Showing posts with label வேதனை. Show all posts
Showing posts with label வேதனை. Show all posts

Wednesday, 25 November 2009

[பாடம்-73] பிரார்த்தனைகள்.

ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு.

2069. ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் என்னுடைய பிரார்த்தனையை, மறுமையில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாவமன்னிப்புக் கோரலில் சிறந்தது.

2070. ''அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கல்க்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த'' என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும். (பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட் கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.) இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

பகலிலும் இரவிலும் நபி(ஸல்) அவர்கள் கேட்ட பாவமன்னிப்புக் கோரல் (உடைய அளவு).

2071. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.)

பாவத்தைக் கைவிட்டு இறைவன் பக்கம் திரும்புவதே (தவ்பா).

2072. ஹாரிஸ் இப்னு சுவைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் எங்களுக்கு இரண்டு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள். மற்றொன்றைக் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:) 1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தன்னுடைய மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான் - இதைக் கூறியபோது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தங்களின் மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவது போன்று தம் கையால் சைகை செய்தார்கள். பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (பின்வருமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச்) சொன்னார்கள்: 2. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதை விடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

உறங்கச் செல்லும்போது ஓத வேண்டியது.

2073. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, 'பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா'' ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். (உறக்கத்திலிருந்து) எழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்'' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.

வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவது.

2074. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, 'அல்லாஹும்ம அஸ்லமத்து நஃப்ª இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரி இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன் ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த'' என்று ஓதுவார்கள். (பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திரும்பினேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன் நபியையும் நான் நம்பினேன்) மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இவற்றைக் கூறிவிட்டு அன்னைறய இரவே இறந்து விடுகிறவர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்'' என்று கூறினார்கள்.

இரவில் (இடையே) விழிக்கும்போது ஓத வேண்டியது.

2075. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நான் (என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களிடம் (அவர்கள் இல்லத்தில்) இரவில் தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்து தம் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். (பிறகு வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்கிக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவிடாமல், நடுநிலையாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு தொழுதார்கள். நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கசுத்தி செய்தேன். அப்போது அவர்கள் தொழுவதற்காக நின்றார்கள். நான் அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் காதைப்பிடித்துச் சுற்றி அப்படியே என்னைத் தம் வலப் பக்கத்திற்குக் கொண்டு வந்தார்கள். பிறகு (தொழத் தொடங்கி) பதிமூன்று ரக்அத்களுடன் தம் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். பின்னர் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டை விடுவார்கள். அப்போது அவர்களை பிலால்(ரலி) அவர்கள் தொழுகைக்காக அழைத்தார்கள். எனவே, அவர்கள் (எழுந்து புதிதாக) அங்கசுத்தி செய்யாமலேயே தொழுதார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக் கொண்டிருந்தார்கள். 'அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ ஃபீ ஸம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யஸாரீ நூரன். வ ஃபவ்க்கீ நூரன். வ தஹ்த்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வஜ்அல் லீ நூரன். (பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.)(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப்(ரலி) கூறினார் : (உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படித்திடுமாறு நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ்(ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அன்னார் அறிவித்தார்கள். என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக.) இவ்வாறு கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்கள்.

2076. நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ஸீ ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன். (பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.

கேட்பதை வலியுறுத்திக் கேட்க வேண்டும். (இது, இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை யாராலும் நிர்ப்பந்திக்க முடியாது.

2077. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக'' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அவசரப்படாத வரையில் அடியானின் பிரார்த்தனை ஏற்கப்படும்.

2078. ''நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

துன்பம் நேரும்போது பிரார்த்திப்பது.

2079. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது 'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

தாங்க முடியாத சோதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவது.

2080. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த அறிவிப்பில் மூன்று மட்டுமே உள்ளது. நான்தான் ஒன்றை அதிகபட்சமாக அறிவித்துள்ளேன். இவற்றில் அது எதுவென எனக்குத் தெரியவில்லை. (மறந்து விட்டேன்.)

''இறைவா என்னால் எவரேனும் மனவேதனை அடைந்திருந்தால் அதை அவருக்குப் பாவப் பரிகாரமாகவும் அருளாகவும் மாற்றிவிடுவாயாக'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

2081. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நான் எந்த இறைநம்பிக்கையாளரையாவது (கடிந்து கொண்டு) ஏசியிருந்தால், அதையே மறுமை நாளில் உன்னிடம் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மாற்றி விடுவாயாக!'' என்று கூறியதை செவியுற்றேன். இதை ஸயீத் இப்னு முசய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மண்ணறையின் (கப்றின்) வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

2082. முஸ்அப் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வாக்காஸ்(ரலி) அவர்கள் ஐந்து விஷயங்களிலிருந்து பாதுகாப்புக் கோரும்படி கூறி நபி(ஸல்) அவர்கள் அந்த ஐந்து விஷயங்களையும் குறிப்பிட்டு அவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருமாறு கட்டளையிட்டுவந்தார்கள் என்று கூறுவார்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வ அஊது பிக்க மினல் ஜுப்னி, வ அஊது பிக்க அக் உறத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ற். (இறைவா! உன்னிடம் நான் கருமித்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். கோழைத் தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக்கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்)'' இம்மையின் சோதனையென்பது தஜ்ஜாலின் சோதனையைக் குறிக்கிறது.

பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருதல்.

2083. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப்'' என்று பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிலிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப் படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக)

எங்கள் இறைவா எங்களுக்கு இம்மையிலும் நன்மையருள்வாயாக எனப் பிரார்த்திப்பது.

2084. அனஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் 'ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்'' என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

''இறைவா! நான் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும் மன்னித்திடுவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

2085. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்து வந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஹஸ்லீ, வ ஜித்தீ, வ கத்தயீ, வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ. (பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கொண்ட விரயத்தையும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)

''லாயிலாஹ இல்லால்லாஹ்'' ('அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று) கூறுவதன் சிறப்பு.

2086. ''லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)'' என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2087. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்கள் கூறியாதாவது: (மேற்கண்ட வாக்கியங்களை) பத்து முறை ஓதுகிறவர், இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவார். (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்). (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உமர் இப்னு அபீ ஸாயிதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. நான் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ரபீஉ இப்னு குஸைம்(ரஹ்) அவர்களிடம், 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடமிருந்து (இதைச் செவியுற்றேன்)'' என்றார்கள். எனவே, நான் அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அவர்களிடம் சென்று, 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)'' என்றார்கள். எனவே, நான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களிடம் சென்று, 'இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'இதை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து (செவியுற்றேன்)'' என்றார்கள். இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது. அபூ அய்யூப்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், 'இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஓர் அடிமையை விடுதலை செய்தவரைப் போன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது.

'சுப்ஹானல்லாஹ்' ('அல்லாஹ் தூயவன்' என்று) கூறுவதன் சிறப்பு.

2088. 'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டு விடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவதன் சிறப்பு.

2089. தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகிறவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

2090. அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் 'உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்'' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம்வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் 'என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?' என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்'' என்று வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், 'அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?' என்று கேட்பான். வானவர்கள், 'உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்'' என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், 'என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?' என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், 'அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்'' என்பார்கள். அதற்கு இறைவன், 'அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?' என்று கேட்பான். அதற்கு வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?' என்று கேட்பான். வானவர்கள், 'சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்'' என்று பதிலளிப்பார்கள். இறைவன், 'அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?' என்று வினவுவான். வானவர்கள், 'நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)'' என்று பதிலளிப்பார். இறைவன், 'அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?' என்று கேட்பான். வானவர்கள், 'இல்லை. உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை'' என்பர். அதற்கு இறைவன், 'அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?' என்று கேட்பான் வானவர்கள், 'நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்'' என்பர். அப்போது இறைவன், 'எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்'' என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், '(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்'' என்பார். அதற்கு இறைவன், 'அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்'' என்று கூறுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த நபிமொழி வந்துள்ளது.

Saturday, 1 August 2009

[பாடம்-23] ஜனாஸா சட்டங்கள்.

கடைசிக் காலத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் கூறுபவனின் நிலை.

633. ''என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு செய்தியை ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?' எனக் கேட்டேன். 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என அவர்கள் கூறினார்கள்'' என அபூதர்(ரலி) அறிவித்தார்.

634. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ''அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்து விட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். '(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்'' என நான் கூறுகிறேன்.

ஜனாஸாவைப் பின்தொடர்தல் பற்றிய கட்டளை.

635. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாஸாவை பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும். அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும். ஸலாமுக்கு பதில் கூறும்படியும். தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக' என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எகிப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

ஜனாஸா கஃபன் செய்யப்பட்டபின் அவ்விடத்திற்குச் செல்லல்.

636. நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார். ''(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.''இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.''

637. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். என்னுடைய தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின் மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு என்னுடைய மாமி ஃபாத்திமா(ரலி)வும் அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது, 'நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும்வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மரணமுற்றவரின் குடும்பத்தினருக்கு மரணச் செய்தியறிவித்தல்.

638. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்ஜாஷீ (மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.

639. அனஸ்(ரலி) அறிவித்தார். ''(மூத்தா போரில்) ஸைத்(ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப்பட்டதும் அதை ஜஅஃபர்(ரலி) பற்றினார். அவர் கொல்லப்பட்டதும் அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல்லப்பட்டார்'' என்று நபி(ஸல்) கூறிக்கொண்டிருந்தபோது அவர்களின் இரண்டு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தது. பிறகு, '(ஏற்கெனவே) நியமிக்கப்படாதிருந்த காலித் இப்னு வலீத்(ரலி) அக்கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்துவிட்டது என்றும் கூறினார்கள்.

தம் குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறை வெகுமதியை எதிர்பாப்பவரின் சிறப்பு.

640. ''ஒரு முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இலந்தையிலை கலந்த நீரால் மய்யித்தைக் குளிப்பாட்டி உளூச் செய்வித்தல்.

641. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்'' எனக் கூறினார்கள்.

ஒற்றைப் படையாகத் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டுவது விரும்பத்தக்கது.

642. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள். ஹஃப்ஸா(ரலி)வின் அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்'' என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது .

கஃபனுக்கு வெண்மையான ஆடையைப் பயன்படுத்துதல்.

643. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் யமன் தேசத்தின் பருத்தியினாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் செய்யப்பட்டார்கள். அம்மூன்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

இரண்டு ஆடைகளில் கஃபனிடுதல்.

644. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்'' எனக் கூறினார்.

தைக்கப்பட்ட அல்லது தைக்கப்படாத மேல் சட்டையால் கஃபனிடுதலும் மேல் சட்டையின்றிக் கஃபனிடப்பட்டவரின் நிலையும்.

645. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்'' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்'' என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை'' என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்'' என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.

646. ஜாபிர்(ரலி) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி(ஸல்) அவனுடைய உடலை வெளியிலெடுக்க செய்து அவன் உடலில் தம் எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தம் சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள்.

போதிய துணியின்றிக் கஃபனிடப்படும்போது மய்யித்தின் தலைமட்டுமோ அல்லது கால்கள் மட்டுமோ தாம் மறைக்கப்பட முடியும் என்ற நிலையேற்பட்டால் தலையையே மறைக்கவேண்டும்.

647. கப்பாப்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வுக்காகவே ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான கூலி அல்லாஹ்விடமுள்ளது. எங்களில் சிலர் தம் கூலியை (இவ்வுலகத்தில்) உண்ணாமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) ஒருவர். எங்களில் வேறு சிலர் (இவ்வுலகில்) பூத்துக் குலுங்கிச் செழித்து அனுபவித்ததும் உண்டு. முஸ்அப் இப்னு உமைர்(ரலி) உஹதுப் போரில் கொல்லப்பட்டார். அவரின் முழு உடலைக் கஃபன் செய்வதற்கு ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதன் மூலம் அவரின் தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன: கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரின் தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரின் கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முன்கூட்டியே கஃபன் துணியைத் தயாராக வைத்தவரை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.

648. அபூ ஹாஸிம் அறிவித்தார். ''ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் புர்தா -- குஞ்சங்கட்டப்பட்ட ஒரு சால்வையைக் கொண்டு வந்தார் என்று ஸஹ்ல்(ரலி) கூறிவிட்டு --''புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) 'ஆம்! புர்தா என்பது சால்வைதானே! என்றனர். ஸஹ்ல் 'ஆம்' எனக் கூறிவிட்டு மேலும், அப்பெண்மணி 'நான் என்னுடைய கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்'' என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து எங்களிடம் வந்தபோது ஒருவர் 'இது எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணிவித்து விடுங்கள்'' என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர் 'நீர் செய்வது முறையன்று நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக் கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே' எனக் கூறினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்ககாகக் கேட்கவில்லை. அது எனக்கு கஃபனாக ஆகி விடவேண்டும் என்றே கேட்டேன்'' என்றார். 'பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது'' என்று ஸஹ்ல் கூறினார்.

ஜனாஸாவைப் பெண்கள் பின்தொடர்தல்.

649. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். ஜனாஸாவைப் பின் தொடந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி(ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்: ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.

கணவர் அல்லாதவருக்காகப் பெண் துக்கம் கடைப்பிடித்தல்.

650. ''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது. கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார்.

கப்ரை ஸியாரத் செய்வது.

651. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். கப்ருக்கருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, 'அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!'' என்றார்கள். அதற்கு அப்பெண், என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி(ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. 'நான் உங்களை (யாரென) அறியவில்லை'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினாள். 'பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''குடும்பத்தார் அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படும்'' என்ற நபியின் கூற்று.

652. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். தம் மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி(ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்(ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி(ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, 'எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!'' என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். (வீட்டுக்குச் சென்ற) நபி(ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள்.. இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத்(ரலி) கேட்டதற்கு நபி(ஸல்), 'இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.

653. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல்) அவர்கள், 'இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா?' என வினவினார்கள். 'நான் உள்ளேன்' என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் இறங்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவரும் (நபியவர்களின் மகளுடைய) கப்ரில் இறங்கினார்.

654. அப்துல்லாஹ் இப்னு உபைதுல்லாஹ்(ரஹ்) அறிவித்தார். உமர்(ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது 'சகோதரனே! நண்பனே!' எனக் கூறி அழுதவராக ஸுஹைப்(ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர்(ரலி) 'ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?' என்றார். உமர்(ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை: மாறாக 'குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்'' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று கூறி, 'ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது'' (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே'' என்றும் கூறினார்கள்.

655. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்'' என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் நபி(ஸல்) கூறினார்கள். (இறைநம்பிக்கையாளர்களின் விஷயத்தில் கூறவில்லை.)

இறந்தவர்களுக்காக ஓப்பாரி வைத்து அழுவது வெறுக்கத்தக்கது.

656. ''என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்; மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முகீரா(ரலி) அறிவித்தார்.

(துக்கத்தில்) ஆடையைக் கிழித்துக் கொள்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

657. ''(துன்பத்தில்) தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு கவ்லா(ரலி)வுக்கு நபி(ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தது.

658. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்'' என்றார்கள். பின்னர் நான் 'பாதியைக் கொடுக்கட்டுமா?' எனக் கேட்டேன். அதற்கும் நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம்தான்; ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டு'' என்று கூறினார்கள். நான் அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! (என்னுடைய தோழர்களெல்லாம் மதீனாவுக்குச் செல்வார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின் தங்கியவனாக ஆகிவிடுவேனே!' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உம்முடைய அந்தஸ்தும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்' எனக் கூறிவிட்டு, 'உம்மை வைத்துச் சில கூட்டத்தினர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்'' என்று கூறிவிட்டு, 'யாஅல்லாஹ்! என்னுடைய தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே.'' எனப் பிரார்த்தித்தார்கள். நோயாளியிருந்த ஸஅத் இப்னு கவ்லா(ரலி) மக்காவிலேயே இறந்து விட்டதற்காக 'பாவம் ஸஃது இப்னு கவ்லா (அவர் நினைத்து நடக்கவில்லை)'' என்று நபி(ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.

துக்கத்தை அறிவிக்க மொட்டையடித்துக் கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.

659. அபூ புர்தா இப்னு அபீ மூஸா அறிவித்தார். (என் தந்தை) அபூ மூஸா தம் கடுமையான மரண வேதனையால் மயக்கமடைந்து விட்டார். அவரின் தலை அவரின் மனைவியின் மடியில் இருந்தது. (தம் மனைவியின் எந்தப் பேச்சுக்கும்) அவரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்பு மயக்கம் தெளிந்தபோது, 'நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் (துன்பத்தின் போது) அதிகச் சப்தமிட்டு அழும் பெண்ணைவிட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் தம்மை விலக்கினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை விலக்கிக் கொண்டவரிடமிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

துன்பத்தின்போது கவலையான முகத்தோடு அமர்வது.

660. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா(ரலி) ஜஅஃபர்(ரலி) இப்னு ரவாஹா(ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் கவலையான முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி(ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஜஅஃபர்(ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, 'அவர்கள் (என்னுடைய சொல்லிற்குக்) கட்டுப்படவில்லை'' என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் '(நீ சென்று) அவர்களைத் தடுத்து நிறுத்து' எனக் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று மூன்றாம் முறையாக வந்து 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிகைத்து விட்டனர்'' என்றார். ''அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன். பின்னர் நான் அவரை நோக்கி, 'அல்லாஹ் உம்மை இழிவாக்குவானாக! நபி(ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை. இன்னும் அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை'' எனக் கூறினேன்.

சோதனையின்போது கவலையை வெளிப்படுத்தாமலிருப்பது.

661. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி)வின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபுதல்ஹா(ரலி) வெளியே சென்றிருந்தபோது குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா(ரலி)வின் மனைவி உடனே கொஞ்சம் உணவைத் தயார் செய்தார். பிறகு மய்யித்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா(ரலி) வீடு திரும்பிய உடன் மகன் எவ்வாறுள்ளான்? எனக் கேட்டார் அதற்கு அவரின் மனைவி 'அமைதியாகி விட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்று விட்டிருப்பான் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு'' என பதிலளித்தார். அபூ தல்ஹா(ரலி) தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்துவிட்டுத் (தொழுகைக்காக) வெளியே செல்ல நாடியபோது மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா நபி(ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அபிவிருத்தி செய்யக்கூடும்'' என்றார்கள்.

சுஃப்யான் கூறுகிறார். அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் மகன் இப்ராஹீம் இறந்தபோது), 'உன்னுடைய (பிரிவின்) காரணமாக நாங்கள் கவலைப்படுகிறோம்' எனக் கூறியது.

662. அனஸ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மகன் இப்ராஹீம் வளர்ந்து வந்த) அபூ ஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவராவார். நபி(ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக்கண்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தாங்களா (அழுகிறீர்கள்)?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்ஃபின் மகனே! நிச்சயமாக இது கருணையாகும்'' என்று கூறிவிட்டு மேலும் தொடர்ந்து அழுதார்கள். பிறகு, 'கண்கள் நீரைச் சொரிகின்றன் உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும், இறைவன் விரும்பாத எந்த வார்த்தையையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உன்னுடைய பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்'' என்றார்கள்.

நோயாளியின் அருகில் அழுவது.

663. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு உபாதா(ரலி) நோயுற்றபோது நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை. இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி(ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படுகிறது'' என்று கூறினார்கள்.

ஒப்பாரி வைப்பது, (சப்தமிட்டு) அழுவது ஆகியவற்றைத் தடுப்பதும் அதைக் கண்டிப்பதும்.

664. உம்முஅதிய்யா(ரலி) அறிவித்தார். ஒப்பாரி வைக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும் இந்த ஒப்பந்ததை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறு யாரும் நிறைவேற்றவில்லை. அப்பெண்கள் உம்மு ஸுலைம்(ரலி) உம்முல் அலா(ரலி), முஆத்(ரலி) அவர்களின் மனைவியான அபூ சப்ராவின் மகள் இன்னும் இரண்டு பெண்கள் அல்லது அபூ ஸப்ராவின் மகள் முஆத்(ரலி) உடைய மனைவி. இன்னும் ஒரு பெண், (இதை அறிவிப்பாளர்களில் ஒருவர் சந்தேகமாகக் கூறுகிறார்.)

ஜனாஸாவுக்காக எழுந்தவர் அமர்வது எப்போது?

665. ''உங்களிலொருவர் ஜனாஸாவைக் கண்டு அதனுடன் நடந்து செல்லப் போவதில்லை என்றால் அவர் அதைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவருக்கு முன்னால் (பூமியில்) வைக்கப்படும் வரை எழுந்து நிற்கட்டும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவித்தார்.

ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்பவர் ஜனாஸா, சுமந்து செல்பவரின் தோளிலிருந்து (பூமியில்) வைக்கப்படும் வரை உட்காரக் கூடாது. அதற்குமுன் உட்கார்ந்துவிட்டால் நிற்கும்படி கட்டளையிடவேண்டும்.

666. கைஸான் அறிவித்தார். நாங்கள் ஒரு ஜனாஸாவில் பங்கேற்றோம். அப்போது அபூ ஹுரைரா(ரலி) மர்வானுடைய கையைப் பிடித்தார். ஜனாஸா (தரையில்) வைக்கப்படுவதற்கு முன் இருவரும் அமர்ந்துவிட்டார்கள். அங்கு வந்திருந்த அபூ ஸயீத்(ரலி) மர்வானின் கையைப் பிடித்து 'எழுந்திரு! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் (உட்காருவதைத்) தடுத்துள்ளார்கள் என்பதை இம்மனிதர் (அபூ ஹுரைரா) நன்கு அறிந்திருந்தும் இவ்வாறு செய்தி)ருக்கிறார்' எனக் கூறினார். உடனே 'அபூ ஸயீத்(ரலி) உண்மையுரைத்தார்'' என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

யூதரின் ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது.

667. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் 'இறைத்தூதர் அவர்களே! இது ஒரு யூதனின் ஜனாஸா'' என்றோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்'' எனக் கூறினார்கள்.

ஜனாஸாவைச் சுமந்து செல்வது பெண்களுக்கில்லை. ஆண்களுக்கு மட்டுமே.

668. ''ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

ஜனாஸாவை(ச் சுமந்து செல்வதை) விரைவுபடுத்தல்.

669. ''ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜனாஸாவைப் பின்தொடர்தலின் சிறப்பு.

670. நாஃபிஉ அறிவித்தார். ஜனாஸாவைப் பின்தொடர்கிறவருக்கு ஒரு கிராத் நன்மையுண்டு என அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டதும் 'அபூ ஹுரைரா(ரலி) மிகைப்படுத்துகிறார்' என்றார். ஆயிஷார(ரலி) அபூ ஹுரைரா(ரலி)வின் கூற்றை உண்மைப்படுத்தியதுடன், 'நானும் நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறக் கேட்டிருக்கிறேன்' என்றும் கூறினார். இதைக் கேட்ட இப்னு உமர்(ரலி) 'அப்படியாயின் நாம் அதிகமான கீராத்களைப் பாழ்படுத்தி விட்டோமே' என்றார்.

கப்ருகளின் மீது பள்ளிவாயில் கட்டுவது விரும்பத்தக்கதன்று.

671. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்'' என்று கூறினார்கள்.இந்தப் பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

பிரசவத் தொடக்கின்போது இறந்துவிட்ட பெண்ணுக்கு ஜனாஸாத் தொழல்.

672. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். பிரசவத் தொடக்குடனேயே இறந்துவிட்ட பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுதபோது மையித்தின் நடுப்பகுதிக்கு நேராக நின்றார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன்.

ஜனாஸாத் தொழுகையில் ஃபாத்திஹா சூரா ஓதுதல்.

672. தல்ஹா அறிவித்தார். நான் இப்னு அப்பாஸ்(ரலி) பின்னால் நின்று ஜனாஸாத் தொழுதேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு 'நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)' என்றார்.

உயிருள்ளோரின் செருப்போசையை மய்யித் செவியுறல்.

674. ''ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது. மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

புனித பூமியிலோ அது போன்ற இடங்களிலோ அடக்கம் செய்யப்படுவதை விரும்புதல்.

675. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் மூஸா(ரலி) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரின் கண் பிதுங்கும் அளவுக்கு அடித்துவிட்டார்கள். உடனே அவர் அல்லாஹ்விடம் போய், 'இறைவா! மரணிக்க விரும்பாத ஓர் அடியானிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்' என்றார். பிறகு அல்லாஹ் அவரின் கண்ணைச் சரிப்படுத்திவிட்டு, 'நீர் மீண்டும் அவரிடம் சென்று, அவரை ஒரு மாட்டின் முதுகில் கையை வைக்கச் சொல்லி, அவரின் கை எத்தனை ரோமங்களை அடக்கிக் கொள்கிறதோ அத்தனை ஆண்டுகள் அவர் உயிர் வாழலாம் என்பதையும் கூறும்'' என அனுப்பி வைத்தான். (அவ்வாறே அவர் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கூறியபோது,) மூஸா(அலை) 'இறைவா! அதற்குப் பிறகு?' எனக் கேட்டதும் அல்லாஹ், 'பிறகு மரணம் தான்' என்றான். உடனே மூஸா(அலை) அவர்கள் 'அப்படியானால் இப்பொழுதே (தயார்)' எனக் கூறிவிட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் என்னும்)புனிதத்தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள (புனிதத் தலத்திற்கு மிக அருகிலுள்ள) இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, 'நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்த செம்மணற் குன்றிற்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களின் கப்ரைக் காட்டியிருப்பேன்'' எனக் குறிப்பிட்டார்கள்.

ஷஹீத்களுக்கு ஜனாஸா தொழுகை.

676. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, 'இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, 'இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாகுவேன்' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு ஏவினார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவோ இவர்களுக்கு தொழுகை நடத்தப்படவோ இல்லை.

677. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று, (போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸாவை முன்னால் வைத்துத் தொழுவது போன்று) தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பருக்கு வந்து, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் கூறுவேன். மேலும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள் அல்லது பூமியின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ்வின் மீது ஆணையாக! என(து மரணத்து)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பார்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்படவில்லை. ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் மோதிக் கொள்வீர்களோ என்றே பயப்படுகிறேன்!'' என்று கூறினார்கள்.

678. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இப்னு ஸய்யாதை நபி(ஸல்) அவர்கள் ஒரு குழுவுடன் பார்க்கச் சென்றபோது அவர்களுடன் உமர்(ரலி)யும் இருந்தார். பருவ வயதை நெருங்கிவிட்ட இப்னு ஸய்யாத் பனூ மகாலாவின் மேட்டுப் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நபி(ஸல்) அவர்கள் (அவனைக்) கையால் தட்டுகிறவரை, (அவன் நபி(ஸல்) தன்னை நெருங்கியதை) உணரவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள் அவனிடம் 'நானே இறைத்தூதர் என நீ சாட்சி கூறுகிறாயா?' எனக் கேட்டார்கள். இப்னு ஸய்யாத் நபி(ஸல்) அவர்களை நோட்டமிட்டுவிட்டு, 'நீங்கள் எழுதப் படிக்கத் தெரியாவதவர்களின் நபி என நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினான். பிறகு இப்னு ஸய்யாத் நபி(ஸல்) அவர்களிடம் 'நான் இறைத்தூதர் என நீர் சாட்சி கூறுகிறீரா?' எனக் கேட்டான். நபி(ஸல்) அவர்கள் அவனை அப்படியே விட்டுவிட்டு, 'நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் ஏற்றுள்ளேன்' எனக் கூறினார்கள். பிறகு '(உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்?' எனக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், 'என்னிடம் மெய்யான செய்திகளும் (சில சமயம்) பொய்யான செய்திகளும் உதிக்கின்றன'' என்றான். நபி(ஸல்) அவர்கள் 'உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு. 'நான் ஒன்றை மனதில் நினைக்கிறேன் (அது யாது)?' எனக் கேட்டார்கள். (அப்போது நபி(ஸல்) அவர்கள் துகான் (44) அத்தியாயத்தின் 10வது வசனத்தை மனத்திற்குள் நினைத்தார்கள்) அதற்கு இப்னு ஸய்யாத், 'அது துக் (புகை வெற்றிடம்)'' என்றான். (அதாவது துகான், என்பதை 'துக்' என அரை குறையாகச் சொன்னான்) உடனே நபி(ஸல்) அவர்கள் 'தூர விலகிப் போ! நீ உன்னுடைய எல்லையைத் தாண்டிவிட முடியாது'' என்றார்கள். அப்போது உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவனை நான் கொலை செய்து விடட்டுமா?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உமக்குக் கொடுக்கப்படவில்லை. இவன் அவனாக இல்லையெனில் இவனைக் கொல்வதில் உமக்கு எந்தப் பலனும் இல்லை எனக் கூறினார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்களும் உபையுப்னு கஅபு(ரலி)யும் இப்னு ஸய்யாத் இருக்கும் தோட்டத்திற்குச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன் ஒளிந்திருந்து அவனிடமிருந்து எதையேனும் செவியேற்க வேண்டும் என விரும்பினார்கள். அங்கு இப்னு ஸய்யாத் ஒரு பூம்பட்டு (வெல்வெட்டு)ப் போர்வையைப் போர்த்தி ஏதோ ஒரு விதமாக முணுமுணுப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாதின் தாயார் நபி(ஸல்) அவர்கள் ஈச்சை மரங்களிடையே ஒளிந்து ஒளிந்து வருவதைப் பார்த்து வீட்டார். உடனே இப்னு ஸய்யாதிடம் 'ஸாஃபியே! ...இது அவனுடைய பெயர் ... இதோ முஹம்மது (வந்துவிட்டார்)'' என்று கூறியதும் இப்னு ஸய்யாத் குதித்தெழுந்தான். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பெண் அவனை(ப் பேச) விட்டிருந்தால் அவன் (தன்னுடைய நிலையை) வெளிப்படுத்தியிருப்பான்'' எனக் கூறினார்கள்.

679. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், 'அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு'' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

680. ''ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பிறகு அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை. அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தை ஓதிக்காட்டினார்.

இணைவைப்பவன் மரணத் தருவாயில் லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுதல்.

681. முஸய்யப்(ரலி) அறிவித்தார். அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், 'என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்' எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?' எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, 'நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)' என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்'' என்று கூறியதும், 'இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று'' (திருக்குர்ஆன் 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

கப்ருக்கருகில் ஒருவர் உபதேசம் செய்வதும் அவரைச் சுற்றி மக்கள் அமர்ந்திருப்பதும்.

682. அலீ(ரலி) அறிவித்தார். நாங்கள் பகீவுல் கர்கத் (என்னும் பொது) மையவாடியில் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து உட்கார்ந்ததும் நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்து கொண்டோம். அவர்களிடம் ஒரு சிறிய கைத்தடி இருந்தது. நபி(ஸல்) அவர்கள் தலைகுனிந்தவர்களாகத் தம் கைத்தடியால் தரையைக் கீறிக் கொண்டு, 'உங்களில் யாரும் அல்லது எந்த ஆத்மாவும் அதன் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா என்பது பற்றித் தீர்மானிக்கப்படாமலில்லை. அது தீய கதியுடையதா, நற்பேறுடையதா என்பதும் நிர்ணயிக்கப்படாமலில்லை' எனக் கூறினார்கள். உடனே ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! அப்படியாயின் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்டதை நம்பி (நற்) செயல்களில் ஈடுபடுவதை நாம் விட்டுவிடலாமா? ஏனெனில் நம்மில் யார் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாக நல்லவர்களின் செயல்களில் ஈடுபடுவார்கள்; யார் தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளார்களோ அவர்கள் நிச்சயமாகத் தீயவர்களின் செயல்களில் ஈடுபடுபவர்கள் தாமே?' என்றதும், நபி(ஸல்) அவர்கள், 'நம்மில் நல்லவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்கு நற்செயல்கள் செய்வது எளிதாக்கப்படும்; தீயவர்களாக(த் தீர்மானிக்கப்பட்டு) உள்ளவர்களுக்குத் தீய காரியங்கள் எளிதாக்கப்படும்'' என்று கூறிவிட்டு, 'தர்மம் கொடுத்து, பயபக்தியுடன் நடந்து, நல்லவற்றை உண்மையாக்குகிறவர்...'' என்ற (திருக்குர்ஆன் 92:5,6) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

தற்கொலை செய்தவர்...

683. ''வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறியவர், தான் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆவார். மேலும், இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர் ஆதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.

684. ஹஸன் அறிவித்தார். ஜுன்துப்(ரலி) இந்த (பஸராவின்) பள்ளிவாசலில் வைத்து எங்களிடம் (ஒரு ஹதீஸைக்) கூறினார். அதை நாங்கள் மறக்கவில்லை. மேலும் ஜுன்துப்(ரலி), நபி(ஸல்) அவர்களின் விஷயத்தில் பொய்யைக் கூறியிருப்பார் என்று நாங்கள் அஞ்சவுமில்லை. அவர் கூறினார். 'ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்தார். உடனே அல்லாஹ்? என்னுடைய அடியான் அவனுடைய மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்; எனவே, அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கி விட்டேன் எனக் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

685. ''தன்னுடைய கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கிறவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறந்தவரைப் பற்றி மக்கள் புகழ்ந்துரைத்தல்.

686. அனஸ்(ரலி) அறிவித்தார். ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது'' என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகி விட்டது?' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'எது உறுதியாகி விட்டது?' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள், 'இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்'' எனக் கூறினார்கள்.

687. அபுல் அஸ்வத் அறிவித்தார். நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர்(ரலி) உடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்ததும் உமர்(ரலி), 'உறுதியாகி விட்டது' என்றார். பிறகு இன்னொரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போதும் மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசினர். உடனே உமர்(ரலி), 'உறுதியாகிவி ட்டது' என்றார். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. மக்கள் அவரின் தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் உமர்(ரலி), 'உறுதியாகி விட்டது' எனக் கூறினார். நான் 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எது உறுதியாகி விட்டது?' எனக் கேட்டதும். 'எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சி கூறினால் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் 'மூவர் சாட்சியாயிருந்தால்..?' என்று கேட்டோம். அதற்கவர்கள் 'மூன்று பேர் சாட்சி கூறினாலும் தான்'' என்றனர். மீண்டும் 'இருவர் சாட்சியாக இருந்தால்...'' என நாங்கள் கேட்தற்கு இரண்டு பேர் சாட்சி கூறினாலும் தான்'' என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன்'' என்று உமர்(ரலி) கூறினார்.

மண்ணறை வேதனை.

688. கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரண்டு வானவர்களைக்) கொண்டு வரப்படும் (கேள்வி கேட்கப்படும்); பிறகு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்'' என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் 'நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்'' (திருக்குர்ஆன் 14:27) எனக் குறிப்பிடுகிறான் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

689. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக்) கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், 'உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். 'இறந்துவிட்டவர்களை அழைக்கிறீர்களே?' என அவர்களிடம் கேட்கப்பட்டதும், 'அவர்களை விட நீங்கள் அதிகம் செவியேற்பவர்களல்லர்; ஆயினும் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள்'' எனக் கூறினார்கள்.

690. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (இறந்தவர்களின் விஷயத்தில்), 'நான் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான் என்பதை இப்போது அவர்கள் அறிகிறார்கள்'' என்றே கூறினார்கள். (செவியுறுகிறார்கள் என்று கூறவில்லை. ஏனெனில்) 'நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது'' (திருக்குர்ஆன் 27:80) என அல்லாஹ் கூறினான்.

691. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.

மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுதல்.


692. அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார். ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும்போது வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு, 'யூதர்கள் அவர்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்'' எனக் கூறினார்கள்.

693. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! நிச்சயமாக நான் மண்ணறை வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.

மய்யித்திற்கு அதன் தங்குமிடம் (சொர்க்கம், நரகம்) காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும்.

694. ''உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.) மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிறவரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களின் குழந்தைகள் இறந்துவிட்டால்...?

695. பராஉ(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்தபோது நபி(ஸல்) அவர்கள், 'இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு'' எனக் கூறினார்கள்.

இணைவைப்போரின் குழந்தைகள் இறந்துவிட்டால்...

696. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள் 'அவர்களைப் படைத்த அல்லாஹ், அவர்கள் (உயிருடனிருந்திருந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன்'' எனக் கூறினார்கள்.

697. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.இவ்வாறே ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக் கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகி விட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் என்ன இது? என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' என்றனர். அப்படியே நடந்தபோது அங்கு ஒருவர் மல்லாந்து படுத்திருந்தார். அவரின் தலை மாட்டிலே பெரிய பாறையுடன் நிற்கும் இன்னொருவர், அதைக் கொண்டு அவரின் தலையை உடைத்தார். அவ்வாறு உடைக்கும்போது பாறை உருண்டு ஓடிவிட்டது. அந்தப் பாறையை அவர் எடுத்து வருவதற்குள் சிதைந்த தலை பழைய நிலைக்கு மாறிவிட்டது. மீண்டும் வந்து உடைத்தார். உடனே 'இவர் யார்?' என கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்'' என்றனர். எனவே நடந்தோம். அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தன. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நெருப்பின் உஷ்ணம் அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியிலுள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும், பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் 'இவர்கள் யார்?' எனக் கேட்டேன் அதற்கும் அவர்கள் 'நடங்கள்' எனக் கூறி விடவே மேலும் நடந்து ஓர் இரத்த ஆற்றின் பக்கம் வந்தோம். அந்த ஆற்றின் நடுப்பகுதியில் ஒருவர் நின்றிருந்தார். அவருக்கு முன்பாகக் கற்கள் கிடந்தன. ஆற்றின் ஓரத்தில் இன்னொருவர் நின்றிருந்தார். அந்த மனிதர் ஆற்றைவிட்டு வெளியேற முயலும்போது இவர் அவரின் வாயில் கல்லை எறிந்தார். அக்கல் பட்டதும் கரையேற முயன்றவர் முன்னிருந்த இடத்திற்குத் தள்ளப்பட்டார். இவ்வாறே அவர் வெளியேற முயலும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லால் அடிக்க, அவர் மீண்டும் பழைய இடத்திற்கே சென்றார். அப்போது நான் 'என்ன இது?' எனக் கேட்டேன். அதற்கு அவ்விருவரும் 'நடங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பசுமையான பூங்காவுக்கு வந்தோம். அதில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அடியில் ஒரு வயோதிகரும் சில சிறுவர்களும் இருந்தனர். அந்த மரத்திற்கு அருகில் ஒருவர் இருந்தார். அவருக்கு முன்னால் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதை அவர் மூட்டிக் கொண்டிருந்தார். பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இதுவரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பின்னர் மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் 'இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பித்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றி விவரங்களைச் சொல்லுங்கள்!' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் 'ஆம்! முதலில் தாடை சிதைக்கப்பட்டவரைப் பார்த்தீரே! அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து தலை உடைக்கப்பட்ட நிலையில் நீர் பார்த்தீரே! அவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தும் அதைப் பயன்படுத்தாமல் இரவில் தூங்கிவிட்டார். பகலில் அதைச் செயல்படுத்தவில்லை. எனவே அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். அடுத்து ஒரு பொந்தில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள். (இரத்த) ஆற்றில் சிலரைப் பார்த்தீரே! அவர்கள் வட்டி வாங்கித் தின்றவர்கள். மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த பெரியவர் இப்ராஹீம்(அலை) அவர்கள் அவரைச் சுற்றியிருந்த சிறுவர்கள் (முஸ்லிம்) மக்களின் குழந்தைகள். நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவர் நரகக் காவலாளியான மாலிக்(அலை). நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி இறைநம்பிக்கையாளர்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த்தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயில்'' என்று கூறிவிட்டு. 'இப்போது உம்முடைய தலையை உயர்த்தும்'' என்றனர். நான் என்னுடைய தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் 'இதுவே (மறுமையில்) உம்முடைய இருப்பிடம்'' என்றதும் நான் 'என்னுடைய இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்'' என்றேன். அதற்கு இருவரும் 'உம்முடைய வாழ்நாள் இன்னமும் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உம்முடைய இருப்பிடம் வருவீர்'' என்றனர்'' என்று கூறினார்கள்.

திடீர் மரணம் அடைதல்.

698. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல (தர்ம) காரியம் செய்திருப்பார். எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்'' என்றனர்.

நபி(ஸல்), அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) ஆகியோரின் கப்ருகள்.

699. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, என்னிடம் தங்கும் நாள் தாமதப்படுவதாக எண்ணி, 'இன்று நான் எங்கிருக்கிறேன்? நாளை நான் எங்கே இருப்பேன்'' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் வீட்டில் தங்கும் நாளிலேயே அவர்களின் உயிரை என்னுடைய நெஞ்சுக்கும் தோளுக்குமிடையே அல்லாஹ் கைப்பற்றினான். என்னுடைய வீட்டிலேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

700. அம்ர் இப்னு மைமூன் அல்அவ்தீ அறிவித்தார். நான் உமர் இப்னுல் கத்தாப்(ரலி) அவர்களை (மரணத் தருவாயில்) பார்த்தேன். தம் மகனை நோக்கி, அவர், 'அப்துல்லாஹ்வே! இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் போய் உமர் ஸலாம் கூறியதாகச் சொல்லிவிட்டு, என்னுடைய தோழர்களான (நபி(ஸல்) அபூ பக்ர்(ரலி) ஆகிய இருவருடன் நானும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்கு அவர்களிடம் அனுமதி கேள்' எனக் கூறினார். அவ்வாறே கேட்கப்பட்டதும். ஆயிஷா(ரலி) நான் அந்த இடத்தை எனக்கென நாடியிருந்தேன். இருந்தாலும் இன்று நான் அவருக்காக அதைவிட்டுக் கொடுக்கிறேன்'' என்றார். இப்னு உமர்(ரலி) திரும்பி வந்தபோது உமர்(ரலி) 'என்ன பதில் கிடைத்தது?' எனக் கேட்டார். இப்னு உமர்(ரலி) 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு அவர் அனுமதியளித்து விட்டார்' எனக் கூறினார். உடனே உமர்(ரலி) 'நான் உறங்கவிருக்கும் அந்த இடத்தைத் தவிர வேறெதுவும் எனக்கு மிக முக்கியமானதாக இல்லை. நான் (என்னுடைய உயிர்) கைப்பற்றப்பட்டவுடன் என்னைச் சுமந்து சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மீண்டும்) என்னுடைய ஸலாமைக் கூறி, 'உமர் அனுமதி கேட்கிறார்' எனக் கூறுங்கள். எனக்கு அனுமதியளித்தால் என்னை அங்கு அடக்கம் செய்யுங்கள்; இல்லையெனில் என்னை முஸ்லிம்களின் பொது மையவாடியில் அடக்கி விடுங்கள். நபி(ஸல்) தாம் அவர்கள் மரணிக்கும் வரை எவரெவர் விஷயத்தில் திருப்தி கொண்டிருந்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரும் ஆட்சிப் பொறுப்பிற்குத் தகுதியுடையவர்களாக எனக்குத் தெரியவில்லை. எனவே, எனக்குப் பிறகு இவர்களில் யாரை கலீஃபாவாகத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அவர் தாம் கலீஃபா! அவர் சொல்வதைக் கேட்டு அவருக்குக் கட்டுப்படுங்கள்' எனக் கூறிவிட்டு, உஸ்மான்(ரலி), அலீ(ரலி), தல்ஹா(ரலி) ஸுபைர்(ரலி) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார். அப்போது அன்ஸார்களில் ஓர் இளைஞர் வந்து 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள்! உங்களுக்கு இஸ்லாத்தில் இருந்த அந்தஸ்து என்ன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பிறகு நீங்கள் தலைவராகி நீதி, நேர்மையை நிலைநாட்டினீர்கள். இதற்கெல்லாம் மேலாக ஷஹாதத்... வீரமரணமும் கிடைத்திருக்கிறது'' என்றார். உமர்(ரலி) 'என்னுடைய சகோதரரின் மகனே! என்னுடைய விருப்பமெல்லாம் இந்த ஆட்சிப் பொறுப்பு எனக்கு நன்மையைத் தேடித் தராவிட்டாலும் எனக்குத் தீமையை தந்து விடாமலிருந்தால் அதுவே போதும் என்பதே' எனக் கூறிவிட்டு, 'எனக்குப் பின்னால் தலைவராக வருபவருக்கு நான் கூறிக்கொள்வது யாதெனில், அவர் துவக்கத்தில் ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களின் விஷயத்தில் நல்லபடி நடந்து கொள்ளவேண்டும்; அவர்களின் உரிமைகளை அறிந்து அவர்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பேணிக் காக்க வேண்டும். அதுபோன்றே அன்ஸார்களிடமும் நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் (மதீனாவில்) இருப்பிடத்தையும் நம்பிக்கையையும் தக்க வைத்தவர்கள். அவர்களில் நல்லவர்களின் நற்செயலை ஏற்று மதிப்பளித்து தவறிழைக்கக் கூடியவர்களை மன்னித்து விடவேண்டும். மேலும், அல்லாஹ்வினதும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலுள்ள (முஸ்லிம்களல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அவர்களைப் பாதுகாக்கப் போர் புரியவேண்டும். மேலும், அவர்களின் சக்திக்குமேல் அவர்களைச் சிரமப் படுத்தக் கூடாது'' என்று கூறினார்.

இறந்தோரை ஏசக் கூடாது.

701. ''இறந்தோரை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள் 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Friday, 17 July 2009

[பாடம்-16] கிரகணங்கள்.

சூரிய கிரகணத்தின்போது தொழுவது.

561. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும்வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும்வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் ''சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்' எனக் கூறினார்கள். முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

கிரகணத்தின்போது தர்மம் செய்தல்.

562. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து 'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.

கிரகணத் தொழுகைக்கு அஸ்ஸலாத்து ஜாமிஆ என்று அழைப்புக் கொடுப்பது.

563. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

கிரகணத்தின்போது கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுதல்.

564. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் 'கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக!' என்று கூறினாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கப்ருடைய வேதனையை விட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்.

பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. முற்பகல் நேரத்தில் (இல்லம்) திரும்பினார்கள். பின்னர் தொழலானார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது மதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நிலையில் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் ரக்அத்தின் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். தொழுது முடித்து அல்லாஹ் நாடிய செய்திகளை மக்களுக்குச் சொன்னார்கள். பின்னர் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

கிரகணத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது.

565. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்போது தொழுதார்கள். அத்தொழுகையில் பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். (முடித்ததும்) 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணத்தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். என்று நபி(ஸல) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எதையோ பிடிக்க முயன்று பிறகு பின் வாங்கியது போல் நாங்கள் கண்டோமே ( அது ஏன்?)' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் சொர்க்கத்தைப் பார்த்தேன். அதன் ஒரு குலையைப் பிடிக்க முயன்றேன். அதை நான் பிடித்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் நீங்கள் அதை உண்பீர்கள். மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அது ஏன்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்' என்று விடையளித்தனர். 'அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்' என்று கேட்கப்பட்டதற்குக் 'கணவனை நிராகரிக்கிறார்கள்; காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்' என்று விடையளித்தார்கள்.

சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது.

566. அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.

கிரகணத்தின்போது இறைவனை நினைவு கூர்தல்.

567. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுதல்.

568. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூவுச் செய்தார்கள். ருகூவிலிருந்து நிமிர்ந்ததும் 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வ லகல் ஹம்து' என்று கூறினார்கள். பிறகு மீண்டும் ஓதினார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.