Showing posts with label தயம்மும். Show all posts
Showing posts with label தயம்மும். Show all posts

Friday, 5 June 2009

[பாடம்-7] தயம்மும்.

''நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணைத் தேடி அதனால் உங்கள் முகங்களையும் கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்.'' (திருக்குர்ஆன் 05:06)

223. 'நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். 'பைதாவு' அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, '(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை' என்று முறையிட்டனர். அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 'நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை. அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயம்மத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள். இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)' எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்''என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

224. 'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுது கொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

''சொந்த ஊரில் தங்கியிருக்கும்போது தண்ணீர் கிடைக்காதிருந்து தொழுகையின் நேரம் போய்விடுமோ என அஞ்சினால் தயம்மும் செய்யலாம்''

225. 'நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி (ரலி) அவர்களிடம் சென்றோம். 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பீர்ஜமல்' என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள்' என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார்'' என உமைர் என்பவர் அறிவித்தார்.

தயம்மும் செய்பவர் (மண்ணில் அடித்த பின்னர்) இரண்டு கைகளிலும் ஊதவேண்டுமா?

226. 'ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து 'இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது' எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?' என்று கேட்டார்கள்'' என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார்.

தண்ணீருக்குப் பகரமாக சுத்தமான மண் ஒரு முஸ்லிமுக்கு போதுமானது.

227. 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம் மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் இன்னவர், அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்.''நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே தூக்கத்திலிருந்து விழிக்கும்வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின் தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு அக்பர்!' என்று சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக் கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது 'அதனால் எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டும் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் உளூச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். 'ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?' என்று அவரிடம் கேட்டபோது, 'எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் இல்லை' என்று அவர் கூறினார். 'மண்ணில் தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் சென்று 'தாகமாக இருக்கிறது; தண்ணீர் இல்லை' என முறையிட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, ஒரு மனிதரையும் அவர் பெயரை அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து' நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத் தேடிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள். 'தண்ணீர் எங்கே கிடைக்கிறது?' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். 'தண்ணீர் ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்' என அப்பெண் கூறினாள். 'அப்படியானால் நீ புறப்படு' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். 'எங்கே?' என்று அவள் கேட்டாள். 'அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினார்கள். 'மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?' என்று அப்பெண் கேட்டாள். 'நீ கூறுகிற அவரேதான்' என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.'அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் சொல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல் விட்டுவிட்டார்கள். 'எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, 'இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.) 'அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்' என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது, 'பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?' என்று கேட்டதற்கு 'ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்' (என நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)அவள் தன் கையின் நடுவிரலையும், ஆட்காட்டி விரலையும் வானத்தின் பக்கம் உயர்த்தி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்' என்று கூறினாள். பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம், 'இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?' என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்'' என இம்ரான்(ரலி) அறிவித்தார்.

Sunday, 31 May 2009

[பாடம்-5] குளித்தல்.

குளிப்பதற்கு முன்னர் உளூச் செய்தல்.

185. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்'' ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

186. 'நபி(ஸல்) அவர்கள் கால்களை விட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது'' என மைமூனா(ரலி) அறிவித்தார்.

மனைவியுடன் குளித்தல்.

187. 'ஃபரக்' என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு 'ஸாஉ' அளவுள்ள தண்ணீரில் குளித்தல்.

188. 'நானும் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களின் சகோதரர் 'நபி(ஸல்) அவர்களின் குளிப்பு எப்படியிருந்தது?' என்று கேட்டதற்கு, 'ஸாவு' போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தம் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது' என்று ஆயிஷா(ரலி) கூறினார்'' என அபூ ஸலமா அறிவித்தார்.

189. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு, 'ஒரு ஸாவு' அளவு தண்ணீர் போதும்' என்று கூறினார். அப்போது ஒருவர் 'அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது' என்றதற்கு, 'உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த (நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது' என்று கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்'' என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.

தலையில் மூன்று முறை தண்ணீரை ஊற்றுதல்.

190. 'நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்'' என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

'ஹிலாப்' என்னும் பாத்திரத்தில் குளித்தல் குளிக்கும்போது நறுமணம் தேய்த்தல்.

191. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது ஹிலாப் பாத்திரம் போன்ற ஒன்றை கொண்டு வரச் செய்து அதிலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மனைவியுடன் ஒருமுறை உறவு கொண்ட பின்னர் மீண்டும் உறவு கொள்ளுதல் மற்றும் பல மனைவியருடன் உறவு கொண்ட பின்னர் ஒருமுறை குளித்தல்.

192. (''நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை'' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்'' என முஹம்மத் இப்னு முன்த»ர் அறிவித்தார்.

193. 'நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். 'அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு 'நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ்(ரலி) கூறினார்'' என கதாதா அறிவித்தார்.

