Saturday 10 October 2009

[பாடம்-54] படைப்பின் ஆரம்பம்.

1348. இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'பனூ தமீம் குலத்தாரே! நற்செய்தி பெற்று மகிழுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தருமமும்) கொடுங்கள்'' என்று கேட்டார்கள். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது. அப்போது யமன் நாட்டினர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'யமன் வாசிகளே! (நான் வழங்கும்) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் படைப்பின் ஆரம்பத்தைக் குறித்தும் அர்ஷ் (இறைசிம்மாசனம்) குறித்தும் பேசலானார்கள். அப்போது ஒருவர் வந்து (என்னிடம்), 'இம்ரானே! உன் வாகனம் (ஒட்டகம்) ஓடிவிட்டது'' என்று கூறினார். (நான் ஒட்டகத்தைத் தேடச் சென்று விட்டேன்.) நான் எழுந்து செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

1349. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், '(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!'' என்று கூறினார்கள். அவர்கள், 'எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்'' என்று (இரண்டு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், 'யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்'' என்று பதில் கூறினார். பிறகு, 'நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்'' என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, 'ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய்விட்டது'' என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! 'நான் அதை அப்படியே விட்டு விட்டிருந்தால் நன்றாயிருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி(ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)' என்று நான் ஆசைப்பட்டேன்.

1350. உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். 'நான் அவனை ஆரம்பமாகப் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டு வர முடியாது' என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் கருணை.

1351. அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய ('லவ்ஹுல் மஹ்ஃபூழ்' என்னும்) பதிவேட்டில் - அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது - 'என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது'' என்று எழுதினான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புனித மாதங்கள்.

1352. வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

சூரியனின் ஸஜ்தா.

1353. அபூ தர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், 'அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, 'வந்த வழியே திரும்பி விடு'' என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்'' என்றார்கள். இதைத் தான், 'சூரியன், தான் நிலை கொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்'' என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது'' என்றார்கள்.

1354. மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு (ஒளியிழந்து) விடும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

வானில் மழை மேகம் கண்டால்...

1355. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), 'இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்'' (திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாமோ என எனக்குத் தெரியாது'' என்று பதிலளித்தார்கள்.

விதி எழுதப்படுதல்.

1356. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை-போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது'' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)

1357. அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!'' என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்'' என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1358. வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

1359. ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1360. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்'' என்று கூறினார்கள்.

1361. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்'' என்று கூறினார்கள். நான், 'வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்'' என்று கூறினேன்.

1362. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம், 'தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதை விட அதிகமாக (அடிக்கடி) சந்திக்க மாட்டீர்களா?' என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள். அப்போது, '(நபியே!) நாம் உங்களுடைய இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை. எமக்கு முன்னிருப்பவையும் எமக்குப் பின்னால் இருப்பவையும் அவனுக்கே உரியவை என்னும் (ஜிப்ரீல்(அலை) அவர்கள் சார்பாக பதில் கூறும் (திருக்குர்ஆன் 19:64) இறைவசனம் அருளப்பட்டது என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

1363. ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

1364. யஃலா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் உரையாற்றியபடி, '(நரகத்தின் பொறுப்பாளரான வானவர் மாலிக்கிடம்,) 'யா மாலிக் - மாலிக்கே! 'உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்' என்று (அந்தக் குற்றவாளிகள்) சப்தமிடுவார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 43:77) இறைவசனத்தை ஓத கேட்டிருக்கிறேன்.

1365. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், '(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது 'அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். 'கர்னுஸ் ஸஆலிப்' என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, 'உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து, எனக்கு சலாம் சொல்லி, பிறகு, 'முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)'' என்று கூறினார். உடனே, '(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன்.

1366. அபூ இஸ்ஹாக் அஷ் ஷைபானீ(ரஹ்) கூறினார். நான் ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அவர்களிடம், '(வஹீ - வேத வெளிப்பாடு நின்று போயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களை நெருங்கி வர) அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தை போல், அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது. பிறகு, 'அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்' என்னும் (திருக்குர்ஆன் 53:9,10) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்'' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எங்களிடம் தெரிவித்தார்கள் என்று விளக்கினார்கள்.

1367. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 'நிச்சயமாக, அவர் தம் இரட்சகனின் சான்றுகளில் பெரியதைக் கண்டார்' என்னும் (திருக்குர்ஆன் 53:18) இறைவசனத்தின் பொருள், 'நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீலை - அடிவானத்தை அடைத்துக் கொண்ட ஒரு பச்சை விரிப்பின் மீது (அல்லது அவர் தன்னுடைய இறக்கையை விரித்தபடி அதனால் அடிவானத்தை அடைத்து விரித்தபடி நிற்கக்) கண்டார்கள்' என்பதாகும்.

1368. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்'' என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்துவிட்டான்: எனினும், அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களை, அவர்களின் (அசல்) உருவிலும் (அசல் படைப்பின்) அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள்.

1369. ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும்வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1370. நான் (மிஃராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா(அலை) அவர்களை 'ஷன்ஆ' குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் பெரும் பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச் சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

''தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்''

1371. உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமை வாழ்வில்) அவரின் இருப்பிடம் (எதுவென்று) காலையிலும், மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். அதாவது, அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கவாசிகளின் இருப்பிடமும், அவர் நரகவாசியாக இருந்தால், நரகவாசியின் இருப்பிடமும் (எடுத்துக் காட்டப்படும்) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1372. நான் (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.

1373. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், 'இந்த அரண்மனை யாருடையது?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். 'உமர் இப்னு கத்தாப் அவர்களினது'' என்று (ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?' என்று கேட்டார்கள்.

1374. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகிற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும். (அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜை (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1375. சொர்க்கத்தில் நுழைகிற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களின் எந்த மன வேறுபாடும் இருக்காது. எந்த விதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளுடைய பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களின் சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களின் தூப கலசங்களின் எரிபொருள் அகிலாக இருக்கும். அவர்களின் வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1376. என் சமுதாயத்தாரிலிருந்து எழுபதாயிரம் பேர்... அல்லது எழு நூறாயிரம் பேர்.. (விசாரணையின்றி சொர்க்கத்தில்) நுழைவார்கள்: அவர்களில் கடைசி நபர் (சொர்க்கம்) புகாதவரை அவர்களில் முதல் நபர் (சொர்க்கம்) புக மாட்டார். அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவைப் போலிருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

1377. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) ஸஅத் இப்னு முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக் குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிட உயர்ந்தவை'' என்று கூறினார்கள்.

1378. சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

1379. சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அது முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்லும்.) நீங்கள் விரும்பினால், '(சொர்க்கவாசிகள்) நீண்ட நிழலில் இருப்பார்கள்'' என்னும் (திருக்குர்ஆன் 56:30) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1380. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ''சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றவர்களேயாவர்'' என பதிலளித்தார்கள்.

காய்ச்சல் நரகப்பெருமூச்சு.

1381. காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

உலக நெருப்பின் சூடு நரகநெருப்பின் சூட்டில் எழுபதில் ஒருபங்கே.

1382. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமானதாயிற்றே'' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்'' என்றார்கள்.

நல்லறங்களைப் பிறரைச் செய்ய ஏவி தாம் செய்யாதவர்.

1383. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார். உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான்(ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'நான் உங்கள் எதிரில் உங்களக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒருவர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதானால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்'' என்று கூறினார்கள். மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?' என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், 'நான் நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லக் கேட்டேன்'' என்றார்கள். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, 'இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு அவர், 'நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்'' என்று கூறுவார். இந்த நபிமொழி மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்படுகிறது.

இப்லீஸும் அவனுடைய சேனைகளும்.

1384. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயா?. என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)'' என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்'' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது'' என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்'' என்று பதிலளித்தார்கள். (இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன'' என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.

1385. உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, 'இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், 'உன் இறைவனைப் படைத்தவர் யார்?' என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1386. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை காட்டியபடி, 'குழப்பம் இங்கு தான். குழப்பம் இங்கு தான். ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து... (அது தோன்றும்)'' என்று கூறினார்கள்.

1387. ''இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடி விடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உன்னுடைய விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

1388. சுலைமான் இப்னு சுரத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரின் தொண்டை நரம்பு புடைத்தது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும், 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்'' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அந்த மனிதரிடம், 'நபி(ஸல்) அவர்கள், 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு'' என்று கூறினார்கள்'' எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், 'எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?' என்று கேட்டார்.

1389. கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்தவரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1390. நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கதாதா(ரலி) அறிவித்தார்.

தூக்கத்தில் ஷைத்தான்.

1391. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான் என இறைத் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

1392. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, 'பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட ('துத் துஃப்யத்தைன்' என்னும்) பாம்பையும் குட்டையான - அல்லது - சிதைந்த வால் கொண்ட ('அப்தர்' எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்'' என்று சொல்ல கேட்டேன். மற்றொரு அறிவிப்பில் நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்'' என்றார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்ல வேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்'' என்று பதிலளித்தார்கள்.

1393. இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (நெருப்பை வணங்கும் மஜூஸிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பாலைவனவாசிகளான ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களிடம் (அடக்கமும் கம்பீரமும் கலந்த) அமைதி காணப்படுகிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1394. உக்பா இப்னு அம்ர் அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி, 'இறை நம்பிக்கை, அதோ அங்கேயிருக்கும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். அறிந்து கொள்ளுங்கள். கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங்களின் வால்களைப் பிடித்தபடி அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரண்டு கொம்புகளும் உதயமாகும். குழப்பங்கள் தலை தூக்கும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தினரிடையே அவை தோன்றும்'' என்றார்கள்.

1395. நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவேதான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவேதான் கத்துகிறது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1396. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பனூஇஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்ட தாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?' என்று வினவினார்கள். நான், 'ஆம் (கேட்டேன்)'' என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)'' என்று கேட்டேன்.

''உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்.

1397. உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1398. விபச்சாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment