Wednesday, 15 July 2009

[பாடம்-15] மழை வேண்டித் தொழுதல்.

மழை வேண்டி வெளியே செல்வது

547. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். மற்றொரு அறிவிப்பில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

யூஸுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போல் இவர்களுக்கும் பஞ்சத்தை எற்படுத்துவாயாக என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

548. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் 'இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்று. இறைவா! நம்பிக்கையாளர்களில் பலவீனர்களைக் காப்பாற்று. இறைவா! முழர் கூட்டத்தினர் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இவர்களுக்கு யூஸுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போல் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுபவர்களாக இருந்தனர். மேலும் 'கிஃபார் கூட்டத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! அஸ்லம் கூட்டத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக! என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுனார்கள்.

549. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிக்கக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'யூஸுஃப் நபி காலத்து ஏழாண்டுப் பஞ்சம் போல் இவர்களுக்கு ஏழாண்டுப் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!' என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அனைத்தையும் வேரறுத்தது. தோல்கள், பிணங்கள் ஆகியவற்றை உண்ணலானார்கள். அவர்கள் (மழை மேகம் தென்படுகிறதோ என்று) வானத்தைப் பார்க்கும்போது பசியினால் புகை மூட்டத்தையே காண்பார்கள். இந்நிலையில் அபூ ஸுப்யான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! நீர் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டுமெனவும் கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யும்' என்று கூறினார். அப்போது பின்வரும் வசனங்களை அல்லாஹ் கூறினான்.

''எனவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பாரும்! (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும் 'இது நோவினை செய்யும் வேதனையாகும். எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறோம்' (எனக் கூறுவர்). நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம் பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி '(மற்றவர்களால் இவர்) கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்' எனக் கூறினர். நிச்சயமாக! நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புவர்களே.
ஒரு நாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்'. (திருக்குர்ஆன்: 44:10-16)

கடுமையான பிடி என்பது பத்ருப் போரில் ஏற்பட்டது புகை மூட்டமும் கடுமையான பிடியும் நடந்தேறியது. அதுபோல் ரூம் அத்தியாயத்தில் கூறப்பட்ட முன்னறிவிப்பும் நிறைவேறியது.

550. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது.

'இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்ற அபூதாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன்.

551. அனஸ்(ரலி) அறிவித்தார். மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். 'இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!' என்று உமர்(ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.

ஜும்ஆ நடைபெறும் பள்ளிவாயிலில் மழை வேண்டுதல்.

552. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.

ஜும்ஆ உரை நிகழ்த்தும்போது கிப்லாவை நோக்காமல் மழை வேண்டிப் பிரார்த்தித்தல்.

553. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது 'தாருல்களா' எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரைநிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, ' இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
இரண்டாவதாக வந்த மனிதர்முதலில் வந்தவர் தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.

இமாம் மக்களுக்கு முதுகைக் காட்டுவது.

554. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை பார்த்தேன். அப்போது அவர்கள் மக்களுக்கு முதுகைக் காட்டிக் கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.

மழை வேண்டிப் பிரார்த்திக்கும்போது இமாம் கைகளை உயர்த்துவது.

555. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப்பிரார்த்திக்கும்போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை காணப்படும் அளவிற்கு உயர்த்துவார்கள்.

மழை பொழியும்போது கூற வேண்டியவை.

556. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)'' என்று கூறுவார்கள்.

காற்று வீசும் போது...

557. அனஸ்(ரலி) அறிவித்தார். கடுமையான காற்று வீசும்போது நபி(ஸல்) அவர்கள் முகத்தில் ஏற்படும் மாறுதல் அனைவருக்கும் தெரியும்.

மழைக்காற்றின் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன் என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று.

558. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''நான் மழைக்காற்றின் மூலம் உதவப்பட்டுள்ளேன். 'ஆது' கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் அழிக்கப்பட்டனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பூகம்பங்களும் கியாம நாளின் அடையாளங்களும்.

559. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் 'எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்' என்று கூறினார்கள்.

மழை எப்போது வருமென்பதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது.

560. 'ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதிப்பார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment