Friday 4 September 2009

[பாடம்-38] ஹவாலா. (ஒருவரின் கடனை மற்றவருக்கு மாற்றுதல் ஹவாலா எனப்படும்.)

ஹவாலாவை ஏற்றவர் பிறகு மாறலாமா?

1060. ''செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு இன்னொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும்.

1061. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா வந்தது. 'நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபி(ஸல்) கேட்டபோது 'இல்லை' என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர். 'இவர் கடனாளியா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித்தோழர்கள் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்பு. தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

1062. ஆஸிம்(ரஹ்) அறிவித்தார். ''இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!'' என்று பதிலளித்தார்கள்.

1063. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ''பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!'' என்று அபூ பக்ர்(ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!'' என்றேன். அபூ பக்ர்(ரலி) எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. 'இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக!'' என்று அபூ பக்ர்(ரலி) கூறினார்.

0 comments:

Post a Comment