Thursday 5 November 2009

[பாடம்-65] உண்பதற்கு அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்.

வேட்டைப் பிராணியின் மீது (அம்பு எய்யும் போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்) கூறுவது.

1915. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் இறகு இல்லாத அம்பின் ('மிஅராள்') மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். 'பிராணி அம்பின் முனையால் கொல்லப் பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் 'உங்களின் நாயுடன்' அல்லது 'உங்கள் நாய்களுடன்' வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பியபோதுதான் வேறொரு நாய்க்காக அல்ல'' என்று பதிலளித்தார்கள்.

வில்லால் வேட்டையாடுவது.

1916. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார்: நான், 'அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா? மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்'' என்று கூறினார்கள்.

சிறு கற்களாலும் களிமண் குண்டு அல்லது ஈயக் குண்டாலும் வேட்டையாடுவது.

1917. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்: நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், 'சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது 'சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் 'அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது. எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று கூறினார்கள்' எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது 'சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்'' என்று சொன்னேன்.

வேட்டையாடுவதற்காகவோ கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவே அல்லாமல் (தக்க காரணமின்றி) நாய் வைத்திருப்பது.

1918. கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் அளவு குறைந்து விடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(காயமடைந்த) வேட்டைப் பிராணி இரண்டு மூன்று நாள்கள் கழித்து (இறந்த நிலையில்) காணப்பட்டால்...?

1919. நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களின் (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணியைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணியைக் கொன்றது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாள்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால் அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அதீபின் ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.

வெட்டுக்கிளிகளை உண்பது.

1920. இப்னு அபீ அவ்ஃபா(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் 'ஏழு' அல்லது 'ஆறு' புனிதப் போர்களில் கலந்து கொண்டோம். நபி(ஸல்) அவர்களுடன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டு வந்தோம்.

குதிரையை உண்பது.

1921. அஸ்மா(ரலி) கூறினார் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவில் இருந்தபோது குதிரையொன்றை (அதன் குரல் வளையை) அறுத்து ('தப்ஹ்' செய்து) அதை உண்டோம்.

பிராணிகளை கட்டிவைத்து அம்பெய்தல்.

1922. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்: நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் 'இளைஞர்கள் சிலரை அல்லது 'மக்கள் சிலரைக்' கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர்(ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு கலைந்து சென்றுவிட்டனர். இப்னு உமர்(ரலி), 'இதைச் செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்'' என்று கூறினார்கள். இதே ஹதீஸ் வேறு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பது.

1923. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.

கோழி இறைச்சி.

1924. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் கோழி (இறைச்சி) உண்பதை பார்த்தேன். இதை ஸஹ்கம் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார்.

விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்பது.

1925. அபூ ஸஅலபா(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1926. நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கிறவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக் கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால் உலை ஊதுபவனோ ஒன்று உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

பிராணிகளின் முகத்தில் அடையாளமிடல்.

1927. சாலிம்(ரஹ்) கூறினார் :இப்னு உமர்(ரலி) பிராணியின் முகத்தில் அடையாளமிடுவதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள், 'பிராணிகளை அடிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்'' என்றும் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் '(பிராணிகளின்) முகத்தில் அடிப்பதற்கு...'' என வந்துள்ளது.

0 comments:

Post a Comment