Friday, 11 September 2009

[பாடம்-41] நீர்ப்பாசன அடிப்படையில் தோப்புகளைக் குத்தகைக்கு விடுதல்.

தண்ணீரை தர்மம் செய்வதும் நன்கொடையாக வழங்குவதும்.

1088. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), 'சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்'' என்று கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்து விட்டார்கள்.

1089. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்திவிட்டு, தம் (திரு)வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் இடப்பக்கத்தில் அபூ பக்கர்(ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். எனவே, உமர்(ரலி), நபி(ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, 'உங்களிடம் இருப்பதை அபூ பக்ருக்கு கொடுத்து விடுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் வலப்பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, '(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப்பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்'' என்றார்கள்.

'தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை (பிறர் உபயோகிப்பதைத்) தடுப்பது கூடாது'

1090. '(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்ததாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1091. (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகி விடுவீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

கிணறு தொடர்பான வழக்கும் அதற்கான தீர்ப்பும்.

1092. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ''ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ்(ரலி) வந்து (மக்களை நோக்கி, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?' என்று கேட்டார்கள். நான், 'என்னிடம் சாட்சிகள் இல்லை' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், பிரதிவாதி ('அந்த நிலம் என்னுடையது தான்' என்று) சத்தியம் செய்யவேண்டும்' என்றார்கள். நான், 'அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே' என்று கூறினேன். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்'' என்று கூறினார்கள்.

தண்ணீரைப் பயன்படுத்தி விடாமல் வழிப்போக்கரைத் தடுத்தவரின் பாவம்.

1093. மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்து விட்டவன். இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல் விட்டால் கோபம் கொள்பவன். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும்போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, 'எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன் என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்தவன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்...'' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நீர் புகட்டுவதின் சிறப்பு (மற்றும் அதற்கான பிரதிபலன்).

1094. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள்.

தடாகத்தின் (குளம் அல்லது நீர்த்தொட்டியின்) உரிமையாளரும் தோல்பையின் உரிமையாளரும் தம் தண்ணீரைப் பயன்படுத்த (பிறரை விட) அதிக உரிமை பெற்றுள்ளனர்.

1095. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை (குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1096. மூன்று பேர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (அவர்கள் வருமாறு:) (ஒருவன், தன் பொருளை (அதிக விலைக்கு) விற்பதற்காக (அதைக் கொள்முதல் செய்த போது) வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன் ஆவான். மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பின் (மக்கள் கூடும் நேரத்தில்) முஸ்லிம் ஒருவரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்தவன் ஆவான். இன்னொருவன், தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி, 'உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போன்றே இன்று நான் என்னுடைய அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன்'' என்று அல்லாஹ் கூறுவான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள வேறெவருக்கும் அனுமதி இல்லை.

1097. நபி(ஸல்) அவர்கள், 'பிரத்தியேகமான மேய்ச்சல் நிலம் வைத்துக் கொள்ள அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் அனுமதி இல்லை'' என்று கூறினார்கள் இதை ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) கூறினார் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நீர்நிலைகளிலிருந்து மக்கள் தண்ணீர் குடிப்பதும், அவற்றிலிருந்து (கால்நடைகள் மற்றும்) பிராணிகளுக்கு நீர் புகட்டுவதும்.

1098. குதிரை, ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காக, பசுமையான ஒரு வெட்ட வெளியில் அல்லது ஒரு தோட்டத்தில் ஒரு நீண்ட கயிற்றால் கட்டி வைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில் அல்லது தோட்டத்தில் மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கயிறு அறுந்து, அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் விட்டைகளின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். (இவ்விதம் நல்ல நோக்கங்களுக்காக வளர்க்கப்படும்.) இந்த குதிரை அவருக்கு (மறுமையில்) நற்பலன் கிடைப்பதற்குக் காரணமாக இருக்கும், இன்னொருவர், தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் அதைக்கட்டி, வை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது சுமத்தும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு அந்த (அவருடைய) குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் (தவறான நோக்கத்தின்) காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகி விடுகிறது ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை. 'எவன் அணுவளவும் நன்மை செய்திருந்தானோ அவன் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனை (அதற்கான தண்டனையைக்) கண்டு கொள்வான்' (திருக்குர்ஆன் 96: 78) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1099. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான். ஃபாத்திமாவை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள், 'ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த, பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள்'' என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரண்டு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்தார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை கண்டேன். உடனே, நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி(ஸல்) அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தம் கோபத்தை நபி(ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள். ஹம்ஸா அவர்கள் தங்களின் பார்வையை உயர்த்தி, 'நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே?' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், அவர்களைவிட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்துவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார். நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்களிடம், 'திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா(ரலி)) எடுத்தார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துச் சென்றார்'' என்று கூறினார்.

வருவாய் மானியமாக வழங்கப்படும் நிலங்களை (பட்டயமாக) எழுதிப் பதிவு செய்து கொள்வது செல்லும்.

1100. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு, பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக வழங்கிட அவர்களை அழைத்தார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அப்படி நீங்கள் (எங்களுக்கு) வருவாய் மானியம் வழங்குவதாயிருந்தால் எங்களுடைய குறைஷிச் சகோதரர்களுக்கும் அதே போன்று எழுதிக் கொடுங்கள்'' என்று கேட்டார்கள். ஆனால், (அனைவருக்கும் வருவாய் மானியம் தருகிற அளவுக்கு) மானிய நிலங்கள் (அல்லது நிலவரி மூலமாகக் கிடைக்கும் நிதிகள்) நபி(ஸல்) அவர்களிடம் இருக்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள், 'எனக்குப் பின்னால் (சிறிது காலத்திற்குள்ளாகவே, ஆட்சியதிகாரத்தில்) உங்களை விட மற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும்வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

1101. 'மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பின்னர் பேரீச்ச மரங்களை வாங்கியவர் (அந்த விளைச்சல் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவற்றின் விளைச்சல் விற்றவருக்கே உரியதாகும். செல்வம் வைத்திருக்கும் ஓர் அடிமையை வாங்கியவர், (அந்த அடிமையின் செல்வம் எனக்கே சேர வேண்டும் என்ற) நிபந்தனையிட்டிருந்தாலே தவிர அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே உரியதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment