Saturday, 17 October 2009

[பாடம்-57A] நபி காலத்துப் போர்கள்

'உஷைரா' அல்லது 'உஸைரா' போர்.

1599. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார் நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கு அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு'' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள். கதாதா(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், 'உஷைரா தான் (சரியான உச்சரிப்பு)'' என்றார்கள்.

பத்ருப் போர் சம்பவம்.

1600. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நான் மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் அவைக்குச் சென்றேன். நான் அவர்களின் அவையில் (பங்கெடுத்த, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான(மற்ற அனைத்)தை விடவும் எனக்கு விருப்பமானதாயிருக்கும். (மிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி - அவர்கள் என்னிடம் கூறினார்கள்:) நான் நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்'' என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது.

1601. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் பத்ருப் போரில் பங்கெடுத்த நபித்தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம். மேலும், பராஉ(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.

1602. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் ''அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!'' என்று கேட்டார்கள். ''நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப் படுத்தியபடி) அவன் கேட்டான்.

1603. அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார் பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, 'இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), 'இறைத் தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை'' என்று கூறினார்கள்.(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.

பத்ருப்போரில் வானவர்கள் பங்கெடுத்தது.

1604. நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்'' என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான ரிஃபாஆ இப்னு ராஃபிஉ அஸ்ஸுரகீ(ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார்.

1605. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்: பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், 'இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார்கள்.

1606. ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார் பத்ருப்போரின்போது நான் உபைதா இப்னு ஸயீத் இப்னி ஆஸ் என்பவனைச் சந்தித்தேன். அவன் தன்னுடைய இரண்டு கண்களைத் தவிர வேறெதுவும் வெளியில் தெரியாத விதத்தில் தன் உடல் முழுவதையும் ஆயுதங்களால் மூடி மறைத்திருந்தான். அவன் 'அபூ தாத்தில் கரிஷ்' (மக்கள் பலம் மிக்கவன்) என்னும் குறிப்புப் பெயரால் அறியப்பட்டு வந்தான். (போர்க்களத்தில் அவன்) நான் 'அபூ தாத்தில் கரிஷ்' (என்று பெருமையாகச்) சொன்னான். நான் அவன் மீது ஈட்டியைப் பாய்ச்சி அவன் கண்களில் தாக்கினேன். உடனே அவன் இறந்துவிட்டான். ''நான் அவன் மீது என்னுடைய காலை வைத்து மிதித்து மிகவும் சிரமப்பட்டு அந்த ஈட்டியை இழுத்தெடுத்தேன். அதன் இரண்டு ஓரங்களும் வளைந்து போயிருந்தன'' என்று ஸுபைர்(ரலி) சொன்னதாக ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:அந்த ஈட்டியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கேட்கவே, ஸுபைர்(ரலி) அதைக் கொடுத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது ஸுபைர்(ரலி) அதை (திரும்ப) எடுத்தார்கள். பிறகு அதை அபூ பக்ர்(ரலி) (இரவலாகக்) கேட்க, அதை அவர்களுக்கு ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். அபூ பக்ர்(ரலி) இறந்தபோது, அதனை உமர்(ரலி) (இரவலாகக்) கேட்டார்கள். அதனை ஸுபைர் அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர்(ரலி) இறந்தபோது அதை ஸுபைர் அவர்கள் எடுத்து (தம்மிடம் வைத்து)க் கொண்டார்கள். பிறகு அவர்களிடம் உஸ்மான்(ரலி) அதைக் கேட்க, அவர்களுக்கும் அதை ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது, அந்த ஈட்டி அலீ(ரலி) அவர்களி(ன் குடும்பத்திரி)டம் வந்தது. அதனை, ஸுபைர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ், (அலீ - ரலி அவர்களின் பிள்ளைகளிடம்) கேட்டார்கள். அப்துல்லாஹ்(ரலி) கொல்லப்படும் வரையில் அது அவர்களிடமே இருந்து வந்தது.

1607. ருபய்யிஉ பின்த் முஅவ்வித்(ரலி) அறிவித்தார் எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் - ரஹ் - அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள்.

1608. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான அபூ தல்ஹா (ஸைத் அல் அன்சாரீ(ரலி) அவர்கள் கூறினார்: ''எந்த வீட்டினுள் நாயோ உருவப் படமோ உள்ளதோ அந்த வீட்டினுள் (இறையருளைச் சுமந்து வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.உயிரினங்களின் சிலைகளையும், உருவப்படங் களையும் கருத்திற் கொண்டே நபி(ஸல்) அவர்கள் (இப்படிக்) கூறினார்கள்'' (என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.)

1609. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் உமர் இப்னு கத்தாப்(ரலி) (தம் மருமகன்) குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) இறந்துவிட்டதால் (மகள்) ஹஃப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.) -குனைஸ் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், பத்ருப்போரில் பங்கெடுத்தவருமாயிருந்தார்கள். மேலும், மதீனாவில் இறந்தார்கள். உமர்(ரலி) கூறினார்: எனவே, நான் உஸ்மான் இப்னு அஃப்பான் அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, 'நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்' என்று கூறினேன். (அதற்கு) உஸ்மான்(ரலி), '(உங்கள் மகளை நான் மணந்து கொள்ளும்) இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது.(யோசித்த பின் என்னுடைய முடிவைக் கூறுகிறேன்)'' என்று கூறினார்கள். சில நாள்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானைச் சந்தித்தபோது) அவர் 'இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்'' என்று கூறினார்கள். எனவே, நான் அபூ பக்ர் அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) 'நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை மணம் புரிந்து கொள்ளுங்கள் எனக்கேட்டேன். அவர்கள் பதிலேதும் கூறவில்லை. பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை மணம் புரிய பெண் கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூ பக்ர் அவர்கள் என்னைச் சந்தித்தபோது, 'நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்னபோது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மன வருத்தம் இருக்கக் கூடும்' என்று கூறினார்கள். நான், 'ஆம்'' என்று கூறினேன். (அதற்கு அபூ பக்ர் (ரலி) அவர்கள் 'நீங்கள் கூறியபோது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணப்பது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான், உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்'' என்று கூறினார்கள்

1610. 'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

1611. உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரஹ்) கூறினார்: பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பராயிருந்தவரும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து, நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என் கை ஒன்றை வாளால் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னைவிட்டுப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடிக் கொண்டு, 'அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்' என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(வேண்டாம்.) அவனைக் கொல்லாதே'' என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்!'' என்று கேட்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன்பு அவனிருந்த (குற்றவாளியான) நிலைக்கு நீ சென்று விடுவாய்' என்று கூறினார்கள்.

1612. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் 'அத்தூர்' (என்னும் 56-வது) அத்தியாயத்தை ஒதிக் கொண்டிருக்க கேட்டேன். இதுதான் இறைநம்பிக்கை என்னுடைய இதயத்தில் இடம் பிடித்த முதல் சந்தர்ப்பமாகும். மேலும் நபி(ஸல்) அவர்கள் பத்ருப்போரில் பிடிபட்ட கைதிகள் தொடர்பாகக் கூறினார்கள்: முத்யிம் இப்னு அதீ உயிரோடியிருந்து இந்த அசுத்தம் பிடித்தவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டுவிடும்படி அவர் என்னிடம் (பரிந்து) பேசியிருந்தால், நான் அவருக்காக இவர்களை (பிணைத் தொகை வாங்காமலேயே) விட்டு விட்டிருப்பேன்.