ஏற்கனவே நறுமணம் பூசியவர் குளித்தவிட்டு இஹ்ராம் கட்டும்போதும் நறுமணத்தின் அடையாளம் இருந்தால் என்ன செய்வது?

194. 'நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் தலை முடிக்கிடையில் நறுமணத்தின் பளபளப்பை நான் (இன்றும்) பார்ப்பது போன்று இருக்கிறது'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

தலை முடியைக் கோதுதல் மற்றும் தலையின் தோல் நன்றாக நனைந்ததைத் தெரிந்த பின்னர் முடியின் மீது தண்ணீரை ஊற்றுதல்.

195. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் இரண்டு கைகளையும் கழுவுவார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்வார்கள். பின்னர் குளிக்கத் துவங்குவார்கள். தங்களின் கையால் தலைமுடியைக் கோதுவார்கள். தலையின் தோல் நனைந்தது தெரிய வந்ததும் தலையின் மீது மூன்று முறை தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் உடலின் இதர பாகங்களைக் கழுவுவார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலில் இருக்கும்போது குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்தால் தயம்மும் போதுமென இருக்காமல் வெளியேற வேண்டும்.

196. 'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வநத்தால் எங்களைப் பார்த்து 'உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்' என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர், அவர்கள் குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அறைக்குள் தனியாகக் குளிக்கும்போது நிர்வாணமாகக் குளிக்கலாம். மறைத்துக் கொண்டு குளிப்பதே சிறந்தது.

197. 'இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா(அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா விரை வீக்கமுடையவர். எனவே அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை' என இஸ்ரவேலர்கள் கூறினார்கள். ஒரு முறை மூஸா(அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள். அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா(அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து 'கல்லே! என்னுடைய ஆடை!' என்று சப்தமிட்டுச் சென்றார்கள். அப்போது, இஸ்ரவேலர்கள் மூஸா(அலை) அவர்களின் மர்மஸ்தலத்தைப் பார்த்துவிட்டு 'அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸாவிற்கு எந்தக் குறையுமில்லை' என்று கூறினார்கள். மூஸா(அலை) அவர்கள் தங்களின் ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை அடிக்க ஆரம்பித்தார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

''அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா(அலை) அவர்கள் கல்லைக் கொண்டு அந்த கல்லின் மீது ஆறோ ஏழோ அடி அடித்தார்கள்'' என அபூஹுரைரா (ரலி) கூறினார்.

198. 'அய்யூப்(அலை) அவர்கள் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தபோது தங்க வெட்டுக்கிளி ஒன்று அவர்களின் மீது விழுந்தது. அதை அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடையில் எடுத்தார்கள். உடனே அவர்களின் இரட்சகன் அவர்களை அழைத்து 'அய்யூபே! நீர் பார்க்கிற இதைவிட்டு உம்மை தேவையற்றவராக நான் ஆக்கவில்லையா?' எனக் கேட்டான். அதற்கு 'உன் கண்ணியத்தின் மீது ஆணையாக அப்படித்தான்; எனினும் உன்னுடைய பரகத்தைவிட்டு நான் தேவையற்றவனாக இல்லை' என அய்யூப்(அலை) அவர்கள் கூறினார்கள்'' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குளிக்கும்போது மனிதர்களின் பார்வையைவிட்டு மறைத்தல்.

199. 'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபி(ஸல்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை ஃபாத்திமா(ரலி) மறைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, நபி(ஸல்) (என்னைச் சுட்டிக்காட்டி) 'இது யார்?' என்று கேட்டார்கள். நான் உம்மு ஹானி என்றேன்'' என உம்முஹானி(ரலி) அறிவித்தார்.

குளிப்புக் கடமையானவனின் வியர்வையும், முஸ்லிம் அசுத்தமாவதில்லை என்பதும்.

200. 'நான் குளிப்புக் கடமையான நிலையில் மதீனாவின் ஒரு தெருவில் நின்றிருந்தபோது நபி(ஸல்) என்னைச் சந்தித்தார்கள். அப்போது, நான் நழுவி விட்டேன். குளித்துவிட்டுப் பின்னர் வந்தேன். நபி(ஸல்) அவர்கள் 'அபூஹுரைரா! எங்கு நழுவி விட்டீர்?' என்று கேட்டதற்கு, 'குளிப்புக் கடமையாகியிருந்தேன்; எனவே நான் சுத்தமில்லாமல் உங்கள் அருகே அமர்வதை வெறுத்தேன்' என்றேன். அப்போது 'ஸுப்ஹானல்லாஹ்! ஒரு முஸ்லிம் அசுத்தமாகவே மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

குளிப்புக் கடமையானவர் தூங்குதல்.

201. 'நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஆண், பெண் உறுப்புகள் சந்தித்துவிட்டால் என்ன செய்யது?

202. 'ஒருவர் தம் மனைவியின் (இரண்டு கால், இரண்டு கை ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையில் அமர்ந்து, அவளுடன் உறவு கொள்பவரின் மீது குளிப்புக் கடமையாகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.