அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும்.
1911. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார் எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் 'இப்ராஹீம்' என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்து விட்டார்கள். அக்குழந்தையே அபூ மூஸா(ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும்.
முஹாஜிர்களின் முதல் குழந்தை.
1912. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார் மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) 'குபா'வில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாகிவிட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். எனவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், 'யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது' எனக் கூறப்பட்டு வந்தது.
1913. சல்மான் இப்னு ஆமிர் அள்ளப்பீ(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பையன் (பிறந்த) உடன் 'அகீகா' (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) 'குர்பானி' கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்'' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஹபீப் இப்னு அஷ்ஷமீத்(ரஹ்) கூறினார்: ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்களிடம், 'அவர்கள் யாரிடமிருந்து அகீகா பற்றிய ஹதீஸைக கேட்டார்கள்'' என்று வினவும்படி என்னை இப்னு சீரின்(ரஹ்) பணித்தார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அவர்களிடமிருந்து நான் (அகீகா பற்றிய ஹதீஸைச்) செவியுற்றேன்'' என்று பதிலளித்தார்கள்.
'அத்தீரா' (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில் பிராணிகளைப் பலியிடல்).
1914. (இனி), தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். (அறியாமைக் கால) மக்களுடைய (ஆடு ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டியே 'ஃபரஉ' ஆகும்; அதை அம்மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி 'அத்தீரா'வாகும்.
Monday, 2 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment