Thursday 27 August 2009

[பாடம்-34] வியாபாரம்.

984. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன். எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!'' என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா என்னும் கடை வீதி இருக்கிறது!' என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ மண முடித்துவிட்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன். 'யாரை?' என்றார்கள். 'ஓர் அன்ஸாரிப் பெண்ணை!'' என்றேன். 'எவ்வளவு மஹ்ர் கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!'' என்றார்கள்.

அனுமதிக்கப்பட்டது தெளிவானது. விலக்கப்பட்டதும் தெளிவானது. அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமானதும் உள்ளது.

985. ''ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது. ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது. அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்;. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

986. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''ஸம்ஆ'' என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ கைப்பற்றிக் கொள்!'' என்று உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, 'இவன் என் சகோதரரின் மகன்! என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்!' எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் மகன் அப்து(ரலி), 'இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்!' எனக் கூறினார். இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ஸஅத்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) 'இவன் என் சகோதரன்! என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்! எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,''ஸம்ஆவின் மகன் அப்தே! இவன் உமக்குரியவனே! எனக் கூறினார்கள். பின்னர் '(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் மகளுமான ஸவ்தா(ரலி) அவர்களிடம் 'ஸவ்தாவே! நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள்!'' என்றார்கள். ('அவர் ஸம்ஆவின் மகன்தான்! என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அவர் அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை மரணிக்கும்வரை சந்திக்கவில்லை.

அடிப்படை இல்லாத மனக் குழப்பங்கள் சந்தேகத்திற்குரியவைகளில் சேராது.

987. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்'' என்றார்கள்.

'எவ்வாறு பொருள் ஈட்டினோம்' என்பது பற்றிப் பொருட்படுத்தாதவர்.

988. ''தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாணய மாற்று வியாபாரம்.

989. அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவித்தார். ''நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு 'உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது!'' என அவர்கள் பதிலளித்தார்கள்!' என்றார்கள்!''

வியாபாரத்திற்காக வெளியே செல்லுதல்.

990. உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். உமர்(ரலி) (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூ மூஸா(ரலி) வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர்(ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா(ரலி) திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர்(ரலி), 'அபூ மூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!'' என்றார்கள். 'அவர் திரும்பிச் சென்றார்!'' என்று கூறப்பட்டது. உடனே உமர்(ரலி) அபூ மூஸா(ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். (''ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?' என்று உமர்(ரலி) கேட்டபோது) அபூ மூஸா(ரலி), 'இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்!' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!' எனக் கேட்டார்கள். உடனே, அபூ மூஸா(ரலி) அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நம்மில் இளையவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சி சொல்ல மாட்டார்கள்!'' என்றனர். அபூ மூஸா(ரலி) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர்(ரலி), 'நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்!'' என்று கூறினார்கள்.

செல்வ வளத்தை ஒருவர் விரும்பினால்...?

991. ''ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்'' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பொருட்களைக் கடனாக வாங்கியது.

992. அனஸ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் தீட்டப்படாத கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் வாசனை நீங்கிய உருக்கப்பட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கவசத்தை மதீனாவில் உள்ள ஒரு யூதரிடம் அடமானமாக வைத்து அவரிடமிருந்து தம் குடும்பத்தினருக்காகத் தீட்டப்படாத கோதுமையை வாங்கியிருந்தார்கள். 'முஹம்மதின் குடும்பத்தினரிடம் தீட்டிய கோதுமையில் ஒரு ஸாவு, பிற தானியத்தில் ஒரு ஸாவு இருந்ததில்லை.'' அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்.

993. ''ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி (அலை)அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.

விற்கும்போதும் வாங்கும் போதும் தாராளமாக நடந்து கொள்ளுதல்.

994. வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(கடனைத் தீர்க்க) வசதி படைத்தவர்களுக்கும் அவகாசம் அளித்தல்.

995. ''உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் 'நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?' எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், 'வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!'' என்று கூறினார். உடனே, 'அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!' என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.மற்றோர் அறிவிப்பில், 'சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும் வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன்!' என்று அவர் கூறினார் என இடம் பெற்றுள்ளது.மற்றோர் அறிவிப்பில், 'வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன்!'' என்று கூறினார் என இடம் பெற்றுள்ளது.இன்னொரு அறிவிப்பில், 'வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன்!'' என்று கூறினார்; என இடம் பெற்றுள்ளது.

விற்பவரும் வாங்குபவரும் பொருட்களில் உள்ள குறைகளை மறைக்காமல் தெளிவுபடுத்தி வியாபாரம் செய்தல்.

996. ''விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.

(பலரகப் பேரீச்சங்கனிகளும் கலந்திருக்கும்) பேரீச்சம் பழக் கலவையை விற்கலாமா?

997. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது. இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!'' என்று கூறினார்கள்.

வட்டி கொடுப்பவர்.

998. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்) அவர்கள் கூறினார்: இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவரின் தொழில் கருவிகளை உடைத்துவிட்டார்கள்.) இது தொடர்பாக அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்குப் பெறுகிற கூலியை)யும் தடை செய்தார்கள்; பச்சை குத்துவதையும், பச்சை குத்திக் கொள்வதையும் தடை செய்தார்கள்; வட்டி உண்பதையும் வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!'' என்று பதிலளித்தார்கள்.

999. ''(பொய்) சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்; ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அது அழித்துவிடும்! 'என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பொற்கொல்லரும் கருமானும்.

1000. கப்பாப்(ரலி) அறிவித்தார். நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தர மாட்டேன்!'' என்றான். நான் 'அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!' எனக் கூறினேன். அதற்கவன் 'நான் மரணித்து எழுப்பப்படும் வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!'' என்றான். அப்போதுதான் 'நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!' என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்படவேண்டுமென்று) கருணையாளான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?' என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!''

தையல்காரன்.

1001. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ''ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி(ஸல்) அவர்களை அழைத்தார். நானும் நபி(ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர் ரொட்டியையும் உலர்த்தி போடப்பட்ட குழம்பையும் நபி(ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி(ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக் கூடியவனாகி விட்டேன்!''

கழுதை மற்றும் கால்நடைகளை வாங்குதல்.

1002. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன்; அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. 'ஜாபிரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'என்ன விஷயம் (ஏன் பின்தங்கி விட்டீர்)?' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் களைந்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த ஒரு கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு 'ஏறுவீராக!' என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி(ஸல்) அவர்களை விட என்னுடைய ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'நீர் மணமுடித்து விட்டீரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'கன்னியையா? ஏன்று கேட்க வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள்,நீ 'கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!' என்று கூறினார்கள். நான், 'எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர்! அவர்களை அரவணைத்து, அவர்களுக்குத் தலைவாரி, அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண்ணை மணக்க வேண்டும் என்று விரும்பினேன்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!' என்று கூறிவிட்டு பின்னர். 'உம்முடைய ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?' என்றார்கள். நான் 'சரி (விற்று விடுகிறேன்!)' என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கினார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். 'இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'உம்முடைய ஒட்டகத்தை விட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!' என்றார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால்(ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!' என்றார்கள். நான் (மனத்திற்குள்) 'இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை' என்று கூறிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!' எனக் கூறினார்கள்.

1003. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். இங்கே (மக்காவில்) நவ்வாஸ் என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவரிடம் அடங்காத் தாகமுடைய ஓர் ஒட்டகம் இருந்தது. இப்னு உமர்(ரலி) அந்த ஒட்டகத்தை நவ்வாஸுடைய கூட்டாளி ஒருவரிடமிருந்து வாங்கினார்கள். அந்தக் கூட்டாளி நவ்வாஸிடம் சென்று 'அந்த ஒட்டகத்தை நாம் விற்றுவிட்டோம்!'' என்றார். நவ்வாஸ் 'யாரிடம் விற்றீர்?' என்று கேட்டதற்கு அவர், 'இன்ன பெரியாரிடம் விற்றேன்!'' என்றார். அதற்கு நவ்வாஸ் 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்தப் பெரியவர் இப்னு உமர்(ரலி) தாம்!'' என்று கூறிவிட்டு இப்னு உமர்(ரலி) அவர்களிடம் சென்றார். 'என்னுடைய பங்காளி அடங்காத் தாகமுள்ள ஒட்டகத்தை உங்களிடம் விற்றுவிட்டார்;. அவர் உங்களை யாரென்று அறியவில்லை!'' என்று கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி) 'அப்படியானால், அதை ஓட்டிச் செல்வீராக!'' என்றார்கள். அவர் அதை ஓட்டிச் செல்ல முயன்றதும். இப்னு உமர்(ரலி) 'அதை விட்டுவிடுவீராக! 'தொற்று நோய் கிடையாது!' என்ற நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்! (இந்த நோயுள்ள ஒட்டகத்தினால் என்னுடைய ஏனைய ஒட்டகங்களுக்கு பாதிப்பு ஏற்படாது!)'' என்றார்கள்.

இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பவர்.

1004. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ''அபூ தைபா என்பவர் நபி(ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தார்; அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். (இரத்தம் குத்தி (உறிஞ்சி) எடுத்த அபூ தைபா (அடிமையாக இருந்ததால்) அவரின் எஜமானர்களிடம் அவரின் நிலவரியைக் குறைக்குமாறு உத்தரவிட்டார்கள்!''

1005. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் (ஒருவரிடம்) இரத்தம் குத்தி எடுத்தார்கள். இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்குக் (கூலி) கொடுத்தார்கள். அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் (அவ்வாறு கூலி) கொடுத்திருக்க மாட்டார்கள்!.

1006. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி(ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் 'இது என்ன தலையணை?' என்று கேட்டார்கள். 'நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!'' எனக் கூறினார்கள்.

1007. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்; நான் (என் தந்தை) உமர்(ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகத்தின் மீது இருந்தேன். அது என்னை மீறிக் கூட்டத்தினருக்கு முன்னால் சென்றது. உமர்(ரலி) அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். மீண்டும் அது முன்னே சென்றது. அப்போதும் உமர்(ரலி) அதை அதட்டிப் பழைய இடத்திற்குத் திருப்பியனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம், 'இதை எனக்கு விற்று விடுவீராக!' என்றார்கள். உமர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இது தங்களுக்கு உரியது!' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு இதை விலைக்குத் தாரும்!'' என்றார்கள். உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதை விற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'உமர் மகன் அப்துல்லாஹ்வே! இது உமக்குரியது! நீர் விரும்பியவாறு இதைப் பயன்படுத்திக் கொள்!'' என்றார்கள்.

வியாபாரத்தில் மோசடி கூடாது.

1008. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். 'நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் 'ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!'' என்று கூறி விடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)'' என்றார்கள்.

1009. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர்வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள்; எனினும் (அதற்குப்) பின்னர் அவரவரின் எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!'' என்றார்கள்.

1010. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒருவர் 'அபுல் காஸிமே! (காஸிமின் தந்தையே!)'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர், (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) 'இவரைத்தான் அழைத்தேன்! (உங்களை அழைக்கவில்லை!)'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! என்னுடைய குன்யத்தை ('அபுல் காஸிம்' என்னும் என்னுடைய குறிப்புப் பெயரை) சூட்டிக் கொள்ளாதீர்கள்!'' என்று கூறினார்கள்.

1011. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். 'இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?' என்று கேட்டார்கள். ஃபாத்திமா(ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா(ரலி) அவர்களின் மகன் (ஹஸன்(ரலி)) ஓடிவந்தார். உடனே, நபி(ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். 'இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!'' என்று கூறினார்கள்.

1012. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் உணவுப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் வியாபாரிகளிடம் வழிமறித்து வாங்கிக் கொண்டிருந்தனர். 'உணவுப் பொருட்களை, விற்பனை செய்யப்படும் இடத்திற்கு (சந்தைக்கு) கொண்டு சென்ற பின்புதான் விற்க வேண்டும். வாங்கிய இடத்திலேயே அவற்றை விற்கக் கூடாது!' என்று வியாபாரிகளைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஆட்களை அனுப்பி வைத்தார்கள்!.''உணவுப் பொருளை வாங்கினால், அது (முழுமையாக) கைக்கு வந்து சேருவதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!''

கடைத்தெருவில் கத்திப்பேசி சச்சரவு செய்வது வெறுப்புக் குரியதாகும்.

1013. அதா இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களைச் சந்தித்து, 'தவ்ராத்தில் நபி(ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்!'' என்றேன். அவர்கள், 'இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களின் சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. 'நபியே! நிச்சயமாக உம்மை சாட்சி அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் என்னுடைய அடிமையும் என்னுடைய தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்!'' (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) 'அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்! அவர் மூலம் வளைந்த மார்க்கத்தை நிமிர்த்தும்வரை அல்லாஹ் அவ(ரின் உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் 'லாயிலாஹ இல்லல்லாஹு' என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும்!' என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது!'' என பதிலளித்தார்கள்.

1014. ஜாபிர்(ரலி) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஹராம்(ரலி)தான் கடன்பட்ட நிலையில் மரணித்துவிட்டார்கள். அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரின் கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்களின் உதவியை நாடினேன். நபி(ஸல்) அவர்கள் (கடனைத் தள்ளுபடி செய்யுமாறு) கோரியபோது அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீர் சென்று உம்முடைய பேரீச்சம் பழத்தில் அஜ்வா எனும் ரகத்தைத் தனியாகவும் இப்னு ஸைத் எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் அனுப்புவீராக!'' என்றனர். அவ்வாறு நான் செய்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பினேன். நபி(ஸல்) அவர்கள் வந்து அதன் மேற்புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் '(கடன் கொடுத்த) இக்கூட்டத்தினருக்கு அளந்து கொடுப்பீராக!'' என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். என்னுடைய பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாமல் அப்படியே மீதமிருந்தது. மற்றோர் அறிவிப்பில் 'பேரீச்சம் குலையை வெட்டிக் கடனை நிறைவேற்று!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உள்ளது.

அளப்பது விரும்பத்தக்கது.

1015. ''உங்கள் உணவுகளை அளந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு பரக்கத் செய்யப்படும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த ஸாவு, முத்து ஆகியவற்றில் பரக்கத் உள்ளது.

1016. ''இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கினார்கள். அதற்காக பிரார்த்தித்தார்கள். இப்ராஹீம்(அலை) மக்காவைப் புனித நகராக்கியது போல் நான் மதீனாவைப் புனித நகராக்கினேன். இப்ராஹீம்(அலை) மக்காவிற்காக பிரார்த்தித்தது போல் நான் மதீனாவிற்காக அதன் ஸாவு, முத்து ஆகியவற்றில் (பரக்கத்துக்காக) பிரார்த்தித்தேன் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

உணவுப் பொருட்களை விற்பதும் பதுக்குவதும்.

1017. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு முன்பு. வழியிலேயே விற்றதற்காக நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அடிக்கப்பட்டதை நான் பார்த்துள்ளேன்!''

1018. தாவூஸ்(ரஹ்) அறிவித்தார். 'உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

1019.
''தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது, உடனுக்குடன் மாற்றினாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அறிவித்தார்.

1020. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 'கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!'' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!''

ஏலத்தில் விற்பது.

1021. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.

தன் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றையும், தன் உடைமையல்லாதவற்றையும் அளவோ, தரமோ, தன்மையோ தெரியாதவற்றையும் விற்பதும் பிறக்காத உயிரினத்தை விற்பதும்.

1022. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் பிறக்காத உயிரினத்தை விற்பதற்குத் தடை விதித்தார்கள். அறியாமைக் கால மக்கள் இத்தகைய வியாபாரம் செய்து வந்தனர்! 'இந்த ஒட்டகம் குட்டி போட்டு, அந்தக் குட்டிக்குப் பிறக்கும் குட்டியை நான் வாங்கிக் கொள்கிறேன்! (அல்லது விற்கிறேன்!)' என்று செய்யப்படும் வியாபாரமே இது!''

மடி கனக்கச் செய்யப்பட்ட பிராணியை வாங்கியவர் விரும்பினால் அதைத் திருப்பிக் கொடுத்து விடலாம்; ஆனால், (திருப்பித் தரும்போது) கறந்த பாலுக்காக ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்.

1023. ''மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை யாரேனும் வாங்கினால் அதில் பால் கறந்து பார்த்துத் திருப்தியடைந்தால் வைத்துக் கொள்ளலாம்; திருப்தியடையாவிட்டால் கறந்த பாலுக்காக ஒரு ஸாவு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

விபச்சாரம் செய்யும் அடிமையை விற்பது.

1024. ''ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்து விட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவது விற்று விடட்டும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1025. ''(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடைமறித்து வாங்காதீர்கள்! கிராமத்தி லிருந்து (சரக்கு கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!' 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். கிராமத்திலிருந்து வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்!'' என்பதன் பொருள் என்ன?' என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள் 'இடைத் தரகராக ஆகக்கூடாது! (என்பதுதான் அதன் பொருள்!)' என பதிலளித்தார்கள்'' என்று தாவூஸ்(ரஹ்) கூறினார்.

1026. ''ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது. மேலும் விற்பனைப் பொருள்கள் சந்தைக்கு வந்து இறங்கு முன் வாங்காதீர்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உலர்ந்த திராட்சைக்கு உலர்ந்த திராட்சையை விற்பதும் உணவுப் பொருளுக்கு உணவுப் பொருளை விற்பதும்.

1027. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் 'முஸாபனா எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள். 'முஸாபனா' என்பது (மரத்திலுள்ள) பேரீச்சம் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் (கொடியிலுள்ள) திராட்சைப் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்கு விற்பதுமாகும்!''

வாற்கோதுமைக்கு வாற்கோதுமை விற்பது.

1028. மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார். நான் நூறு தீனார்களை (திர்ஹமாக) மாற்றித் தருமாறு கேட்டேன். தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) என்னை அழைத்தார்கள். அவர்களிடம் வியாபாரம் பேசியதும் என்னிடமிருந்து தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்டு கையில் வைத்துக் குலுக்கினார்கள். பிறகு 'ஃகாபாவிலிருந்து நம்முடைய கருவூலக் காப்பாளர் வரும்வரை சில்லறை தர முடியாது!'' என்றார்கள். இதை உமர்(ரலி) கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவரிடமிருந்து சில்லறையைப் பெறாமல் நீர் பிரியக் கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் 'தங்கத்திற்குத் தங்கத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் மாற்றினாலே தவிர! கோதுமைக்கு கோதுமையை மாற்றிக் கொள்வது வட்டியாகும் உடனுக்குடன் மாற்றிக் கொள்வது தவிர. பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக் கொள்வது வட்டியாகும். உடனுக்குடன் மாற்றினாலே தவிர!'' என்று கூறினார்கள்!'' என்று உமர்(ரலி) சொன்னார்கள்.

தங்கத்திற்கு தங்கம்.

1029. ''சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர. வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும் வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1030. ''சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்கச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தைக் கடனுக்கு விற்றல்.

1031. அபூ ஸாலிஹ் அஸ் ஸய்யாத்(ரலி) அறிவித்தார். ''தங்க நாணயத்திற்கு (தீனாருக்கு)த் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு (திர்ஹத்திற்கு) வெள்ளி நாணயத்தையும் விற்கலாம்!' என அபூ ஸயீத்(ரலி) கூறினார். அவரிடம் நான் இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு கூறுவதில்லையே எனக் கேட்டேன். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் இதை நபி(ஸல்) அவர்கள் வழியாகச் செவியுற்றீர்களா? அல்லது அல்லாஹ்வின் வேதத்தில் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவ்வாறு நான் கூறவில்லை. என்னைவிட நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பற்றி நன்கறிந்தவர் என்றாலும், கடனில் தவிர வட்டி ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா எனக்கு கூறினார் என்று விடையளித்தார் எனப் பதிலளித்தார்.

தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்றல்.

1032. அபுல் மின்ஹால் அறிவித்தார். பராஉ இப்னு ஆஸிப்(ரலி), ஸைத் இப்னு அர்கம்(ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதில் கூறினார். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக் காட்டி, 'இவர் என்னைவிடச் சிறந்தவர்' என்றனர்.

'முஸாபனா' எனும் வியாபாரம்.

மரத்திலுள்ள பேரீச்சம் பழத்தை உலர்ந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பதும் கொடியிலுள்ள திராட்சையை உலர்ந்த திராட்சைக்கு விற்பதும் அராயா எனும் வியாபாரமும் முஸாபனா எனப்படும்.

நபி(ஸல்) அவர்கள் முஸாபனா முஹாகலா (பயிர் முற்றுவதற்கு முன்பே விற்பனை செய்தல்) ஆகிய வியாபாரங்களைத் தடை செய்ததாக அனஸ்(ரலி) கூறினார்.

1033. ''மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்க வேண்டாம்! மேலும், உலர்ந்த (கொய்யப்பட்ட) கனிகளுக்காக மரத்திலுள்ள கனிகளையும் விற்க வேண்டாம்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். 'இதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளுக்கு உலர்ந்த அல்லது செங்காயான பேரீச்சங்கனிகளை விற்பதற்கு 'அராயா'வில் அல்லாதவற்றில் அனுமதிக்கவில்லை!' என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்.

மரத்திலுள்ள கனிகளைத் தங்கம் அல்லது வெள்ளிக்கு விற்பது.

1034. ஜாபிர்(ரலி) அறிவித்தார். மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்பதற்கு நபி(ஸல்) தடை செய்தார்கள். மேலும், அவற்றில் எதையும் தீனார், திர்ஹம் ஆகியவற்றிற்கே தவிர விற்கக் கூடாது அராயாவைத் தவிர என்று கூறினார்கள்.

1035. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அராயாவில் ஐந்து வஸக் அல்லது அதைவிடக் குறைந்த அளவிற்கு அனுமதி அளித்தார்கள்.

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் மரத்திலுள்ள கனிகளை விற்றல்.

1036. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்கள் மரத்திலுள்ள கனிகளை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பழங்களைப் பறித்து வாங்குபவரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்ததும் வாங்கியவர், 'இது அழுகிவிட்டது. இது நோயால் தாக்கப்பட்டிருக்கிறது. இது செங்காயாக இருக்கிறது. இன்னும் பல குறைகள் இருக்கின்றன' எனக் கூறி சச்சரவு செய்வார். நபி(ஸல்) அவர்களிடம் இத்தகைய புகார்கள் பெருத்தபோது 'மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும்வரை விற்காதீர்கள்!'' என்று ஆலோசனை போல் கூறினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா எனும் நட்சத்திரம் (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும்வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.'அப்பருவத்தில் செங்காய் எது? பழுத்தது எது? என்று அடையாளம் தெரியும்' என அவரின் மகன் காரிஜா கூறுகிறார்.

1037. ஸயீத் இப்னு மீனா அறிவித்தார். 'மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடையும் வரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்' என்று ஜாபிர்(ரலி) கூறினார். அவரிடம் 'பக்குவமாகுதல் என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கவர், 'உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாகவோ மஞ்சளாகவோ மாறுவது' என விடையளித்தார்.

பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் பழங்களை விற்று, அதற்கேதும் ஆபத்து ஏற்பட்டால் விற்றவரே அதற்கு பொறுப்பாளி ஆவார்.

1038. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடைவதுவரை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம் 'பக்குவமடைவது என்றால் என்ன?' என்று கேட்கப்பட்டதற்கு 'சிவக்கும்வரை'' என்று விடையளித்துவிட்டு, 'அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால்...? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்?' எனக் கேட்டார்கள். ஒருவர் மரத்திலுள்ள கனிகளைப் பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன் வாங்கி அதற்கேதேனும் தீங்கு ஏற்பட்டால் மரத்தின் உரிமையாளரே அதற்குப் பொறுப்பாளி ஆவார் என்று இப்னு ஷிஹாப் கூறுகிறார். ''பலன் உறுதிப்படும் நிலை அடையும்வரை மரத்திலுள்ள கனிகளை விற்காதீர்கள்; மரத்திலுள்ள கனிகளை உலர்ந்த கனிகளுக்கு விற்காதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

மட்டமான பேரீச்சம் பழத்தை அதைவிடச் சிறந்த பேரீச்சம் பழத்திற்கு விற்பது.

1039. அபூ ஸயீத்(ரலி), அபூ ஹுரைரா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், 'கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?' என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! 'இல்லை. இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக!'' எனக் கூறினார்கள்.

முஃகாளரா வியாபாரம். (பலன் உறுதிப்படும் நிலையை அடைவதற்கு முன்பே கனிகளையும் காய்கறிகளையும் விற்பது.)

1040. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். முஹாகலா, முஃகாளரா, முலாமஸா முனாபதா, முஸாபனா ஆகிய வியாபாரங்களை நபி(ஸல்) அவர்கள் தடுத்தனர்.

1041. ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஆவியா(ரலி) அவர்களின் தாயார் ஹிந்த்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம், '(என் கணவர்) அபூ சுஃப்யான் கஞ்சராக இருக்கிறார்; அவரின் பொருளை அவருக்குத் தெரியாமல் நான் எடுத்தால் என் மீது அது குற்றமாகுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு, 'உனக்குப் போதுமானதை நியாயமான முறையில் நீயும் உன் மக்களும் எடுத்துக் கொள்ளுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இருவருக்குச் சொந்தமான சொத்தை இருவரில் ஒருவர் மற்றவருக்கு விற்றல்.

1042. ஜாபிர்(ரலி) அறிவித்தார். ''பங்காளிக்குத்தான் விற்க வேண்டும் என்ற நிலை பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் குறிக்கப்பட்டிருந்தால் பங்காளிக்குத்தான் விற்கவேண்டும் என்ற நிலை இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விதித்தார்கள்.

எதிரிகளிடமிருந்து அடிமைகளை விலைக்கு வாங்குவதும் அன்பளிப்புச் செய்வதும் அந்த அடிமைகளை விடுதலை செய்வதும்.

1043. ''இப்ராஹீம்(அலை) அவர்கள் ஸாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் - ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். 'அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்!'' என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன், இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, 'இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?' எனக் கேட்டான். இப்ராஹீம்(அலை) 'என் சகோதரி' என்றார்கள். பிறகு ஸாராவிடம் திரும்பிய இப்ராஹீம்(அலை), 'நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறைநம்பிக்கையாளர் யாரும் இல்லை' என்றார்கள். பிறகு ஸாராவை மன்னனிடத்தில் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுதுவிட்டு, 'இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், என்னுடைய பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களால் உதைத்தான். மன்னனின் நிலையைக் கண்ட ஸாரா, 'இறைவா! இவன் செத்துவிட்டால் நானே இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்' என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் ஸாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுதுவிட்டு, 'இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், என்னுடைய பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்தான். மன்னனின் நிலையைக் கண்ட ஸாரா, 'இறைவா! இவன் செத்துவிட்டால் நானே இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப்பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள்' என்று (அவையோரிடம்) சொன்னான். ஸாரா இப்ராஹீம்(அலை) இடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்தக் காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஓர் அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பன்றிகளைக் கொல்வது.

1044. ''என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

உயிரில்லாதவற்றின் உருவங்களை விற்பதும் விற்கத்தகாத உருவங்களும்.


1045. ஸயீத் இப்னு அபில் ஹஸன் அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.

சுதந்திரமானவரைப் பிடித்து விற்பது குற்றமாகும்.


1046. ''மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்' என்று அல்லாஹ் கூறினான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

செத்தவற்றையும் உருவச் சிலைகளையும் விற்பது.

1047. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!'' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது. மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!'' என்று கூறினார்கள்.

நாய் விற்ற காசு.

1048. அபூ மஸ்வூத் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும் விபச்சாரியின் கூலியையும் சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!.

0 comments:

Post a Comment