Friday 25 December 2009

[பாடம்-88] ஏகத்துவம் (ஓரிறைக் கோட்பாடு) இறுதிப் பாடம்.

அல்லாஹ் நேசிக்கும் அடியான்.

2220. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை படைப்பிரிவு ஒன்றுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தம் தொழுகையில் தம் தோழர்களில் (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுகை நடத்தி) வந்தார்; (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும்போது 'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்'' என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அவர், 'ஏனெனில், அந்த அத்தியாயம் பேரருளாளனின் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகிறேன்'' என்றார். (இதைக் கேள்விப்பட்ட) நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள்.

''அல்லாஹ்தான் உணவளிப்பவன்; வலிமையுள்ளவன்; உறுதியானவன்'' எனும் (திருக்குர்ஆன் 51:58 வது) இறைவசனம்.

2221. மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நித்திய ஜீவன் அல்லாஹ் மட்டுமே.

2222. அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்து வந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்து விடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய்.

அல்லாஹ்வின் கருணை அவன் கோபத்தை மிகைத்தது.

2223. அல்லாஹ் படைப்புகளை படைத்தபோது (தன்னுடைய) அரியாசனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தன்னுடைய பதிவேட்டில், 'என் கருணை என் கோபத்தை வென்றுவிட்டது'' என்று (கருணையைத்) தனக்குத்தானே விதியாக்கிக் கொள்ளும் வகையில் எழுதினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதைஅபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2224. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவுகூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் அடியானின் நன்மை தீமைகளைப் பதிவு செய்தல்.

2225. அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகிறான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாதவரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்தால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2226. ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்'' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடியவரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்'' என்று சொன்னான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

மறுமைநாளில் இறைத்தூதர்களுடனும் மற்றவர்களுடனும் வலிமையும் மகத்துவமும் மிகுந்த இறைவன் உரையாடுவது.

2227. மறுமைநாள் வரும்போது என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய எனக்கு அனுமதியளிக்கப்படும். நான் 'என் இறைவா! எவருடைய உள்ளத்தில் கடுகளவு (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக!'' என்று கூறுவேன். அவர்கள் அவ்வாறே சொர்க்கம் செல்வார்கள். பிறகு நான் 'எவருடைய உள்ளத்தில் சிறிதளவேனும் (இறைநம்பிக்கை) உள்ளதோ அவர்களை சொர்க்கத்தில் அனுமதிப்பாயாக'' என்று மீண்டும் பிரார்த்திப்பேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அறிவித்த அனஸ்(ரலி) அவர்கள் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('சிறிதளவேனும்' என்று கூறியபோது) விரல் நுனியைக் காட்டியதை நான் இப்போதும் பார்ப்பது போன்றுள்ளது'' என்று கூறினார்கள்.

மறுமையில் இறைத்தூதருடன் அல்லாஹ்.

2228. மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : பஸ்ராவாசிகளில் சிலர் (ஓரிடத்தில்) ஒன்று கூடினோம். பிறகு நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றோம். அனஸ்(ரலி) அவர்களிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியைக் கேட்பதற்காக எங்களுடன் ஸாபித் அல் புனானீ(ரஹ்) அவர்களையும் அழைத்துச் சென்றறோம். அனஸ்(ரலி) அவர்கள் தங்களின் கோட்டையில் 'ளுஹா' தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்தோம். பிறகு நாங்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்க, எங்களை அவர்கள் (உள்ளே நுழைய) அனுமதித்தார்கள். அப்போது அவர்கள் தங்களின் விரிப்பில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஸாபித்(ரஹ்) அவர்களிடம் 'பரிந்துரை பற்றிய நபிமொழிக்கு முன்னால் வேறு எதைப் பற்றியும் கேட்காதீர்கள்'' என்று சொன்னோம். உடனே ஸாபித்(ரஹ்) அவர்கள், 'அபூ ஹம்ஸா! (அனஸ்!) இதோ இவர்கள் பஸ்ராவாசிகளான உங்கள் சகோதரர்கள் ஆவர். பரிந்துரை (ஷஃபாஅத்) பற்றிய நபிமொழியை உங்களிடம் கேட்பதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்'' என்றார்கள். அப்போது அனஸ்(ரலி) கூறினார்: முஹம்மத்(ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களிடம் சென்று '(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்'' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார்'' என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்களும், 'அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் மூஸாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவராவார்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூஸா (அலை) அவர்களும் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா(அலை) அவர்கள் அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன்; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'நான் அதற்குரியவன் தான்'' என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் என்னுடைய எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்' என்பேன். அப்போது, 'செல்லுங்கள்; எவருடைய உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்தோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்'' என்று சொல்லப்படும். எனவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும். 'முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று கூறப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்; என்று சொல்வேன். அப்போது 'சொல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் 'அணுவளவு' அல்லது 'கடுகளவு' இறை நம்பிக்கை இருந்தோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்'' என்பேன். அதற்கு அவன், 'செல்லுங்கள்: எவருடைய உள்ளத்தில் கடுகு மணியை விட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்'' என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் சொன்னார்கள்.)

2229. நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: பிறகு, நான்காம் முறையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, 'முஹமமதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், 'என் இறைவா! (உலகில்) லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவர்களின் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக'' என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக! 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்'' என்று சொல்வான் என மஅபத் இப்னு ஹிலால் அல்அனஸீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நாவுக்கு எளிதான மீஸானில் கனக்கும் திக்ர்.

2230. '(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை. நாவுக்கு எளிதானவை. நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

முக்தஸர் ஸஹீஹூல் புஹாரி நிறைவுற்றது.

Wednesday 23 December 2009

[பாடம்-87] இறைவேதத்தையும் நபிவழியையும் கடைபிடித்தல்.

2212. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

2213. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் : (ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் சில வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் 'இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்'' என்றார். அதற்கு மற்றொருவர் 'கண்தான் உறங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது'' என்று கூறினார். பின்னர் அவர்கள் 'உங்களுடைய இந்த நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!'' என்றார். மற்றொருவர் 'கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். பின்னர் அவர்கள் 'இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். (மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர் வீட்டிற்குள் நுழையவுமில்லை. விருந்துண்ணவுமில்லை'' என்று கூறினார்கள். பின்னர் அவர்கள், 'இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து கொள்ளட்டும்'' என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் 'இவர் உறங்குகிறாரே!'' என்று சொல்ல, மற்றொருவர் 'கண் தான் தூங்குகிறது. உள்ளம் விழித்திருக்கிறது'' என்றார். அதைத் தொடர்ந்து 'அந்த வீடுதான் சொர்க்கம்; அழைப்பாளி முஹம்மத்(ஸல்) அவர்கள்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்களை (நல்லவர் - கெட்டவர் என)ப் பகுத்துக் காட்டி விட்டார்கள்'' என்று விளக்கமளித்தார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் ஜாபிர்(ரலி) அவர்கள் '(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வெளியேறி வந்து (இந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்)'' என்று கூறினார்கள்.

அளவுக்கதிகமான கேள்விகள் கேட்டல்.

2214. மக்கள் (பல புதிரான விஷயங்கள் குறித்து) ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். இறுதியில், 'அனைத்துப் பொருட்களையும் படைத்தவன் அல்லாஹ்; இது (சரிதான்). அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?' என்று கூடக் கேட்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

கல்விமான்கள் குறைந்து அறிவீனர்கள் எஞ்சியிருத்தல்.

2215. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல்ஆஸ்(ரலி) அவர்கள் (நாங்கள் இருந்த இடம் வழியாக) எங்களைக் கடந்து ஹஜ் செய்யச் சென்றார்கள். அப்போது அவர்கள் சொல்லக் கேட்டேன்: நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் கல்வியை வழங்கிய பின் அதை ஒரேயடியாகப் பறித்துக் கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களின் கல்வியுடன் கைப்பற்றிக் கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதை (சன்னஞ் சன்னமாக)ப் பறித்துக்கொள்வான். பின்னர், அறிவீனர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கோரப்படும். அவர்களும் தம் சொந்தக் கருத்துப்படி தீர்ப்பளித்து (மக்களை) வழிகெடுப்பார்கள்; தாமும் வழிகெட்டுப் போவார்கள்'' என்று கூறக் கேட்டேன். பிறகு நான் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களிடம் அறிவித்தேன். அதன் பிறகு (ஓர் ஆண்டிலும்) அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். (அப்போது) ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம், 'என் சகோதரியின் புதல்வரே! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களிடம் சென்று, (முன்பு) அவரிடமிருந்து (கேட்டு) நீ அறிவித்த ஹதீஸை எனக்காக அவரிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்'' என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள் முன்பு எனக்கு அறிவித்ததைப் போன்றே இப்போதும் எனக்கு அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அவர்கள் வியப்படைந்து 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார்'' என்றார்கள்.

''உங்களுக்கு முன்னிருந்தவர்களின் (தவறான) வழிமுறைகளை (இறுதிக் காலத்தில்) நீங்கள் நிச்சயம் பின்பற்றுவீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2216. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தார் தமக்கு முந்தைய சமுதாயங்களின் நடைமுறைகளை சாண் சாணாக, முழம் முழமாக பின்பற்றி நடக்காதவரை மறுமைநாள் வராது'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! பாரசீகர்கள் மற்றும் ரோமர்கள் போன்றவர்களையா (இந்தச் சமுதாயத்தார் பின்பற்றுவர்)?' என வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர்களைத் தவிர (இன்று) மக்களில் வேறு யார் உள்ளனர்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிஞர்களின் கருத்தொற்றுமை அவசியம்.

2217. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நான் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்து வந்தேன். உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது மினாவில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (உமர்(ரலி) அவர்களுடன் இருந்திருக்க வேண்டும். (இன்று) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இன்னான், 'இறைநம்பிக்கையாளர்களின் (இன்றைய) தலைவர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறினான். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள், 'இன்று மாலையே நான் (மக்கள் முன்) நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யவுள்ளேன்'' என்றார்கள். நான், 'அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் குழுமுகின்றனர். அவர்கள் தாம் உங்கள் அவையில் மிகுந்திருப்பர். (நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல) அதற்கு உரிய பொருள் தராமல், ஒவ்வொருவரும் (தம் மனம்போன போக்கில்) அதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியான மதீனா சென்று சேரும்வரைக் காத்திருங்கள். அங்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களான முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தனியாகச் சந்தி(த்து அவர்களிடம் நீங்கள் தெரிவிக்க வேண்டியதை அழுத்தமாகத் தெரிவி)யுங்கள். அவர்கள் உங்கள் சொல்லை நினைவில் நிறுத்திக் கொண்டு, அதற்குரிய முறையில் அதைப் புரிந்து கொள்வார்கள்'' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்'' என்றார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் மதீனா சென்றடைந்தோம். 'நிச்சயமாக அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) சம்பந்தமான வசனம் இருந்தது'' என உமர்(ரலி) அவர்கள் பேசத் தொடங்கினார்கள்.

நீதிபதி ஆய்வு செய்து சட்ட முடிவெடுக்கும்போது அது சரியாக அமைந்தாலும் தவறாகிப் போனாலும் (அவர் செய்த ஆய்வுக்காக) அவருக்குப் பிரதிபலன் கிடைக்கும்.

2218. நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு அல்ஆஸ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் (ஒன்றை) எதிர்க்காமல் இருந்தது (அது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதற்கு) ஆதாரமாகும்; நபியவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு இது பொருந்தாது.

2219. முஹம்மத் இப்னு அல்முன்கதிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் 'இப்னுஸ் ஸய்யாத்தான் தஜ்ஜால்' என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர்(ரலி) அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை'' என்று பதிலளித்தார்கள்.

Monday 21 December 2009

[பாடம்-86] எதிர்பார்ப்பு.

விரும்பத்தகாத எதிர்பார்ப்பு.

2210. அனஸ்(ரலி) அறிவித்தார் : ''இறப்பை (எதிர்பார்த்து) ஆசைப்படாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிருக்காவிட்டால் (இறப்பின் மீது) ஆசை கொண்டிருப்பேன்.

2211. உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; (அவர் உயிர் வாழ்வதன் மூலம் நன்மையை) அவர் அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Friday 18 December 2009

[பாடம்-85] தீர்ப்புகள்.

இறைவனுக்கு மாறு செய்வதாக அமையாதவரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).

2199. உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஆட்சியதிகாரத்தை அடைய ஆசைப்படுவது வெறுக்கப்பட்டதாகும்.

2200. நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குடிமக்களின் பொறுப்பு அளிக்கப்பெற்ற ஒருவர், அவர்களுக்கு நலம் நாடவில்லை என்றால்...?

2201. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (நபித் தோழர்) மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அன்னாரை(ச் சந்தித்து) நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் பெறமாட்டான்' என்று சொல்ல கேட்டேன்'' எனக் கூறினார்கள்.

2202. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் மஅகில் இப்னு யஸார்(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்: 'முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மக்களை) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் சிரமத்திற்குள்ளாக்குவான்.

2203. தரீஃப் அபீ தமீமா இப்னு முஜாலித் அல்ஹுஜைமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அவர்கள், ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் உபதேசம் செய்துகொண்டிருந்த இடத்தில் நான் இருந்தேன். அப்போது ஸஃப்வானும் அவர்களின் தோழர்களும், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எவையேனும் செவியுற்றீர்களா?' என்று கேட்க ஜுன்தப்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூற கேட்டேன் என்றார்கள்: விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவரை (அவரின் நோக்கத்தை) அல்லாஹ் மறுமைநாளில் விளம்பரப்படுத்துவான். (மக்களைச்) சிரமப்படுத்துகிறவரை அல்லாஹ் மறுமைநாளில் சிரமத்திற்குள்ளாக்குவான். அப்போது நண்பர்கள் 'எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்க, ஜுன்தப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (இறந்த பிறகு) மனிதனின் உறுப்புகளிலேயே முதல்முதலாக (அழுகி) துர்நாற்றமெடுப்பது அவனுடைய வயிறுதான். எனவே, (அனுமதிக்கப்பட்ட) நல்ல உணவை மட்டுமே உண்ண சக்தி படைத்தவர் அவ்வாறே செய்யட்டும். (அநியாயமாகத்) தம்மால் சிந்தப்பட்ட கையளவு இரத்தம், தாம் சொர்க்கம் செல்வதிலிருந்து தடுக்காமல் இருக்கும்படி செய்ய முடிந்தவர் அவ்வாறே செய்யட்டும்.

நீதிபதி கோபமாக இருக்கும்போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?

2204. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : (என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

ஆட்சித் தலைவர் ஆளுநர்களுக்கும், நீதிபதி சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதுவது.

2205. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களும் அறிவித்தார்கள் : அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் தங்களுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான வறுமையின் காரணத்தால் (பேரீச்சங் கனிகள் பறிப்பதற்காக) கைபரை நோக்கிப் புறப்பட்டனர். (வழியில் இருவரும் பிரிந்து விட்டனர்.) அப்போது 'அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு ஒரு 'குழியில் அல்லது 'நீர்நிலையில்' போடப்பட்டு விட்டார்'' என்ற செய்தி முஹய்யிஸா(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. எனவே, முஹய்யிஸா(ரலி) அவர்கள் (அப்பகுதி மக்களான) யூதர்களிடம் சென்று, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள்தாம் அவரைக் கொன்று விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரை நாங்கள் கொல்லவில்லை'' என்றார்கள். பிறகு முஹய்யிஸா(ரலி) அவர்கள் தம் சமூகத்தாரிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் சொன்னார்கள். பின்னர் அவரும் அவரின் சகோதரர் ஹுவய்யிஸா(ரலி) அவர்களும் - இவர் வயதில் மூத்தவர் (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் (இறைத்தூதர்(ஸல்) அவர்களை) நோக்கி வந்தனர். உடனே கைபரில் (இறந்தவருடன்) இருந்த முஹய்யிஸா(ரலி) அவர்கள் (முந்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம்) பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், முஹய்யிஸா(ரலி) அவர்களிடம், 'வயதில் மூத்தவரை (முதலில்) பேசவிடு; என்றார்கள். எனவே, ஹுவய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். பிறகு (இளையவரான) முஹய்யிஸா(ரலி) அவர்கள் பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒன்று உங்களுடைய நண்பருக்கான இழப்பீட்டுத் தொகையை அவர்கள் (யூதர்கள்) வழங்கட்டும்; அல்லது (எம்முடன் போரிட) அவர்கள் போர் பிரகடனம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். பிறகு இ(ந்தக் கருத்)தைக் குறிப்பிட்டு யூதர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடிதம் எழுதினார்கள். 'நாங்கள் அவரைக் கொல்லவில்லை'' என்று (யூதர்கள் தரப்பிலிருந்து பதில் கடிதம்) எழுதப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா(ரலி), முஹய்யிஸா(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு சஹ்ல்(ரலி) ஆகியோரிடம், '(யூதர்கள் தாம் கொலை செய்தார்கள் என்று) நீங்கள் சத்தியம் செய்துவிட்டு, உங்கள் நண்பருக்கான உயிரீட்டுத் தொகையைப் பெறுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'இல்லை (நாங்கள் சத்தியம் செய்யமாட்டோம்)'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் (தாங்கள் அவரைக் கொல்லவில்லை என்று) யூதர்கள் உங்களிடம் சத்தியம் செய்யட்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), 'யூதர்கள் முஸ்லிம்கள் இல்லையே! (பொய்ச் சத்தியம் செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்களே)'' என்று கூறினர். எனவே, கொல்லப்பட்டவருக்கான இழப்பீடாக நூறு ஒட்டகங்களை நபி(ஸல்) அவர்களே தம் தரப்பிலிருந்து வழங்கினார்கள். இறுதியில் (அவர்கள் கூடியிருந்த) அந்த வீட்டுக்குள் அந்த ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அதில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்துவிட்டது.

ஆட்சித் தலைவர் மக்களிடம் பெறும் விசுவாசப் பிரமாண (வாசக)ம் எவ்வாறு அமையவேண்டும்?

2206. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் (தொடர்ந்து) அறிவித்தார் : நாங்கள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் சண்டையிட மாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்களின் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே கடைப்பிடிப்போம்' அல்லது 'உண்மையே பேசுவோம்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

2207. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி (பைஅத்) அளிக்கும்போது அவர்கள், 'உங்களால் முடிந்த விஷயங்களில்'' என்று சொல்வது வழக்கம்.

ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது.

2208. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) 'நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள்'' என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், '(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது (தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை'' என்று கூறினார்கள்.

2209. ஜாபிர் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்'' என்று சொல்ல கேட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா (ரலி) அவர்கள், 'அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்'' என்று (நபி(ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

Thursday 17 December 2009

[பாடம்-84] குழப்பங்கள்.

''எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கிற பல விஷயங்களைக் காண்பீர்கள்'' என்று (அன்சாரிகளிடம்) நபி(ஸல்) அவர்கள் கூறியது.

2187. 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும்! ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2188. ஜுனாதா இப்னு அபீ உமய்யா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அன்னாரிடம் (நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், 'அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை எங்களுக்கு) அறிவியுங்கள்; அதனால் அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிப்பான்'' என்று சொன்னோம். அதற்கு உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்'' என்றார்கள். 'நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

குழப்பங்கள் தோன்றுதல்.

2189. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் : நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'கொலைகள் மலிந்த காலம் வரும் என்று மேற்கண்டவாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய காலத்தை நீங்கள் அறிவீர்கள்'' என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் (கூடுதலாகப் பின்வருமாறு) சொன்னார்கள்: யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமைநாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மோசமாகவே இருக்கும்.

2190. ஸுபைர் இப்னு அதீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், 'நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும்வரை பொறுமையோடு இருங்கள். ஏனெனில், உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்'' என்று கூறிவிட்டு, 'இதை நான் உங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்றார்கள்.

நம்மை எதிர்த்து ஆயதம் ஏந்துபவர்.

2191. நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(விரைவில்) சில குழப்பங்கள் தோன்றும், அப்போது அமர்ந்திருப்பவன் நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான்.

2192. 'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குழப்பம் ஏற்பட்டுள்ளபோது கிராமத்திற்குக் குடிபெயர்தல்.

2193. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார் : நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் 'இப்னுல் அக்வஃ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்'' என்று சொன்னேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் (மதீனாவிலிருந்து) வெளியேறி 'ரபதா' என்னுமிடத்திற்குச் சென்று அங்கு ஒரு பெண்ணை மணந்தார்கள். அப்பெண் மூலம் அவர்களுக்குப் பல குழந்தைகள் பிறந்தன. அங்கேயே வசித்துவந்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள், தாம் இறப்பதற்குச் சில நாள்கள் முன்புதான் (அங்கிருந்து திரும்பி வந்து) மதீனாவில் தங்கினார்கள்.

அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்கு வேதனை வழங்கும்போது...

2194. ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் வேதனையை இறக்கும்போது அதிலுள்ளவர்கள் அனைவரையும் அந்த வேதனை தாக்கும் பிறகு அவர்கள் தம் செயல்களுக்கு ஏற்ப (மறுமையில்) எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஒரு கூட்டத்தாரிடம் ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகு வெளியே சென்று அதற்கு மாறாகப் பேசினால்...?

2195. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்: நயவஞ்சகம் என்பதெல்லாம் (மக்கள் சிலரிடம்) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தான் இருந்தது. இன்றோ, இறைநம்பிக்கைக்குப் பின் இறைமறுப்பு மட்டுமே உள்ளது.

நெருப்பு கிளம்புவது.

2196. ஹிஜாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி, (ஷாம் நாட்டின்) புஸ்ரா (ஹவ்ரான்) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாதவரை மறுமை நாள் வராது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2197. (மேற்காசியாவில் பாயும்) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது. அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்து விட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உக்பா இப்னு காலித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகமாக 'தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தவுள்ளது'' என்று இடம் பெற்றுள்ளது.

2198. இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாதவரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாதவரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகி, காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாதவரை மறுமைநாள் வராது. மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமைநாள் வராது. அப்போது செல்வன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்க முனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாதவரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, 'அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) கூறாதவரை மறுமை நாள் வராது. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாதவரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும்.

இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள். அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள்; அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள்; அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவும் மாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Tuesday 15 December 2009

[பாடம்-83.] கனவுக்கு விளக்கமளித்தல்.

நல்லோரின் கனவு.

2176. நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நல்ல கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது.

2177. உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நற்செய்தி (கூறும் கனவு)கள்.

2178. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை'' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு'' என்று விடையளித்தார்கள்.

கனவில் நபி(ஸல்) அவர்களைக் காண்பது.

2179. 'கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: ''நபி(ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க லட்சணங்களுடன்) அவர்களைக் கண்டால்தான் (நபி(ஸல்) அவர்களைக் கனவு கண்டதாகக் கருதப்படும்)'' என்று இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். மேலும் கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க மாட்டான். மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

2180. (கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் நிஜத்தையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பகலில் காணும் கனவு.

2181. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள 'குபா'வுக்குச் சென்றால் தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். அவ்வாறே ஒரு நாள் (பகலில்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் அவர்களுக்கு பேன் பார்த்து விடலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

கனவில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பது.

2182. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. இறைநம்பிக்கையாளர் காணும் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். நபித்துவத்தில் அடங்கிய எந்த அம்சமும் பொய்யாகாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்தச் சமுதாயத்தார் காணும் கனவுகள் (எல்லாம்) உண்மை என்றே கூறுகிறேன். கனவுகள் மூன்று வகைப்படும் என்று கூறப்படுவதுண்டு. 1. மன பிரமை (விழிப்பு நிலைக் கனவுகள்) 2. ஷைத்தானின் அச்சுறுத்தல். 3. அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தி. எனவே, தாம் விரும்பாத கனவொன்றை எவரேனும் கண்டால் அதைப் பற்றி எவரிடமும் விவரிக்க வேண்டாம். மாறாக, எழுந்து அவர் (இறைவனைத்) தொழட்டும். தொடர்ந்து முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: கழுத்தில் மாட்டப்படும் விலங்கைக் கனவில் காண்பது வெறுக்கப்பட்டு வந்தது. (ஏனெனில், அது நரகவாசிகளின் அடையாளமாகும்.) ஆனால், (கால்) விலங்கைக் காண்பது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அது மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும் என்று (விளக்கம்) கூறப்பட்டது.

கனவில் ஒரு பொருளை ஒரு மூலையிலிருந்து மாற்றி மற்றவர்களிடம் வைப்பதைப் போன்று கண்டால்...?

2183. தலைவிரி கோலத்துடன் கறுப்பு நிறப்பெண்ணொருத்தி மதீனாவிலிருந்து வெளியேறி அங்கிருந்து 'மஹ்யஆ' சென்று தங்குவதைப் போன்று நான் (கனவு) கண்டேன். மதீனாவின் பெருநோய்கள் மஹ்யஆவுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டுவிட்டது என்று நான் (அதற்கு) விளக்கம் கண்டேன். 'மஹ்யஆ' என்பது 'அல்ஜுஹ்ஃபா' எனும் இடமாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கனவு குறித்து பொய்யுரைப்பது.

2184. 'ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) 'தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது 'தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் 'அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

2185. தம் கண் காணாத ஒன்றை அது கண்டதாகக் கூறுவது மாபெரும் பொய்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

கனவுக்கு விளக்கம் அளித்த முதல் நபர் தவறாக விளக்கம் சொன்னாலும் அதுதான் விளக்கம் என்பதை ஏற்க முடியாது.

2186. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(இறைத்தூதர் அவர்களே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (இறைத்தூதர் அவர்களே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக் கொண்டு மேலே சென்றீர்கள். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது'' என்றார். அப்போது (அங்கிருந்த) அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகிற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்'' என்று கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்'' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் '(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)'' என்றார்கள்.

Sunday 13 December 2009

[பாடம்-82] இஸ்லாத்திலிருந்து வெளியேறியோருடன் போர் புரிதல்.

2175. 'இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Friday 11 December 2009

[பாடம்-81] இழப்பீடுகள்.

''யார் ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனம்.

2168. புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும்வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

2169. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மிக்தாத்(ரலி) அவர்களிடம், 'இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனதிற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?' என்று கேட்டார்கள்.

2170. நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா(ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.

''அவர்களுக்கு நாம் அ(ந்த வேதத்)தில், உயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாகப் பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவரின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். யார் அல்லாஹ் அருளிய (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!'' எனும் (திருக்குர்ஆன் 05:45 வது) இறைவசனம்.

2171. 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

நியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது.

2172. மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தம் உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தம் உறவினருக்காகத்) தாமே பழிவாங்குவதும்.

2173. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை. இதை அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.

விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்டவையா?)

2174. இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

Wednesday 9 December 2009

[பாடம்-80] குற்றங்களும் தண்டனையும்.

கண்டிப்பதற்காகவும் புத்தி புகட்டுவதற்காகவும் எத்தனை முறை அடிக்கலாம்?

2166. அபூ புர்தா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அடிமைகளின் மீது அவதூறு கூறுதல்.

2167. 'நிராபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!' என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Monday 7 December 2009

[பாடம்-79] குற்றவியல் தண்டனைகள்.

பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் (குடிகாரரை) அடித்தல்.

2159. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் 'இவரை அடியுங்கள்'' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!'' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்'' என்றார்கள்.

2160. அலீபின் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார் : நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை. குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.

குடிகாரணை சபிப்பது வெறுக்கப்பட்டதாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறியவன் அல்லன்.

2161. உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒருநாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினார்கள்.

திருடனைப் பெயர் குறிப்பிடாமல் (பொதுவாக) சபித்தல்.

2162. அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'தலைக்கவசம்' என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும் 'கயிறு' என்பது ஒரு சில திர்ஹம்கள் (வெள்ளிக்காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.

''திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:38 வது) வசனத் தொடரும், எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.

2163. கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2164. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தின்' விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை. இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2165. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

Saturday 5 December 2009

[பாடம்-78] பாகப்பிரிவினைச் சட்டங்கள்.

(இறந்தவருக்கு) மகன் (உயிருடன்) இல்லாதபோது மகனின் மகனுக்கு (பேரனுக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.

2153. (பாகப்பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில் நிர்ணயிக்கப்பெற்றுள்ள) பாகங்களை (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பிறகு எஞ்சியிருப்பது இறந்தவரின்) மிக நெருக்கமான (உறவினரான) ஆணுக்கு உரியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இறந்தவருக்கு) மகள் இருக்கும்போது மகனுடைய மகளுக்கு (பேத்திக்கு)க் கிடைக்கும் சொத்துரிமை.

2154. ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அபூ மூஸா(ரலி) அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் 'மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)'' என்று கூறிவிட்டு, '(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்'' என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (சென்று) அபூ மூஸா(ரலி) அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழி தவறியவனாகி விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்'' என்றார்கள். பின்னர் அபூ மூஸா(ரலி) அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, 'இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்'' என்று (புகழ்ந்து) சொன்னார்கள்.

ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப் பட்ட அடிமை அவர்களைச் சேர்ந்தவனே. ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே!

2155. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : 'ஒரு கூட்டத்தாரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை அவர்களில் உள்ளவனே' என்றோ, 'இதைப் போன்றோ' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வேறொருவரை தன் தந்தை என வாதிடுகிறவன்.

2157. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்: ''தம் தந்தை அல்லாத ஒருவரை அவர் தம் தந்தை அல்ல என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று வாதிடுகிறவரின் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) உபூஉஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் அபூ பக்ரா(ரலி) அவர்களிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள் 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என் காதுகள் செவியேற்றன. என் இதயம் மனனமிட்டுக் கொண்டது'' என்றார்கள்.

2158. 'உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். தம் தந்தையை வெறுத்து (வேறு யாரோ ஒருவரை தம் தந்தை என்று கூறி) விடுகிறவர் நன்றி கொன்றவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Thursday 3 December 2009

[பாடம்-77] சத்தியத்தை முறித்தால் செய்யவேண்டிய பரிகாரங்கள்.

மதீனாவின் 'ஸாஉ'ம் நபி(ஸல்) அவர்கள் (காலத்து) 'முத்'தும் அதன் வளமும் வாழையடி வாழையாக மதீனாவாசிகள் கடைப்பிடித்து வந்ததும்.

2151. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'ஸாஉ' என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் 'முத்'தில் ஒரு 'முத்'தும் மூன்றில் ஒரு பாகமும் (1, 1/3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களின் காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப்பட்டது.

2152. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறைவா! (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான 'ஸாஉ' மற்றும் 'முத்' ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.

Tuesday 1 December 2009

[பாடம்-76] சத்தியங்களும் நேர்த்திகடன்களும்.

சத்தியத்தை முறித்தால்...

2142. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து'' என்றார்கள்.

2143. நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும் என்று கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

2144. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார் : இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், 'எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர் 'ஆம். இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பேசுங்கள்'' என்றார்கள். அந்த மனிதர், 'என் மகன் இவரிடம் 'அஸீஃப்' ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 'அஸீஃப் என்பதற்குக் 'கூலியாள்' என்று பொருள் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். எனவே, மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு'' என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், '(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவரின் மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: 'உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்'' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச் செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டார். எனவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.

2145. அபூ தர்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, 'கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள் என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், 'என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?' என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள் 'என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான் 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.

2146. ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது. ('உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது' என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்...?

2147. என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்து விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைவனுக்கு வழிப்படுவதில் தான் நேர்த்திக்கடன்.

2148. அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா?)

2149. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி(ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.

தமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது.)

2150. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், '(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டுள்ளார்'' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்'' என்றார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.