அடிமையை விடுதலை செய்வதும் அதன் சிறப்பும்.
1139. அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார். ''ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். உடனே நான், இந்த நபிமொழியை அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீதாலிப்(ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும. (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையையே அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.
எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது.
1140. அபூதர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'எந்த நற்செயல் சிறந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஈமான் எனும் நம்பிக்கை கொள்வதும் அவனுடைய பாதையில் ஜிஹாத் எனும் போராடுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள். நான், 'எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான், 'என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'பலவீனருக்கு உதவு. அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள். நான், 'இதுவும் என்னால் இயலவில்லை என்றால்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள்.
1141. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை செய்தாரோ, அந்த (தன்னுடைய பங்கின்) அளவிற்கே விடுதலை செய்தவராவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எண்ணியதே கிடைக்கும்.
1142. என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
விடுதலை செய்யும் எண்ணத்தில் ஒருவர் தன் அடிமையை 'இவன் அல்லாஹ்வுக்குரியவன்' என்று கூறினால் (அது செல்லும்.) மேலும், அடிமையை விடுதலை செய்ய சாட்சிகளை ஏற்படுத்துதல்.
1143. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி(ஸல்) அவர்களிடம்) சென்று கொண்டிருந்த பொழுது என்னுடன் ஓர் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னைப் பிரிந்தும் நான் அவரைப் பிரிந்தும் வழிதவறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அவ்வடிமை வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்திருக்கிறான் (பாரும்)'' என்று கூறினார்கள். நான், '(நபி(ஸல்) அவர்களே!) இந்த அடிமை சுதந்திரமானார் என்பதற்கு நான் தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்'' என்று கூறினேன். என அறிவிப்பாளர் கைஸ்(ரஹ்) கூறினார். அபூ ஹுரைரா(ரலி) மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபோது அவர் பின்வரும் கவிதையைப் பாடிக் கொண்டே வந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும் அது இறைமறுப்பு (ஏக இறைவனை ஏற்க மறுக்கும் கொள்கை) ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்துவிட்டது.
இணைவைப்பவர் (தன் அடிமையை) விடுதலை செய்தல்.
1144. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார். ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களையும் அறுத்து தருமம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தருமம் (செய்து) நூறு அடிமைகளையும் விடுதலை செய்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தரும) காரியங்களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள்'' என்று கூறினார்கள்.
1145. இப்னு அவ்ன்(ரஹ்) அறிவித்தார். நான் நாஃபிஉ(ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்களின் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தணணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களின் மக்களை (பெண்கள், பிள்ளை குட்டிகளை) போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள்; அன்றுதான் ஜுவைரிய்யா(ரலி) அவர்களைக் கண்டார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
பனூ தமீம் கோத்திரச் சிறப்பு.
1146. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் உம்மத்தினரிலேயே அதிகக் கடுமையுடன் தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தருமப் பொருள்கள் வந்தபோது இறைத்தூதர், 'இவை எங்கள் இனத்தாரின் தருமப் பொருள்கள்'' என்று கூறினார்கள். (ஒரு முறை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் பனூதமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி'' என்று கூறினார்கள்.
1147. உங்களில் எவரும் 'உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொடு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். 'என் எஜமான்; என் உரிமையாளர்' என்று கூறட்டும் ''என் அடிமை. என் அடிமைப் பெண் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன் என்று கூறட்டும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
உங்கள் பணியாள் உங்களுக்கு உணவு கொண்டு வந்தால்...
1148. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லை என்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரண்டு வாய்கள் (அந்த உணவிலிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டார்.
முகத்தில் தாக்காதே.
1149. உங்களில் ஒருவர் பிறரைத் தாக்கினால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கவும் என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.
விடுதலைப் பத்திரத்தில் இடும் நிபந்தனைகள் பற்றி...
1150. ஆயிஷா (ரலி) கூறியதாவது: பரீரா (ரலி) தன் எஜமானர்களிடமிருந்து எழுதி வாங்கிய விடுதலைப்பத்திரத்தின் தொகையைச் செலுத்த உதவும்படி என்னிடம் வந்தார். அவர் அவ்விடுதலைத் தொகையில் சிறிதளவும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம் உன் எஜமானர்களிடம் சென்று அவர்களின் சம்மதத்தை கேள். உன் விடுதலைப் பத்திரப்படியுள்ள தொகையை நான் செலுத்தி உன் வாரிசுரிமையை நான் பெற்றுக்கொள்ளலாமா எனக்கேள். அவர்கள் சம்மதித்தால் தொகையை நானே செலுத்தி விடுகிறேன் என்றேன். பரீரா (ரலி) தம் எஜமானர்களிடம் கேட்க அவர்கள் சம்மதம் தர மறுத்து உன்னை வாங்கி விடுதலை செய்வதன் மூலம் அவர் (ஆயிஷா(ரலி)) இறைவனிடம் நன்மையை நாடினால் அவ்வாறே செய்யட்டும். ஆனால் உன் வாரிசுரிமை எங்களுக்கே உரியது எனக் கூறினர். இதை நான் இறைத்தூதர் (ஸல்)அவர்களிடம் கூற அதற்கவர்கள் நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு. ஏனென்றால் விடுதலை செய்பவர்க்கே வாரிசுரிமை உரியதாகும் என்றார்கள். மக்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறார்களே. அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லாததாகும். அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்று பின்பற்றுதல் தகும். அதுவே உறுதியானதும் கட்டுப்படுத்தவல்லதுமாகும் என்றார்கள்.
Sunday, 27 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment