Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Monday, 24 August 2009

[பாடம்-33] இஃதிகாஃப்.

978. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!''.

இஃதிகாஃப் இருப்பவர் தேவை இருந்தால் தவிர வீட்டிற்குச் செல்லக்கூடாது.

979. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.

ஓர் இரவு மட்டும் இஃதிகாஃப் இருப்பது.

980. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 'மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர்(ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்'' என்றார்கள்.

பெண்கள் இஃதிகாஃப் இருப்பது.

981. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதை விட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

இஃதிகாப் இருப்பவர் தம் தேவைக்களுக்காகப் பள்ளியின் வாசல்வரை செல்லலாமா?

982. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல்வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்'' எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) 'ஸுப்ஹானல்லாஹ்' என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.

ரமலானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருப்பது.

983. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் பத்து நாட்களே இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

Saturday, 25 July 2009

[பாடம்-20] மக்கா மதீனாவின் புனித பள்ளிகளில் நிறைவேற்றும் தொழுகையின் சிறப்புகள்.

நன்மையை நாடிப் பிரயாணம் செய்யும் மூன்று பள்ளிகள்.

620. 'மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.

621. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கூபாப் பள்ளிவாசல்.

622. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) இரண்டு நாள்கள் தவிர வேறு நாள்களில் லுஹாத் தொழ மாட்டார்கள். மக்காவுக்கு அவர்கள் வரக்கூடிய நாளில் லுஹா நேரத்தில் வந்து கஅபாவைத் வலம் வந்து மக்காமே இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். கூபாப் பள்ளிக்கு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சென்று பள்ளிக்குள் நுழைந்ததும் தொழாமல் வெளியே வர மாட்டார்கள். மேலும் 'நபி(ஸல்) அவர்கள் கூபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வரும் வழக்கம் உடையவராக இருந்தனர்' என்றும் கூறினார்கள். நான் என்னுடைய தோழர்கள்; செய்தது போன்றே செய்கிறேன். இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும் தொழுபவரை தடுக்க மாட்டேன். ஆயினும் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள்.

நபி(ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு.

623. ''என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.