Sunday, 25 October 2009

[பாடம்-60] திருமணம்.

மணமுடித்துக் கொள்ள ஆர்வமூட்டுதல்.

1828. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்'' என்று கூறினார். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.

துறவறமும் (ஆண்மை நீக்கம் செய்து கொள்ள) காயடித்துக் கொள்வதும் வெறுக்கத்தக்கவை ஆகும்.

1829. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார் உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.

1830. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நான் (ஒருமுறை) 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணந்துகொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக் கொள்ளலாமா?)'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) மௌனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகும், நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காது முறையாக) முன்போன்றே நான் கேட்டபோது, 'அபூ ஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கிற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூட காய்ந்துவிட்டது. எனவே, நீங்கள் காயடித்துக் கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்று தான். )'' என்று கூறினார்கள்.

கன்னிப்பெண்ணை மணமுடித்தல்.

1831. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (ஒருமுறை) நான் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்குகிறீர்கள். அதில் (கால்நடைகளினால்) உண்ணப்பட்டுப்போன ஒரு மரத்தையும் உண்ணப்படாத ஒரு மரத்தையும் காண்கிறீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள் ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்!'' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'எதில் ஏற்கெனவே மேயவிடப்படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்)'' என்று பதிலளித்தார்கள். தம்மைத் தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மணக்கவில்லை என்ற கருத்தில் தான் ஆயிஷா(ரலி) இவ்வாறு கூறினார்கள்.

(வயதில்) சிறியவர்களைப் பெரியவர்களுக்கு மணமுடித்து வைத்தல்.

1832. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.

(மணமக்களிடையே) மார்க்கப் பொருத்தம் (பார்த்தல்.)

1833. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா இப்னு உத்பா(ரலி), (பாரசீகரான மஅகில் என்பவரின் புதல்வர்) சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கினார்கள். மேலும், அவருக்குத் தம் சகோதரர் வலீத் இப்னு உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி(ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டது போல் (சாலிமை அபூ ஹுதைஃபா(ரலி) வளர்ப்பு மகனாக ஆக்கிக்கொண்டார்கள். மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவரின் வளர்ப்புத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரின் சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.

எனவே, 'நீங்கள் (வளர்த்த) அவர்களை அவர்களின் (உண்மையான) தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதியாக இருக்கிறது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுடைய மார்க்கச் சகோதரர்களாகவும் உங்கள் மார்க்க சிநேகிதர்களாகவும் இருக்கிறார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது.) பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களின் சொந்தத் தந்தையாருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் மார்க்க சிநேகிதராகவும் மார்க்கச் சகோதராகவும் ஆனார். பிறகு, அபூ ஹுதைஃபா இப்னு உத்பா(ரலி) அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் சாலிமை (எங்களுடைய) பிள்ளையாகவே கருதிக்கொண்டிருந்தோம். (வளர்ப்பு மகனான) அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (திருக்குர்ஆன் 33:5 வது) வசனத்தை அருளிவிட்டான்'' என்று தொடங்கும் ஹதீஸை (அறிவிப்பாளர் அபுல் யமான் இப்னு ஹகம்(ரஹ்) முழுமையாகக்) கூறினார்கள்.

1834. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர்(ரலி) அவர்களிடம் சென்று, 'நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்! என்றார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாளியாகவே இருக்கிறேன்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரிடம், 'நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக 'இஹ்ராம்' கட்டி, இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்'' என்று சொல்லிவிடு!' எனக் கூறினார்கள். ளுபாஆ(ரலி) மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் துணைவியாராவார்.

1835. நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1837. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் ஒரு (பணக்கார) மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), 'இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்' எனக் கூறினார்கள்.

1837. (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யும் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

இரத்த உறவினால் மணமுடிக்கக் கூடாதவர்களைப் பால்குடி உறவினாலும் மணமுடிக்கக் கூடாது.

1838. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார் (ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைக் கேட்டேன். அப்போது நான் (நபி(ஸல்) அவர்களிடம்) இறைத்தூதர் அவர்களே! இதோ உங்கள் (துணைவியார் ஹஃப்ஸாவின்) வீட்டுக்குள் செல்ல ஒருவர் அனுமதி கேட்கிறார்'' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர் இன்னார் என கருதுகிறேன்'' என்று ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் குறித்துக் கூறினார்கள். நான் 'இன்னார் உயிருடன் இருந்தால் அவர் என்னைத் திரையின்றி சந்தித்திருக்க முடியும்தானே!'' என்று என்னுடைய பால்குடித் தந்தiயின் சகோதரர் குறித்துக் கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆம்! (முடியும்.) பிறப்பு (இரத்த உறவு) எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் பால் குடியும் நெருங்கியவையாக ஆக்கிவிடும்'' என்று கூறினார்கள்.

1839. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம் 'தாங்கள் ஹம்ஸா(ரலி) அவர்களின் புதல்வியை மணந்து கொள்ளக் கூடாதா?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்'' என்று கூறினார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1840. உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) கூறினார் நான் (என் கணவர்) நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ சுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இதை நீயே விரும்புகிறாயா?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், 'ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன்'' என்றேன். அதற்கு அவர்கள், 'எனக்கு அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று'' என்றார்கள். நான் 'தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!'' என்று கேட்டேன். '(அதாவது என் துணைவியார்) உம்முஸலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?' என நபியவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அவள் (-உம்முஸலமாவின் மகள்-) என்னுடைய மமடியில் வளர்ப்பு மகளாக இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுபைவா பாலூட்டினார். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்: ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூ லஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், '(மரணத்திற்குப் பிறகு) நி எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார்.

பால்குடியில் சிறிதளவும் அதிகளவும் நெருங்கிய உறவை (மஹ்ரம்) ஏற்படுத்தும்.

1841. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், 'இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி(ஸல) அவர்கள், 'உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப்பால் அருந்தியிருந்தால்) தான்'' என்று கூறினார்கள்.

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் (அத்தையையும்) சேர்த்து மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.

1842. ஜாபிர்(ரலி) அறிவித்தார் (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், அல்லது தாயின் சகோதரியையும் (சேர்த்து) மணமுடிப்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. (ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது. (இதைப் போன்றே) ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேர மனைவியராக்கிக் கொள்ளலாகாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மஹ்ரின்றி பெண் கொடுத்து பெண் எடுத்தல்.

1843. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: 'ஷிஃகார்' முறைத் திருமணத்திற்கு இறைத் தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஒருவர் மற்றெவாருவரிடம் 'நான் என் மகளை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன்; நீ உன் மகளை எனக்குத் திருமணம் செய்து தரவேண்டும்'' என்று (முன் நிபந்தனை) விதித்து மணமுடித்து வைப்பதற்கே 'ஷிஃகார்' எனப்படும். இதில் இரண்டு பெண்களுக்கும் 'மஹ்ர்' (விவாகக் கொடை) இராது.

1844. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களும் ஸலமா இப்னு அக்வஉ(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்: நாங்கள் ஒரு போர் படையில் இருந்தோம். அப்போது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தூதர் ஒருவர் வந்து, 'அல்முத்ஆ' (தவணைமுறை)த் திருமணம் உங்களுக்கு (தாற்காலிமாக) அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 'அல்முத்ஆ' திருமணம் செய்துகொள்ளலாம்' என்று அறிவித்தார்.

1845. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரினார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர், 'இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(இவருக்கு மஹ்ர் கொடுக்க) உம்மிடம் என்ன உள்ளது?' என்று கேட்டார்கள். அவர், என்னிடம் ஒன்றுமில்லை'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'நீர் சென்று, இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடு!'' என்று கூறினார்கள். அவர் போய் (தேடிப் பார்த்து) விட்டுத் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை. இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை. ஆனால், இதோ என்னுடைய இந்த வேட்டி உண்டு. இதில் பாதி அவளுக்கு (மஹ்ர்) என்றார். - அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. (அதனால்தான், வேட்டியில் பாதியைத் தருவதாகக் கூறினார்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்? அதை நீர் உடுத்திக்கொண்டால் அவளின் மீது (அதில்) ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக்கொண்டால் அதில் உம்மீது ஏதும் இருக்காது. (உம்முடைய வேட்டியை கொடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய்?)'' என்று கூறினார்கள். பிறகு அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்து விட்டு எழுந்தார். அவர் செல்வதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அவரை அழைத்தார்கள்' அல்லது 'அவர் அழைக்கப்பட்டார்' (அவர் வந்தவுடன்) அவரிடம், 'உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது?' என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நபியவர்களிடம், '(குர்ஆனில்) இன்ன அத்தியாயம் இன்ன அத்தியாயம் என்னுடன் (மனப்பாடமாக) உள்ளது'' என்று சில அத்தியாயங்களை எண்ணி எண்ணிக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்து கொடுத்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.

திருமணத்திற்கு முன் மணப் பெண்ணைப் பார்ப்பது.

1846. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்: ஒரு பெண்மணி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு அதைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு தம் தலையைத் தொங்கவிட்டார்கள். தம் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப்பெண்மணி, (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இவர் தேவையில்லையென்றால் எனக்கு இவரை மணமுடித்துவையுங்கள்!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் (அவரிடம்), '(மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் பொருள் ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என்னிடம் ஏதும்) இல்லை, இறைத்தூதர் அவர்களே!'' என்று பதில் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்!'' என்றார்கள். அவர் போய் பார்த்துவிட்டு பிறகு திரும்பி வந்து, 'இல்லை. இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இரும்பாலான ஒரு மோதிராமாவது (கிடைக்குமா எனப்) பார்!'' என்றார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஏதும் கிடைக்கவில்லை)'' என்றார். ஆனால், இதோ இந்த என்னுடைய வேட்டி உள்ளது'' என்றார்.-அறிவிப்பாளர் ஸஹ்ல்(ரலி) கூறினார்: அவரிடம் ஒரு மேல்துண்டு கூட இல்லை. எனவேதான் தம் வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகக் கூறினார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உம்முடைய (இந்த ஒரு) வேட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்? அந்த வேட்டியை நீர் உடுத்திக்கொண்டால், அவளின் மீது அதில் ஏதும் இருக்காது. அதை அவள் உடுத்திக் கொண்டால் உம் மீது அதில் ஏதும் இருக்காது. (உம்முடைய வேட்டியைக் கொடுத்து)விட்டு என்ன செய்யப்போகிறாய்?)'' என்று கேட்டார்கள். அவர் நெடுநேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டுப் பிறகு எழுந்தார். அவர் திரும்பிச் செல்வதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரை அழைத்து வருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அழைத்து வரப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், '(குர்ஆனில்) இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னுடன் உள்ளன'' என்று அவற்றை அவர் எண்ணி எண்ணிக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?' என்று கேட்டார்கள். 'ஆம் (ஓதுவேன்)'' என்று அவர் பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் செல்லலாம்!'' என்று கூறினார்கள்.

மணவிலக்கு பெற்றவர் மீண்டும் சேர்ந்திருக்க...

1847. மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார் அந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரி ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய 'இத்தா'க் காலத் தவணை முடிந்தபோது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், 'நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்'' என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ், '...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன்.

தந்தையோ, மற்ற காப்பாளரோ கன்னிப்பெண்ணிற்கோ, கன்னி கழிந்த பெண்ணிற்கோ அவர்களின் விருப்பமில்லாமல் மணமுடித்து வைக்கக் கூடாது.

1848. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், 'கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள்.

1849. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : நான், 'இறைத்தூதர் அவர்களே! கன்னிப் பெண் வெட்கப்படுவாளே?' என்று கேட்டேன். அதற்கு, 'அவளுடைய மௌனமே சம்மதம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் தம் மகளுக்கு அவளுடைய விருப்பமின்றி மணமுடித்து வைத்தால், அத்திருமணம் செல்லாது.

1850. கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார் கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

தம் சகோதர (இஸ்லாமிய)ன் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை மற்றவர் பெண் கேட்கலாகாது. ஒன்று, அவர் மணந்து கொள்வார்; அல்லது கைவிட்டுவிடுவார். (அதுவரை இவர் பொறுத்திருக்கவேண்டும்.)

1851. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மேலும், ஒருவர் தம் சகோதர (இஸ்லாமிய)ன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு (தமக்காக அவளைப்) பெண் பேசலாகாது. தமக்கு முன் பெண் கேட்டவர் அதைக் கைவிடும்வரை அல்லது இவருக்கு அவர் அனுமதியளிக்கும் வரை (இவர் பொறுத்திருக்க வேண்டும்) என்றும் கூறினார்கள்.

ஒரு பெண் (தன்னை மணக்கவிரும்புகிறவரிடம் அவரின் முதல் மனைவியான) மற்றொரு பெண்ணை விவாகவிலக்குச் செய்துவிடவேண்டும் என நிபந்தனை விதிக்கக் கூடாது.

1852. ஒரு பெண், மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை)க் காலி செய்(துவிட்டு அதைத் தன்னுடையாக்கிக் கொள்)வதற்காக அவளை விவாகவிலக்குச் செய்திடுமாறு (தம் மணாளரிடம்) கோர அனுமதியில்லை. ஏனெனில், அவளுக்கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மணப்பெண்ணை மாப்பிள்ளையிடம் அனுப்பி வைக்கும் (தோழிப்) பெண்களும், அவர்கள் சுபிட்சம் வேண்டி பிரார்த்திப்பதும்.

1853. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பகுதி சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.

ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளும்போது செய்யவேண்டிய பிரார்த்தனைகள்.

1854. உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது 'பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ்ஷைத்தான் வ ஜன்னிபிஷ் ஷைத்தான் மா ரஸக்த்தனா' (அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறைவா! என்னை விட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எனக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!') என்று பிரார்த்தித்து அதன்பின்னர் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

1855. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஸைனப்(ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த (வலீமா) மணவிருந்ததைப் போன்று தம் மனைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளிக்கவில்லை. ஸைனப்(ரலி) அவர்களை மணந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை (அறுத்து) மணவிருந்தளித்தார்கள்.

ஓர் ஆட்டைவிடக் குறைந்ததைக் கொண்டு வலீமா விருந்தளிப்பது.

1856. ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலருக்காக (அவர்களை மணந்ததன் பின்) வாற்கோதுமையில் இரண்டு 'முத்து' அளவில் வலீமா விருந்தளித்தார்கள்.

1857. உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பெண்களுக்கு நலம் நாடுதல்.

1858. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். எனவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மனைவியுடனான நல்லுறவு.

1859. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அந்த மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை. இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார்: என் கணவர் (மக்கா உள்ளிட்ட) 'திஹாமா' பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை. கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை. (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை. ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக் கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை. ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் 'விவரமில்லாதவர்' அல்லது 'ஆண்மையில்லாதவர்', சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் உன்னை ஏசுவார். கேலி செய்தால்) உன் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) உன் உடலைக் காயப் படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்: என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர். ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டுமுற்றத்தில்) சாம்பலை நிரைத்துவைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும். பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) 'ஷிக்' எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப் படுத்தப்பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன். (என்கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும். அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும். (என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்துவிடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுபவர்.) (என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள். (என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.) (ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுளங் கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாழ்க்கைப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) 'கத்' எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, 'உம்மு ஸர்உவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு'' என்றார்.(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.)

ஆயிஷா(ரலி) கூறினார்: (என்னருமைக் கணவரான) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), '(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்' என்றார்கள்.

ஒரு பெண் தன் கணவரின் இசைவின்றி யாரையும் அவரின் இல்லத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.

1860. ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரின் அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரின் அனுமதியில்லாமல் (யாரையும்) அவரின் இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரின் பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸிலுள்ள (கூடுதல்) நோன்பு பற்றிய தகவல் (மட்டும்) மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1861. நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

கணவன் பயணம் செய்யவிரும்பும்போது தம் துணைவியரிடையே (யாரை அழைத்துச் செல்வது என்பதைக்) குலுக்கல் முறையில் முடிவு செய்வது.

1862. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), 'இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்'' என்று கூறினார்கள். நான், 'சரி'' என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் 'சலாம்' (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் 'இத்கிர்' புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, 'இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்'' என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி(ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

கன்னி கழிந்த பெண்(ணான மனைவி) இருக்க கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால்..?

1863. அனஸ்(ரலி) அறிவித்தார் கன்னிப் பெண்ணை ஒருவர் மணந்தால் அவளிடம் ஏழு நாள்கள் தங்குவார். கன்னி கழிந்த பெண்ணை ஒருவர் மணந்திருந்தால் அவளிடம் மூன்று நாள்கள் தங்குவார். இதுவே நபிவழியாகும். அறிவிப்பாளர்களில் ஒருவர் (காலித், அல்லது அபூ கிலாபா) கூறுகிறார்: இதை நபி(ஸல்) அவர்களே கூறினார்கள் என்று நான் சொன்னால் (அது தவறாகாது. எனினும், அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதன்படி 'நபிவழி' என்று கூறியுள்ளேன்.)

தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டிக் கொள்வதும், தடை செய்யப்பட்ட சக்களத்திப் பெருமையும்.

1864. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , கிடைக்கப் பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், போலியான இரண்டு ஆடைகளை (அதாவது இரவல் மற்றும் அமானித ஆடைகளை, அல்லது போலியான மேல் மற்றும் கீழ் ஆடைகளை) அணிந்துகொண்டவர் போலாவார்'' என்று கூறினார்கள்.

1865. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1866. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார் என்னை ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்¡ர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எந்த சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமை களும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்¡ர் இறைப்பேன்; அவரின் தோல் கமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. (ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், இறைத்தூதர்(ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். எனக்குத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக 'இஃக், இஃக்' என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸுபைர்(ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து '(வழியில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது'' என்று கூறினார். (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.

பெண்களின் ரோஷமும் கோபமும்.

1867. ஆயிஷா(ரலி) அறிவித்தார் என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), 'முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், 'இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்'' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதன்று)'' என்று கூறினேன்.

மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினர் தவிர (வேறு) எந்த (அன்னிய) ஆணும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கலாகாது. கணவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணிடம் செல்லலாகாது.

1868. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.

ஒரு பெண் மற்றொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவுவதும், அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் வர்ணித்துக் கூறுவதும் கூடாது.

1869. ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்றுமேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் - அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணணை செய்ய வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

1870. உங்களில் ஒருவர் நீண்ட நாள்கள் கழித்து ஊர் திரும்பினால் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்ல வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

1871. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் (தபூக் போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த என்னிடம்) நபி(ஸல்) அவர்கள், 'நீ இரவில் (மதீனாவுக்குள்) நுழைந்த கையோடு உன் வீட்டாரிடம் சென்றுவிடாதே! (வெளியூர் சென்ற கணவரைப்) பிரிந்திருக்கும் பெண் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தன்னை ஆயப்பத்தப்படுத்தி)க் கொள்ளும்வரை, தலைவிரி கோலமாயிருக்கும் பெண் தலைவாரிக்கொள்ளும் வரை (பொறுமையாயிரு!'') என்று கூறிவிட்டு, 'புத்திசாலித்தனமாக நடந்து (குழந்தையைத் தேடிக்)கொள்; என்று கூறினார்கள். இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.

0 comments:

Post a Comment