Showing posts with label உபரித்தொழுகை. Show all posts
Showing posts with label உபரித்தொழுகை. Show all posts

Tuesday, 21 July 2009

[பாடம்-18] கஸ்ருத் தொழுகை (சுருக்கித் தொழுதல்)

எத்தனை நாள்கள் வெளியூரில் தங்கினால் கஸ்ருத் தொழலாம்?

575. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.

576. யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார். 'நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும்வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்' என்று அனஸ்(ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாள்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'பத்து நாள்கள் தங்கினோம்' என்று விடையளித்தார்கள்.

மினாவில் கஸ்ருத் தொழுதல்.

577. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடனும் உஸ்மான்(ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் உஸ்மான்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான்(ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள்.

578. ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மினாவில் எதிரிகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லாத நிலையில் இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

579. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார். உஸ்மான்(ரலி) மினாவில் எங்களுக்கு நான்கு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். இது பற்றி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது 'இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்' என்று கூறினார்கள். பின்னர் 'நான் நபி(ஸல்) அவர்களுடன் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். அபூ பக்ர்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். உமர்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். இந்த நான்கு ரக்அத்களுக்குப் பகரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் எனக்குப் போதும்' என்று கூறினார்.

580. ''எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.

மஃரிபுத் தொழுகையைப் பயணத்திலும் மூன்று ரக்அத்களாகத் தொழுதல்.

581. ஸாலிம் அறிவித்தார். இப்னு உமர்(ரலி) முஸ்தலிஃபா-வில் மஃரிபையும் இஷாவையும் ஜம்உச் செய்து தொழுதார்கள். ஒரு முறை இப்னு உமர்(ரலி) மஃரிபைத் தாமதப் படுத்தினார்கள். அவர்களின் மனைவி ஸஃபியா(ரலி) உடல் நலம் குன்றி இருந்தார்கள். (அவர்களைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள்) அவர்களிடம் தொழுகை என்று நினைவு படுத்தினேன். அப்போதும் 'நட' என்றார்கள். இரண்டு அல்லது மூன்று மைல்கள் நடந்ததும் வாகனத்தில் இருந்து இறங்கித் தொழுதார்கள். பின்னர் 'நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்பட நேர்ந்தால் இப்படித்தான் தொழுவார்கள்' என்று குறிப்பிட்டார்கள். மேலும் 'நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்பட நேர்ந்தால் மஃரிபைத் தாமதப் படுத்தி மூன்றுரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் பெரிய இடைவெளி ஏதுமின்றி இஷாவுக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கொடுப்பார்கள். இஷாவிலிருந்து நள்ளிரவில் எழுவதுவரை உபரியான தொழுகைகள் தொழ மாட்டார்கள்.' எனக் குறிப்பிட்டார்கள்.

582. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கிப்லா அல்லாத திசையை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள்.

கழுதையின் மீது அமர்ந்து உபரியான தொழுகைகளைத் தொழுதல்.

583. அனஸ் இப்னு ஸீரின் அறிவித்தார். அனஸ்(ரலி) ஸிரியாவிலிருந்து வந்தபோது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம். ஐநூத்தம்ர் என்ற இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்களின் முகம் கிப்லாவுக்கு இடப்புறமாக இருக்கும் நிலையில் கழுதையின் மீது அமர்ந்து அவர்கள் தொழுததை பார்த்தேன். கிப்லா அல்லாத திசையில் நீங்கள் தொழுகிறீர்களே என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நான் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்' என்று விடையளித்தார்கள்.

பயணத்தின்போது தொழுகைக்கு முன்பும் பின்பும் உபரியான தொழுகையைத் தொழ வேண்டியதில்லை.

584. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. 'அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது' (33:21) என்று அல்லாஹ் கூறினான் எனக் குறிப்பிட்டார்கள்.

கடமையான தொழுகைகளுக்கு முன்னரும் பின்னரும் தவிர மற்ற சமயங்களில் பயணத்தில் உபரியாகத் தொழுவது.

585. ஆமிர் இப்னு ரபிஆ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் பயணத்தின்போது தம் வாகனத்தின் மீது அமர்ந்து அது செல்லும் திசையில் உபரியான தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்திருக்கிறேன்.

பயணத்தின்போது மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதல்.

586. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும்போது லுஹர் அஸரையும் மக்ரிப் இஷாவையும் ஜம்உச் செய்து தொழுவார்கள்.

உட்கார்ந்து தொழ முடியாவிட்டால்...

587. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு'' என்று விடையளித்தார்கள்.

உட்கார்ந்து தொழும்போது நோய் நீங்கிவிட்டால் அல்லது நோயின் கடுமை குறைந்துவிட்டால் எஞ்சியதை எழுந்து தொழலாம்.

ஒரு நோயாளி விரும்பினால் இரண்டு ரக்அத்களை நின்றும் இரண்டு ரக்அத்களை அமர்ந்தும் தொழலாம்.

588. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் முதுமையை அடையும்வரை இரவுத் தொழுகையை உட்கார்ந்து தொழ நான் பார்த்ததில்லை. முதுமையான காலத்தில் அவர்கள் உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும்போது எழுந்து முப்பது அல்லது நாற்பது வசனங்கள் ஓதிவிட்டுப் பிறகு ருகூவுப் செய்வார்கள்.

589. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.