Thursday, 1 October 2009

[பாடம்-50] சாட்சியங்கள்.

சிறந்த தலைமுறை.

1175. மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

1176. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)'' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)'' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்'' என்று கூறினார்கள். 'நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

1177. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்'' என்று கூறினார்கள்.

1178. ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன: நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்க, அவரின் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), 'ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?' என்று கேட்டார்கள். 'ஆம் (இது அப்பாதின் குரல் தான்)'' என்று நான் பதிலளித்ததும் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்'' என்று பிரார்த்தித்தார்கள்.

பெண்களில் ஒருவர் மற்றவரை நேர்மையானவர் என்று உறுதி செய்வது.

1179. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்தபோது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ என்பவர் படையினர் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலைவரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்'' என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார்.

இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும்போது நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்பார்கள்; (பிறகு போய் விடுவார்கள்.) அவ்வளவு தான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்'' என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்டார்கள். நான் 'என்தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்'' என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன்.

என் தாயாரிடம், 'மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்தை பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்'' என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலைவரை கழித்தேன். காலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்'' என்று அவர்கள் கூறினார்கள். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா(ரலி), 'தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார். உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை'' என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்'' என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது'' என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, 'நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)'' என்று கூறிவிட்டு, 'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்'' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், 'அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால்... நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்... நீங்கள் அதை நம்பப் போவதில்லை. நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை (யஃகூப்(அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது. நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (குர்ஆன் 12:83). பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல. மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்'' என்றே எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை. வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்'' என்று கூறினார்கள். என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்'' என்று கூறினார்கள். நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்'' என்றேன். அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்'' என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள். உடனே அல்லாஹ், 'உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிபளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்'' என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; 'ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்'' என்று பதிலளித்தார்கள். ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1180. அபூ பக்ர்(ரலி) கூறினார். ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி(ஸல்) அவர்கள், 'அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்'' என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, 'தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், 'இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்'' என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்'' என்றார்கள்.

1181. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

பிரமாண வாக்குமூலம் தர வேண்டிய ஒரு சமுதாயத்தார் அதற்காக ஒருவரையொருவர் முந்திக் கொண்டால்... (குலுக்கல் முறை கையாளப்படும்.)

1182. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும் படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

1183. 'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1184. (பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.

தலைவர் தம் தோழர்களிடம், 'நம்மை அழைத்துச் செல்லுங்கள்; நாம் (அவர்களிடையே) சமாதானம் செய்து வைப்போம்'' என்று சொல்லுதல்.

1185. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், 'நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்'' என்று கூறினார்கள்.

1186. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி(ஸல்) அவர்கள், 'மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாள்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, 'இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள்'' என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், 'நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்'' என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்பதை அழித்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, 'இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்து(கள் கொண்ட பத்திரம்) ஆகும். (அந்த ஷரத்துகளாவன:) (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையக்கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது'' என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி(ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணையான மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது'' என்றார்கள். நபி(ஸல்) அவர்களும் (மக்காவை விட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!'' என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்'' என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்'' என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்'' என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்'' என்றார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)'' என்று கூறினார்கள்.

1187. மேலும், '(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(ரலி) அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), 'இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்'' என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்'' என்று அபூ பக்ரா(ரலி) கூறியதை கேட்டேன்.

(தகராறு செய்து கொள்ளும் இருவரை) சமாதானம் செய்து கொள்ளும்படி ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தலாமா?

1188. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) புறப்பட்டு வந்து, 'நன்மை(யான செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?' என்று கேட்டார்கள். அந்த மனிதர், 'நானே இறைத்தூதர் அவர்களே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்'' என்று கூறினார்.

0 comments:

Post a Comment