Saturday 15 August 2009

[பாடம்-29] இஹ்ராம் அணிந்த நிலையில் தவறாக வேட்டையாடியதன் பரிகாரம்.

இஹ்ராம் அணியாதவர் வேட்டையாடி, இஹ்ராம் அணிந்தவருக்கு அன்பளிப்பாக அதை வழங்கினால் அவர் உண்ணலாம்.

884. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி(ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.''அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி(ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூகிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, 'நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்தீர்?' என்று கேட்டேன். அதற்கவர் 'அவர்கள் 'சுக்யா' எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில், 'தஃஹின்' எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!'' என்றார். (நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து), 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்! இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் 'உண்ணுங்கள்!'' என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்.

இஹ்ராம் அணியாதவர் வேட்டையாடும்போது இஹ்ராம் அணிந்தவர் உதவக் கூடாது.

885. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் அணிந்தவர்களும் இஹ்ராம் அணியாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ பார்க்கலானார்கள். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (என் குதிரையில் ஏறியதும்) என்னுடைய சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் 'நாங்கள் இஹ்ராம் அணிந்திருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்!'' என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர், ஒரு பாறாங் கல்லின் பின்னாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதன் கால்களை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டு வந்தேன். சிலர் 'உண்ணுங்கள்!'' என்றனர். மற்றும் சிலர் 'உண்ணாதீர்கள்!'' என்றனர். எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதை உண்ணுங்கள்! அது அனுமதிக்கப்பட்டதுதான்!' என்று பதிலளித்தார்கள்.

இஹ்ராம் அணியாதவர் வேட்டையாடுவதற்காக இஹ்ராம் அணிந்தவர் வேட்டைப் பிராணியை(க் காட்டிக் கொடுக்க) சைகை செய்யக் கூடாது.

886. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி(ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பி வைத்தார்கள். 'கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பியபோது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் அணிந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் அணியவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். 'நாம் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?' என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்தோம்; அபூ கதாதா இஹ்ராம் அணியவில்லை. அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம். அபூ கதாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; 'நாம் இஹ்ராம் அணிந்திருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?' என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்; பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?' என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் 'இல்லை!'' என்றனர். 'அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஹ்ராம் அணிந்தவருக்கு காட்டுக் கழுதை உயிருடன் அன்பளிப்புச் செய்யப்பட்டால் அதை அவர் ஏற்கக் கூடாது.

887. ஸஅபு இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும். 'நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்!'' என்று கூறினார்கள்.

இஹ்ராம் அணிந்தவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்கள்.

888. ''ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இப்னு உமர்(ரலி) ஹஃப்ஸா(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.

889. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம். அப்போது 'வல்முர்ஸலாத்'' எனும் அத்தியாயம் அவர்களுக்கு இறங்கியது. அவர்கள் அதை ஓதிக் காட்டினார்கள். நான் அவர்களின் திருவாயிலிருந்து (கேட்டு) அதை மனனம் செய்து கொண்டிருந்தேன். அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது. அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி(ஸல்) அவர்கள், 'அதைக் கொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அதன் தீங்கிலிருந்து நீங்கள் தப்பித்ததுபோல் உங்கள் தீங்கிலிருந்து அது தப்பித்தது!'' என்று கூறினார்கள்.

890. ''பல்லி தீங்கிழைக்கக் கூடியது! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆனால், 'அதைக் கொல்லுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நான் செவியுறவில்லை!'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

மக்காவில் போர் புரியக் கூடாது.

891. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''இனி (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்றாலும் அறப்போரிடுதல் அதற்காக (வும் மற்ற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் இருக்கிறது! நீங்கள் போருக்காக அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்! வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள்வரை இவ்வூர் புனிமானதாகும்! எனக்கு முன்னர் எவருக்கும் இவ்வூரில் போரிட அனுமதிக்கப்படவில்லை. எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள் வரை இவ்வூர் புனிதமானதாகும்! இங்குள்ள முட்களை வெட்டக் கூடாது. வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது. பிறர் தவறவிட்ட பொருட்களை அதை அறிவிப்பவர் தவிர மற்றவர் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைத்தூதர் அவர்களே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது!'' என்று அப்பாஸ்(ரலி) கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இத்கிரைத் தவிர!'' என்று பதிலளித்தார்கள்.

நறுமணம் இல்லாதவற்றை இஹ்ராம் அணிந்தவர் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

892. இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், 'லஹ்யு ஜமல்' எனுமிடத்தில் தம் தலையின் நடுப்பகுதியில் இரத்தம் குத்தி எடுத்தார்கள்!''

இஹ்ராம் அணிந்தவர் திருமணம் செய்தல்.

893. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது அன்னை மைமூனா(ரலி) அவர்களை மணந்தார்கள்!''

இஹ்ராம் அணிந்தவர் குளிப்பது.

894. அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்(ரஹ்) அறிவித்தார். 'அப்வா என்ற இடத்தில் மிஸ்வர் மின் மக்ரமா(ரலி) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகிய இருவரும் கருத்து வேறுபட்டனர். 'இஹ்ராம் அணிந்தவர் தலையைக் கழுவலாம்!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 'இஹ்ராம் அணிந்தவர் தலையக் கழுவக் கூடாது!'' என்ற மிஸ்வர்(ரலி) கூறினார். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி), என்னை அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே திரையால் மறைக்கப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். 'நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். 'யார் அது?' என்று கேட்டார்கள். 'நானே அப்துல்லாஹ் இப்னு ஹுனைன்! 'நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது எவ்வாறு தலையைக் கழுவுவார்கள்?' என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) என்னை அனுப்பினார்கள்!'' என்று கூறினேன். அபூ அய்யூப்(ரலி), தம் கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை தெரியுமளவிற்குத் திரையை (அசைத்து) இறக்கினார்கள். பிறகு தண்ணீர் ஊற்றுகிற மனிதரிடம் 'தண்ணீர் ஊற்றுவீராக!' என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்றினார். அபூ அய்யூப்(ரலி), தம் தலையை இரண்டு கைகளாலும் அசைத்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டு சென்றார்கள்; 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்யப் பார்த்திருக்கிறேன்!'' என்றும் கூறினார்கள்.

895. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றியபோது ஒருவர் வந்து, 'இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்!' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவனைக் கொன்று விடுங்கள்!'' என்று உத்தரவிட்டார்கள்.

இறந்தவருக்காக ஹஜ் செய்தலும், அவரின் நேர்ச்சையை நிறைவேற்றலும், பெண்களுக்காக ஆண்கள் ஹஜ் செய்தலும்.

896. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்'' என்றார்கள்.

897. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். ''நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோது நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!''

898. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், 'நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, 'என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. (இதுவே காரணம்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்'' என்றார்கள்.

899. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) 'கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!''.

கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தல்.

900. அனஸ்(ரலி) அறிவித்தார். ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். '(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!'' என்று மக்கள் கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் 'இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!'' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்.

901. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புப் பெறும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்'' என்றார்கள்.

0 comments:

Post a Comment