Tuesday 2 June 2009

[பாடம்-6] மாதவிடாய்.

மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?

203. 'நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். 'ஸரிஃப்' என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, 'உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம் வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் 'குர்பானி' கொடுத்தார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண் தன்னுடைய கணவனின் தலையைக் கழுவுவதும் அவரின் தலை முடியைச் சீவி விடுவதும்.

204. 'நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவேன்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

205. 'ஒருவர் 'தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?' என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா 'அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்' என்றார்'' என ஹிஷாம் அறிவித்தார்.

மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளின் மடியில் தலையை வைத்துக் கணவன் (குர்ஆன்) ஓதுவதல்.

206. 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பிரசவத் தீட்டைக் குறிக்கும் 'நிஃபாஸ்' என்னும் சொல்லை மாதவிடாய்க்கும் பயன்படுத்துதல்.

207. 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்'' என உம்முஸலமா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய் ஏற்பட்டவளை அணைத்துக் கொள்ளுதல்.

208. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்''. 'நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் 'இஃதிகாப்' இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

209. 'எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய் ஏற்பட்டவள் நோன்பைவிட்டு விடுவதல்.

210. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்'' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

உதிரப் போக்குள்ளவர் பள்ளி வாசலில் இஃதிகாப் இருத்தல்.

211. 'நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாயிலிருந்து நீங்கும் குளியலின்போது நறுமணத்தைப் பயன்படுத்தல்.

212. 'இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்'' என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாயிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் பெண் தன்னுடைய உடலைத் தேய்த்துக் கழுவ வேண்டும் என்பதும், எப்படிக் குளிக்க வேண்டும் இரத்தம் செல்லும் இடத்தில் கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதும்.

213. 'ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மாதவிடாய் நின்ற பின்பு எப்படிக் குளிக்க வேண்டும்?' என கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்குக் கூறிவிட்டு, 'கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் நீ சுத்தம் செய்' என்றார்கள். அப்போது 'நான் எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்?' என அப்பெண் கேட்டார். 'அதைக் கொண்டு நீ சுத்தம் செய்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண் 'எப்படி?' என்று கேட்டபோது 'ஸுபஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்!' என்று கூறினார்கள். உடனே நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து 'கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு இரத்தம் பட்ட இடத்தில் வைத்துச் சுத்தம் செய்' என்று அவளிடம் கூறினேன்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய் நின்ற பின்பு குளிக்கும்போது சீப்பினால் தலையை வாருதல்.

214. நான் நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் வதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால் நடையைக் கொண்டுவராத ஹஜ்ஜின் 'தமத்துவ்' என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டு விட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும் வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் 'உம்ரா'ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். 'உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய் நின்ற பின்னர் குளிக்கும்போது பெண் தன்னுடைய தலை முடியை அவிழ்த்தல்.

215. 'துல்ஹஜ் மாதப் பிறையைப் பயணத்தில் அடையும் நிலையில் புறப்பட்டோம். அப்போது 'உம்ராச் செய்ய விரும்புவோர் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். நான் என்னுடன் அறுத்துக் கொடுப்பதற்குரிய பிராணியைக் கொண்டு வராதிருந்தால் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்திருப்பேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது சிலர் உம்ராவிற்காக வேறு சிலர் ஹஜ்ஜிற்காகவும் இஹ்ராம் அணிந்தனர். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்களுடன் இருந்தேன். நான் மாதவிடாயுடன் இருந்தபோது அரஃபா நாள் வந்தது. நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன். 'நீ உன்னுடைய உம்ராவை விட்டுவிடு. உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரி விடு. பின்னர் ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். ஹஸ்பாவில் தங்கிய இரவு என்னுடைய சகோதரர் அப்துர் ரஹ்மானை நபி(ஸல்) என்னுடன் அனுப்பினார்கள். தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று எனக்கு விடுபட்ட உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் அணிந்தேன்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய்க் காலத்தில் விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை.

216. 'பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர் தொழுதால் மட்டும் போதுமா?' என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'நீ 'ஹரூர்' எனும் இடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவ மாட்டார்கள்' என்று அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழ மாட்டோம்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்'' என முஆதா அறிவித்தார்.

மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுடன் கணவன் தூங்குதல்.

217. 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அதை அணிந்தேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தம்மருகில்) அழைத்தார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்'' என்றும்,''நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள். நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுவோம்'' என்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

மாதவிடாய்ப் பெண்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளிலும் கலந்து முஸ்லிம்களுக்கான பிரச்சாரத்தில் பங்கெடுத்தல் மற்றும் தொழும் இடத்தைவிட்டு அவர்கள் விலகி இருத்தல்.

218. 'நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.'நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?' என நான் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்றார். உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?' என நான் கேட்டதற்கு 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்' எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் 'என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்' என்பதையும் சேர்த்தே கூறுவார். 'கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்' என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, 'மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?' என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்'' என ஹஃப்ஸா அறிவித்தார்.

மாதவிடாய் அல்லாத நாள்களில் மஞ்சளாகவோ மண் நிறமாகவோ வெளிப்படும் இரத்தம்.

219. 'மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் கருதுவதில்லை'' என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜின் 'இஃபாளா' என்ற தவாஃப் செய்த பின்னர் ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?

220. 'ஹஜ்ஜின்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது' எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் 'அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?' என்று கேட்டார்கள். 'தவாஃப் செய்துவிட்டார்' என (அங்கிருந்தோர்) கூறினார்கள். 'அப்படியானால் புறப்படுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பிரசவ நேரத்தில் இறக்கும் பெண்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தும் முறை.

221. 'ஒரு பெண் பிரசவ நேரத்தில் இறந்தபோது அவருக்கு நபி(ஸல்) ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையின்போது ஜனாஸாவின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள்'' என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

222. 'எனக்கு மாதவிடாய் ஏற்படும்போது நான் தொழுவதில்லை. அந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலின் அருகில் படுத்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிறிய பாயில் தொழுது கொண்டிருந்தார்கள். ஸஜ்தாச் செய்யும்போது அவர்கள் அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதி என் மீது படும்'' என்று மைமூனா(ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment