அன்பளிப்பும் அதன் சிறப்பும்.
1151. முஸ்லீம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி பிற அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் குளம்பை அன்பளிப்பாக கொடுத்தாலும் அதைப் பெறுவதை அவர்கள் இழிவாகக் கருத வேண்டாம் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.
அன்பளிப்பு செய்ய தூண்டுதல்.
1152. உர்வா பின் ஸூபைர் (ரலி) அறிவித்தார் : என்னிடம் ஆயிஷா (ரலி)அவர்கள் என் சகோதரியின் மகனே நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று பிறை பார்ப்போம். அப்படியிருந்தும் இறைத்தூதர் அவர்கள் வீட்டில் அடுப்பு நெருப்பு மூட்டப்படாது என்றார்கள். நான் என் சிற்றன்னையே நீங்கள் எதைக் கொண்டுதான் வாழ்க்கை நடத்தினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரண்டு கறுப்பு பொருட்கள். ஒன்று பேரீச்சம்பழம் மற்றது தண்ணீர். இவற்றைத் தவிர அல்லாஹ்வின் தூதருக்கு சில அண்டை வீட்டாரான அன்ஸாரிகள் அன்பளிப்பாக வழங்கும் ஒட்டகப் பாலாகும். நபி(ஸல்) அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பாலை எங்களுக்கு பருகத் தருவார்கள் எனக் கூறினார்கள்.
சிறிய அன்பளிப்பு.
1153. ஒரு ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். எனக்கு ஒரு ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி நான் அதைப் பெற்றுக் கொள்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி)அறிவித்தார்.
வேட்டைப்பிராணியை அன்பளிப்பு செய்தல்.
1154. மர்ருழ் ழஹ்ரான் என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை அதன் பொந்திலிருந்து கிளப்பி விரட்டினோம்.மக்கள் அதைப் பிடிக்க முயற்சித்து களைத்து விட்டனர். நான் அதைப் பிடித்து விட்டேன்.அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி)அவர்களிடம் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது அதன் தொடைகளை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் உண்டார்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் வினவியதற்கு ஆம் எனப் பதிலளித்தார்கள்.
அன்பளிப்பை ஏற்றுக் கொள்தல்.
1155. என் தாயாரின் சகோதரியான உம்மு ஹூபைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக பாலாடைக்கட்டி வெண்ணெய் உடும்புகள் ஆகியவற்றை அனுப்பியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து பாலாடைக்கட்டியையும் வெண்ணையையும் சிறிது உண்டார்கள். அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றிய உடும்புகளை உண்ணவில்லை. எனினும் உடும்பு நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பின் மீது வைக்கப் பட்டிருந்தது. அது தடை (ஹராம்) செய்யப்பட்டிருந்தால் நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
1156. நபி(ஸல்) அவர்களிடம் ஒரு உணவுப் பொருள் கொண்டு வரப்படும்போது இது அன்பளிப்பா தர்மமா? எனக் கேட்பார்கள். தர்மப் பொருள் எனக் கூறப்பட்டால் தம் தோழர்களிடம் நீங்கள் உண்ணுங்கள் எனக் கூறுவார்கள். தாம் உண்ண மாட்டார்கள். அன்பளிப்பு எனத் தெரிந்தால் தம் கையைத் தட்டிக்கொண்டு விரைந்து தம் தோழர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.
1157. நபி (ஸல்)அவரகளிடம் ஒரு இறைச்சி கொண்டு வரப்பட்டது. அது பரீரா (ரலி) அவரகளுக்குத் தர்மமாகக் கிடைத்ததாகும். நபி (ஸல்) அவர்கள் அவ்விறைச்சி பரீரா(ரலி) வுக்குத் தர்மமாகும். நமக்கு அது அன்பளிப்பாகும் எனக் கூறினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவித்தார்.
அன்பளிப்பு வழங்குபவர் வழங்கப்படுபவரின் இருப்பிடமறிந்து வழங்குதல்.
1158. அல்லாஹ்வின் தூதரின் மனைவிமார்களாகிய நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழவில் நானும் (ஆயிஷா) ஹஃப்ஸா(ரலி) ஸஃபிய்யா(ரலி) ஸவ்தா (ரலி)ஆகியோரும் மற்றொரு குழுவில் உம்மு ஸலமா(ரலி) மற்றும் பிற மனைவிமார்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் என்னை எவ்வளவு பிரியமாக நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லீம்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே அவர்கள் இறைத்தூதருக்கு அன்பளிப்பு ஏதும் வழங்க விரும்பினால் என் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் தங்கும் நாள் வரும்போது அதைக் கொடுத்தனுப்புவர். எனவே இது சம்மந்தமாக உம்மு ஸலமா(ரலி) அவர்களின் குழுவினர் தங்களுக்குள் கலந்து பேசினர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் மக்களிடம் பேசி எவர் தம் அன்பளிப்பை எனக்குத் தர விரும்புகிறாரோ அவர் நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அனுப்பி வைக்கட்டும் எனக் கூறும்படி இறைத்தூதரைக் கேட்டுக்கொள் என உம்மு ஸலமா(ரலி)அவர்களை மற்ற குழுவைச்சார்ந்த மனைவியர்கள் கூறினர். அவ்வாறே உம்மு ஸலமா(ரலி) அவர்கள் இறைத்தூதரிடம் கூற அதற்கு நபி (ஸல்)அவர்கள் பதிலேதும் கூறவில்லை. பின்னர் குழுவிலுள்ளோர் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் இறைத்தூதரின் பதிலைப் பற்றி வினவ அவர்கள் பதிலேதும் கூறவில்லை என்று உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கூறினார். மீண்டும் நபி(ஸல் அவர்களிடம்இது பற்றிப் பேசு எனக் குழவின் பிற மனைவியர் கூறினர். உம்மு ஸலமா(ரலி) அவர்கள் தமது முறை வந்தபோது நபி (ஸல்)அவர்களிடம் பேச அப்போதும் நபி(ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை. குழவினர் நபி (ஸல்) அவர்களின் பதில் பற்றி வினவ உம்மு ஸலமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை எனக் கூறினார்கள். அதற்கு குழுவினர் நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கும்வரை இதுபற்றிக் கேட்டுக் கொண்டேயிரு என உம்மு ஸலமா(ரலி) அவர்களைக் கேட்டுக் கொண்டனர். மீண்டும் உம்மு ஸலமா(ரலி) அவர்களின் முறை வந்த போது நபி(ஸல்) அவர்களிடம் இது குறித்து வினவ நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு நீ துன்பம் தராதே. ஏனென்றால் ஆயிஷாவின் படுக்கை தவிர வேறு எந்த மனைவியின் படுக்கையில் இருக்கும்போதும் எனக்கு வஹீ வருவதில்லை எனக் கூறினார்கள். உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே உங்களுக்குத் துன்பம் தந்ததற்கு அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புக் கோருகிறேன் என்றார்கள். பிறகு அக்குழுவினர் நபி(ஸல்)அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி)அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதரிடம் சென்று உங்கள் மனைவிமார்கள் அபூபக்கர்(ரலி)அவர்களின் மகள் ஆயிஷா விஷயத்தில் தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும் நீதமாக நடந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் என்று கூறுமாறு சொல்லியனுப்பினார்கள். அவ்வாறே ஃபாத்திமா (ரலி)அவர்களும் நபி(ஸல்)அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள் என் அன்பு மகளே நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்க அதற்கு அவர்கள் நீங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன் எனப் பதிலளித்து விட்டுத் திரும்பி விட்டார்கள். பிற மனைவியர்களிடம் நடந்ததைக்கூற அவர்கள் மீண்டும் கூடி நபி(ஸல்)அவர்களிடம் செல்லக்கூறியபோது ஃபாத்திமா (ரலி)அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே அவர்கள் தம் சார்பாக ஜைனப் பின்த்து ஜஹ்ஸ் (ரலி)அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். ஜைனப்(ரலி)அவர்கள் நபி (ஸல்)அவர்களிடம் வந்து சற்று கடுமையாகப் பேசி உங்கள் மனைவிமார்கள் அபூகுஹாபாவின் மகனுடைய மகளின் விஷயத்தில் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும் நீதியுடன் நடந்து கொள்ள அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றனர் என்று கூறினார். நான் அங்கு அமர்ந்து கொண்டிருக்க ஜைனப்(ரலி)அவர்களின் குரல் உயர்ந்தது. அவர் என்னைக் குறை கூறித் திட்டினார்.எந்த அளவுக்கென்றால் நபி(ஸல்)அவர்கள் நான் அவருக்குப் பதில் கூறமாட்டேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே உற்று நோக்கியவாறு இருந்தார்கள்.உடனே நான் ஜைனபுக்கு(ரலி) பதில் கூறி இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி(ஸல்)அவர்கள் என்னைப் பார்த்து இவள் உண்மையிலேயே அபூபக்கரின் மகள்தான் எனக்கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
நிராகரிக்க கூடாத அன்பளிப்பு.
1159. நான் சுமாமா பின் அப்தில்லாஹ்(ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்கு வாசனைத் திரவியங்களைத் தந்து அனஸ்(ரலி) அவர்களிடம் கொடுக்க கூறினார்கள். அனஸ்(ரலி) அவர்கள் வாசனைத் திரவியத்தை எவரேனும் அன்பளிப்பு செய்தால் நபி(ஸல்) அவர்கள் நிராகரிப்பதில்லை என்று கூறினார்கள்.
அன்பளிப்புக்கு ஈடு செய்தல்.
1160. நபி(ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்குப் பகரமாக வேறு எதையாவது கொடுத்து ஈடு செய்து வந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அன்பளிப்புக்கு சாட்சிகள் வைத்தல்.
1161. நுஃமான் பின் பஷீர் (ரலி)அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குத் தந்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா(ரலி) அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறினார்கள். என் தந்தை இறைத் தூதரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே நான் அம்ராபின்த் ரவாஹா(ரலி) அவர்களின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். என் மனைவி அதற்கு உங்களை சாட்சியாக ஆக்கும்படி கேட்கிறார் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களின் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று வினவ என் தந்தை இல்லை எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறாயின் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்களின் பிள்ளைகளிடம் நீதமாக நடந்து கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். இதைச்செவியுற்ற என் தந்தை உடனே திரும்பி வந்து தன் அன்பளிப்பை ரத்து செய்தார்கள் என ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்) அறிவித்தார்.
1162. தாம் அன்பளிப்புச் செய்ததை திரும்பப் பெறுபவர் வாந்தி எடுத்த பின் அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.
கணவர் அறியாமல் பிறருக்கு அன்பளிப்புச் செய்தல்.
1163. நான் ஒரு அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி(ஸல்) அவர்களிடம் அதற்காக நான் அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி(ஸல்) அவர்கள் தங்கும் முறை வந்தபோது அல்லாஹ்வின் தூதரே அடிமைப் பெண்ணை நான் விடுதலை செய்து விட்டேனே தாங்கள் அறிவீர்களா? எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விடுதலை செய்து விட்டாயா? எனக்கேட்க நான் ஆம் என்றேன். நபி(ஸல்) அவர்கள் நீ உன் தாயின் சகோதரர்களுக்கு அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்கு மிகுந்த நற்பலன் கிடைத்திருக்கும் எனக் கூறினார்கள் என்று அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
1164. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையில் எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று சீட்டு குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் குலுக்கலில் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால் ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குறிய நாளை நபி (ஸல்)அவர்களின் பிரியத்திற்குறிய மனைவியாகிய எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அதன் வாயிலாக இறைத்தூதரின் திருப்தியை அடைய அவ்வாறு செய்தார்கள் என ஆயிஷா(ரலி)அறிவித்தார்.
அன்பளிப்பில் அடைந்த திருப்தி.
1165. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)அவர்கள் அறிவிப்பதாவது: நபி(ஸல்)அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள். ஆனால் என் தந்தை மக்ரமா (ரலி)வுக்கு ஒன்றும் கொடுக்கவில்லை. என் தந்தை என்னிடம் மகனே என்னுடன் அல்லாஹ்வின் தூதரிடம் வா எனக் கூறினார்கள். நான் அவருடன் சென்றேன். என் தந்தை என்னிடம் நபி(ஸல்) அவர்களை எனக்காக கூப்பிடு எனக்கூற நான் நபி(ஸல்) அவர்களை அழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரும்போது அந்த அங்கிகளில் ஒன்றை தோளில் இட்டவாறு வந்தார்கள். இதை நான் உங்களுக்காக எடுத்து வைத்திருந்தேன் எனக்கூறி என் தந்தை மக்ரமா(ரலி)அவர்களிடம் கொடுக்க அவர் அதைக் கண்டு மக்ரமா திருப்தியடைந்தான் என்றார்கள்.
எதை அணிவதை வெறுக்கத் தக்கதோ அதை பிறருக்கு அன்பளிப்பு வழங்குதல்.
1166. இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி(ஸல்)அவர்கள் ஃபாத்திமா (ரலி)அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால் வீட்டுக்குள் செல்லாமல் திரும்பிப் போய்விட்டார்கள். இதற்கிடையில் அங்கு அலி (ரலி)அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அலி(ரலி) அவர்களிடம் இவ்விசயத்தைச் சொல்ல அலி(ரலி)அவர்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச்சீலையொன்றைக் கண்டேன். எனக்கும் இந்த ஆடம்பர உலகுக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் திரும்பி விட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அலி(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி)அவர்களிடம் சென்று இறைத்தூதர் கூறியதைச் சொன்னதும் ஃபாத்திமா(ரலி) அவர்கள் அத்திரைச்சீலை விசயத்தில் நபி(ஸல்) அவர்கள் விரும்புவதையே எனக்கு கட்டளையிடட்டும் அதன்படியே நான் செய்கிறேன் எனக்கூறினார்கள். நபி(ஸல்)அவர்கள் அதை இன்னாரின் வீட்டுக்கு அனுப்பி விடு அது அவர்களுக்கு உபயோகமாகும் எனக் கூறினார்கள்.
1167. அலீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.
1168. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், 'உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், '(இவை) விற்பதற்காகவா? அன்பளிப்பாகவா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி(ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி(ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாகிவிட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம்.
1169. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார். என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள்.
1170. அப்துல்லாஹ் இப்னு உபைதில்லாஹ் இப்னி அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். இப்னு ஜுத்ஆனால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சுஹைப்(ரலி) அவர்களின் மக்கள், தங்கள் தந்தையான சுஹைப்(ரலி) அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் ஆயுட்காலத்தில்) இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் (அன்பளிப்பாகக்) கொடுத்ததாகக் கூறினர். '(உங்கள் கூற்று உண்மையானது என்பதற்கு) உங்கள் இருவருக்கும் யார் சாட்சி சொல்வார்?' என்று (ஆளுநர்) மர்வான் கேட்டார். அவர்கள், 'இப்னு உமர் அவர்கள் (எங்களுக்காக சாட்சி சொல்வார்கள்)'' என்று கூறினர். உடனே மர்வான், இப்னு உமர்(ரலி) அவர்களைக் கூப்பிட்டனுப்பினார். இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சுஹைப் அவர்களுக்கு இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் கொடுத்தது உண்மை தான்'' என்று சாட்சியம் அளித்தார்கள். இப்னு உமர்(ரலி) அவர்களின் சாட்சியத்தை வைத்து சுஹைப்(ரலி) அவர்களின் மக்களுக்குச் சாதகமாக மர்வான் தீர்ப்பளித்தார்.
உம்ராவும் ருக்பாவும்.
1171. ஜாபிர்(ரலி) அறிவித்தார். உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், 'அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது'' என்று தீர்ப்பளித்தார்கள்.
மணமக்களுக்காக திருமணத்தின்போது இரவல் வாங்குதல்.
1172. அய்மன்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள், 'உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள், வீட்டில் கூட இதை அணிய (மறுத்துப்) பெருமை பாராட்டுகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் மற்ற பெண்களிடையே என்னிடம் (மட்டும் தான்) இதுபோன்றதொரு சட்டை இருந்தது. (அப்போது) மதீனாவில் (தங்கள் கணவன்மார்கள் முனபு அழகாகத் தோற்றமளிப்பதற்காக) அலங்கரிக்கப்படுகிற (புதுமணப்) பெண்கள் என்னிடம் அதை இரவல் வாங்குவதற்காக ஆளனுப்பாமல் இருந்ததில்லை'' என்றார்கள்.
1173. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
1174. நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் ஹஸ்ஸான் இப்னு அதிய்யா(ரஹ்) கூறினார்: பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதையடுத்து, அதற்குக் கீழேயுள்ள நல்ல காரியங்களான சலாமுக்கு பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாம் எண்ணிப் பார்த்தோம். ஆனால், பதினைந்து நற்செயல்களைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை.
Tuesday, 29 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment