ஆரோக்கியம் மற்றும் ஓய்வு குறித்தும் மறுமையின் வாழ்வைத் தவிர வேறு (நிலையான) வாழ்வில்லை என்பது குறித்தும் வந்துள்ளவை.
2091. மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு நேரம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
''உலகத்தில் நீ அந்நியனைப் போன்று இரு. அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு".
2092. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்றார்கள்.(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ''நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
எதிர்பார்ப்புகளும் அவை அளவு கடந்து போவதும்.
2093. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் 'சூழ்ந்துள்ள' அல்லது 'சூழ்ந்து கொண்டுவிட்ட' வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.
2094. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு '(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம் - ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது'' என்று கூறினார்கள்.
ஒருவர் அறுபது வயதை அடைந்தால் அதற்கு மேல் அவர் வாழ்நாள் குறித்து கூறும் சாக்குப் போக்குகளை அல்லாஹ் ஏற்பதில்லை.
2095. ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
2096. முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
2097. (தொடர்ந்து) மஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார் : இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி(ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன்.(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது 'அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள்.
2098. அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றி விடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நல்லோர்களின் மறைவு.
2099. நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகை விட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) 'மட்டமான வாற்கோதுமை போன்ற', அல்லது 'மட்டமான பேரீச்சம் பழம் போன்ற' தரம் வாய்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்தமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிர்தாஸ் இப்னு மாலிக் அல் அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.
2100. ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் தம் செல்வத்திலிருந்து எதை (அறவழியில்) செலவிட்டாரோ அதுதான் அவருக்குரிய (நன்மை பயக்கும்) செல்வமாகும்.
2101. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் 'உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?' என்று கேட்டார்கள். தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். 'அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மற்றும் நபித் தோழர்களின் பிழைப்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்தும், அவர்கள் இவ்வுலகி(ன் இன்பங்களி)லிருந்து விலகியிருந்தது குறித்தும்.
2102. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். '(என்னைப்) பின்தொடர்ந்து வா!'' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹுர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்து வாருங்கள்'' என்றார்கள். திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி விடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பி விடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. '(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது'' என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்'' என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு 'அபூ ஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)'' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்'' என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். 'இன்னும் பருகுங்கள்'' என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் 'பருகுங்கள்' என்று சொல்லிக் கொண்டேயிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில் 'இல்லை. சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் '(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்'' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.
2103. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
2104. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)'' என்று கூறினார்கள். மக்கள் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)'' என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, '(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறி விடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்'' என்றார்கள்.
2105. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் '(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே'' என்று விடையளித்தார்கள். மேலும், 'நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்'' என்றும் கூறினார்கள்.
2106. அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதனை நுறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப்போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாவைப் பேணிக் காத்தல்.
2107. தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத( நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத (மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருககு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
2108. ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாவங்களை விட்டொழிதல்.
2109. எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது. ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று 'நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், 'நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப்) போன்றவன் ஆவேன். எனவே, (ஓடுங்கள்;) தப்பித்துக் கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பிவிட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர். பிறகு அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது.
2110. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப்போன்றுதான்.
2111. சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைபோன்றே (மிக அருகில் உள்ளது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(செல்வத்தில்) தன்னைவிடக் கீழ் நிலையில் இருப்பவரை (மனிதன்) பார்க்கட்டும்; தன்னை விட மேல் நிலையில் இருப்பவரைப் பார்க்க வேண்டாம்.
2112. செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நன்மை அல்லது தீமை செய்ய எண்ணுவது.
2113. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
நம்பகத் தன்மை (மக்களிடமிருந்து) அகன்று விடல்.
2114. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரண்டு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் ('அமானத்' எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு (என்னுடைய வழியான) சுன்னாவிலிருந்தும் (அதை)அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனுடைய உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட) தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் 'நம்பகத் தன்மை' எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்குகளை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரிதாகத் தெரியுமேதவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள். மேலும், ஒருவரைப் பற்றி, 'அவரின் அறிவுதான் என்ன? அவரின் விவேகம்தான் என்ன? அவரின் வீரம்தான் என்ன?' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது. (அறிவிப்பாளர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என் மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (என்னுடைய பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்துவிடும். கிறிஸ்தவராக இருந்தால் அவருக்கான அதிகாரி என்னுடைய பொருளை அவரிடமிருந்து எனக்கு மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன்.
2115. மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முகஸ்துதியும் விளம்பரமும்.
2116. ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பாளர் ஸலமா இப்னு குஹைல்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுன்துப்(ரலி) அவர்கள் தவிர வேறு யாரிடமும் நான் கேட்டதில்லை.
பணிவு.
2117. அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான்.
2118. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது 'ஆயிஷா(ரலி) அவர்கள்' அல்லது 'நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்' 'நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் '(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கௌரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வை விட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள் பாலி)ப்பதை வெறுப்பான்'' என்று (விளக்கம்) சொன்னார்கள். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
மரணத்தின் வேதனைகள்.
2119. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'மறுமை நாள் எப்போது?' என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி 'இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்'' என்று கூறுவார்கள். இங்கு 'மறுமை' (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என (அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
மறுமை நாளில் அல்லாஹ் பூமியைக் கைப்பற்றிக் கொள்வான்.
2120. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'சரி' என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே 'மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு 'உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?' என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு 'பாலாம்' மற்றும் 'நூன்' என்றார். மக்கள் 'இது என்ன?' என்று கேட்டார்கள். அந்த யூதர் '(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்'' என்று கூறினார்.
2121. (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல்(ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் 'அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது'' என்று (கூடுதலாக) அறிவித்தார்கள்.
(மறுமையில் மக்கள்) ஒன்று திரட்டப்படுவது எப்படி?
2122. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும்.
2123. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : ''நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப் படுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்'' என்று கூறினார்கள்.
2124. மறுமைநாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம் வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மறுமைநாளில் பழிதீர்க்கப்படுதல்.
2125. மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
2126. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு 'மரணம்' (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் 'சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது'' என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
2128. (நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
2129. சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தம் சருமத்தின் நிறம் மாறிய பின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களை சொர்க்கவாசிகள் 'ஜஹன்னமியயூன்' (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
2130. மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா(ரலி)அறிவித்தார்.
2131. (சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமையவேண்டும் என்பதற்காகவே (காட்டப்படுகிறது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
2132. (மறுமை நாளில் என்னுடைய 'அல்கவ்ஸர்' எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) 'ஜர்பா' மற்றும் 'அத்ருஹ்' ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
2133. ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
2134. என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள 'ஸன்ஆ' நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) 'அய்லா' நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிடலங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
2135. நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தினருகில்) நின்று கொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி), 'வாருங்கள்' என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம் 'எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு'' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்றேன். அவர் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றார்கள்'' என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு (வான)வர் தோன்றி, 'வாருங்கள்' என (அவர்களிடம்) கூறுகிறார். நான் '(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?' என்றேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்'' என்றார். நான் 'இவர்கள் என்ன செய்தார்கள்?' என்று கேட்டேன். அவர் 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள்'' என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
2136. ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் ('அல்கவ்ஸர்') எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது '(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) 'ஸன்ஆ' நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்'' என்று கூறினார்கள்.
Friday, 27 November 2009
[பாடம்-74] நெகிழ்வூட்டும் அறிவுரைகள்.
Labels:
அறிவுரைகள்,
ஆரோக்கியம்,
இன்பம்,
உலகம்,
செல்வம்,
தீமை,
நன்மை,
வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment