Monday 3 August 2009

[பாடம்-24] ஜகாத்.

ஸகாத் கடமையாக்கப்படுதல்.

702. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத்தை(ரலி) யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. நான் இறைத்தூதர் என்ற உறுதி மொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!'' என்று கூறினார்கள்.

703. அபூ அயயூப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. 'என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்' எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) 'இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!'' (என்று கூறிவிட்டு அவரிடம்.) 'நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும். அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. தொழுகையை நிலை நாட்ட வேண்டும். ஸகாத் வழங்க வேண்டும். உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.

704. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்'' என்றார்கள். அதற்கவர், 'என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்' என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், 'சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்'' என்றார்கள்.

705. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்'' கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்'' என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்'' என்றார்.

ஸகாத்தை மறுப்பதன் குற்றம்.

706. ''உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நலையில் வந்து தன்னுடைய கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அதுபோன்றே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்லநிலையில் வந்து தன்னுடைய குளம்புகளால் அவனை மிதித்துக் தன்னுடைய கொம்புகளால் அவனை முட்டும். மேலும், உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தம் பிடரியில் சுமந்து வந்து (அபயம் தேடிய வண்ணம்) 'முஹம்மதே' எனக் கூற, நான் 'அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை'' என்று கூறும்படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக (இது பற்றியெல்லாம் உங்களுக்கு (நான் அறிவித்துவிட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிப் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தம் பிடரியில் சுமந்து வந்து 'முஹம்மதே' எனக் கூற, அதற்கு நான் 'அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை'' என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட வேண்டாம். (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

707. ''அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய புதையல்'' என்று கூறும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .நபி(ஸல்) இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்து வைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.'' என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

708. ''ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

முறையாகச் சம்பாதித்தவற்றைத் தர்மமாக வழங்குதல்.

709. ''யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்.

710. ''தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்.

711. உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை எனக் கூறுவான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

712. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தம் வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான். அந்நிலை ஏற்படாதவரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவன் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பான். அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது. மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்,) 'நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?' எனக் கேட்க அவன் 'ஆம்' என்பான். பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா? எனக் கேட்டதும் அவன் 'ஆம்'' என்று கூறிவிட்டுத் தன்னுடைய வலப்பக்கம் பார்ப்பான். அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்'' எனக் கூறினார்கள்.

713. நிச்சயமாக மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப் பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணிடம் அபயம் தேடியவர்களாக, நாற்பது பெண்கள் அவனை பின்தொடர்வார்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

714. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், 'இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள்.

ஆரோக்கியத்துடனும் பொருளாசையுடன் கையிருக்கமாகவும் இருப்பவர்கள் தர்மம் செய்வதன் சிறப்பு.

715. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

716. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?' எனக் கேட்டதற்கு, 'உங்களுள் கை நீளமானவரே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா(ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப்(ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால்தான் நபி(ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

717. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?' எனக் கேட்டதற்கு, 'உங்களுள் கை நீளமானவரே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா(ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப்(ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால்தான் நபி(ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

செல்வந்தன் என அறியாமல் அவனுக்குத் தர்மம் செய்தால்...?

718. ''(முன்னொரு காலத்தில்) ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் எனக் கூறிக் கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்), ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளி வந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார். அப்போது ஒரு(வான)வர் அவரிடம் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகலாம். விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகக் கூடும். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்'' எனக் கூறினார் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மகனென்று தெரியாமல் அவனுக்கு தர்மம் செய்தால்...?

719. மஅன் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நானும் என்னுடைய தந்தையும் என்னுடைய பாட்டனாரும் நபி(ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) பைஅத் செய்திருந்தோம். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களிடம் நான் ஒரு முறை ஒரு பிரச்சினையைக் கொண்டு சென்றேன். அதாவது, என்னுடைய தந்தை யஸீத் தருமம் செய்வதற்காக சில தினார்களை எடுத்துச் சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கருகில் வைத்துவிட்டார். நான் சென்று அதை எடுத்து வந்து விட்டேன். உடனே என்னுடைய தந்தை, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த தர்மம் உனக்கல்லவே'' என்றார். உடனே நான் அவரை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டதற்கு அவர்கள் 'யஸீதே! உம்முடைய (தர்ம) எண்ணத்திற்கான நற்கூலி உமக்கு உண்டு; மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கே!'' எனக் கூறினார்கள்.

தாமே தர்மம் வழங்காமல் பணியாள் மூலம் வழங்குதல்.

720. ''ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

தம் தேவைக்கு மிஞ்சிய செல்வம் உள்ளவரே தர்மம் செய்வார்.

721. ''உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

722. இப்னுஉமர் (ரலி) இவ்வாறே அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது'' என்றும் கூறினார்கள்.

தர்மம் செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும்.

723. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய) நாவினால் நிறைவேற்றித் தருவான்'' எனக் கூறினார்கள்.

724. அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்!' எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' எனக் கூறினார்கள் என உள்ளது.

725. ''நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன் மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக் கொள்வான். (எனவே,) உன் சக்திக்கேற்ப சிறிதளவாவது தர்மம் செய்'; 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

இணைவைப்பவராக இருக்கும்போது தர்மம் செய்துவிட்டுப் பின்பு இஸ்லாத்தில் இணைதல்.

726. ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். ''இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு 'தர்மம் செய்தல், உறவினரைச் சேர்(ந்து வாழ்)தல்' போன்ற நல்ல காரியங்களைச் செய்துள்ளேன். அவற்றிக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்கூலி)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்!'' என்று பதிலளித்தார்கள்.

தன் எஜமானரின் கட்டளைப்படி அவரின் பொருளைப் பாழ்படுத்தாமல் தர்மம் செய்யும் பணியாளுக்கும் நற்கூலி உண்டு.

727. ''முஸ்லிமான, நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக - நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாக, தான் ஏவப்பட்டபடி ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

''அல்லாஹ்வே! பொருளை தர்மம் செய்பவனுக்கு (அதற்குரிய) பிரதிபலனைக் கொடுப்பாயாக!'' என்று வானவர்கள் பிரார்த்தித்தல்.

728. ''ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், 'அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!' என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தர்மம் செய்பவனுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்.

729. ''கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி)யின் மற்றோர் அறிவிப்பில் இரண்டு அங்கிகள் என்பதற்குப் பதிலாக இரண்டு கவசங்கள் என்றுள்ளது.

தர்மம் செய்வது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமையே! தர்மம் செய்ய இயலாவிடில் நல்ல காரியத்தையாவது செய்ய வேண்டும்.

730. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ''தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?' எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), 'ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்'' என்றனர். தோழர்கள், 'அதுவும் முடியவில்லையாயின்' எனக் கேட்டதற்கு, 'தேவையுடையவர்க்கு உதவ வேண்டும்'' என்று பதிலளித்தார்கள். தோழர்கள், 'அதுவும் இயலவில்லையாயின்'' என்றதும் 'நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!'' எனக் கூறினார்கள்.

ஸகாத்திலும் ஸதகாவிலும் கொடுக்கப்படவேண்டிய அளவும், ஓர் ஆட்டை தர்மமாக்கலும்.

731. ஹஃப்ஸா பின்த் ªரின் அறிவித்தார். நுஸைபா (உம்மு அதிய்யா(ரலி) அவர்களுக்கு ஓர் ஆடு (ஸதகாவாகக்) கொடுக்கப்பட்டது. அவர் அதில் கொஞ்சம் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். நபி(ஸல்) அவர்கள், '(ஆயிஷாவிடம்) 'உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?' எனக் கேட்டார்கள். ஆயிஷா(ரலி), 'நுஸைபா(ரலி) அனுப்பி வைத்த இந்த ஆட்டைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்றதும் நபி(ஸல்) அவர்கள், 'அதைக் கொண்டு வா! அது தன்னுடைய இடத்தை அடைந்து விட்டது'' என்று கூறினார்கள்.

ஸகாத்தைப் (பணமாக அன்றிப்) பொருட்களாகப் பெறல்.

732. அனஸ்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி) அல்லாஹ் அவனுடைய தூதருக்குக் கட்டளையிட்டுள்ள (பிராணிகளுக்கான) ஸகாத் சட்டங்களைப் பற்றி எனக்கு எழுதியனுப்பியபோது 'ஒரு வயது பெண் ஒட்டகம் ஸகாத் கொடுக்க வேண்டிய ஒருவரிடம், அது இல்லாமல் இரண்டு வயது பெண் ஒட்டகம் மட்டுமே இருந்தால் அதையே ஸகாத்தாக ஏற்றுக் கொண்டு ஸகாத் வசூலிப்பவர் ஸகாத் கொடுத்தவருக்கு இருபது திர்ஹம்களோ, இரண்டு ஆடுகளோ கொடுக்க வேண்டும்; அவரிடம் ஒரு வயதுடைய பெண் ஒட்டகம் இல்லாமல் இரண்டு வயதுடைய ஆண் ஒட்டகம் இருந்தால் அதை ஸகாத்தாக ஏற்றுக் கொள்ளவேண்டும்; ஸகாத் வசூலிப்பவர் அவருக்கு எதையும் கொடுக்க வேண்டியதில்லை'' என்று குறிப்பிட்டார்கள்.

(ஸகாத்தைத் குறைக்கும் நோக்கில்) பிரிந்திருப்பவற்றைச் சேர்க்கவோ சேர்ந்திருப்பவற்றைப் பிரிக்கவோ கூடாது.

733. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஸதகாவைப் பற்றி எழுதும்போது, 'ஸகாத் கொடுப்பதற்கு அஞ்சி பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதும் ஒன்று சேர்ந்தவற்றைப் பிரிப்பதும் கூடாது'' என அபூ பக்ர்(ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

734. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கிய ஸதகாவைப் பற்றி எனக்கு அபூ பக்ர்(ரலி) எழுதும்போது, 'இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் (கூட்டாளிகள் இருவரில்) ஒருவர் (தன் பொருட்களின் ஸகாத்துடன்) மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தானே செலுத்திவிடுவாராயின் அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடமிருந்து பெற வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

ஓட்டகத்துக்கு ஜகாத்.

735. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் பற்றிக் கேட்டதற்கு அவர்கள், 'உமக்கு என்ன கேடு? (எனச் செல்லமாகக் கேட்டுவிட்டு) நிச்சயமாக அதன் நிலைமை மிகவும் கடுமையானது. உம்மிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா? அவற்றிக்கு ஸகாத் கொடுத்து வருகிறீரா?' எனக் கேட்டார்கள். அவர், 'ஆம் என்றதும் நபி(ஸல்) அவர்கள், 'கடல்களுக்குப்பால் சென்று வேலை செய்வீராக! நிச்சயமாக அல்லாஹ் உம்முடைய உழைப்பின் ஊதியத்தைக் குறைத்து விடமாட்டான்'' எனக் கூறினார்கள்.

ஒரு வயதுடைய பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லையென்றால்...?

736. அனஸ்(ரலி) அறிவித்தார். அல்லாஹ் அவனுடைய தூதருக்குக் கடமையாக்கிய ஸகாத் பற்றி அபூ பக்ர்(ரலி) எனக்குக் கடிதம் எழுதினார். அதில், நான்கு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் அது இல்லாமல் மூன்று வயதுடைய பெண் ஒட்டகம் இருந்தால் அதை அவரிடமிருந்து ஏற்கலாம்; அத்துடன் அவருக்கு சக்தி இருந்தால் அவரிடமிருந்து இரண்டு ஆடுகளை வசூலிக்க வேண்டும். அல்லது இருபது திர்கங்களை வசூலிக்க வேண்டும். மூன்று வயது பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் இரண்டு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெறவேண்டும்; அத்துடன் இரண்டு ஆடுகளையோ இருபது திர்கங்களையோ (ஸகாத் அளிப்பவர்) கொடுக்க வேண்டும். இரண்டு வயதான பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் மூன்று வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற்றுக்கொண்டு, அவருக்கு, வசூலிப்பவர் இருபது திர்கங்களையோ இரண்டு ஆடுகளையோ கொடுக்க வேண்டும். இரண்டு வயது பெண் ஒட்டகத்தை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டியவரிடம் அது இல்லாமல் ஒரு வயது பெண் ஒட்டகம் இருந்தால் அதைப் பெற வேண்டும். அத்துடன் இருபது திர்கங்களையோ இரண்டு ஆடுகளையோ (ஸகாத் கொடுப்பவர்) வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஆடுகளின் ஸகாத்.

737. அனஸ்(ரலி) அறிவித்தார். நான் பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பப்பட்டதும் அபூ பக்ர்(ரலி) எனக்குக் கடிதம் எழுதினார். அதில், 'பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இது அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு ஏவி அவர்கள் முஸ்லிம்களின் மீது கடமையாக்கிய ஸகாத் (பற்றிய விவரம்) ஆகும். முஸ்லிம்களில் யாரும் கணக்குப்படி ஸகாத் கோரப்பட்டால் அதை வழங்கவேண்டும். கணக்குக்கு மேல் கொண்டுவரப்பட்டால் கொடுக்க வேண்டாம்.

இருபத்து நான்கு ஒட்டகங்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் ஒவ்வொரு ஐந்து ஒட்டகத்திற்கும் ஓர் ஆடு ஸகாத் கொடுக்க வேண்டும். இருபத்தைந்து ஒட்டகம் முதல் முப்பத்தைந்து வரை ஒரு வயது பெண் ஒட்டகம், முப்பத்தாறு முதல் நாற்பத்தைந்துவரை, இரண்டு வயது பெண் ஒட்டகம், நாற்பத்தாறு முதல் அறுபது வரை மூன்று வயதுள்ள, பருவமான பெண் ஒட்டகம், அறுபத்தொன்றிலிருந்து எழுபத்தைந்துவரை நான்கு வயது பெண் ஒட்டகம், எழுபத்தாறிலிருந்து தொன்னூறு வரை இரண்டு வயதுள்ள இரண்டு பெண் ஒட்டகங்கள், தொன்னூற்றொன்றிலிருந்து நூற்றியிருபதுவரை மூன்று வயதுள்ள, பருவமடைந்த இரண்டு பெண் ஒட்டகங்கள் ஸகாத்தாகும். நூற்றியிருபதுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நாற்பது ஒட்டகங்களும் பெண் ஒட்டகம் ஒன்று ஒவ்வொரு ஐம்பதுக்கும் மூன்று வயது பெண் ஒட்டகம் ஒன்றும் ஸகாத்தாகும். யாரிடம் நான்கு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளதோ அவற்றிற்கு ஸகாத் - இல்லை - உரிமையாளர் நாடினாலே தவிர! அவை ஐந்து ஒட்டகங்களாகி விட்டால் அதற்குரிய ஸகாத் ஓர் ஆடாகும். காடுகளில் மேயும் ஆடுகள் நாற்பதிலிருந்து நூற்றியிருபது வரைi இருந்தால், அதற்கு ஸகாத் ஓர் ஆடாகும். நூற்றியிருபதுக்கு மேல் இரண்டு நூறு வரை இருந்தால் இரண்டு ஆடுகளும் இருநூறுக்குமேல் முன்னூறு வரை மூன்று ஆடுகளும் முன்னூறுக்கும் அதிகமாகிவிட்டால் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடும் ஸகாத்தாகும். காடுகளில் மேயக் கூடிய ஆடுகளில் நாற்பதில் ஒன்று குறைந்துவிட்டாலும் உரிமையாளன் நாடினாலே தவிர அதில் ஸகாத் இல்லை. வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டுமேயிருந்தால் உரிமையாளன் நாடினாலே தவிர ஸகாத் இல்லை.

ஸகாத் வசூலிப்பவர் விரும்பினாலே தவிர வயதான அல்லது குறையுள்ள அல்லது ஆண் பிராணிகள் ஸகாத் பொருளாகப் பெறப்படமாட்டாது.

738. அனஸ்(ரலி) அறிவித்தார். அபூ பக்ர்(ரலி), அல்லாஹ் தன்னுடைய தூதருக்குக் கட்டளையிட்ட (ஸகாத்) சட்டங்களைப் பற்றி எனக்கு எழுதியபோது, 'ஸகாத் வசூலிப்பவர் விரும்பினாலே தவிர, வயதானவற்றையோ, குறைகள் உள்ளவற்றையோ, ஆண் பிராணிகளையோ ஸகாத்தாகப் பெறக் கூடாது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் பொருட்களில் உயர் தரமானவற்றை ஸகாத்தாகப் பெறக் கூடாது.

739. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது அவரிடம் 'நீர் வேதம் கொடுக்கப்பட்ட மக்களிடம் செல்கிறீர். எனவே அவர்களை முதன் முதலில் இறைவணக்கத்தின் பால் அழைப்பீராக! அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) அறிந்தால் ஒவ்வொரு நாளும் இரவிலும் பகலிலுமாக ஐந்து வேளைத் தொழுகைகளை அல்லாஹ் அவர்களின் மீது கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு தெரிவிப்பீராக! தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால் அவர்களின் செல்வங்களிலிருந்து வசூலித்து அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்களின் மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஸகாத் பெறுவீராக! மக்களின் பொருட்களில் உயர்தரமானவற்றை வசூலிக்காதீர்! என்று கூறி அனுப்பினார்கள்.

நெருங்கிய உறவினருக்கு ஸகாத் வழங்குதல்.

740. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அன்ஸார்களில் அபூ தல்ஹா(ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரின் செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ன்னபவி)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்'' என்ற (திருக்குர்ஆன் 03:92) இறைவசனம் அருளப்பட்டதும். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹுதஆலா, 'நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் என்னுடைய மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே 'இறைத்தூதர் அவர்களே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொறுத்தமாகக் கருதுகிறேன்' எனக் கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நான் அவ்வாறே செய்கிறேன்!' எனக் கூறிவிட்டு, அத் தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினருக்கும் தம் தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளும் பங்கிட்டுவிட்டார்.

741. அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கன் நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். 'மக்களே! தர்மம் செய்யுங்கள்!'' என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று 'பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை பார்த்தேன்!'' என்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன் இந்நிலை?' எனப் பெண்கள் கேட்டதும், 'நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்: கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்: கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையிலும்) குறையுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கி விடுகிறீர்கள்'' என்று நபி(ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்(ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினார். 'இறைத்தூதர் அவர்களே! ஸைனப் வந்திருக்கிறார்'' என்று கூறப்பட்டது. 'எந்த ஸைனப்?' என்று நபி(ஸல்) அவர்கள் வினவ, 'இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்!'' என்று கூறப்பட்டது. 'அவருக்கு அனுமதி வழங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) 'இறைத்தூதர் அவர்களே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தம் குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார் (என்ன செய்ய?)'' என்று கேட்டார். 'இப்னு மஸ்வூத் கூறுவது உண்மை தான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உன்னுடைய தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குதிரைக்காக முஸ்லிம் ஸகாத் கொடுக்கவேண்டியது இல்லை.

742. ''(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அனாதைகளுக்கு ஸகாத் கொடுத்தல்.

743. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள் 'என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்' எனக் கூறினார்கள். ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! (செல்வம் என்ற) நன்மை தீயதை உருவாக்குமா?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமானார்கள். உடனே அந்த நபரிடம், 'என்ன ஆனது உம்முடைய நிலைமை? நீர், நபி(ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால், நபி(ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமாலிருக்கிறார்களே!' எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, 'கேள்வி கேட்டவர் எங்கே?' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, 'நன்மையானது தீயதை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகிற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன. அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன... பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும், சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போன்றே உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கிறானோ... அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்'' எனக் கூறினார்கள்.

(ஒரு பெண்) கணவனுக்கும் தன்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்கும் ஸகாத் கொடுப்பது.

744. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார். நான் பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால்(ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததிற்குரியது. மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.

745. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் நான், இறைத்தூதர் அவர்களே! (என் முதல் கணவரான) அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக எனக்கு நன்மையுண்டா? அவர்களும் என்னுடைய குழந்தைகளே! எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீ அவர்களுக்காகச் செலவு செய்! அவர்களுக்காக நீ செலவு செய்ததற்கான நன்மை உனக்குண்டு'' எனக் கூறினார்கள்.

746. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் இப்னு வலீத், அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) ஆகியோர் (ஸகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஸகாத் தர மறுத்துள்ளார். காலிதை(ரலி)ப் பொருத்தவரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கிறீர்கள். அவரோ தம் கவசங்களையும் போர்க் கருவிகளையும் இறைவழியில் வழங்கிவிட்டாரே, அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் ஸகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினார்கள்.

யாசிப்பதைத் தவிர்த்தல்.

747. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்ஸார்களில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் 'என்னிடமுள்ள செல்வத்தை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை'' என்றார்கள்.

748. ''என்னுடைய உயிர் யாருடைய கைவசமிருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி அதைத் தம் முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

749. ''உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி) அறிவித்தார்.

750. ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, 'ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது'' எனக் கூறினார்கள்.அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.
அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர்(ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர்(ரலி), 'முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!' எனக் கூறினார். ஹகீம் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார்.

யாசிக்காமலும் பேராசையின்றியும் இறைவன் (பிறர் மூலம்) தந்தால்...?

751. உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னை விடஏழைக்கு கொடுங்களேன் என்பேன், அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உம்முடைய மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)'' என்றார்கள்.

அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பது.

752. ''(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்...'' ''வியர்வை வழிந்து மனிதனின் பாதிக் காதை அடையும் அளவுக்கு மறுமை நாளில் சூரியன் மனிதனுக்கு மிக அருகில் வந்துவிடும். இந்நிலையில் மக்கள் ஆதம்(அலை) அவர்களிடமும் பிறகு மூஸா(அலை) அவர்களிடமும் பிறகு முஹம்மத்(ஸல்) அவர்களிடமும் வந்து அடைக்கலம் தேடுவார்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மற்றொரு அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்வார்கள். இவ்வாறு படைப்பினங்களுக்கிடையே தீர்ப்பு கூறப்பட்டு முடிந்ததும், நடந்து சென்று சொர்க்கத்து வாசலின் கதவைப் பிடிப்பார்கள். அந்நாளிலே அல்லாஹ், நபி(ஸல்) அவர்களை 'மகாமுல் மஹ்மூத்' எனும் புகழுக்குரிய இடத்தில் எழுப்புவான். அப்போது அங்கு குழுமி இருக்கும் அனைவரும் நபி(ஸல்) அவர்களைப் பாராட்டுவார்கள்'' என இப்னு உமர்(ரலி) கூறினார் எனக் காணப்படுகிறது.

753. 'ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன்; மாறாக தன் வாழ்க்கைக்குப் பிறரிடம் கேட்க வெட்கப்படுகிறவனும், அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மரத்திலிருக்கும்) பேரீச்சம் பழத்தை மதிப்பிடுவது.

754. அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார். நாங்கள் தபூக் யுத்தத்தின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்று கொண்டிருந்தோம். வாதில்குரா எனும் இடத்தை அடைந்தபோது ஒரு பெண் தன் தோட்டத்தில் இருந்ததைக் கண்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி (இத்தோட்டத்தில்) எவ்வளவு பழங்கள் தேறும்? கணித்துக் கூறுங்கள்' எனக் கேட்டுவிட்டு பத்து வஸக் அளவு (தேறும்) எனக் கணித்தார்கள். பின்பு அப்பெண்ணிடம் 'இதில் கிடைப்பதைக் கணக்கிட்டு வை' எனக் கூறினார்கள். நாங்கள் தபூக்கை அடைந்தபோது 'இன்றிரவு கடும் காற்று அடிக்கும்; எனவே, யாரும் வெளியில் செல்ல வேண்டாம். ஒட்டகமுடையவர்கள் அதை நன்கு கட்டி வைக்கட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நாங்களும் ஒட்டகங்களைக் கட்டிப்போட்டு விட்டோம். கடும் காற்றும் வீசத் தொடங்கிற்று. நபி(ஸல்) அவர்களின் கட்டளையை மீறியவராக ஒருவர் வெளியே எழுந்து வந்தார். உடனே காற்று அவரை தய்யி என்ற மலையில் கொண்டு போய்ப் போட்டது. வழியில், அய்லா என்ற ஊரின் மன்னன் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் போர்த்தினார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்றும் எழுதிக் கொடுத்தார்.(போரிலிருந்து) திரும்பி, 'வாதில் குராவை' அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தோட்டத்தில் எவ்வளவு தேறியது?' எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கணித்த பத்து வஸக் தான்' என்று கூறினார். பின்பு நபி(ஸல்) அவர்கள் 'நான் விரைவாக மதீனா செல்ல வேண்டும். எனவே, உங்களில் யாரேனும் என்னோடு விரைவாக மதீனா வர நாடினால் உடனே புறப்படுங்கள்'' என்றார்கள். மதீனா நெருங்கியபோது, 'இது நறுமணம் கமழும் நகரம்'' என்றார்கள். பின்பு உஹது மலையைப் பார்த்தபோது 'இது அழகிய சிறிய மலை. இது நம்மை நேசிக்கிறது. நாம் அதை நேசிக்கிறோம்'' என்று கூறிவிட்டு, 'அன்ஸாரிகளில் சிறந்த குடும்பத்தினரை நான் அறிவிக்கட்டுமா?' எனக் கேட்க தோழர்களும், 'ஆம்' என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'பனூ நஜ்ஜார் குடும்பத்தினர், பின்பு பனூ அப்துல் அஷ்ஹல், பிறகு பனூ ஸாயிதா அல்லது பனூ ஹாரிஸ் இன்னும் அன்ஸாரிகளின் அனைத்துக் குடும்பத்தினரும் சிறந்தவர்களே'' என்றார்கள். மற்றோர் அறிவிப்பில் 'பனூ ஹாரிஸா பின்பு பனூ ஸாயிதா' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது. மற்றோர் அறிவிப்பில் 'உஹத் மலை நம்மை நேசிக்கிறது. அதை நாம் நேசிக்கிறோம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் மூலமாகவோ வாய்க்காலின் மூலமாகவோ நீர் (பாயப்) பெற்று விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு (அளவு ஸகாத் வசூலிக்கப்படும்).

755. ''மழை நீராலோ, ஊற்று நீராலோ, தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம் கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஸகாத் கொடுக்க வேண்டும். மற்றொரு அறிவிப்பில் விளை பொருட்களில்) ஐந்து வஸக்குகளை விடக் குறைவானதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஒட்டகங்களை விட குறைவாக உள்ளதில் ஸகாத் கிடையாது. ஐந்து ஊகியாக்களை விடக் குறைவாக உள்ள வெள்ளிக்கும் ஸகாத் கிடையாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பேரீச்ச மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத்தை வசூலித்தல்.

756. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மரத்தின் அறுவடையின் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹஸன்(ரலி) ஹுசைன்(ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள். ஓருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு 'முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?' எனக் கேட்டார்கள்.

தாம் தர்மம் செய்த பொருளைத் தாமே வாங்கலாமா?

757. உமர்(ரலி) அறிவித்தார். இறைவழியில் சவாரி செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கிவிட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே, இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதை வாங்காதீர்! உம்முடைய தர்மத்தை நீர் திரும்பப் பெறாதீர்! அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான்'' என்றார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மனைவியரின் அடிமைகளுக்கு தர்மம் செய்தல்.

758. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மைமூனா(ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்துக் கிடந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'இதன் தோலை நீங்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். 'இது செத்ததாயிற்றே!'' எனத் தோழர்கள் கூறியதும் 'இதை உண்பதுதான் தடுக்கப்பட்டுள்ளது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தர்மம் (அன்பளிப்பாக) மாறுவது.

759. அனஸ்(ரலி) அறிவித்தார். பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்'' என்றார்கள்.

செல்வந்தர்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து ஏழைகள் எங்கிருந்தாலும் அவர்களுக்குக் கொடுப்பது.

760. ''நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி சொல்லும்படி அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், 'அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டால் 'நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகிற ஸகாத்தைத் கடமையாக்கியுள்ளான்' என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை முஆத் இப்னு ஜபல்(ரலி) யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஸகாத் கொடுப்பவர்களுக்காக தலைவர் பிரார்த்திப்பது.

761. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். யாரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இன்னாரின் குடும்பத்திற்கு நீ கிருபை செய்வாயாக!'' என்று பிரார்த்திப்பவராக இருந்தார்கள். என்னுடைய தந்தை (அபூ அவ்ஃபா) தம் ஸகாத்தைக் கொண்டு வந்தார். 'இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினர்க்கு கிருபை செய்வாயாக'' என்று நபி(ஸல்) பிரார்த்தித்தார்கள்.

கடலிலிருந்து கிடைப்பவை.

762. 'இஸ்ரவேலர்களில் ஒருவர் தம் சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் ஆயிரம் தீனார் கடன் கேட்டார். (அதற்கு ஒருவர் இசைந்து) அவருக்குப் பணத்தைக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், கடலில் செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை. எனவே, ஒரு மரக்கட்டையை எடுத்து அதில் துளையிட்டு ஆயிரம் தீனாரையும் அதில் வைத்து அடைத்து கடலில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். ஒரு நாள் அவருக்குக் கடன் கொடுத்த மனிதர் வெளிக் கிளம்பி (அவ்வழியே) வந்தபோது மரக்கட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு அதை (எரிப்பதற்கு) விறகாகத் தம் வீட்டிற்கு எடுத்து வந்தார். அதை(க் கோடாரியால்) பிளந்தபோது தம் பொருளைப் பெற்றார் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புதையலின் ஸகாத் ஐந்தில் ஒரு பங்காகும்.

763. ''விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் (அதன் சொந்தரக்காரனிடம்) நஷ்டஈடு கேட்கப்பட மாட்டாது. புதையலில் (ரிகாஸில்) ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸகாத் வசூலிப்பவர்களிடம் தலைவர் கணக்குக் கேட்க வேண்டும்.

764. அபூ ஹுமைத் அஸ் ஸாயிதீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், இப்னு லுத்பிய்யா என்றழைக்கப்படும் அஸத் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை பனூஸுலைம் எனும் கோத்திரத்தாரிடையே ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்து) வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள்.

தலைவர் தம் கைகளால் ஸகாத்துடைய ஒட்டகத்திற்கு அடையாளமிடுவது.

765. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று ஊட்டுவதற்காக ஒரு நாள் காலை அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹா எனும் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அடையாளமிடும் கருவியைக் கொண்டு ஸதகா ஒட்டகத்திற்கு தம் கையால் அடையாளமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

0 comments:

Post a Comment