Sunday 19 July 2009

[பாடம்-17] குர்ஆனை ஓதும்போது வரும் ஸஜ்தா வசனங்கள்.

குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள் ஓதும்போது ஸஜ்தாச் செய்வது நபிவழி.

569. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று 'இவ்வாறு செய்வது எனக்குப் போதும்' என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன்.

ஸாத் அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தல்.

570. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஸாத் அத்தியாயம் ஓதப்படும்போது ஸஜ்தாக் கட்டாயமில்லை. (ஆனால்) நபி(ஸல்) அவர்கள் அந்த அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்ததை பார்த்திருக்கிறேன்.

முஸ்லிம்கள் இணைவைப்பவர்களுடன் சேர்ந்து ஸஜ்தாச் செய்தல்.

571. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.

ஸஜ்தா வசனத்தை ஓதி ஸஜ்தாச் செய்யாமல் இருந்தால்...

572. ஸைத் இப்னு ஸாயித்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தல்.

573. அபூ ஸலமா அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம் நீங்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்தேனே என்றேன். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் ஸஜ்தாச் செய்திருக்க மாட்டேன்' என்று விடையளித்தார்கள்.

இமாம் ஸஜ்தா வசனத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்வதற்காக மக்கள் நெருக்கியடித்துக் கொள்வது.

574. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருக்கும்போது ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டுவார்கள். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நெருக்கியடித்துக் கொண்டு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்.

0 comments:

Post a Comment