Tuesday 8 September 2009

[பாடம்-40] வேளாண்மையும் நிலக்குத்தகையும்.

(பயிரிடப்பட்ட) நிலத்திலிருந்தும் (நடப்பட்ட) மரத்திலிருந்தும் மக்களோ, பிராணிகளோ பறவைகளோ உண்ணும் பட்சத்தில் அந்த விவசாயமும் மரம் நடுவதும் சிறப்புப் பெறுகின்றன.

1071. முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

வேளாண்மைக் கருவிகளைத் துஷ்பிரயோகம் செய்வதால் விளையும் தீமைகளுக்கு அஞ்சுவதும், (வணிகம், வேளாண்மை இவற்றில் ஈடுபடுவதில்) விதிக்கப்பட்டுள்ள வரம்மை மீறுவதால் விளையும் (கேடுகளான இறைவனை மறத்தல், மார்க்கக் கடமைகளைப் புறக்கணித்தல் ஆகிய) தீமைகளுக்கு அஞ்சுவதும் (அவசியம்).

1072. முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

விவசாயப் பண்ணையைப் பாதுகாத்திட நாய் வைத்திருப்பது (அனுமதிக்கப்பட்டதாகும்.)

1073. நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1074. ''கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ வைத்திருக்கும் நாய்களைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1075. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். 'அஸ்த் ஷனாஆ' குலத்தைச் சேர்ந்த சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) என்னிடம், 'விவசாயப் பண்ணைணையோ, கால்நடைகளையோ பாதுகாக்கும் எவ்விதத் தேவையுமின்றி நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (ஊதியம்) குறைந்து விடும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டேன்'' என்றார்கள். நான், 'இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று வினவினேன். சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி), 'ஆம்; இந்தப் பள்ளிவாசலின் அதிபதி (அல்லாஹ்வின்) மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடமிருந்து நானே நேரடியாகச் செவியுற்றேன்'' என்று பதிலளித்தார்கள்.

மாடுகளை உழுவதற்காகப் பயன்படுத்துதல்.

1076. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''ஒருவர் ஒரு மாட்டின் மீது சவாரி செய்து கொண்டிருந்தபோது அந்த மாடு அவரைத் திரும்பிப் பார்த்து, 'நான் இதற்காக (சுமை சுமந்து செல்வதற்காக) படைக்கப்படவில்லை. நிலத்தை உழுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளேன் என்று கூறியது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு அண்ணலார், 'நானும், அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம். மேலும், (ஒரு முறை) ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக் கொண்டு ஓடலாயிற்று. அந்த ஆட்டை மேய்த்துக் கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, 'மன் லஹா யவ்மஸ் ஸபுஇ - கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்க மாட்டானே' என்று கூறியது. நானும், அபூ பக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்'' என்று கூறினார்கள். பிறகு, (இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த) அபூ ஸலமா(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறிய அந்நாளில் அபூ பக்ரும் உமரும் அங்கு இருக்கவில்லை என்று கூறினார்கள்.

''என் பேரீச்ச மரங்களை அல்லது மற்ற மரங்களை கவனித்துக் கொள். அதன் விளைச்சலில் (லாபத்தில்) என்னுடன் பங்கு பெற்றுக் கொள்'' என்று ஒருவர் கூறினால் அது செல்லும்.

1077. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (மதீனாவாசிகளான) அன்சாரித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களிடம், 'எங்களுக்கும் (மக்கா நகரிலிருந்து வந்த) எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே எங்கள் பேரீச்ச மரங்களைப் பங்கிட்டு விடுங்கள்'' என்றனர். அதற்கு அண்ணலார், 'வேண்டாம்'' என்று கூறிவிட்டார்கள். இதனைக் கேட்ட அன்சாரித் தோழர்கள், முஹாஜிர் சகோதரர்களை நோக்கி, 'அப்படியென்றால், எங்கள் தோட்டத்தை எங்களுக்கு பதிலாக நீங்கள் பராமரித்து வாருங்கள். நாங்கள் உங்களுடன் அதன் வருமானத்தில் பங்கு பெற்றுக் கொள்கிறோம்'' என்று கூறினர். அதற்கு முஹாஜிர்கள், 'செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் (அவ்வாறே செய்கிறோம்)'' என்று கூறினார்கள்.

