இறைவனின் தீர்மானத்தை எழுதிய பேனா(வின் மை) உலர்ந்துவிட்டது.
2137. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார் : ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று (முன்பே அல்லாஹ்வுக்குத்) தெரியுமா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம் (தெரியும்)'' என்றார்கள். அவர் 'அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரியவேண்டும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொருவரும் 'எ(தை அடைவ)தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது 'எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் கட்டளை (முன்பே) தீர்மானிக்கப் பெற்ற விதியாக இருக்கின்றது. (திருக்குர்ஆன் 33:38)
2138. ஹுதைபா அல்யமான்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) எங்களிடையே நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.
நேர்த்திக்கடன் மனிதனை விதிக்கே கொண்டு செல்கிறது.
2139. (அல்லாஹ் கூறினான்:) நேர்த்திக் கடனானது, நான் விதியில் எழுதியிராத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, விதிதான் அவனை (நேர்த்திக்கடன் பக்கம்) கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வத்தை) வெளிக்கொணர்வதென நான் (முன்பே) விதியில் எழுதிவிட்டேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(பாவங்களிலிருந்து) அல்லாஹ்வால் பாதுகாக்கப் பெற்றவரே மாசற்றவராவார்.
2140. (இப்புவியின் ஆட்சிக்கு இறைவனுடைய) பிரதிநிதியாக ஆக்கப்படும் எவருக்கும் இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் இருக்கவே செய்வார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டு கோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரை பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ் மனிதனையும் அவனுடைய உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கிறான்.
2141. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) 'இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!'' என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.
Sunday, 29 November 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment