Tuesday, 10 November 2009

[பாடம்-67] குடிபானங்கள்.

இம்மையில் மது அருந்துவதை விடாவிட்டால்..

1930. உலகில் மது அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறை நம்பிக்கையாளன் மது அருந்தமாட்டான்.

1931. விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருட மாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1932. மேலும், அப்துல் மலிக்(ரஹ்) '(என் தந்தை) அபூ பக்ர்(ரஹ்) மேற்குறிப்பிட்ட (ஹதீஸில் இடம் பெற்றுள்ள மூன்று) விஷயங்களுடன் (நான்காவதாக), '(மக்களின்) மதிப்புமிக்க செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொள்ளைடியப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்க மாட்டான்'' என்பதையும் (நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக) சேர்த்து அறிவித்தார்கள்'' என்று கூறினார்கள்.

'மது என்பது அறிவுக்குத் திரையிடும் பானம்' என்பது பற்றி வந்துள்ளவை.

1933. இப்னு உமர்(ரலி) கூறினார்: (என் தந்தை) உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்தபடி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள் : மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருள்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்து விட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு: 1. ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ, மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவரின் பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்? 2. 'கலாலா' என்றால் என்ன? 3. வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம். மற்றோர் அறிவிப்பில் (ஐந்து வகைப் பொருட்களில் முதலாவதாக) 'திராட்சை' என்பதற்கு பதிலாக 'உலர்ந்த திராட்சை' என்று வந்துள்ளது.

மதுவை அனுமதிக்கப்பட்டதாகக் கருதுகிறவன் குறித்தும், அதற்கு மாற்றுப் பெயர் சூட்டுகிறவன் குறித்தும் வந்துள்ளவை.

1934. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்: 'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா'' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமைநாள் வரை உருமாற்றி விடுவான்.

கல், செம்பு, மரம் உள்ளிட்ட பாத்திரங்களில் பழச்சாறுகளை ஊறவைப்பது.

1935. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார் : அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தம் திருமணத்திற்கு அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணாயிருந்த அவர்களின் துணைவியாரே நபி(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் தெரியுமா? அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். (மணவிருந்து உண்ட பின் நபியவர்களுக்கு அந்தப் பழச்சாற்றை அவர் புகட்டினார்.)

1936. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, 'மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே'' என்று சொல்லப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன் படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள்.

ஊற வைக்கத் தடை செய்யப்பட்டவை.

1937. அபூ கத்தாதா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக ஊற வைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்).

1938. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் : அபூ ஹுமைத் அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ(ரலி) 'அந்நகீஉ' (எனும் கால்நடை பராமரிப்பு மையத்தில்) இருந்து ஒரு கோப்பைப் பால் கொண்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இதன் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது இதை நீங்கள் மூடிக் கொண்டு வந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள்.

தர்மத்திலே சிறந்த தர்மம்.

1939. (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகிற ஒட்டகமும், (பாலுக்காக) இரவல் தரப்பட்ட அதிகம் பால் தருகிற ஆடும் தான் தர்மங்களிலேயே சிறந்ததாகும். (அதிலிருந்து) காலையில் ஒரு கிண்ணத்திலும், மாலையிலும் ஒரு கிண்ணத்தில் நீ பால் கறந்து கொள்ளலாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1940. ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் ஒருவர் (அபூ பக்ர்) உடன் ஓர் அன்சாரியிடம் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த அன்சாரியிடம், 'உங்களிடம் இன்று இரவு தோல் பையில் (ஊற்றி) வைக்கப்பட்ட தண்ணீர் இருந்தால் (அதை எங்களுக்குப் புகட்டுங்கள்). இல்லையென்றால் நாங்கள் (இந்தத் தொட்டியில்) வாய் வைத்துக் குடித்துக் கொள்வோம்'' என்று கூறினார்கள். அப்போது அந்த அன்சாரி தம் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் இரவிலேயே (தோல் பையில் ஊற்றி) வைத்த தண்ணீர் உள்ளது. பந்தலுக்கு வாருங்கள்'' என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றார். அங்கு கிண்ணமொன்றில் தண்ணீர் ஊற்றிப் பிறகு அதன் மீது தம் வீட்டு ஆட்டிலிருந்து (பால்) கறந்து ஊற்றினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அதை) அருந்தினார்கள். பிறகு அவர்களுடன் வந்த அந்த நண்பரும் (அபூ பக்ர்) அருந்தினார்.

நின்றுகொண்டு நீர் அருந்துவது.

1941. நஸ்ஸால் இப்னு சப்ரா(ரஹ்) கூறினார்: அலீ(ரலி) (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு 'மக்களில் சிலர் நின்றுகொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால், (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்தைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் செய்ததை பார்த்தேன்'' என்று கூறினார்கள்.

(பானம் பரிமாறப்படும்போது அதை) அருந்துவதில் வலப் பக்கத்தில் இருப்பவர், அடுத்து (அவருக்கு) வலப் பக்கத்தில் இருப்பவர் (என்ற வரிசையில்) முன்னுரிமை பெறுவர்.

1942. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் : நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு 'ஸம்ஸம்' கிணற்றிலிருந்து (நீர்) பருகினார்கள்.

தண்ணீர் தோல் பைகளை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதில் வாய் வைத்து அருந்துவது.

1943. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை 'இக்தினாஸ்' செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அதாவது அவற்றின் வாய்ப் பகுதியை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீர் பருகுவதைத் தடை செய்தார்கள்.

தண்ணீர் தோல் பையின் வாயிலிருந்து குடிப்பது.

1944. அய்யூப்(ரஹ்) கூறினார் : இக்ரிமா(ரஹ்) எங்களிடம் 'அபூ ஹுரைரா(ரலி) அறிவித்த சிறுசிறு விஷயங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?' (என்று கேட்டுவிட்டு) 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தோலால் ஆன தண்ணீர்ப் பையின் வாயிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றும், ஒருவர் தம் அண்டைவீட்டார் தம் வீட்டுச் சுவரில் (உத்திரம் முதலிய) மரக் கட்டையைப் பதிப்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்'' என்று கூறினார்கள்.

இரண்டு மூன்று முறை மூச்சுவிட்டுப் பருகுவது.

1945. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார் : (என் பாட்டனார்) அனஸ்(ரலி) பாத்திரத்தில் (பருகும்போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள்.

வெள்ளி தங்க பாத்திரங்களில் பானம்.

1946. வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில் அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் கிண்ணத்திலும் அவர்களின் பாத்திரங்களிலும் அருந்துவது.

1947. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பனூ சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது'' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்'' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினாள். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் முன்னே சென்று 'பனூ சாஇதா' குலத்தாரின் சமுதாயக் கூடத்தில் அமர்ந்தார்கள். பிறகு 'எங்களுக்குப் பருக (ஏதேனும்) கொடுங்கள். சஹ்லே!'' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குப் புகட்டினேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்: ஸஹ்ல்(ரலி) அந்தக் கிண்ணத்தை எங்களுக்காக வெளியே எடுக்க அதில் நாங்கள் பருகினோம். பிறகு உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.

1948. ஆஸிம் அல்அஹ்வல்(ரஹ்) கூறினார் : நான் நபி(ஸல்) அவர்களின் கிண்ணம் ஒன்றை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கண்டேன். அது பிளந்து விட்டிருந்தது. அதை அவர்கள் வெள்ளியால் ஒட்டவைத்தார்கள். அது ஒரு வகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்ட அகலமான உயர்ரகக் கிண்ணமாகும். அனஸ்(ரலி), 'நான் இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்கு இந்தக் கிண்ணத்தில் இத்தனை இத்தனை முறைகளைவிட அதிகமாகப் பருகக் கொடுத்துள்ளேன்'' என்று கூறினார்கள். முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) கூறினார் : அந்தக் கிண்ணத்தில் இரும்பு வளையம் ஒன்றிருந்தது. அனஸ்(ரலி) அதனிடத்தில் தங்க வளையம் அல்லது வெள்ளி வளையம் ஒன்றை வைக்க விரும்பினார்கள். அப்போது அபூ தல்ஹா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த எதையும் நீங்கள் மாற்றாதீர்கள்'' என்று (அனஸ்(ரலி) அவர்களிடம்) கூற, அனஸ்(ரலி) அதை (மாற்றாமல்) விட்டுவிட்டார்கள்.

0 comments:

Post a Comment