1078. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளிலேயே அதிகமாக விவசாய வேலை பார்ப்பவர்களாக நாங்கள் இருந்தோம். (மொத்த விளைச்சலில் இவ்வளவு பங்கு என்றில்லாமல்) 'நிலத்தின் ஒரு பகுதி விளைச்சல் மட்டும் அதன் நிபந்தனையுடன் அதைக் குத்தகைக்கு எடுத்து வந்தோம். சில வேளைகளில் அந்தப் பகுதி விளைச்சல் மட்டும் (பயிர் நோய்களாலும், பயிர்ப் பூச்சிகளின் தாக்குதலாலும்) பாதிக்கப்பட்டு விடும். மீதமுள்ள (எங்கள் வருவாய்க்கான) நிலப்பகுதி (அவற்றின் தாக்குதல்களிலிருந்து) தப்பித்துக் கொள்ளும். இன்னும் சில வேளைகளில் மீதமுள்ள நிலப்பகுதி பாதிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதி தப்பித்துக் கொள்ளும். எனவே, நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) இவ்விதம் குத்தகைக்கு எடுக்க வேண்டாமென்று தடை செய்யப்பட்டோம். அந்நாள்களில் தங்கமும், வெள்ளியும் (குத்தகைத் தொகையாகப் பயன்படுத்தப்படும் வழக்கம்) இருக்கவில்லை.

1079. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபரில் இருந்த மக்களுடன், அங்குள்ள மரங்களில் விளையும் கனிகள், நிலத்தில் விளையும் தானியங்கள் ஆகியவற்றில் பாதியைக் கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் (கைபரின் நிலங்களையும் மரங்களையும் அம்மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்து) ஒப்பந்தம் செய்தார்கள். இந்த நிலங்கள் மற்றும் மரங்களின் விளைச்சலிருந்து, நபி(ஸல்) அவர்கள், தம் மனைவிமார்களுக்கு எண்பது வஸக்குகள் பேரீச்சம் பழமும் இருபது வஸக்குகள் வாற்கோதுமையும் ஆக, நூறு வஸக்குகள் கொடுத்து வந்தனர். உமர்(ரலி) (கலீஃபாவாக வந்த போது) கைபர் நிலங்களைப் பங்கிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்கு, அவர்கள் தங்கள் பங்காக நிலத்தையும் நீரையும் மட்டும் எடுத்துக் கொள்வது அல்லது முன்பு நடை பெற்று வந்த வழக்கத்தின் படியே, நூறு வஸக்குகளைத் தங்கள் பங்காகப் பெற்றுக் கொள்வது என்ற இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமையளித்தார்கள். அவர்களில் சிலர் நிலத்தைத் தமக்காகப் பெற்றனர். சிலர் (முன்பு கிடைத்து வந்தபடி) வஸக்குகளையே தொடர்ந்து பெற்றனர். அன்னை ஆயிஷா(ரலி) நிலத்தைப் பெற்றார்கள்.

1080. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் தாவூஸ்(ரஹ்) அவர்களிடம், '(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக் கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி(ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்'' என்றேன். இதைக்கேட்ட தாவூஸ்(ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், 'நபி(ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. மாறாக, 'உங்களில் ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக் கொள்வதை விட, தன் சகோதரனுக்கு (இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அதைக்) கொடுத்து விடுவது சிறந்ததாகும்' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று மக்களில் பேரறிஞரான இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.

நபித்தோழர்களின் வக்ஃபு - அறக்கொடைகளும், 'கராஜ்' நிலத்தை அவர்கள் குத்தகைக்கு விட்டதும், மற்றும் அவர்களின் பிற ஒப்பந்தங்களும்.

1081. அஸ்லம்(ரலி) அறிவித்தார். ''முஸ்லிம்களின் வருங்காலத் தலைமுறைகள் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களைப் பங்கிட்டதைப் போன்று நானும், நான் வெற்றி கொண்ட ஊர்களின் நிலங்களையெல்லாம் (இஸ்லாமியப் படையின் வீரர்களிடையே) பங்கிட்டு விட்டிருப்பேன்'' என்று உமர்(ரலி) கூறினார்.

1082. அன்னை ஆயிஷா(ரலி) கூறினார். ''யாருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலத்தைப் பயிரிடுகிறவரே அதைச் சொந்தமாக்கிக் கொள்ள அதிக உரிமையுள்ளவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நிலத்தின் உரிமையாளர் (குத்தகைக்கு எடுப்பவரிடம்), 'அல்லாஹ் அனுமதியளிக்கும் காலம்வரை இந்த நிலத்தில் பயிரிட உனக்கு நான் அனுமதியளிக்கிறேன்'' என்று கூறி (நிலக்குத்தகைக்கான) குறிப்பிட்ட காலம் எதையும் கூறாவிட்டால் அவ்விருவரும் பரஸ்பரம் இசைந்து போகும் காலம்வரை குத்தகையை நீட்டித்துக் கொள்ளலாம்.

1083. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர் இப்னு கத்தாப்(ரலி) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் ஹிஜாஸ் மாநிலத்திலிருந்து நாடு கடத்திவிட்டார்கள். இறைத்தூதர் கைபர் பிரதேசத்தை வெற்றி கொண்டபோது (அங்கிருந்த) யூதர்களை நாடு கடத்திட விரும்பினார்கள். (ஏனெனில்,) அந்தப் பிரசேத்தை வெற்றி கொண்டபோது அந்தப் பகுதியிலிருந்த நிலம் முழுவதும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகி விட்டிருந்தது. (அந்த நிலையில்) யூதர்கள் அல்லாஹ்வின் தூதரிடம், 'நாங்கள் இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலில் 'பாதியைப் பெற்றுக் கொள்கிறோம். (மீதியை இஸ்லாமிய அரசுக்கு நிலவரியாகச் செலுத்தி விடுகிறோம்)'' என்று கேட்டுக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒப்புக் கொண்ட இந்த நிபந்தனையின் (நிலக் குத்தகை ஒப்பந்தத்தின்) அடிப்படையில் நாம் விரும்பும்வரை நீங்கள் அதில் பயிரிட்டுக் கொள்ள நாம் அனுமதிக்கிறோம்'' என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி), தம் ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை தைமா, அரீஹா, (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடு கடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு வரி செலுத்தி) வசித்து வந்தார்கள்.

நபித்தோழர்கள் தங்கள் பண்ணைகளின் விளைச்சலையும் தோட்டங்களில் விளையும் பழங்களையும் விலையில்லாமல் (கைம்மாறு இல்லாமல்) தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாயிருந்தனர்.

1084. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். ''எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைக் கூடாது என்று இறைத்தூதர் எங்களைத் தடுத்தார்கள்'' என்று (என் தந்தையின் சகோதரர்) ளுஹைர்(ரலி) கூறினார். (உடனே), 'இறைத்தூதர் சொன்னதே சரியானது'' என்று கூறினேன்.(அதற்கு) அவர் சொன்னார்; ஒரு முறை என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து, 'நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நீரோடைகளின் கரைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அல்லது சில வஸக்குகள் பேரீச்சம் பழங்களை அல்லது வாற்கோதுமையை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விட்டு விடுகிறோம்'' என்று நான் பதிலளித்தேன். அதற்கு அண்ணலார், 'அவ்வாறு செய்யாதீர்கள். நீங்களே அவற்றில் வேளாண்மை செய்யுங்கள்; அல்லது பிறருக்கு இலவசமாக (கைம்மாறு பெறாமல்) பயிரிடக் கொடுத்து விடுங்கள்; அல்லது பயிரிடாமல் அப்படியே விட்டுவிடுங்கள்'' என்றார்கள். (இதைக் கேட்ட) நான், 'நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்'' என்று கூறினேன்.

1085. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் தம் நிலங்களை இப்னு உமர்(ரலி) குத்தகைக்கு விட்டு வந்தார்கள்.

1086. பின்னர் இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு (ஹதீஸ் எண் 1084ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த, 'நபி(ஸல்) அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள்'' என்னும் நபிமொழி எடுத்துரைக்கப்பட்டது. இப்னு உமர்(ரலி) இதைச் செவியுற்றவுடனே ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். இப்னு உமர்(ரலி) ராஃபிஉ(ரலி) அவர்களிடம் இது குறித்து விசாரித்தார்கள். ராஃபிஉ(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்'' என்று கூறினார்கள். இதனைச் செவியுற்ற இப்னு உமர்(ரலி) ராஃபிஉ(ரலி) அவர்களிடம், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் கரையோரமாக உள்ள நிலங்களின் விளைச்சலையும் சிறிது வைக்கோலையும் எங்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்கு கொடுத்து வந்ததைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்களே'' என்று கூறினார்கள். சாலிம்(ரஹ்) அறிவித்தார்.

''நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்'' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். பிறகு, அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (மேற்கண்ட ஹதீஸ் எண் 1084ல் ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறியதைக் கேட்ட பின்) நிலக்குத்தகை தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் எதனையாவது பிறப்பித்து (பழைய விதிகளை மாற்றியமைத்து) விட்டிருக்க, அதனை நாம் அறியாதிருந்து விட்டோமோ என்று அஞ்சி நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்திவிட்டார்கள்.

1087. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:

சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், 'நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்'' என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், 'எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது'' என்று கூறுவான். (நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்'' என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.

0 comments:

Post a Comment