(மறதியாக நான்கு ரக்அத்துக்களுக்கு) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்...
631. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
தொழுது கொண்டிருப்பவரிடம் யாரேனும் பேச்சுக் கொடுத்தால் தொழுபவர் அதைச் செவியேற்பதும் கையால் சைகை செய்வதும்.
632. குரைபு அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர்(ரலி) ஆகியோர் என்னிடம் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும்! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி(ஸல்) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க. அத் தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!'' என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ்(ரலி), தாமும் உமரும், இவ்வாறு (அஸருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி) 'நீர் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் கேளும்' எனக் கூறினார். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா(ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) நபி(ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை பார்த்தேன். தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி, 'நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே? என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை. அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்'' என்றார்கள் என உம்மு ஸலாமா(ரலி) விடையளித்தார்கள்.
Wednesday, 29 July 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment