978. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!''.
இஃதிகாஃப் இருப்பவர் தேவை இருந்தால் தவிர வீட்டிற்குச் செல்லக்கூடாது.
979. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
ஓர் இரவு மட்டும் இஃதிகாஃப் இருப்பது.
980. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 'மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர்(ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்'' என்றார்கள்.
பெண்கள் இஃதிகாஃப் இருப்பது.
981. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
இஃதிகாப் இருப்பவர் தம் தேவைக்களுக்காகப் பள்ளியின் வாசல்வரை செல்லலாமா?
982. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல்வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்'' எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) 'ஸுப்ஹானல்லாஹ்' என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.
ரமலானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருப்பது.
983. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Monday, 24 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment