திருப்பவர்கள் (தாம் பெற்ற) கல்வியை வராதவர்களுக்குத் தெரிவித்து விடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில்) கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

89. 'அம்ர் இப்னு ஸயீது என்பவர் (யªதுடைய ஆட்சியின் போது) மக்காவை நோக்கி ஓர் இராணுவத்தை அனுப்பியபோது, 'தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி(ஸல்) அவர்கள் நின்ற நிலையில் ஆற்றிய உரையை என்னுடைய இரண்டு காதுகளும் கேட்டிருக்கின்றன. என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் இரண்டும் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினார்கள். பின்னர் 'இந்த மக்கா நகரை மனிதர்களில் யாரும் புனித(நகர)மாக்கவில்லை. அல்லாஹ்தான் இதனைப் புனித நகரமாக்கினான். எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருக்கும் எந்த மனிதனும் இங்கே இரத்தத்தை ஓட்டுவதோ, இதன் மரம், செடி, கொடிகளை வெட்டுவதோ கூடாது. இறைத்தூதர் இங்கு (ஒரு சிறு) போரிட்டதை ஆதாரமாகக் கொண்டு எவராவது அவ்வாறு இங்கே போரிடுவது அனுமதிக்கப்பட்டது என்று கருதினால், (அவர் தெரிந்து கொள்ளட்டும்) நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டுமே) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதிக்கவில்லை என்று அவரிடம் கூறுங்கள். எனக்குக் கூட அவன் அனுமதியளித்தது பகல் பொழுதின் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் இன்று அதன் புனிதம் நேற்றுள்ள அதன் புனிதம் போல் வந்துவிட்டது. (இச்செய்தியை இங்கே) வராதிருப்பவர்களுக்கு வந்திருப்பவர்கள் தெரிவித்து விடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று நான் அவரிடம் கூறினேன். 'அதற்கு அம்ர் இப்ன ஸயீது என்ன கூறினார் என கேட்டேன். 'அதற்கு அம்ர் இப்னு ஸயீது என்ன கூறினார்? என்று அங்கிருந்தவர்கள் என்னிடம் கேட்டனர். 'அபூ ஷுரைஹ்வே! உம்மைவிட நான் (இதைப் பற்றி) நன்கு அறிவேன்; நிச்சயமாக மக்கா நகர் ஒரு பாவிக்கோ, மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடி வந்தவனுக்கோ, திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடி வந்தவனுக்கோ பாதுகாப்பளிக்காது' என்று கூறினார்' என்றேன்'' அபூ ஷுரைஹ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் மீது பொய் கூறுவது பாவம்.

90. 'என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அலீ(ரலி) அறிவித்தார்.

91. 'நான் கூறாத ஒன்றை கூறினார்கள்' என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஸலமா(ரலி) அறிவித்தார்.

92. 'என்னுடைய இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள்ளுங்கள்; (அபுல் காஸிம் என்ற) சிறப்புப் பெயரை உங்கள் சிறப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் என்னைக் கண்டவர், என்னையே கண்டவராவார். ஏனெனில், ஷைத்தான் என் வடிவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும் என் மீது வேண்டுமென்றே இட்டுக் கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

கல்வியை எழுதி வைத்தல்.

93. 'பனூ லைஸ் கூட்டத்தார் குஸாஆ கூட்டத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பிரதியாக அவர்களில் ஒருவரை குஸாஆ கூட்டத்தார் மக்கா வெற்றியடைந்த ஆண்டில் கொன்றுவிட்டார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் தம் வாகனத்தில் அமர்ந்தவர்களாக, 'சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் இந்த(ப் புனித) மக்கா மாநகரில் கொலையைத் தடை செய்துள்ளான். மேலும் மக்காவாசிகளின் மீது அல்லாஹ் தன்னுடைய தூதரையும், இறைநம்பிக்கையாளர்களையும் ஆதிக்கம் செலுத்த வைத்தான். எச்சரிக்கை! மக்காவில் யுத்தம் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்டதில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. எச்சரிக்கை! எனக்கு கூட (அது) பகலின் சிறிது நேரம்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கை! சந்தேகத்திற்கிடமின்றி இப்போதிருந்தே (முழுமையாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடிகள் அகற்றப் படக் கூடாது. இதன் மரங்கள் வெட்டப்ப படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) விளம்பரம் செய்பவரைத் தவிர (யாரும்) எடுக்கக் கூடாது. ஒருவர் (இனிமேல்) கொலை செய்யப்பட்டால் அவரின் குடும்பத்தார்கள் நட்ட ஈடு பெறுதல் அல்லது பழிக்கு பழி வாங்குதல் என்ற இரண்டில் அவர்கள் விரும்பியதைத் தேர்வு செய்யலாம்' என்று ஓர் உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது யமன் வாசிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இ(ந்தப் பிரசங்கத்)தை எனக்கு எழுதித் தரச்சொல்லுங்கள்' என்று கேட்டார். 'இவருக்கு எழுதிக் கொடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! (மக்காவின் செடி கொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து) வாசனைப் புற்களில் ஒருவகையான 'இத்கிர்' என்ற தாவரத்துக்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில், நாங்கள் அதனை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'இத்கிர்' என்ற வாசனைப் புற்களைத் தவிர' என்றார்கள்'' அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

94. 'நபி(ஸல்) அவர்களின் மரண வேதனை அதிகமானபோது 'என்னிடம் ஓர் ஏட்டைக் கொண்டு வாருங்கள். எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறி விடாதவாறு ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன்' என்று கூறினார்கள். 'நபி(ஸல்)அவர்களுக்கு வேதனை அதிகமாகிவிட்டது நம்மிடம் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறது. அது நமக்குப் போதுமானது' என்று உமர்(ரலி) கூறினார். உடனே (தோழர்களுக்கிடையில்) கருத்து வேறுபாடு எழுந்து கூச்சலும் குழப்பமும் மிகுந்துவிட்டன. இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்; என் முன்னிலையில் (இதுபோன்ற) சச்சரவுகள் எதுவும் இருக்கக் கூடாது' என்றார்கள்.

'நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுத நினைத்த) மடலுக்கும் குறுக்கே தடையாக நிகழ்ந்துவிட்ட சோதனை பெரும் சோதனைதான்' என்று கூறியவராக அங்கிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) வெளியேறி விட்டார்'' என இப்னு அப்பாஸ் (ரலி) வாயிலாக உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.

இரவில் கற்பதும் போதிப்பதும்.

95. 'ஓர் இரவில் தூக்கத்திலிருந்து எழுந்த நபி(ஸல்) அவர்கள் (ஆச்சரியமாக) 'அல்லாஹ் தூய்மையானவன்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. திறந்து விடப்பட்ட அருட்பேறுகள்தான் என்னென்ன?' என்று கூறிவிட்டு, 'தம் அறைகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை (தம் மனைவிமார்களை இறை வணக்கத்திற்காக தூக்கத்iவிட்டும்) எழுப்புங்கள். ஏனெனில், இவ்வுலகில் ஆடை அணிந்தவர்களாகயிருக்கும், எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமாக இருப்பார்கள்' என்று கூறினார்கள்'' என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

கல்வி குறித்து இரவில் பேசுதல்.

96 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆயுளின் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று, 'இன்றைய இந்த இரவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் துவக்கத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள்' என்று கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

97. 'என்னுடைய சிறிய தாயாரும் நபி(ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்து அல் ஹாரிஸ்(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகை நடத்திவிட்டுப் பின்னர் தம் வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுதுவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து 'பையன் தூங்கிவிட்டானோ?' அல்லது அது போன்ற ஒரு வார்த்தை கூறி விசாரித்துவிட்டு மீண்டும் தொழுகைக்காக நின்றார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களின் இடப் பக்கமாகச் சென்று நின்றேன். உடனே என்னை அவர்களின் வலப் பக்கத்தில் இழுத்து நிறுத்திவிட்டு (முதலில்) ஐந்து ரகஅத்துகளும், பின்னர் இரண்டு ரகஅத்துகளும் தொழுதுவிட்டு அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு ஆழ்ந்து உறங்கினார்கள். பிறகு (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டார்கள்'' இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

கல்வியை மனனம் செய்தல்.

98. 'அபூ ஹுரைரா(ரலி) அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, 'நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப(வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர்திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அளவற்ற வனுமாவேன்'' (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து 'மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்படாமகி செய்யாதவற்றையெல்லாம் மனப்படாம் செய்து கொண்டிருந்தேன்' என்று கூறினார்கள்'' அஃரஜ் என்பவர் அறிவித்தார்.

99. 'இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து ஏராளமான பொன் மொழிகளைக் கேட்கிறேன். (ஆயினும்) அவற்றை மறந்து விடுகிறேன் என நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு 'உம்முடைய மேலங்கியை விரியும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அதனை விரித்தேன். தம் இரண்டு கைகளாலும் இரண்டு கை நிறையளவு அள்ளி (எடுப்பது போன்று பாவனை செய்து)விட்டுப் பின்னர், 'அதனை (நெஞ்சோடு) நீர் அணைத்துக் கொள்வீராக!'' என்றார்கள். நானும் உடனே அதனை என் நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் எதனையும் மறந்ததே இல்லை'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

100. 'இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (கற்ற) இரண்டு (வகையான கல்விப்) பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடம்) பரப்பி விட்டேன்; இன்னொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித்தொண்டை வெட்டப்பட்டிருக்கும்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அறிஞர்களின் போதனைகளுக்குச் செவி சாய்த்தல்.

101. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!'' என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்'' என ஜரீர்(ரலி) அறிவித்தார்.

ஓர் அறிஞரிடம் 'மக்களில் பேரறிஞர் யார்?' என்று கேட்கப்பட்டால் இதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறுவது விரும்பத்தக்கது.

102. '(கிள்ரு(அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா அலை அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா' என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு (ரலி), நபி (ஸல்) கூறினார்கள் என அறிவித்தாவது: (இறைவனின்) தூதராகிய மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது 'மக்களில் பேரறிஞர் யார்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, 'இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்' என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் 'என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?' என்று கேட்டார்கள். 'கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்' என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒரு மீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கி விட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போழுது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா (அலை) தம் பணியாளரிடம், 'இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?' என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும்வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் 'பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விட்டேன்' என்றார். '(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்' என்று மூஸா (அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவர்களாய் (வந்தவழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது கிள்று அவர்கள் 'உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?' என்று கேட்டார்கள். 'நான்தான் மூஸா' என்றார்கள். 'இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?' என கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு 'ஆம்!' என்று கூறினார்கள். 'உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?' என்று கேட்டார்கள். கிள்ரு (அலை) அவர்கள், 'நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்' என்று கூறினார். அதற்கு மூஸா (அலை) அவர்கள், 'உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!' என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள்.

ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், 'மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்' என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா (அலை) அவர்கள் 'நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?' என்று கேட்டார்கள். 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான் மறந்து விட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டு விட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திருகி) தலையை முறித்து விட்டர்கள். உடனே மூஸா (அலை) அவர்கள் 'யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?' என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா (அலை) அவர்கள் 'நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!' என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், 'இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்' என்று கூறிவிட்டார்கள்.''

(இச்சம்பவத்தை) நபி(ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) 'மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும்; நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!' என்று கூறினார்கள்'' என ஸயீது இப்னு ஜுபைர் (ரலி) அறிவித்தார்.

அமர்ந்திருக்கும் அறிஞரிடம் நின்றவாறு கேள்வி கேட்டல்.

103. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, 'அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்' என்று கூறினார்கள். கேள்வி கேட்டவர் நின்றிருந்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்'' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

''ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர உங்களுக்கு வழங்கப் படவில்லை'' (திருக்குர்ஆன் 17:85) என்ற அல்லாஹ்வின் திருவசனம்.

104. பேரீச்ச மட்டை ஒன்றைக் கையில் ஊன்றியவர்களாக, நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றை அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை' என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப் பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து, 'அபுல் காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப்படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

ஒரு சாரார் (ஒன்றைப்) புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற அதிருப்தியில் புரிந்து கொள்ளாதோரை விடுத்துப் புரிந்து கொள்ளும் ஒரு சாராருக்குத் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுத்தல்.

105. 'ஒரே வாகனத்தின் மீது முஆது (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபி(ஸல்) அவர்கள் 'முஆதே!'' என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத் (ரலி) கூறினார். 'முஆதே!' என்று என மீண்டும் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். 'இதோ உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என மீண்டும் முஆத் (ரலி) கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது. பிறகு 'தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ்; நரகத்திற்குச் செல்ல விட மாட்டேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காக தம் மரணத் தருவாயில்தான் இந்த ஹதீஸை முஆத் (ரலி) அறிவித்திருக்கிறார்கள்.

கற்பதில் வெட்கப்படுதல்

106. 'உம்மு ஸுலைம் (ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டதற்கு 'ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா (ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக் கொண்டு, 'பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்றும் இருக்கிறது?' என்று கேட்டார்கள்'' என ஸைனப் பின்து உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்.

வெட்கப்பட்டுப் பிறரைக் கேள்வி கேட்கச் செய்தல்.

107. 'மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். 'அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்'' என அலீ(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலில் கற்பதும் கற்றுக் கொடுப்பதும்.

108. 'ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டபோது 'மதீனா வாசிகள் 'துல்ஹுலைஃபா' என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் 'ஜுஹ்ஃபா' என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் 'கர்ன்' என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''யமன்' வாசிகள் 'யலம்லம்' என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை'' என்றும் இப்னு உமர் (ரலி) கூறினார்.

கேட்கப்பட்டதற்கு விரிவாகப் பதில் கூறுதல்.

109. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment