(வழக்கில் சம்பந்தப்பட்டவரை) விசாரணைக்காகக் கொண்டு போய் நிறுத்துவது.
1107. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ''ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்'' என்று கூறினார்கள்.''நபி(ஸல்) அவர்கள், 'வேற்றுமை கொள்ளாதீர்கள்! ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் வேற்றுமை கொண்டு (அதனால்) அழிந்தனர்' என்று கூறினார்கள் என எண்ணுகிறேன்'' என்று அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்.
1108. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி(ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூஸா(அலை), (அல்லாஹ்வின்) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.
1109. அனஸ்(ரலி) அறிவித்தார். யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' எனறு கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி (''ஆம், அவன்தான்'' என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள். யூதன் பிடிக்கப்பட்டு தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். நபி(ஸல்) அவர்கள் அவனுடைய தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவனுடைய தலை நசுக்கப்பட்டது.
வாதியும் பிரதிவாதியும் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதேனும் (குறை) பேசுதல்.
1110. 'ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை, அவன் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறலானார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்), 'உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, '(அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை' என்று) சத்தியம் செய்'' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!'' என்று கூறினேன். (அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
Wednesday, 16 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment