Monday, 27 July 2009

[பாடம்-21] தொழுகையில் செய்யக்கூடாத சில செயல்கள்.

தொழுகையில் பேசக் கூடாது.

624. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஆரம்ப காலத்தில்) நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஷீனியாவின் மன்னர்) நஜ்ஜாஷியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) 'நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன'' என்று கூறினார்கள்.

625. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் 'தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்'' என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்.

தொழும்போது சிறு கற்களை அப்புறப்படுத்துதல்.

626. முஐகீப்(ரலி) அறிவித்தார். ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி 'நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் தொழும்போது அவரின் வாகனம் ஓடிவிட்டால்...

627. அஸ்ரக் இப்னு கைஸ் அறிவித்தார். நாங்கள் அஹ்வாஸ் எனுமிடத்தில் ஹருரிய்யாக் கூட்டத்தினருடன் போரிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஆற்றோரத்தில் ஒருவர் தம் வாகனத்தின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்து தொழுது கொண்டிருந்தார். வாகனம் அவரை இழுக்க அவரும் அதைத் தொடர்ந்தார். அவர் அபூ பர்ஸா(ரலி) என்ற நபித்தோழராவார். அப்போது காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 'இறைவா! இந்தக் கிழவரைத் தண்டிப்பாயாக!' எனக் கூறினார். அந்தப் பெரியவர் தொழுது முடித்ததும் 'நீங்கள் கூறியதை கேட்டுக் கொண்டுதானிருந்தேன். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழெட்டுப் போர்களில் பங்கெடுத்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை இலகுவாக்கியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். என் வாகனத்தை அதன் மேயும் இடத்துக்கு ஓடவிட்டுவிட்டு கவலையுடன் நான் செல்வதைவிட என் வாகனத்துடன் திரும்பிச் செல்வதே எனக்கு விருப்பமானது எனக் கூறினார்.

628. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் 'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்! எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன். நான் முன்னே செல்வது போல் நீங்கள் என்னைக் கண்டபோது சொர்க்கத்தின் ஒரு திராட்சைப் பழக்கொத்தைப் பிடிக்க முயன்றேன். நான் பின்னே செல்வது போல் என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நரகத்தில் அம்ர் இப்னு லுஹை என்பவனையும் கண்டேன். அவன்தான் ஸாயிபத் எனும் (கால்நடைகளை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவன்'' என்று கூறினார்கள்.

தொழும்போது ஸலாமுக்குப் பதில் கூறக்கூடாது.

629. ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால் தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.

தொழும்போது இடுப்பில் கையை வைத்தல்.

630. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். தொழும்போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment