அநீதிகளுக்காகப் பழிவாங்கல்.
1113. இறைநம்பிக்கையாளர்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போது உலகில் (வாழ்ந்தபோது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில், அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகி விடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.
1114. ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார். நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, '(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்பான். அதற்கு, அவன் 'ஆம், என் இறைவா!' என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், 'நாம் இத்தோடு ஒழிந்தோம்' என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்' என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனைக் கைவிடவும் மாட்டான்.
1115. ' ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
''உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருந்தாலும் அக்கிரமத்துக்கு உள்ளானவனாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்.''
1116. அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)'' என்று கூறினார்கள்.
அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.
1117. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் ஒரு மனிதருக்கு அநீதியிழைத்திருந்து அதை அவர் மன்னிக்க முன்வந்தால் (அப்படி மன்னிக்கும்போது அநீதியிழைத்தவர்) தான் செய்த அநீதியை இன்னதென்று தெளிவாகக் கூற வேண்டுமா?
1118. ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(பிறரின்) நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவனின் பாவம்.
1119. பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
1120. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இருவருக்கு (கூட்டு) உரிமையுள்ள ஒரு விசயத்தில் ஒருவர் மற்றவருக்கு சற்று அதிகமாகப் பயன் பெற அனுமதியளித்தால் அது செல்லும்.
1121. ஜபலா இப்னு ஸூஹைம்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இராக்வாசிகள் சிலருடன் மதீனாவில் இருந்தோம். எங்களைப் பஞ்சம் தீண்டியது. எனவே, இப்னு ஸுபைர்(ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து வந்தார்கள். (அதை நாங்கள் கூடி அமர்ந்து உண்ணும்போது இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, 'இறைத்தூதர் இரண்டு பேரீச்சம் பழங்களை ஒன்றாகச் சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள்; உங்களில் (அப்படிச் சேர்த்து உண்ண விரும்பும்) அந்த மனிதர் தன் சகோதரரிடம் அனுமதி பெற்றாலே தவிர'' என்று கூறுவார்கள்.
1122. அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அறிந்து கொண்டே தவறுக்காக வழக்காடுபவனின் பாவம்.
1123. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, 'நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்'' என்று கூறினார்கள்.
அபகரித்தவனின் பொருள் ஏதேனும் கிடைத்தால், பொருளை இழந்தவன், தான் இழந்த பொருளுக்குப் பதிலாக அதை எடுத்துக் கொள்ளல்.
1124. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகிறீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந்துபசாரம் செய்ய மறுக்கிறார்கள் எனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒரு சமூகத்திடம் சென்று விருந்தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தனரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று எங்களுக்கு பதில் தந்தார்கள்.
''ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில் தன்னுடைய அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டையைப் பதிப்பதைத் தடுக்கலாகாது.''
1125. அப்துர் ரஹ்மான் இப்னு ஹுர் முஸ்அல் அஃரஜ்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒருவர், தன் (வீட்டுச்) சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (அல்லது உத்திரம், கர்டர், பரண் போன்ற எதையும்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று கூறினார்கள் என்று சொல்லிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி), 'என்ன இது? உங்களை இதை (நபியவர்களின் இந்தக் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்'' என்று கூறுவார்கள்.
வீட்டு முற்றத்தில் அமர்வதும் பாதைகளில் அமர்வதும்.
1126. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ''நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.
விசாலமான பொதுப் பாதையில் எவ்வளவு வழிவிடுவது என்ற சச்சரவு எழுமானால், நிலத்தின் உரிமையாளர் அதில் கட்டடம் எதுவும் எழுப்ப விரும்பினால் ஏழு முழங்கள் அளவிற்கு மக்களின் போக்குவரத்துப் பாதைக்காக இடம் விடவேண்டும்.
1127. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நடைபாதை விஷயத்தில் மக்கள் சச்சரவு செய்தபோது, ஏழு முழங்கள் நிலத்தைப் பொதுவழியாக (போக்குவரத்துச் சாலையாக)விட்டுவிட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
ஒருவரின் உடைமையை அவரின் அனுமதியின்றி அபகரித்துக் கொள்வது.
1128. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரின் அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின்போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
தன் செல்வத்தைக் காப்பதற்காகப் போராடுதல்.
1129. தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அடுத்தவரின் உணவுத் தட்டு முதலிய பொருள்களை உடைத்து விட்டால் (நஷ்ட ஈடு தர வேண்டுமா?)
1130. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களில் ஒருவரிடம் இருந்தார்கள். விசுவாசிகளின் தாய்மார்களின் ஒருவர் (நபியவர்களின் மனைவிமார்களில் ஒருவர்) பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள ஒரு தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். (அவர்கள் உணவு) கொடுத்தனுப்பிய வீட்டிலிருந்த நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து, உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்), 'உண்ணுங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும்வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப்பெண்ணையும் அங்கேயே நிறுத்தினார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்தார்கள்.
Sunday, 20 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment