Saturday 22 August 2009

[பாடம்-32] தராவீஹ் தொழுகை.

இரவுத் தொழுகை.

972. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.''நிலைமை இப்படி இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!'' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

லைலத்துல் கத்ர் இரவை (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் தேடுதல்.

973. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!'' என்று கூறினார்கள்.

974. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே, நீங்கள் கடைசிப் பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!'' என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன்.

975. ''ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! 'லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

976. ''லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ரமளானின் கடைசிப்பத்தில் புரிய வேண்டிய வணக்கம்.

977. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்!''.

0 comments:

Post a Comment