Friday 23 October 2009

[பாடம்-59] திருக்குர்ஆனின் சிறப்புகள்.

நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் குர்ஆன்.

1806. ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1807. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து 'வஹீ' (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப்பெற்றதை விட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

குர்ஆன் ஏழு முறைகளில் (வட்டார வழக்கு முறைப்படி) அருளப்பட்டது.

1808. உமர்பின் கத்தாப்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன். (அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்'' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்'' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!'' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!'' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது'' என்று கூறினார்கள். பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!'' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத் தூதர்(ஸல்) அவர்கள், 'இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களை, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள்.

1809. ஃபாத்திமா(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக, '(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்கள்.

1810. ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார் எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேத குர்ஆனை நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.

1811. அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார் நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்துகொண்டிருந்தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்வூத்(ரலி) 'யூசுஃப்' எனும் (12 வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர் (அதனை ஆட்சேபிக்கும் விதமாக) 'இவ்வாறு இந்த அத்தியாயம் அருளப்படவில்லை'' என்று கூறினார். இப்னு மஸ்வூத்(ரலி), '(இவ்வாறுதான்) நான் இறைத்தூதர்(ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், 'மிகச் சரியாக ஓதினாய்' என்று கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். 'மதுவையும் அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை நிறைவேற்றும்படி செய்தார்கள்.

'குல் ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தின் சிறப்பு.

1812. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார் ஒருவர் 'குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று கூறினார்கள்.

1813. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, 'ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?' என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், 'எங்களில் யாருக்கு இந்தச் சக்தி உண்டு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன்' (என்று தொடங்கும் 112 வது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும்' என்று கூறினார்கள்.

1814. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்', ' குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

குர்ஆன் ஓதும்போது மனஅமைதியும் வானவர்களும் இறங்குதல்.

1815. உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார் நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். மீண்டும் ஓதினேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்தி விடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை. காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?)'' என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)தபோது அதைக் காணவில்லை'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக்கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களை விட்டும் அது மறைந்திருக்காது'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் தமக்குக் கிடைத்துள்ளதாக அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னுல் ஹாதி(ரஹ்) கூறினார்கள்.

1816. இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக்கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கற்றுத் தந்தான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் ஓதிவருகிறார். இதைக் கேள்விப்பட்டு அவரின் அண்டை வீட்டுக்காரர், 'இன்னாருக்குக் வழங்கப்பட்டது போல் எனக்கும் வழங்கப்பட்டிருந்தால் நானும் அவர் செயல்படுவது (ஓதுவது) போல் செயல்பட்டிருப்பேனே (ஓதியிருப்பேனே)!'' என்று கூறுகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதனை நேர் வழியில் செலவிட்டு வருகிறார். (இதைக் காணும்) ஒருவர், 'இன்னாருக்கு வழங்கப்பட்டது போல் எனக்கும் (செல்வம்) வழங்கப்பட்டிருக்குமானால் அவர் (தர்மம்) செய்தது போல் நானும் செய்திருப்பேனே'' என்று கூறுகிறார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

குர்ஆனைத் தாமும் கற்று அதனைப் பிறருக்கும் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

1817. குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை உஸ்மான்(ரலி) அவர்களிடமிருந்து அபூ அப்திர் ரஹ்மான் வழியாக ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அறிவித்தார். உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அபூ அப்திர்ரஹ்மான்(ரஹ்) (மக்களுக்கு) குர்ஆனைக் கற்றுக் கொடுத்துவந்தார்கள். ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் (இராக்கின் ஆட்சியாளராக) ஆகும் வரையில் இது தொடர்ந்து. அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள், '(குர்ஆனின் சிறப்பு குறித்துக் கூறப்பட்ட) இந்த நபிமொழியே என்னை (மக்களுக்குக் கற்றுத்தரும்) இந்த இடத்தில் உட்கார வைத்தது'' என்று கூறினார்கள்.

1818. குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அறிவித்தார்.

குர்ஆனை நினைவுப்படுத்திக் கொள்வதும் அதனுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்வதும்.

1819. குர்ஆனை(ப் பார்த்தோ மனப்பாடமாகவோ) ஓதுகிறவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் உரிமையாளரின் நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக் கொள்ளலாம். அதை அவிழ்த்து விட்டுவிட்டாலோ அது ஓடிப்போய்விடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1820. ''இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன்'' என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், 'மறக்க வைக்கப்பட்டு விட்டது' என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்தி வாருங்கள். ஏனெனில், ஒட்டகங்களை விடவும் வேகமாக மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து குர்ஆன் தப்பக்கூடியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இந்த நபிமொழி, வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1821. குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

1822. கத்தாதா(ரஹ்) அறிவித்தார் ''நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?' என அனஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், 'நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் 'பிஸ்மில்லா..ஹ்' என நீட்டுவார்கள், 'அர்ரஹ்மா..ன்' என்றும் நீட்டுவார்கள். 'அர்ரஹீ...ம்' என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

இனிய குரலில் குர்ஆனை ஓதுதல்.

1823. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என என்னிடம் கூறினார்கள்.

1824. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அமர்(ரலி) தம் மருமகளை அணுகி அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம். அப்போது அவள், 'அவர் நல்ல மனிதர் தாம்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை. அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை'' என்று சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, 'என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், 'நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?' என்று கேட்டார்கள். நான், 'தினந்தோறும் நோன்பு நோற்கிறேன்'' என்று சொன்னேன். (''குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்'' என்று கேட்டார்கள். நான், 'ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவர்கள், 'மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை முழுமையாக) ஓதிக்கொள்'' என்று கூறினார்கள். 'நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். 'இரண்டு நாள்கள் நோன்பை விட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!'' என்று கூறினார்கள். நான் இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், '(இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக் கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க் கொள்'' என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன். (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) கூறினார்கள்:) அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) (தம் முதுமையில்) குர்ஆனில் ஏழில் ஒரு பாகத்தை (அதாவது ஒரு மன்ஸிலை) தம் வீட்டாரில் சிலரிடம் பகலில் ஓதிக் காட்டுவார்கள். (இரவில்) ஓதவேண்டுமென அவர்கள் விரும்பிய பாகத்தையே (இவ்வாறு) பகலில் ஓதிக் காட்டுவார்கள். இரவில் (ஓதும்போது) சுபலமாக இருக்கட்டும் என்பதே இதற்குக் காரணம். அன்னார் (நோன்பு நோற்க) சக்தி பெறவேண்டும் என விரும்பும் போது, பல நாள்கள் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு அந்நாள்களைக் கணக்கில் வைத்துக் கொள்வார்கள். பிறகு (வசதிப்படும்போது) அதே அளவு நாள்கள் நோன்பு நோற்பார்கள். நபி(ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்தபோது (-நபியவர்கள் இறந்தபோது) தாம் செய்து வந்த எந்த வழிபாட்டையும் கைவிடுவதை அன்னார் விரும்பாததே இதற்குக் காரணம்.

1825. உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு களைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டு சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன் முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

1826. குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று. வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று. (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் 'கசப்பானது' அல்லது 'அருவருப்பானது' அதன் வாடையும் வெறுப்பானது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

1827. உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஒதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) நீங்கள் கருத்து வேறுபட்டால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இது மற்ற அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

0 comments:

Post a Comment