உம்ராவிற்குச் செல்பவர் தடுக்கப்பட்டால்...?
879. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) தடுக்கப்பட்டபோது தம் தலையை மழித்துக் கொண்டு, தம் மனைவியருடன் கூடி, தம் பலிப்பிராணியையும் அறுத்து பலியிட்டார்கள். மறுவருடம் உம்ரா செய்தார்கள்.
ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்படுதல்.
880. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டால், அவர் (சாத்தியப்பட்டால்) கஅபாவை வலம்வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! மறுவருடம் ஹஜ் செய்து பலியிடட்டும்! பலிப் பிராணி கிடைக்காவிட்டால் நோன்பு நோற்கட்டும்!''
(ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து) தடுக்கப்படும்போது, தலையை மழித்துக் கொள்வதற்கு முன் (பலிப் பிராணியை) அறுத்து பலியிடுதல்.
881. மிஸ்வர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக் கொள்வதற்கு முன் (பலிப்பிராணியை) அறுத்து பலியிட்டார்கள். அவ்வாறே செய்யும்படி தம் தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள்.
தவறுக்குப் பரிகாரம்.
882. கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். ஹுதைபிய்யாவில் என்னருகில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா!'' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன். அதற்கு 'உம் தலையை மழித்துக் கொள்ளும்!'' என்றார்கள். என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02:196) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!'' என்று கூறினார்கள்.
(இஹ்ராம் அணிந்த நிலையில் ஏற்படும் குற்றங் குறைகளுக்குரிய) பரிகாரமாக ஓர் ஏழைக்கு வழங்கும் உணவின் அளவு ஸாவு ஆகும்.
883. அப்துல்லாஹ் இப்னு மஃகல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், 'என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02: 196) இறைவசனம் அருளப்பட்டது. என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருக்க, நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன்; நபி(ஸல்) அவர்கள், 'உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! உம்மிடம் ஓர் ஆடு இருக்கிறதா?' என்று கேட்டார்கள்; நான் 'இல்லை!' என்றேன். நபி(ஸல்) அவர்கள், '(தலையை மழித்து) மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!' என்று கூறினார்கள்.
Wednesday, 12 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment