Sunday 13 September 2009

[பாடம்-42] கடன்.

திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைக்) கடன் வாங்கியவன் நிலையும்... திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத்துடன் கடன் வாங்கியவன் நிலையும்...

1102. எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கடனைத் திருப்பிச் செலுத்துதல்.

1103. அபூதர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுது மலையைப் பார்த்தபோது, 'இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும் கூட என்னிடம் மூன்று நாள்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர' என்று கூறினார்கள். பிறகு, '(உலகில் செல்வம்) அதிகமானவர்கள் தாம் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; '(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்' என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர. (இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஷிஹாப்(ரஹ்), 'இப்படியெல்லாம்' என்பதற்கு விளக்கமாக முன் பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள். ஆனால், 'அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'நீ இங்கேயே இரு'' என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் நபி(ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'நான் திரும்பி வரும்வரை நீ இங்கேயே இரு'' என்று கூறியதும் என் நினைவுக்கு வந்தது. நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் கேட்ட குரல் என்ன?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்'' என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, 'உன் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்து விடுகிறவர் சொர்க்கம் புகுவார்'' என்று கூறினார்கள். நான், 'இப்படி இப்படியெல்லாம் செய்தவருமா (விபச்சாரக் குற்றமும், திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?' என்று கேட்டேன். ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'ஆம், (அவரும் சொர்க்கம் புகுவார்)'' என்று பதிலளித்தார்கள்.

கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துதல்.

1104. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். ''முற்பகல் நேரத்தில் சென்றேன்'' என்று ஜாபிர்(ரலி) கூறினார் என நினைக்கிறேன்'' என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான மிஸ்அர்(ரஹ்) கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!'' என்று கூறினார்கள். என்னிடம் வாங்கிய ஒரு கடனை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (நான் தொழுது முடித்த பின்) எனக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தியதுடன் எனக்கு அதிகமாகவும் கொடுத்தார்கள்.

1105. நம்பிக்கையாளர் எவராயினும் அவருக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நானே மிக நெருக்கமானவன். நீங்கள் விரும்பினால் திண்ணமாக விசுவாசிகளுக்கு அவர்களின் உயிரை விட நபி தான் நெருக்கமான உரிமையுடையவர் ஆவார் (33:6) என்ற அருள்மறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். ஒரு விசுவாசி அவர் எவராயிருந்தாலும் சரி மரணித்து ஏதேனும் ஒரு செல்வத்தை அவர் விட்டுச்சென்றால் அவரின் தந்தை வழி உறவினர்கள் அவர்கள் எவ்வகையினரானாலும் சரி அதற்கு வாரிசுகளாகட்டும். எவர் மரணிக்கும்போது ஒரு கடனை வைத்து விட்டு அதை அடைக்காமல் விட்டுச் செல்கிறாரோ அல்லது அவர் தம்மைத்தவிர வேறு திக்கற்ற மனைவி மக்களை விட்டுச் செல்கிறாரோ அவர் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்கு பொறுப்பேற்கும் பராமரிப்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

செல்வத்தை வீணடிப்பது தடை செய்யப்பட்டதாகும்.

1106. (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment