மரணசாசனங்கள் ஆவண வடிவில்.
1194. (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
1195. அல்லாஹ்வின் தூதருடைய துணைவியார் ஜுவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.
1196. தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார். நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் வஸிய்யத் - மரண சாசனம் செய்தார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நான், 'அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் - மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
மரணத் தருவாயில் தர்மம் செய்வது.
1197. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்'' என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
உறவினர்களுக்காக மரண சாசனம் செய்யப்பட்டால் அதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்களா?
1198. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்'' என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'குறைஷிக் குலத்தாரே!'' என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), 'ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது'' என்று கூறினார்கள்.
(அநாதையின்) பொறுப்பாளர் (தன் பொறுப்பிலுள்ள) அநாதையின் செல்வத்தைக் கையாள உரிமையுண்டு என்பதும், அதிலிருந்து அவரின் உழைப்பிற்கே உண்ணலாம் என்பதும்.
1199. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். உமர்(ரலி) 'தம்ஃக்' என்றழைக்கப்பட்ட தம் சொத்து ஒன்றை அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் தருமம் செய்தார்கள். அது ஒரு பேரீச்சந் தோட்டமாக இருந்தது. அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வத்தைப் பெற்றுள்ளேன். அது என்னிடம் (இருப்பவற்றிலேயே) உயர் தரமானதாகும். எனவே, அதை தருமம் செய்து விட விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிலத்தை (எவருக்கும்) விற்கக் கூடாது. அன்பளிப்பாகவும் தரக்கூடாது. அதற்கு எவரும் வாரிசாகவும் ஆக முடியாது. அதன் வருவாய் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதை தருமம் செய்து விடு'' என்று கூறினார்கள். எனவே, உமர்(ரலி) அதை தருமம் (வக்ஃபு) செய்துவிட்டார்கள். அவர்களின் அந்த தருமம் (வக்ஃபு) அல்லாஹ்வின் பாதையிலும், அடிமைகளை விடுதலை செய்யவும், ஏழைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், உறவினர்களுக்காகவும் வழங்கப்பட்டது. 'நிர்வாகம் செய்பவர் அதிலிருந்து பொது வழக்கப்படி (நியாயமான முறையில்) உண்பதில் அல்லது விரயம் செய்யாமல் தம் நண்பருக்கு உண்ணக் கொடுப்பதில் குற்றமில்லை' என்றும் (அது தொடர்பான ஆவணத்தில்) அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.
1200. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)'' என்று (பதில்) கூறினார்கள்.
வக்ஃபுச் சொத்தை நிர்வகிப்பவருக்குரிய ஊதியம்.
1201. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் வாரிசுகள் பொற்கசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர, நான்விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் ஒரு நிலத்தையோ கிணற்றையோ வக்ஃபு செய்தால், அல்லது மற்ற முஸ்லிம்கள் அந்தக் கிணற்றின் நீரைப் பயன்படுத்துவது போல் தனக்கும் அதைப் பயன்படுத்தும் உரிமையுண்டு என்று நிபந்தனையிட்டால் (அவை செல்லும்.)
1202. அபூ அப்திர் ரஹ்மான்(ரலி) அறிவித்தார். (கலீஃபா) உஸ்மான்(ரலி) (கலகக்காரர்களால்) முற்றுகையிடப்பட்டபோது அவர்களுக்கு மேலிருந்து (வீட்டுக் கூரை மீதிருந்து), 'அல்லாஹ்வின் பெயரால் உங்களைக் கேட்கிறேன். நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களைத் தான் கேட்கிறேன். 'ரூமா' என்னும் கிணற்றை (விலைக்கு வாங்கி) தூர்வாரி (பொது மக்கள் நலனுக்காக வக்ஃப் செய்து) விடுகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற, நான் அதை (விலைக்கு வாங்கித்) தூர் வாரி (வக்ஃபாக ஆக்கி)யது உங்களுக்குத் தெரியாதா? நபி(ஸல்) அவர்கள் 'பொருளாதார நெருக்கடியிலிருக்கும் (தபூக் போருக்கான) படையை (பொருளுதவியால்) தயார்படுத்துகிறவருக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்று கூற, நான் அதைத் தயார்படுத்தியது உங்களுக்குத் தெரியாதா?' என்று கூறினார்கள். நபித்தோழர்கள் அவர்கள் கூறியதை உண்மையென ஏற்றனர்.
வக்ஃபு செய்தவரே அதை நிர்வாகம் செய்யலாம். மற்றவர்களும் அதற்கு நிர்வாகியாக இருக்கலாம். ஆக, (அதை) நிர்வகிக்கும் எவருக்கும் அதிலிருந்து உண்ண அனுமதியுண்டு.
1203. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பனூ சஹ்கி குலத்தைச் சேர்ந்த ஒருவர் தமீமுத் தாரீ, அதீ இப்னு பத்தா ஆகியோருடன் பயணம் புறப்பட்டார், அந்த சஹ்கி குலத்தவர் ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஒரு பூமியில் இறந்துவிட்டார். தமீமுத் தாரீயும், அதீயும் அவர் விட்டுச் சென்ற (அவருடைய) சொத்துக்களை எடுத்துக் கொண்டு வந்தபோது (அவற்றில்) தங்கத்தால் செதுக்கிய வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளிப்பாத்திரம் ஒன்றைக் காணவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவ்விருவரிடமும் சத்தியப் பிரமாணம் வாங்கினார்கள். பிறகு அந்தப் பாத்திரம் மக்காவில் சிலரிடம் காணப்பட்டது. அவர்கள், 'நாங்கள் இதை தமீமிடமிருந்தும் அதீயிடமிருந்தும் வாங்கினோம்'' என்று கூறினர். அப்போது (இறந்த) சஹ்கி குலத்தவரின் (நெருங்கிய) உறவினர்களில் இருவர் எழுந்து சத்தியம் செய்து, 'எங்கள் சாட்சியம் அவர்கள் இருவருடைய சாட்சியத்தை விட அதிகத் தகுதி வாய்ந்ததாகும்; (ஏற்கத் தக்கதாகும்)'' என்றும், 'அந்தப் பாத்திரம் எங்கள் தோழருடையதே'' என்றும் கூறினர். அவர்களின் விவகாரத்தில் தான் இந்த (திருக்குர்ஆன் 05:106, 107) இறைவசனம் அருளப்பட்டது.
Monday, 5 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment