உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்.
863. ''ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ராச் செய்தல்.
864. இப்னு ஜுரைஜ் அறிவித்தார். இக்ரிமா இப்னு காலித் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர் 'குற்றமில்லை' என்றார். மேலும், 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன் உம்ராச் செய்தார்கள்' என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என்றும் இக்ரிமா கூறுகிறார்.
நபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள் எத்தனை?
865. முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறினார்: நானும் உர்வா இப்னு ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் மஸ்ஜிதில் லுஹா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள், 'இது பித்அத்!'' என்றார்கள்! (காரணம் இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் லுஹா தொழுததைப் பார்த்ததில்லை). பிறகு, 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?' என உர்வா(ரஹ்) கேட்டார்கள். அதற்கவர்கள் 'நான்கு, அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்!'' என்றார்கள். நாங்கள் அவர்களின் இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை. இதற்கிடையே அறையில் உம்முல் மூமினீன் ஆயிஷா(ரலி) பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா(ரஹ்), 'அன்னையே! இறைநம்பிக்கையாளர்களின் தாயே! அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர்(ரலி)) அவர்கள் கூறுவதைச் செவியேற்றீர்களா?' எனக் கேட்டார். 'அவர் என்ன கூறுகிறார்?' என ஆயிஷா(ரலி) கேட்டதும். 'நபி(ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள். அவற்றில் ஒன்று ரஜப் மாதத்தில் நடந்தது!'' என்று கூறுகிறார்!'' என்றார். ஆயிஷா(ரலி), 'அபூ அப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கிறார்; (மறந்துவிட்டார் போலும்!) நபி(ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை!'' எனக் கூறினார்கள்.
866. கதாதா(ரஹ்) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்?' என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர், 'நான்கு (உம்ராக்கள் செய்துள்ளார்கள்); அவை: ஹுதைபிய்யா எனுமிடத்தில் துல்கஅதா மாதத்தில், இணைவைப்போர் தடுத்தபோது செய்யச் சென்றது. இணைவைப்போருடன் செய்த சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது. அடுத்து 'ஜிர்இர்ரானா' என்ற இடத்திலிருந்து ஒரு போரின்... அது ஹுனைன் போர் என்று கருதுகிறேன். கனீமத்தைப் பங்கிட்ட பொழுது செய்தது. (நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்கள்!)'' பிறகு 'எத்தனை ஹஜ் செய்திருக்கிறார்கள்?' என்று நான் கேட்டதற்கு, 'ஒரு ஹஜ்தான்!'' என்றார்கள்.
867. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபிய்யாவில் அவர்களைத்) தடுத்துவிட்டபோது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள். பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபிய்யாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஓர் உம்ரா செய்தார்கள்.
868. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார். மஸ்ரூக், அதா, முஜாஹித்(ரஹ் - அலைஹிம்) ஆகிய மூவரிடமும் (நபி(ஸல்) அவர்கள் செய்த உம்ராவைப் பற்றி) கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும், 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னர் துல்கஅதாவில் உம்ரா செய்துள்ளார்கள்!'' என்று கூறினர். மேலும், 'நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்பு துல்கஅதாவில் (வெவ்வேறு ஆண்டுகளில்) இரண்டு முறை உம்ரா செய்துள்ளார்கள்!'' என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூற கேட்டுள்ளேன்.
உம்ராவுக்காக தன்யீமில் இஹ்ராம் அணிதல்.
869. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)வை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்.
869. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) மற்றும் தல்ஹா(ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ(ரலி) குர்பானிப் பிராணியுடன் வந்தார்கள். 'நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் அணிந்தேன்!'' என அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணி கொண்டு வராதவர்களிடம், இதை (ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் வலம்வந்து, தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். (மக்கள் சிலர்) 'நம் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாம் மினாவுக்குச் செல்வதா?' என்று பேசிய செய்தி, நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் '(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் இப்போது அறிந்ததை முன் கூட்டியே அறிந்திருந்தால் நான் குர்பானிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன்; நான் குர்பானிப் பிராணி மட்டும் கொண்டு வந்திருக்கவில்லையாயின் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்!'' என கூறினார்கள். மேலும், ஆயிஷா(ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம்வந்தார்கள். மேலும் ஆயிஷா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல. நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா?' என (ஏக்கத்துடன்) கூறியதும், நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரை, ஆயிஷா(ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் அணிவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா(ரலி) ஹஜ் செய்த பின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?' எனக் கேட்டதற்குவர்கள், 'இல்லை! இது எப்போதைக்கும் உரியதே!'' என்று பதிலளித்தார்கள்.
ஹஜ்ஜுக்குப் பின், குர்பானி கொடுக்காமல் உம்ரா செய்தல்.
870. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர்களாக, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் 'உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் அணிய விரும்புகிறவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணியட்டும்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணியட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் அணிந்திருப்பேன்!'' என்றார்கள். சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தனர்; மற்றும் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தனர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன். மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்டபோது, 'உன்னுடைய உம்ராவை விட்டுவிட்டு, தலையை அவிழ்த்து வாரிக் கொள்! மேலும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்!'' என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் அப்துர் ரஹ்மானை தன்யீம்வரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர்ரஹ்மான் தம் ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றினார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன்.''அல்லாஹ் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான்'' என்று அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ''இதற்காக, ஆயிஷா(ரலி) குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை!'' என்று மற்றோர் அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
உம்ரா செய்யும்போது ஏற்படும் சிரமத்திற்குத் தக்கவாறு நற்கூலியுண்டு.
871. அஸ்வத்(ரஹ்), காஸிம் இப்னு முஹம்மத்(ரஹ்) ஆகியோர் அறிவித்தார். ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'மக்கள் எல்லோரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரண்டு வழிபாடுகளுடன் திரும்புகின்றனர்; நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு வழிபாட்டுடன் திரும்புகிறேனே?' எனக் கேட்டார்கள். அவர்களிடம், 'நீ சற்றுக் காத்திருந்து. (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் தன்யீமுக்குச் சென்று (உம்ராவுக்காக) இஹ்ராம் அணிந்து கொள்! பிறகு எங்களை இன்ன இடத்தில் வந்து சந்தித்துக் கொள்! ஆனால், உம்ராவுக்கான நற்கூலி உன்னுடைய சிரமத்திற்கோ, பொருட் செலவுக்கோ தக்கவாறே கிடைக்கும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
872. (அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அவர்களின் ஊழியரான) அப்துல்லாஹ் அறிவித்தார். அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) (மக்காவிலுள்ள) ஹஜூன் என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம்.'' (தன் தூதர்) முஹம்மத்(ஸல்) அவர்களின் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! (ஒரு முறை) நாங்கள் அவர்களுடன் இங்கு வந்திறங்கினோம்; அப்போது எங்களிடம் (பயண) மூட்டை முடிச்சுகள் அதிகம் இருக்கவில்லை. மேலும், எங்களிடம் (பயண) உணவுகளும் வாகனப் பிராணிகளும் குறைவாகவே இருந்தன. அப்போது நானும், என்னுடைய சகோதரி ஆயிஷா(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும், மற்றும் இன்னாரும் இன்னாரும் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தோம். கஅபாவை வலம்வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டோம். பிறகு மாலை நேரத்தில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தோம்'' என அஸ்மா(ரலி) கூறினார்.
ஹஜ், உம்ரா, புனிதப் போர் ஆகியவற்றை முடித்துவிட்டுத் திரும்பும்போது கூற வேண்டியது.
873. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ திரும்பும்போது மேடான இடங்களில் ஏறும்போது மூன்று தக்பீர்கள் கூறுவார்கள். மேலும், 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவர் வேறுயாரும் இல்லை! அவன் தனித்தவன் அவனுக்கு இணை யாருமில்லை! அவனுக்கே ஆட்சியும் புகழும்! அவன் அனைத்தின் மீதும் போராற்றலுடையோன் நாங்கள் தவ்பா செய்தவர்களாகவும், எங்கள் இரட்சகனை வணங்கியவர்களாகவும், ஸஜ்தா செய்தவர்களாகவும், அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை உண்மைப் படுத்திவிட்டான்! தன் அடியாருக்கு (முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு) உதவினான்! அவன் தன்னந் தனியாகவே (எதிரிகளின்) படைகளைத் தோற்கடித்துவிட்டான்'' என்று கூறுவார்கள்.
ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வருபவர்களை வரவேற்பதும் ஒரு பிராணியின் மீது மூவர் சவாரி செய்வதும்.
874. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது அப்துல் முத்தலிப் கோத்திரத்திலுள்ள சிறுவர்கள் அவர்களை வரவேற்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் ஒருவரையும் பின்னால் ஒருவரையும் வாகனத்தில் ஏற்றினார்கள்.
(பயணம் முடிந்து) மாலை வேளையில் வீட்டிற்கு வருதல்.
875. அனஸ்(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டிற்கு இரவு நேரத்தில் வரமாட்டார்கள். காலையிலோ, மாலையிலோதான் வருவார்கள்.''
மதீனாவை அடைந்ததும் இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்லக்கூடாது.
876. ஜாபிர்(ரலி) அறிவித்தார். (பயணத்திலிருந்து திரும்பும் போது) இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
மதீனாவை அடைந்ததும் ஒட்டகத்தை விரைவாகச் செலுத்துதல்.
877. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி மதீனாவின் உயரமான பாதைகளைப் பார்க்கும்போது தம் ஒட்டகத்தை விரைந்து செலுத்துவார்கள்; வாகனத்தை அன்புடன் தட்டிக் கொடுப்பார்கள். மற்றோர் அறிவிப்பில் உயரமான பாதைகள் என்பதற்குப் பதிலாக சுவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும்.
878. ''பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரின் உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே, ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Sunday, 9 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment