இரவில் தஹஜ்ஜுத் தொழுதல்.
அல்லாஹ் கூறினான்: 'இரவில் நீர் தஹஜ்ஜுத் தொழுவீராக!' (திருக்குர்ஆன் 17:79)
590. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் 'இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை' என்று கூறுவார்கள்.
இரவுத் தொழுகையின் சிறப்பு.
591. இப்னு உமர்(ரலி) கூறியதவாது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம்; தெரிவிக்க 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்' என்று நபி(ஸல்) கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
நோயாளி இரவுத் தொழுகையை விட்டு விடலாம்.
592. ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை.
இரவுத் தொழுகையையும் உபரியான தொழுகைகளையும் கட்டாயப் படுத்தாமல் நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியது.
593. அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் வந்தார்கள். 'நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
594. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்வதற்கு சிரமப்படுவார்கள் என்ற அவர்களின் மீது அது அச்சமே இதற்கு காரணம். நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன்.
நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை. நபி(ஸல்) அவர்கள் தங்களின் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள்.
595. முகீரா(ரலி) அறிவித்தார். சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு இரவில் நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது 'நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கேட்பார்கள்.
பிந்திய இரவில் உறங்குதல்.
596. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவுவரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்' இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.
597. மஸ்ரூக் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'தொடர்ந்து செய்யும் அமல்' என்று விடையளித்தார்கள். (இரவில்) நபி(ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'சேவல் கூவும்போது எழுவார்கள்' என்று விடையளித்தார்கள். மற்றோர் அறிவிப்பில் சேவல் கூவும்போது எழுந்து தொழுவார்கள் என்று காணப்படுகிறது.
598. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் (இருக்கும்போது) ஸஹர் நேரம் வரும்வரை உறங்காமல் இருந்ததில்லை.
ஸஹர் செய்ததும் உறங்காமல் ஸுப்ஹுத் தொழுதல்.
599. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியவதாவது: நபி(ஸல்) அவர்களும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) வும் ஸஹர் செய்தனர். ஸஹர் செய்து முடித்ததும், நபி(ஸல்) அவர்கள் (ஃபஜர்) தொழுகைக்கு தயாராகித் தொழுதார்கள்.
அவர்கள் ஸஹர் செய்ததற்கும் தொழுததற்கும் இடையே எவ்வளவு நேரம் இருந்தது என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் 'ஒருவர் ஜம்பது வசனங்கள் ஓதக்கூடிய நேரம்' என்று விடையளித்தார்கள்.
இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் நிற்பது.
600. அபூ வாயில் அறிவித்தார். 'நாள் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். நான் தவறான ஒரு முடிவுக்கு வருமளவுக்கு அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள்' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது அந்தத் தவறான முடிவு எது? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்களுடன் தொழுவதைவிட்டுத் தொழுகையை முறித்து விடலாம் என்று எண்ணினேன்' என்று விடையளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?
601. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! இரவுத் தொழுகை எவ்வாறு?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (நேரம் வந்துவிடுமென) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவீராக' என்று விடையளித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
602. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய முன் ஸுன்னத் வித்ரு ஆகியவற்றைச் சேர்த்து இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.
603. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு தோற்கமாட்டார்களோ என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நோன்பைத் தொடர்ந்துவிட்டு விடுவார்கள். நோன்பை விட மாட்டார்களோ என்று நாங்கள் நினைக்குமளவுக்குத் தொடர்ந்து நோன்பு நோற்பார்கள். நீர் அவர்களைத் தொழக் கூடியவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே பார்ப்பீர். அவர்களைத் தூங்கக் கூடியவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே பார்ப்பீர்!
இரவில் தொழாவிட்டால் ஷைத்தான் பிடரியில் முடிச்சுப் போடுகிறான்.
604. ''உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்.
605. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார்.தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள்.
இரவின் கடைசியில் தொழுவதும் துஆச் செய்வதும்.
606. 'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இரவின் ஆரம்ப நேரத்தில் உறங்கிவிட்டுப் பிற்பகுதியில் விழித்திருத்தல்.
607. அஸ்வத் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இரவின் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில் எழுந்து தொழுவார்கள். பிறகு படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் பாங்கு சொன்னதும் விழித்துக் குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் உளூச் செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்படுவார்கள்' என்று விடையளித்தார்கள்.
ரமலானிலும் ரமலான் அல்லாத மாதத்திலும் நபி(ஸல்) அவர்கள் தொழுத முறை.
608. அபூ ஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. முதலில் நான்கு ரக்அத்துகள் அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விடையளித்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை' என்று விடையளித்தார்கள்' என்றும் ஆயிஷா(ரலி) கூறினார்.
வணக்க வழிபாடுகளில் சிரமப்படுவதைக் கை விட வேண்டும்.
609. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. 'இந்தக் கயிறு ஏன்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், 'இது ஸைனபு(ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விட வேண்டும்' என்று கூறினார்கள்.
இரவில் தொழும் வழக்கமுடையவர் அதை விடக்கூடாது.
610. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போன்று நீர் ஆகிவிடாதீர்' என்று கூறினார்கள்.
இரவில் விழித்துத் தொழுவதன் சிறப்பு.
611. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை. ஆட்சியும் அவனுக்குரியது. புகழும் அவனுக்குரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
612. ஹைஸம் இப்னு அபீ ஸினான் அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) தம் உரையின்போது நபி(ஸல்) அவர்கள் பற்றி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) இயற்றிய பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள். 'எங்களிடம் இறைத்தூதர் இருக்கிறார்கள். ஃபஜ்ரு நேரம் வந்ததும் அவனுடைய வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள். நாங்கள் வழிகேட்டில் இருந்தபோது எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நடந்தேறும் என்று எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணை வைப்பவர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
613. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்ட ஒரு கனவில் என்னுடைய கையில் பட்டுத் துணி ஒன்று இருந்தது. நான் சொர்க்கத்தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும் அது என்னைக் கொண்டு செல்லும்போது என்னிடம் இருவர் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். அப்போது அவர்களை ஒரு வானவர் சந்தித்து 'இவரைவிட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு என்னிடம் 'பயப்படாதீர்!' என்று கூறினார்கள். என்னுடைய கனவ ஹஃப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்'' என்று கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாகி விட்டேன்.
உபரித் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்.
614. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர் 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்தையும்; அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்.''
ஃபஜ்ருடைய ஸுன்னத்தைப் பேணித் தொழுதல்.
615. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
616. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து சூரா ஓதினார்களா? என்று நான் நினைக்குமளவுக்குச் சுருக்கமாகத் தொழுவார்கள்.
உள்ளூரில் லுஹாத் தொழுவது.
617. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹாத் தொழுமாறும் வித்ருத் தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை எனது தோழர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும்வரை அவற்றை விடமாட்டேன்.
லுஹருக்குப் முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது.
618. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டதில்லை.
மஃரிபுக்கு முன் தொழுவது.
619. அப்துல்லாஹ் அல் முஸ்னி(ரலி) அறிவித்தார். மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்புயவர்கள் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு ஸுன்னத்தாகக் கருதக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
Thursday, 23 July 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment