Sunday 5 July 2009

[பாடம்-12] அச்ச நிலைத் தொழுகை.

அச்சமான நேரத்தில் தொழுவது.

524. ஷுஜப் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் போர்க்களத் தொழுகையைத் தொழுதுள்ளார்களா? என்று ஸுஹ்ரீ இடம் கேட்டேன். 'நான் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து நஜ்துப் பகுதியில் போரிட்டிருக்கிறேன். நாங்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து அணிவகுத்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஒரு பிரிவினர் அவர்களுடன் இணைந்து தொழலானார்கள். மற்றொரு கூட்டத்தினர் எதிரிகளைச் சந்தித்தனர். நபி(ஸல்) அவர்கள் தம்முடன் உள்ளவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு தொழாத கூட்டத்தினரின் இடத்திற்கு நாங்கள் செல்ல, அந்தக் கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தனர். உடனே இவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தமக்காக ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர்' என்ற விபரத்தை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூற அதை ஸாலிம் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ விடையளித்தார்.

நின்றும், வாகனத்தின் மீது அமர்ந்தும், போர்க்களத் தொழுகையைத் தொழலாம்.

525. நாஃபிவு அறிவித்தார். '(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்' என்று இப்னு உமர்(ரலி) கூறினார். ''எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.

எதிரிகளைத் தேடிச் செல்பவரும் எதிரிகளால் தேடப்படுவரும் வாகனத்தின் மீது சைகை மூலம் தொழலாம்.

526. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும்வரை அஸர் தொழ வேண்டாம்'' என்று கூறினார்கள். வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். 'பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும்வரை நாம் அஸர் தொழவேண்டாம்' என்று சிலர் கூறினர். வேறு சிலர் 'இந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே நாம் தொழுவோம்' என்றனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி(ஸல்) அவர்கள் குறை கூறவில்லை.

0 comments:

Post a Comment