Wednesday 29 July 2009

[பாடம்-22] தொழுகையில் ஞாபக மறதியால் ஏற்படும் தவறுகளுக்குப் பரிகாரம். (ஸஜ்தா ஸஹ்வு செய்தல்)

(மறதியாக நான்கு ரக்அத்துக்களுக்கு) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்...

631. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.

தொழுது கொண்டிருப்பவரிடம் யாரேனும் பேச்சுக் கொடுத்தால் தொழுபவர் அதைச் செவியேற்பதும் கையால் சைகை செய்வதும்.

632. குரைபு அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி), மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர்(ரலி) ஆகியோர் என்னிடம் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும்! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி(ஸல்) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க. அத் தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!'' என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ்(ரலி), தாமும் உமரும், இவ்வாறு (அஸருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி) 'நீர் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் கேளும்' எனக் கூறினார். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா(ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) நபி(ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை பார்த்தேன். தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி, 'நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே? என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை. அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்'' என்றார்கள் என உம்மு ஸலாமா(ரலி) விடையளித்தார்கள்.

Monday 27 July 2009

[பாடம்-21] தொழுகையில் செய்யக்கூடாத சில செயல்கள்.

தொழுகையில் பேசக் கூடாது.

624. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஆரம்ப காலத்தில்) நபி(ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் ஸலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறுவார்கள். நாங்கள் (அபீ ஷீனியாவின் மன்னர்) நஜ்ஜாஷியிடமிருந்து திரும்பியபோது அவர்களுக்கு ஸலாம் கூறினோம். அவர்கள் எங்களுக்கு பதில் ஸலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) 'நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன'' என்று கூறினார்கள்.

625. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் 'தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்'' என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்.

தொழும்போது சிறு கற்களை அப்புறப்படுத்துதல்.

626. முஐகீப்(ரலி) அறிவித்தார். ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி 'நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் தொழும்போது அவரின் வாகனம் ஓடிவிட்டால்...

627. அஸ்ரக் இப்னு கைஸ் அறிவித்தார். நாங்கள் அஹ்வாஸ் எனுமிடத்தில் ஹருரிய்யாக் கூட்டத்தினருடன் போரிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஆற்றோரத்தில் ஒருவர் தம் வாகனத்தின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்து தொழுது கொண்டிருந்தார். வாகனம் அவரை இழுக்க அவரும் அதைத் தொடர்ந்தார். அவர் அபூ பர்ஸா(ரலி) என்ற நபித்தோழராவார். அப்போது காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் 'இறைவா! இந்தக் கிழவரைத் தண்டிப்பாயாக!' எனக் கூறினார். அந்தப் பெரியவர் தொழுது முடித்ததும் 'நீங்கள் கூறியதை கேட்டுக் கொண்டுதானிருந்தேன். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழெட்டுப் போர்களில் பங்கெடுத்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை இலகுவாக்கியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். என் வாகனத்தை அதன் மேயும் இடத்துக்கு ஓடவிட்டுவிட்டு கவலையுடன் நான் செல்வதைவிட என் வாகனத்துடன் திரும்பிச் செல்வதே எனக்கு விருப்பமானது எனக் கூறினார்.

628. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு முறை சூரியக் கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூவு செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் 'சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்! எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன். நான் முன்னே செல்வது போல் நீங்கள் என்னைக் கண்டபோது சொர்க்கத்தின் ஒரு திராட்சைப் பழக்கொத்தைப் பிடிக்க முயன்றேன். நான் பின்னே செல்வது போல் என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நரகத்தில் அம்ர் இப்னு லுஹை என்பவனையும் கண்டேன். அவன்தான் ஸாயிபத் எனும் (கால்நடைகளை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவன்'' என்று கூறினார்கள்.

தொழும்போது ஸலாமுக்குப் பதில் கூறக்கூடாது.

629. ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால் தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.

தொழும்போது இடுப்பில் கையை வைத்தல்.

630. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். தொழும்போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday 25 July 2009

[பாடம்-20] மக்கா மதீனாவின் புனித பள்ளிகளில் நிறைவேற்றும் தொழுகையின் சிறப்புகள்.

நன்மையை நாடிப் பிரயாணம் செய்யும் மூன்று பள்ளிகள்.

620. 'மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.

621. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கூபாப் பள்ளிவாசல்.

622. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) இரண்டு நாள்கள் தவிர வேறு நாள்களில் லுஹாத் தொழ மாட்டார்கள். மக்காவுக்கு அவர்கள் வரக்கூடிய நாளில் லுஹா நேரத்தில் வந்து கஅபாவைத் வலம் வந்து மக்காமே இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். கூபாப் பள்ளிக்கு ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சென்று பள்ளிக்குள் நுழைந்ததும் தொழாமல் வெளியே வர மாட்டார்கள். மேலும் 'நபி(ஸல்) அவர்கள் கூபாப் பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வரும் வழக்கம் உடையவராக இருந்தனர்' என்றும் கூறினார்கள். நான் என்னுடைய தோழர்கள்; செய்தது போன்றே செய்கிறேன். இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும் தொழுபவரை தடுக்க மாட்டேன். ஆயினும் சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள்.

நபி(ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியின் சிறப்பு.

623. ''என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என்னுடைய மிம்பர், என்னுடைய ஹவ்லுல் கவ்ஸர் அருகிலுள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Thursday 23 July 2009

[பாடம்-19] தஹஜ்ஜூத் (பிந்திய இரவுத் தொழுகை)

இரவில் தஹஜ்ஜுத் தொழுதல்.

அல்லாஹ் கூறினான்: 'இரவில் நீர் தஹஜ்ஜுத் தொழுவீராக!' (திருக்குர்ஆன் 17:79)

590. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் 'இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள், பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன்மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்துவிடு. நீயே (சிலரை) முற்படுத்துபவன், (சிலரை) பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை' என்று கூறுவார்கள்.

இரவுத் தொழுகையின் சிறப்பு.

591. இப்னு உமர்(ரலி) கூறியதவாது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம்; தெரிவிக்க 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்' என்று நபி(ஸல்) கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

நோயாளி இரவுத் தொழுகையை விட்டு விடலாம்.

592. ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை.

இரவுத் தொழுகையையும் உபரியான தொழுகைகளையும் கட்டாயப் படுத்தாமல் நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியது.

593. அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் வந்தார்கள். 'நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.

594. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில அமல்களைச் செய்ய விரும்புவார்கள். (ஆனால்) சில சமயம் அவற்றைச் செய்ய மாட்டார்கள். மக்களும் அதைச் செய்வதற்கு சிரமப்படுவார்கள் என்ற அவர்களின் மீது அது அச்சமே இதற்கு காரணம். நபி(ஸல்) அவர்கள் ஒருபோதும் லுஹாத் தொழுததில்லை. நான் லுஹாத் தொழுது வருகிறேன்.

நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை. நபி(ஸல்) அவர்கள் தங்களின் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார்கள்.

595. முகீரா(ரலி) அறிவித்தார். சில சமயம் நபி(ஸல்) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு இரவில் நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது 'நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கேட்பார்கள்.

பிந்திய இரவில் உறங்குதல்.

596. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவுவரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்' இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.

597. மஸ்ரூக் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு விருப்பமான அமல் எது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'தொடர்ந்து செய்யும் அமல்' என்று விடையளித்தார்கள். (இரவில்) நபி(ஸல்) அவர்கள் எப்போது எழுவார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'சேவல் கூவும்போது எழுவார்கள்' என்று விடையளித்தார்கள். மற்றோர் அறிவிப்பில் சேவல் கூவும்போது எழுந்து தொழுவார்கள் என்று காணப்படுகிறது.

598. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் (இருக்கும்போது) ஸஹர் நேரம் வரும்வரை உறங்காமல் இருந்ததில்லை.

ஸஹர் செய்ததும் உறங்காமல் ஸுப்ஹுத் தொழுதல்.

599. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியவதாவது: நபி(ஸல்) அவர்களும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) வும் ஸஹர் செய்தனர். ஸஹர் செய்து முடித்ததும், நபி(ஸல்) அவர்கள் (ஃபஜர்) தொழுகைக்கு தயாராகித் தொழுதார்கள்.
அவர்கள் ஸஹர் செய்ததற்கும் தொழுததற்கும் இடையே எவ்வளவு நேரம் இருந்தது என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் 'ஒருவர் ஜம்பது வசனங்கள் ஓதக்கூடிய நேரம்' என்று விடையளித்தார்கள்.

இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் நிற்பது.

600. அபூ வாயில் அறிவித்தார். 'நாள் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். நான் தவறான ஒரு முடிவுக்கு வருமளவுக்கு அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள்' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது அந்தத் தவறான முடிவு எது? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்களுடன் தொழுவதைவிட்டுத் தொழுகையை முறித்து விடலாம் என்று எண்ணினேன்' என்று விடையளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?

601. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! இரவுத் தொழுகை எவ்வாறு?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (நேரம் வந்துவிடுமென) நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவீராக' என்று விடையளித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

602. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய முன் ஸுன்னத் வித்ரு ஆகியவற்றைச் சேர்த்து இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்.

603. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு தோற்கமாட்டார்களோ என்று நாங்கள் நினைக்குமளவுக்கு நோன்பைத் தொடர்ந்துவிட்டு விடுவார்கள். நோன்பை விட மாட்டார்களோ என்று நாங்கள் நினைக்குமளவுக்குத் தொடர்ந்து நோன்பு நோற்பார்கள். நீர் அவர்களைத் தொழக் கூடியவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே பார்ப்பீர். அவர்களைத் தூங்கக் கூடியவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே பார்ப்பீர்!

இரவில் தொழாவிட்டால் ஷைத்தான் பிடரியில் முடிச்சுப் போடுகிறான்.

604. ''உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்.

605. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார்.தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள்.

இரவின் கடைசியில் தொழுவதும் துஆச் செய்வதும்.

606. 'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இரவின் ஆரம்ப நேரத்தில் உறங்கிவிட்டுப் பிற்பகுதியில் விழித்திருத்தல்.

607. அஸ்வத் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இரவின் ஆரம்ப நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் உறங்குவார்கள். இரவின் கடைசியில் எழுந்து தொழுவார்கள். பிறகு படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் பாங்கு சொன்னதும் விழித்துக் குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால் உளூச் செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்படுவார்கள்' என்று விடையளித்தார்கள்.

ரமலானிலும் ரமலான் அல்லாத மாதத்திலும் நபி(ஸல்) அவர்கள் தொழுத முறை.

608. அபூ ஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. முதலில் நான்கு ரக்அத்துகள் அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விடையளித்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை' என்று விடையளித்தார்கள்' என்றும் ஆயிஷா(ரலி) கூறினார்.

வணக்க வழிபாடுகளில் சிரமப்படுவதைக் கை விட வேண்டும்.

609. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. 'இந்தக் கயிறு ஏன்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், 'இது ஸைனபு(ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து விட வேண்டும்' என்று கூறினார்கள்.

இரவில் தொழும் வழக்கமுடையவர் அதை விடக்கூடாது.

610. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போன்று நீர் ஆகிவிடாதீர்' என்று கூறினார்கள்.

இரவில் விழித்துத் தொழுவதன் சிறப்பு.

611. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'யார் இரவில் விழித்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை. ஆட்சியும் அவனுக்குரியது. புகழும் அவனுக்குரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும் என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

612. ஹைஸம் இப்னு அபீ ஸினான் அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) தம் உரையின்போது நபி(ஸல்) அவர்கள் பற்றி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) இயற்றிய பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள். 'எங்களிடம் இறைத்தூதர் இருக்கிறார்கள். ஃபஜ்ரு நேரம் வந்ததும் அவனுடைய வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள். நாங்கள் வழிகேட்டில் இருந்தபோது எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நடந்தேறும் என்று எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணை வைப்பவர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.

613. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்ட ஒரு கனவில் என்னுடைய கையில் பட்டுத் துணி ஒன்று இருந்தது. நான் சொர்க்கத்தில் எந்த இடத்திற்குச் செல்ல விரும்பினாலும் அது என்னைக் கொண்டு செல்லும்போது என்னிடம் இருவர் வந்து என்னை நரகத்திற்குக் கொண்டு செல்ல முயன்றார்கள். அப்போது அவர்களை ஒரு வானவர் சந்தித்து 'இவரைவிட்டு விடுங்கள் என்று கூறிவிட்டு என்னிடம் 'பயப்படாதீர்!' என்று கூறினார்கள். என்னுடைய கனவ ஹஃப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்'' என்று கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாகி விட்டேன்.

உபரித் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்.

614. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். பின்னர் 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்தையும்; அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்.''

ஃபஜ்ருடைய ஸுன்னத்தைப் பேணித் தொழுதல்.

615. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

616. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து சூரா ஓதினார்களா? என்று நான் நினைக்குமளவுக்குச் சுருக்கமாகத் தொழுவார்கள்.

உள்ளூரில் லுஹாத் தொழுவது.

617. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும் லுஹாத் தொழுமாறும் வித்ருத் தொழுதுவிட்டு உறங்குமாறும் மூன்று விஷயங்களை எனது தோழர் நபி(ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும்வரை அவற்றை விடமாட்டேன்.

லுஹருக்குப் முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது.

618. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டதில்லை.

மஃரிபுக்கு முன் தொழுவது.

619. அப்துல்லாஹ் அல் முஸ்னி(ரலி) அறிவித்தார். மஃரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மஃரிபுக்கு முன் தொழுங்கள். மஃரிபுக்கு முன் விரும்புயவர்கள் தொழுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு ஸுன்னத்தாகக் கருதக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

Tuesday 21 July 2009

[பாடம்-18] கஸ்ருத் தொழுகை (சுருக்கித் தொழுதல்)

எத்தனை நாள்கள் வெளியூரில் தங்கினால் கஸ்ருத் தொழலாம்?

575. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம்.

576. யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார். 'நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும்வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்' என்று அனஸ்(ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாள்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'பத்து நாள்கள் தங்கினோம்' என்று விடையளித்தார்கள்.

மினாவில் கஸ்ருத் தொழுதல்.

577. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடனும் உஸ்மான்(ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் உஸ்மான்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான்(ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள்.

578. ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மினாவில் எதிரிகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லாத நிலையில் இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

579. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார். உஸ்மான்(ரலி) மினாவில் எங்களுக்கு நான்கு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். இது பற்றி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது 'இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்' என்று கூறினார்கள். பின்னர் 'நான் நபி(ஸல்) அவர்களுடன் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். அபூ பக்ர்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். உமர்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். இந்த நான்கு ரக்அத்களுக்குப் பகரமாக ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் எனக்குப் போதும்' என்று கூறினார்.

580. ''எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.

மஃரிபுத் தொழுகையைப் பயணத்திலும் மூன்று ரக்அத்களாகத் தொழுதல்.

581. ஸாலிம் அறிவித்தார். இப்னு உமர்(ரலி) முஸ்தலிஃபா-வில் மஃரிபையும் இஷாவையும் ஜம்உச் செய்து தொழுதார்கள். ஒரு முறை இப்னு உமர்(ரலி) மஃரிபைத் தாமதப் படுத்தினார்கள். அவர்களின் மனைவி ஸஃபியா(ரலி) உடல் நலம் குன்றி இருந்தார்கள். (அவர்களைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள்) அவர்களிடம் தொழுகை என்று நினைவு படுத்தினேன். அப்போதும் 'நட' என்றார்கள். இரண்டு அல்லது மூன்று மைல்கள் நடந்ததும் வாகனத்தில் இருந்து இறங்கித் தொழுதார்கள். பின்னர் 'நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்பட நேர்ந்தால் இப்படித்தான் தொழுவார்கள்' என்று குறிப்பிட்டார்கள். மேலும் 'நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்பட நேர்ந்தால் மஃரிபைத் தாமதப் படுத்தி மூன்றுரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் பெரிய இடைவெளி ஏதுமின்றி இஷாவுக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கொடுப்பார்கள். இஷாவிலிருந்து நள்ளிரவில் எழுவதுவரை உபரியான தொழுகைகள் தொழ மாட்டார்கள்.' எனக் குறிப்பிட்டார்கள்.

582. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கிப்லா அல்லாத திசையை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள்.

கழுதையின் மீது அமர்ந்து உபரியான தொழுகைகளைத் தொழுதல்.

583. அனஸ் இப்னு ஸீரின் அறிவித்தார். அனஸ்(ரலி) ஸிரியாவிலிருந்து வந்தபோது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம். ஐநூத்தம்ர் என்ற இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்களின் முகம் கிப்லாவுக்கு இடப்புறமாக இருக்கும் நிலையில் கழுதையின் மீது அமர்ந்து அவர்கள் தொழுததை பார்த்தேன். கிப்லா அல்லாத திசையில் நீங்கள் தொழுகிறீர்களே என்று கேட்டேன். அதற்கவர்கள் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நான் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்' என்று விடையளித்தார்கள்.

பயணத்தின்போது தொழுகைக்கு முன்பும் பின்பும் உபரியான தொழுகையைத் தொழ வேண்டியதில்லை.

584. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. 'அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது' (33:21) என்று அல்லாஹ் கூறினான் எனக் குறிப்பிட்டார்கள்.

கடமையான தொழுகைகளுக்கு முன்னரும் பின்னரும் தவிர மற்ற சமயங்களில் பயணத்தில் உபரியாகத் தொழுவது.

585. ஆமிர் இப்னு ரபிஆ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் பயணத்தின்போது தம் வாகனத்தின் மீது அமர்ந்து அது செல்லும் திசையில் உபரியான தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்திருக்கிறேன்.

பயணத்தின்போது மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதல்.

586. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருக்கும்போது லுஹர் அஸரையும் மக்ரிப் இஷாவையும் ஜம்உச் செய்து தொழுவார்கள்.

உட்கார்ந்து தொழ முடியாவிட்டால்...

587. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு'' என்று விடையளித்தார்கள்.

உட்கார்ந்து தொழும்போது நோய் நீங்கிவிட்டால் அல்லது நோயின் கடுமை குறைந்துவிட்டால் எஞ்சியதை எழுந்து தொழலாம்.

ஒரு நோயாளி விரும்பினால் இரண்டு ரக்அத்களை நின்றும் இரண்டு ரக்அத்களை அமர்ந்தும் தொழலாம்.

588. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் முதுமையை அடையும்வரை இரவுத் தொழுகையை உட்கார்ந்து தொழ நான் பார்த்ததில்லை. முதுமையான காலத்தில் அவர்கள் உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ருகூவுச் செய்ய எண்ணும்போது எழுந்து முப்பது அல்லது நாற்பது வசனங்கள் ஓதிவிட்டுப் பிறகு ருகூவுப் செய்வார்கள்.

589. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள். உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள். பின்னர் ஸஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். நான் உறங்கிவிட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள்.

Sunday 19 July 2009

[பாடம்-17] குர்ஆனை ஓதும்போது வரும் ஸஜ்தா வசனங்கள்.

குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள் ஓதும்போது ஸஜ்தாச் செய்வது நபிவழி.

569. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று 'இவ்வாறு செய்வது எனக்குப் போதும்' என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன்.

ஸாத் அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தல்.

570. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸாத் அத்தியாயம் ஓதப்படும்போது ஸஜ்தாக் கட்டாயமில்லை. (ஆனால்) நபி(ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்ததை பார்த்திருக்கிறேன்.

முஸ்லிம்கள் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து ஸஜ்தாச் செய்தல்.

571. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.

ஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தாச் செய்யாமல் இருந்தால்...

572. ஸைத் இப்னு ஸாயித்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தல்.

573. அபூ ஸலமா அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம் நீங்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்தேனே என்றேன். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் ஸஜ்தாச் செய்திருக்க மாட்டேன்' என்று விடையளித்தார்கள்.

இமாம் ஸஜ்தா வசனத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்வதற்காக மக்கள் நெருக்கியடித்துக் கொள்வது.

574. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டுவார்கள். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நெருக்கியடித்துக் கொண்டு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்.

Friday 17 July 2009

[பாடம்-16] கிரகணங்கள்.

சூரிய கிரகணத்தின்போது தொழுவது.

561. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும்வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும்வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் ''சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்' எனக் கூறினார்கள். முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

கிரகணத்தின்போது தர்மம் செய்தல்.

562. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து 'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.

கிரகணத் தொழுகைக்கு அஸ்ஸலாத்து ஜாமிஆ என்று அழைப்புக் கொடுப்பது.

563. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

கிரகணத்தின்போது கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுதல்.

564. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் 'கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக!' என்று கூறினாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கப்ருடைய வேதனையை விட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்.

பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. முற்பகல் நேரத்தில் (இல்லம்) திரும்பினார்கள். பின்னர் தொழலானார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது மதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நிலையில் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் ரக்அத்தின் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். தொழுது முடித்து அல்லாஹ் நாடிய செய்திகளை மக்களுக்குச் சொன்னார்கள். பின்னர் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

கிரகணத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது.

565. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்போது தொழுதார்கள். அத்தொழுகையில் பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். (முடித்ததும்) 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணத்தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். என்று நபி(ஸல) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எதையோ பிடிக்க முயன்று பிறகு பின் வாங்கியது போல் நாங்கள் கண்டோமே ( அது ஏன்?)' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் சொர்க்கத்தைப் பார்த்தேன். அதன் ஒரு குலையைப் பிடிக்க முயன்றேன். அதை நான் பிடித்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் நீங்கள் அதை உண்பீர்கள். மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அது ஏன்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்' என்று விடையளித்தனர். 'அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்' என்று கேட்கப்பட்டதற்குக் 'கணவனை நிராகரிக்கிறார்கள்; காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்' என்று விடையளித்தார்கள்.

சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது.

566. அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.

கிரகணத்தின்போது இறைவனை நினைவு கூர்தல்.

567. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுதல்.

568. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூவுச் செய்தார்கள். ருகூவிலிருந்து நிமிர்ந்ததும் 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வ லகல் ஹம்து' என்று கூறினார்கள். பிறகு மீண்டும் ஓதினார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.

Wednesday 15 July 2009

[பாடம்-15] மழை வேண்டித் தொழுதல்.

மழை வேண்டி வெளியே செல்வது

547. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி(த் தொழும் திடலுக்கு)ப் புறப்பட்டார்கள். (அப்போது) தம் மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள். மற்றொரு அறிவிப்பில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

யூஸுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போல் இவர்களுக்கும் பஞ்சத்தை எற்படுத்துவாயாக என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.

548. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கடைசி ரக்அத்தின் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியதும் 'இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! ஸலமாபின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் இப்னு வலீதைக் காப்பாற்று. இறைவா! நம்பிக்கையாளர்களில் பலவீனர்களைக் காப்பாற்று. இறைவா! முழர் கூட்டத்தினர் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இவர்களுக்கு யூஸுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போல் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுபவர்களாக இருந்தனர். மேலும் 'கிஃபார் கூட்டத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! அஸ்லம் கூட்டத்தை அல்லாஹ் காப்பாற்றுவானாக! என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுனார்கள்.

549. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிக்கக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'யூஸுஃப் நபி காலத்து ஏழாண்டுப் பஞ்சம் போல் இவர்களுக்கு ஏழாண்டுப் பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக!' என்று பிரார்த்தித்தனர். அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அனைத்தையும் வேரறுத்தது. தோல்கள், பிணங்கள் ஆகியவற்றை உண்ணலானார்கள். அவர்கள் (மழை மேகம் தென்படுகிறதோ என்று) வானத்தைப் பார்க்கும்போது பசியினால் புகை மூட்டத்தையே காண்பார்கள். இந்நிலையில் அபூ ஸுப்யான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! நீர் இறைவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உறவினர்களோடு இணைந்து வாழ வேண்டுமெனவும் கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யும்' என்று கூறினார். அப்போது பின்வரும் வசனங்களை அல்லாஹ் கூறினான்.

''எனவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பாரும்! (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும் 'இது நோவினை செய்யும் வேதனையாகும். எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கிறோம்' (எனக் கூறுவர்). நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம் பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி '(மற்றவர்களால் இவர்) கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்' எனக் கூறினர். நிச்சயமாக! நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புவர்களே.
ஒரு நாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்'. (திருக்குர்ஆன்: 44:10-16)

கடுமையான பிடி என்பது பத்ருப் போரில் ஏற்பட்டது புகை மூட்டமும் கடுமையான பிடியும் நடந்தேறியது. அதுபோல் ரூம் அத்தியாயத்தில் கூறப்பட்ட முன்னறிவிப்பும் நிறைவேறியது.

550. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களின் முகத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கீழே இறங்குவதற்குள் ஒவ்வொரு கூரையிலிருந்தும் தண்ணீர் வழிந்தோடியது.

'இவர் வெண்மை நிறத்தவர். இவரால் மழை வேண்டப்படும். இவர் அனாதைகளுக்குப் புகலிடமாகவும் விதவைகளுக்குக் காவலராகவும் திகழ்கிறார்' என்ற அபூதாலிபின் கவிதையை அப்பொழுது நான் நினைத்துக் கொள்வேன்.

551. அனஸ்(ரலி) அறிவித்தார். மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். 'இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!' என்று உமர்(ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.

ஜும்ஆ நடைபெறும் பள்ளிவாயிலில் மழை வேண்டுதல்.

552. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.

ஜும்ஆ உரை நிகழ்த்தும்போது கிப்லாவை நோக்காமல் மழை வேண்டிப் பிரார்த்தித்தல்.

553. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது 'தாருல்களா' எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரைநிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, ' இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
இரண்டாவதாக வந்த மனிதர்முதலில் வந்தவர் தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.

இமாம் மக்களுக்கு முதுகைக் காட்டுவது.

554. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை பார்த்தேன். அப்போது அவர்கள் மக்களுக்கு முதுகைக் காட்டிக் கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.

மழை வேண்டிப் பிரார்த்திக்கும்போது இமாம் கைகளை உயர்த்துவது.

555. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப்பிரார்த்திக்கும்போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை காணப்படும் அளவிற்கு உயர்த்துவார்கள்.

மழை பொழியும்போது கூற வேண்டியவை.

556. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)'' என்று கூறுவார்கள்.

காற்று வீசும் போது...

557. அனஸ்(ரலி) அறிவித்தார். கடுமையான காற்று வீசும்போது நபி(ஸல்) அவர்கள் முகத்தில் ஏற்படும் மாறுதல் அனைவருக்கும் தெரியும்.

மழைக்காற்றின் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன் என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று.

558. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''நான் மழைக்காற்றின் மூலம் உதவப்பட்டுள்ளேன். 'ஆது' கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் அழிக்கப்பட்டனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பூகம்பங்களும் கியாம நாளின் அடையாளங்களும்.

559. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ''இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் 'எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்' என்று கூறினார்கள்.

மழை எப்போது வருமென்பதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது.

560. 'ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதிப்பார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Saturday 11 July 2009

[பாடம்-14[ வித்ருத் தொழுகை.

வித்ருத் தொழுகை எப்படி?

539. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று கூறினார்கள்.

540. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜ்ர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும்வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.

வித்ருத் தொழுகையின் நேரம்.

541. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இரவின் எல்லா நேரங்களிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகிறார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் வரை நீண்டுவிடும்.

ஒருவர் தம் நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்வது.

542. ''இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்' என இறைத்தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

வாகனத்தில் அமர்ந்தவாறு வித்ருத் தொழுவது.

543. ஸயீத் இப்னு யஸார் அறிவித்தார் நான் மக்கா செல்லும் வழியில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் இரவு பயணம் மேற்கொண்டுடிருந்தேன். ஸூப்ஹை (நெருங்குவதை) அஞ்சிய நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கி வித்ருத் தொழுதுவிட்டுப் பின்னர் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன் .அப்போது அவர்கள் எங்கே சென்றிருந்தீர் என்று கேட்டனர் நான் ஸூப்ஹை அஞ்சி வாகனத்திலிருந்து இறங்கி வித்ருத் தொழுதேன் என்றேன். அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக இருக்கின்றது என்றேன். அப்போது இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுதிருக்கிறார்கள் எனக் கூறினார்கள்.

ருகூவுக்கு முன்பும் பின்பும் குனூத் ஓதுதல்.

544. முஹம்மது கூறினார் நபி(ஸல்) அவர்கள் ஸூப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் 'ஆம்' என்றனர். 'ருகூவுக்கு முன்பு குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு 'ருகூவுக்குப் பின்பு சிறிது காலம் (நபி(ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள்) என விடையளித்தார்கள்.

545. ஆஸிம் அறிவித்தார். குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'குனூத் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்' என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு 'ருகூவுக்கு முன்பு தான்' என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறியதாக ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். 'அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி(ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ்(ரலி) விடையளித்தார்கள்.

546. அனஸ்(ரலி) அறிவித்தார். மஃரிபிலும் ஃபஜ்ரிலும் குனூத் ஓதுதல் (நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது.

Wednesday 8 July 2009

[பாடம்-13] இரு பெருநாட்கள்.

பெருநாள் தினத்தில் போர்க்கருவிகளையும் கேடயத்தையும் பயன்படுத்துவது.

527. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'புஆஸ்' (எனும் போர்) பற்றிய பாடல்களை இரண்டு சிறுமிகள் என்னிடம் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு புறமாகத்) திருப்பினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து 'நபி(ஸல்) அவர்களின் அருகில் ஷைத்தானின் இசைக்கருவிகளா?' என்று கூறி என்னைக் கடிந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரை நோக்கி 'அவ்விருவரையும் விட்டு விடுங்கள்'' என்றனர். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் வேறு புறம் திரும்பியபோது, அவ்விரு சிறுமிகளையும் விரல்களால் குத்தி (வெளியேறி விடுமாறு கூறி)னேன். அவ்விருவரும் வெளியேறிவிட்டனர்.

நோன்புப் பெருநாளில் தொழச் செல்வதற்கு முன்பே சாப்பிடுவது.

528. அனஸ்(ரலி) அறிவித்தார். சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஹஜ் பெருநாள் தினத்தில் (தொழுகைக்கு முன்பே) உண்ணுதல்.

529. அனஸ்(ரலி) அறிவித்தார். ''(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவர் திரும்பவும் அறுக்கட்டும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து 'மாமிசம் விரும்பி உண்ணக் கூடிய நாளாகும் இது. சதைப் பற்றுள்ள இரண்டு ஆடுகளை விட எனக்கு விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்றும் என்னிடம் உள்ளது' என்று கூறித் தம் அண்டை வீட்டார்(களுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது) பற்றியும் குறிப்பிட்டார். (தொழுகைக்கு முன்பே அறுப்பதற்கு மேற்கண்ட காரணங்களால் அவர் அனுமதி கேட்டார்) அவருக்கு நபி(ஸல்) சலுகை வழங்கினார்கள். இந்தச் சலுகை மற்றவர்களுக்கும் உண்டா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.

530. பராஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்.'' என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி (அறுத்து) விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்'' என்றார். அப்போது நபி(ஸல்) 'உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்'' என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது'' என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.

பெருநாள் தொழுகைக்காக மிம்பர் இல்லாத திடலுக்குச் செல்வது.

531. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.

மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ, ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும்வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் இப்னு ஸல்த் என்பவர் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முயன்றார். நான் அவரின் ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன். அதற்கு மர்வான் 'நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது' என்றார். நான் விளங்காத (இந்தப் புதிய) நடைமுறையை விட நான் விளங்கி வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என கூறினேன்.

அதற்கு மர்வான் 'மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை' எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன்' என்று கூறினார்.

பெருநாள் தொழுகைகள் பாங்கும் இகாமத்தும் இல்லாமல் தொழ வேண்டும்.

532. ஜாபிர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் கூறினார்கள்: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை.

தொழுகைக்குப் பிறகு உரை நிகழ்த்துவது.

533. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான், நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.

அய்யாமுத் தஷ்ரீக் (எனும் துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாள்களில் நல்லறங்கள் செய்வதன் சிறப்பு.

534. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(துல்ஹஜ் 10,11,12,13 ஆகிய) மினாவின் நாள்களிலும் அரஃபாவுக்குப் புறப்படும் போதும் தக்பீர் கூறுவது.

535. முஹம்மத் இப்னு அபீ பக்ர் அஸ்ஸஃபீ அறிவித்தார். நாங்கள் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது அனஸ்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களுடன் நீங்கள் எவ்வாறு தல்பியா கூறிக் கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டேன்;. அதற்கவர்கள் 'தல்பியா கூறியவர்கள் தல்பியா கூறினர்; அது ஆட்சேபிக்கப் படவில்லை தக்பீர் கூறியவர் தக்பீர் கூறினர்; அதுவும் ஆட்சேபிக்கப் படவில்லை' என்று விடையளித்தார்கள்.

தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பது.

536. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலிலேயே ஆடு மாடுகளையும் ஒட்டகங்களையும் அறுப்பவர்களாக இருந்தனர்.

பெருநாள் தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பும்போது வேறு பாதையில் வருவது.

537. ஜாபிர்(ரலி) அறிவித்தார். பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.

538. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அபிஸீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரலி) விரட்டலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(உமரே!) அவர்களை விட்டுவிடும். நபி (ஸல்)அவர்கள் அபீஸீனியர்களை நோக்கி 'அர்பிதாவின் மக்களே! அச்சமின்றி விளையாடுங்கள்!'' என்று கூறினார்கள்.

Sunday 5 July 2009

[பாடம்-12] அச்ச நிலைத் தொழுகை.

அச்சமான நேரத்தில் தொழுவது.

524. ஷுஜப் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் போர்க்களத் தொழுகையைத் தொழுதுள்ளார்களா? என்று ஸுஹ்ரீ இடம் கேட்டேன். 'நான் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து நஜ்துப் பகுதியில் போரிட்டிருக்கிறேன். நாங்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து அணிவகுத்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஒரு பிரிவினர் அவர்களுடன் இணைந்து தொழலானார்கள். மற்றொரு கூட்டத்தினர் எதிரிகளைச் சந்தித்தனர். நபி(ஸல்) அவர்கள் தம்முடன் உள்ளவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு தொழாத கூட்டத்தினரின் இடத்திற்கு நாங்கள் செல்ல, அந்தக் கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தனர். உடனே இவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தமக்காக ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர்' என்ற விபரத்தை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூற அதை ஸாலிம் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ விடையளித்தார்.

நின்றும், வாகனத்தின் மீது அமர்ந்தும், போர்க்களத் தொழுகையைத் தொழலாம்.

525. நாஃபிவு அறிவித்தார். '(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்' என்று இப்னு உமர்(ரலி) கூறினார். ''எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.

எதிரிகளைத் தேடிச் செல்பவரும் எதிரிகளால் தேடப்படுவரும் வாகனத்தின் மீது சைகை மூலம் தொழலாம்.

526. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும்வரை அஸர் தொழ வேண்டாம்'' என்று கூறினார்கள். வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். 'பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும்வரை நாம் அஸர் தொழவேண்டாம்' என்று சிலர் கூறினர். வேறு சிலர் 'இந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே நாம் தொழுவோம்' என்றனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி(ஸல்) அவர்கள் குறை கூறவில்லை.

Friday 3 July 2009

[பாடம்-11] ஜும்ஆ.

ஜும்ஆ கடமை

492. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆவுக்காக நறுமணம் பூசுவது.

493. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 'ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜும்ஆவின் சிறப்பு.

494. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கிறார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆவுக்காக எண்ணெய் தேய்ப்பது.

495. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.

496. தாவூஸ் அறிவித்தார். ''ஜும்ஆ நாளில் உங்களுக்குக் குளிப்புக் கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சிலர் கூறுகிறார்களே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு குளிப்பைப் பொறுத்தவரை சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது' என்று விடையளித்தார்கள்.

இருப்பவற்றில் அழகானதை அணிவது.

497. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். ''மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது'' என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) 'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.

ஜும்ஆ நாளில் பல்துலக்குவது.

498. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

499. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் மரணவேளையில்) அபூ பக்ருடைய மகன் அப்துர் ரஹ்மான் வந்தார். அவரிடம் அவர் பல் துலக்கப் பயன்படுத்தும் குச்சி ஒன்றும் இருந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான்) 'அப்துர் ரஹ்மானே! அந்தக் குச்சியைக் கொடுப்பீராக! என்றேன். அவர் கொடுத்ததும் அதை வெட்டி, மென்று நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆ நாளில் ஃபஜ்ர் தொழுகையில் ஓத வேண்டியவை.

500. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் 'அலிஃப் லாம் மீம் ஸஜ்தா'வையும் 'ஹல்அதா அலல் இன்ஸான்' என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.

நகரங்களிலும் கிராமங்களிலும் ஜும்ஆ நடத்தலாம்.

501. யூனுஸ் அறிவித்தார். அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷிஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷிஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.

''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான். ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்'' என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

யாருக்கு ஜும்ஆ கடமையோ அவரே குளிப்பது அவசியம்.

502. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள் மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப் பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர். ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜும்ஆவுக்கு வர வேண்டும்? எவர் மீது ஜும்ஆ கடமை?

503. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங்களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள். புழுதிகளில் அவர்கள் நடந்து வருவதால் அவர்கள் மேல் புழுதியும் வியர்வையும் படிந்து விடும். அவர்களிடமிருந்து வியர்வை வெளியேறும். (இந்த நிலையில்) அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் என்னுடனிருக்கும் போது வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையாகிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

504. யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார். ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நான் அம்ர்விடம் கேட்டேன். அதற்கு அம்ர் 'அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது' என ஆயிஷா(ரலி) கூறினார் என விடையளித்தார்.

505. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். சூரியன் சாயும் நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

507. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கம்போது ஜும்ஆத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள். கோடை கடுமையாக இருக்கும்போது ஜும்ஆவைத் தாமதமாக்குவார்கள். யூனுஸ் இப்னு புகைர் அறிவிக்கும் ஹதீஸில் ஜும்ஆ என்று கூறாமல் தொழுகை என்று கூறுகிறார்.

ஜும்ஆவுக்காக நடந்து வருவது.

507. அபாயா இப்னு ரிஃபாஆ அறிவித்தார். நான் ஜும்ஆவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ அபஸ்(ரலி) என்னைச் சந்தித்தார்கள். அப்போது 'இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகைவிட்டும் இறைவன் விலக்குகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

ஜும்ஆ நாளில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் அமரக் கூடாது.

508. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் சகோதரரை அவரின் இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.

ஜும்ஆவிலா? என்று நாஃபிவு இடம் தாம் கேட்டபோது, ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத மற்ற சமயங்களிலும் தான்' என்று நாஃபிவு விடையளித்ததாக இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.

ஜும்ஆவின் பாங்கு.

509. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது.

ஜும்ஆ நாளில் ஒரு முஅத்தினே பாங்கு சொல்லவேண்டும்.

510. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் மூன்றாவது அறிவிப்பை அதிகப்படுத்தியவர் உஸ்மான்(ரலி) ஆவார். மதீனாவாசிகள் பெருகியபோது (இவ்வாறு செய்தார்கள்) நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு முஅத்தின் மட்டுமே இருந்தார். இமாம் மிம்பரில் அமர்ந்த நேரத்தில் ஜும்ஆவின் பாங்கு அமைந்திருந்தது.

பாங்கைக் கேட்கும்போது மிம்பரில் அமர்ந்துள்ள இமாமும் அதற்குப் பதில் கூற வேண்டும்.

511. அபூ உமாமா(ரலி) அறிவித்தார். முஆவியா(ரலி) மிம்பரில் அமர்ந்திருந்தபோது முஅத்தின் பாங்கு சொன்னார். அவர் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று கூறியதும் முஆவியா(ரலி)வும் 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்றார்கள்.

முஅத்தின் 'அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியதும் 'நானும் (அவ்வாறே நம்புகிறேன்)' எனக் கூறினார்கள். முஅத்தின் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்' எனக் கூறியதும் 'நானும்' என்றார்கள்.
பாங்கு சொல்லி முடித்தும், 'மக்களே! முஅத்தின் பாங்கு சொன்னபோது நான் கூறிய இதே வார்த்தையை இதே இடத்தில் நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்று முஆவியா(ரலி) குறிப்பிட்டார்கள்.

மிம்பர் மீது நின்று சொற்பொழிவு நிகழ்த்துவது.

512. அபூ ஹாஸிம் இப்னு தீனார் அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன்' என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் -- அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள். ஆளனுப்பி 'நான் மக்களிடம் பேசும்போது அமர்ந்து கொள்வதற்காகத் 'தச்சு வேலை தெரிந்த உன் வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்!'' எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு வந்தார். உடனே அப்பெண் அதை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டதற்கேற்ப இவ்விடத்தில் அது வைக்கப்பட்டது. அதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் அதன் மீதே தொழுததை - அதன் மீதே தக்பீர் கூறியதையும் அதன் மீதே ருகூவு செய்ததையும் அதன் பிறகு மிம்பரின் அடிப்பாகத்திற்குப் பின் பக்கமாக இறங்கி அதில் ஸஜ்தா செய்துவிட்டு மீண்டும் மேலேறியதையும் - நான் பார்த்துள்ளேன். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி 'மக்களே நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவும் என் தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்'' என்று குறிப்பிட்டார்கள்.

513. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நின்று கொள்வதற்காகப் பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்று இருந்தது. மிம்பர் செய்யப்பட்ட பின் அந்தப் பேரீச்ச மரக்கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியுற்றோம். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அதன் மீது தம் கையை வைக்கும்வரை (அந்தச் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது).

நின்ற நிலையில் உரையாற்றுவது.

514. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி(ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர்.

இறைவனைப் புகழ்ந்த பின் 'அம்மாபஃது' என்று கூறுவது.

515. அம்ர் இப்னு தக்லீபு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் சில பொருள்கள் அல்லது கைது செய்யப் பட்டவர்கள் கொண்டு வரப்பட்டுப் பங்கிட்டுக் கொடுத்தபோது சிலருக்குக் கொடுத்தும் வேறு சிலருக்குக் கொடுக்காமலும் விட்டுவிட்டனர். யாருக்குக் கொடுக்காமல் விட்டு விட்டார்களோ அவர்கள் குறை கூறுவதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது, 'அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு 'அம்மாபஃது' எனக் கூறி 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சிலருக்குக் கொடுக்கிறேன். (கொடுக்காமல்) யாரைவிட்டு விடுகிறேனோ அவர் நான் கொடுப்பவரை விட எனக்கு விருப்பமானவர். அவர்களின் உள்ளத்தில் அதிர்ச்சியும் பயமும் இருப்பதை நான் அறிந்த காரணத்தினாலேயே நான் சிலருக்குக் கொடுக்கிறேன். வேறு சிலரின் உள்ளங்களில் போதுமென்ற பண்பையும் நல்ல குணத்தையும் அறிந்து அவர்களைவிட்டு விடுகிறேன். இவர்களில் அம்ர் இப்னு தக்லீபும் ஒருவராவார்'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நபி(ஸல்) அவர்கள் என்னைப் பற்றிக் கூறிய இந்த வார்த்தை சிகப்பு நிற ஒட்டகம் எனக்குக் கிடைப்பதை விட விருப்பமானதாக அமைந்தது.

516. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் (வீட்டைவிட்டுப்) புறப்பட்டுப் பள்ளியில் தொழுதார்கள். சிலர் அவர்களின் தொழுகையைப் பின்பற்றித் தொழலானார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) அதை விட அதிகமானவர்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுதனர். காலையில் இது பற்றி மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் பள்ளியில் மக்கள் மேலும் அதிகமானார்கள். நபி(ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்ததும் மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானர்கள்.

நான்காம் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்தால் பள்ளி இடம் கொள்ளவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஃபஜ்ருத் தொழுகையை முடித்த பின் மக்களை நோக்கி இறைவனைப் புகழ்ந்து 'அம்மா பஃது' எனக் கூறிவிட்டு 'நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. எனினும் இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாது போய் விடுமோ என்று அஞ்சினேன். (இதனால்தான் இரவு நான் வரவில்லை)'' என்று கூறினார்கள்.

517. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீது ஏறினார்கள். தம் தோள் புஜத்தின் மீது மேலாடையைச் சுற்றிக் கொண்டு, கருநிறத் துணியால் தலையில் கட்டுப் போட்டுக் கொண்டு அவர்கள் அமர்ந்த கடைசி அமர்வாகும் அது. பிறகு அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, 'மக்களே என்னருகே வாருங்கள்'' என்றதும் மக்கள் அவர்களை நோக்கி விரைந்து நகர்ந்தனர். பிறகு 'அம்மாபஃது' எனக் கூறினார்கள். அதன் பின்னர் 'மற்ற மக்கள் பெருகும்போது, இது அன்ஸார்கள் எண்ணிக்கையில் குறைவார்கள். முஹம்மதுடைய சமுதாயத்தவர்களில் பொறுப்புக்கு வருகிறவர் யாருக்காவது நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெற்றால் நல்லவர்களிடமிருந்து (நல்லவதை) ஏற்று அவர்களில் கெட்டவர்களை அலட்சியம் செய்து விடவும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது ஒருவர் வருவதை இமாம் கண்டால், அவரை இரண்டு ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிடுவது.

518. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'நீர் தொழுது விட்டீரா?' என்று கேட்டார்கள். அதற்கவர் 'இல்லை' என்றார். 'எழுந்து தொழுவீராக!'' என்று கூறினார்கள்.

ஜும்ஆச் சொற்பொழிவின் இடையில் மழை வேண்டிப் பிரார்த்திப்பது.

519. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் உயர்த்தினார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. என் உயிர் எவனுடைய கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களின் தாடியிலிருந்து வழிந்ததை நான் பார்த்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது.

(மறு ஜும்ஆவில்) அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி (இதை அனுப்புவாயாக!) எங்களுக்குக் கேடு தருவதாக (இம்மழையை) ஆக்கி விடாதே!'' என்று கூறினார்கள். மேகம் உள்ள பகுதியை நோக்கி நபி(ஸல்) அவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. (இம்மழையால்) 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை.

வெள்ளிக் கிழமை இமாம் சொற்பொழிவு செய்யும்போது மவுனமாக இருப்பது.

520. ''இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் 'வாய்மூடு!' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆ நாளிலுள்ள சிறப்பான நேரம்.

521. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு'' என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை'' என்றும் குறிப்பிட்டார்கள்.

ஜும்ஆத் தொழுகை நடக்கும்போது சிலர் இமாமைவிட்டு விலகினால் இமாமுடைய தொழுகையையும் அவருடன் சேர்ந்து தொழும் ஏனையோரின் தொழுகையும் செல்லத்தக்கதாகும்.

522. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்றுவிட்டனர். பன்னிரென்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், 'அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்'' (திருக்குர்ஆன் 62:11) என்ற வசனம் அருளப்பட்டது.

ஜும்ஆவுக்கு முன்பும் பின்பும் உள்ள தொழுகை

523. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாகவும், மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும், இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர்.