Sunday, 6 September 2009

[பாடம்-39] வக்காலத்.

(ஒருவர் தமது கொடுக்கல் வாங்கலுக்கு மற்றொருவருக்கு அதிகாரம் வழங்குதல்) விநியோகம் செய்வதற்கும் மற்ற காரியங்களுக்கும் இரண்டு பங்காளிகளில் ஒருவர் மற்றவருக்கு அதிகாரம் வழங்குதல்.

1064. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!'' எனக் கூறினார்கள்.

ஆடு மேய்ப்பவர் அல்லது ஆட்டை பராமரிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டவர், சாகும் தருவாயிலுள்ள ஓர் ஆட்டைக் கண்டால் அதை அறுக்கலாம்.

1065. கஅபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். 'நபி(ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்கும்வரை சாப்பிடாதீர்கள்!'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.
'நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்கும்வரை என்பதற்கு பதிலாக நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்கும்வரை' என்று கூட கஅபு(ரலி) சொல்லியிருக்கலாம்!' என்று அறிவிப்பாளர் (சந்தேகத்துடன்) கூறுகிறார்.

கடனை திருப்பிக் கொடுபபதற்குப் பிறருக்கு அதிகாரம் வழங்குதல்.

1066. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது' என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக அல்லது அதற்காகப் பரிந்துரை செய்பவராக வந்திருப்பவருக்கு அன்பளிப்புச் செய்தால் அது செல்லும்.

1067. மர்வான் இப்னு ஹகம்(ரலி) மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்கள்: ஹவாஸின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானது! கைதிகள் அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதானிருந்தேன்! எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய முதல் பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்(த்துக் காத்)திருந்தார்கள். இரண்டில் ஒன்றைத்தான் நபி(ஸல்) அவர்கள் தமக்குத் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவானபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்!' எனக் கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்து, 'உங்களுடைய இந்தச் சகோதரர்கள் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களின் கைதிகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் (கைதிகளைப் பெற்றவர்களில்) மனப்பூர்வமாக இதைச் செய்ய விரும்புகிறவர் இதைச் செய்யட்டும்! தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர். அல்லாஹ் நமக்குக் கொடுக்க விருக்கும் முதலாவது (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும்வரை. அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!) என்றார்கள். இதற்கு மக்கள், 'அல்லாஹ்வின் தூதருக்காக மனப்பூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம்! என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் இதற்குச் சம்மதிக்காதவர் யார் என்று நாம்அறிய மாட்டோம்! எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களில் பொறுப்புள்ளவர்கள் இது பற்றி உங்களிடம் (தனியாகக்) கலந்து பேசிவிட்டு, நம்மிடத்தில் உங்கள் முடிவைக் கூறட்டும்! என்றார்கள். மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களில் பொறுப்புள்ளவர்கள் அவர்களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, (கைதிகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு) தாங்கள் மனப்பூர்வமாக சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.

ஒருவர் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தாமல், ஏதேனும் கொடுக்குமாறு இன்னொருவருக்கு அதிகாரம் வழங்கினால் மக்களின் வழக்கத்திற்கேற்ப அவர் கொடுக்கலாம்.

1068. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!' என்று கூறினேன். அதற்கவர், 'நான் ஓர் ஏழை!' எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான் விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் விசயம் என்ன என்று வினவ நான், 'இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே, இரக்கப்பட்டு அவரைவிட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், 'என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான். எனவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். 'நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, 'உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) 'இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் 'என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!' என்றான். அதற்கு நான் 'அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!' என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் 'நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!' என்றேன். 'அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்' எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். 'தெரியாது'' என்றேன். 'அவன்தான் ஷைத்தான்!' என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

விற்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டவர், விற்கக் கூடாத முறையில் விற்றால் அந்த விற்பனை ரத்து செய்யப்படும்.

1069. அபூ ஸயீத் குல் குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) 'பர்னீ' எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் 'இது எங்கிருந்து கிடைத்தது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழத்தை விற்றுவிட்டு, பிறகு அதை விற்ற பணத்தில் வாங்குவீராக! என்றார்கள்.

அல்லாஹ்வின் தண்டனைகளை நிறைவேற்றும் அதிகாரத்தை ஒருவரிடம் வழங்குதல்.

1070. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். ''நுஐமான் அல்லது அவரின் மகன் மது அருந்திய நிலையில் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டபோது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்! நாங்கள் செருப்புகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம்.''

0 comments:

Post a Comment