1613. (மதீன யூதர்களான பனூ) நளீர் குலத்தாரும் (பனூ) குறைழா குலத்தாரும் (நபி - ஸல் அவர்களின் மீது) போர் தொடுத்தனர். எனவே, பனூ நளீர் குலத்தாரை நபி(ஸல்) அவர்கள் நாடு கடத்தினார்கள். (பனூ) குறைழா குலத்தார் (வருத்தம் தெரிவித்ததால் அவர்கள்) மீது கருணை காட்டி (மன்னித்து) அவர்களை அங்கேயே (வசிக்க) விட்டுவிட்டார்கள். (ஆனால், பனூ) குறைழா குலத்தினரும் போர் தொடுத்தபோது அவர்களின் ஆண்களைக் கொலை செய்தார்கள். மேலும், அவர்களின் பெண்களையும் அவர்களின் குழந்தைகளையும், அவர்களின் உடைமைகளையும் முஸ்லிம்களுக்கு மத்தியில் (போர்ச் செல்வமாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் வந்து சேர்ந்து கொண்ட (பனூ குறைழாக்கள்) சிலருக்கு அவர்கள் பாதுகாப்பு மாறிவிட்டனர். அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களின் குலத்தாரான 'பனூ கைனுகா' கூட்டத்தாரையும் பனூ ஹாரிஸா (குலத்தாரான) யூதர்களையும், மதீனா நகரத்தைச் சேர்ந்த யூதர்கள் அனைவரையும் (ஆக) மதீனாவிலிருந்த எல்லா யூதர்களையும் நாடு கடத்திவிட்டார்கள்.

1614. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தேசத் துரோகிகளும் கொடுஞ் செயலாளர்களுமான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள். அது 'புவைரா' என்னும் இடமாகும். எனவேதான் 'நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)'' என்னும் (திருக்குர்ஆன் 59:05) இறைவசனம் அருளப்பட்டது என்று அனஸ்(ரலி) அறிவித்தார்.

1615. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: (அபூ பக்ர் - ரலி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது) நபி(ஸல்) அவர்களின் துணைவியர் உஸ்மான்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி, அல்லாஹ் தன் தூதருக்கு ஒதுக்கித் தந்த (போர் புரியாமல் கிடைத்த ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வத்திலிருந்து தங்களுக்குச் சேரவேண்டிய எட்டில் ஒரு பகுதியைக் கேட்டனர். நான் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தேன். 'நீங்கள் அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்களா? நபி(ஸல்) அவர்கள், '(நபிமார்களான நாங்கள்விட்டுச் செல்லும் சொத்தில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே' என்று தம்மை(யும் தம் ஃபய்உ சொத்தையும்) கருத்தில் கொண்டு கூறக் கூடிறயவர்களாக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? மேலும், 'முஹம்மதின் குடும்பத்தார் இச்செல்வத்திலிருந்து (சிறிதளவைத்) தான் உண்பார்கள்; (இச்சொத்து முழுவதும் அவர்களுக்கு மட்டுமே உரியதன்று)' என்றும் நபியவர்கள் கூறினார்கள் (என்பதும் நீங்கள் அறியாததா?)'' என்று நான் எடுத்துரைத்தவற்றைக் கேட்டு நபி(ஸல்) அவர்களின் துணைவியர் (தங்களின் கருத்தை மாற்றிக் கொண்டு பங்கு கேட்பதை) நிறுத்திக் கொண்டார்கள்.

கஅப் இப்னு அஷ்ரஃப் (என்ற யூதன்) கொல்லப்படுதல்.

1616. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்'' என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்'' என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இந்த மனிதர் (முஹம்மத் - ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்'' என்று (நபி - ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, 'உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்'' என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்'' என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)'' என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, 'நீ எங்களுக்கு ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்கு (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று கூறினார்கள். அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், 'சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'நீ எதை விரும்புகிறாய் (கேள்)?' என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், 'உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)'' என்று கூறினார்கள்'' (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, 'இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்'' என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா(ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். - அபூ நாயிலா(ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் - அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், 'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறுயாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்'' என்று பதிலளித்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்'' என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை'' என்று கூறினார்கள்'' மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)'' என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)'' என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்'' என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.

அபூ ராஃபிஉ கொலை.

1617. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூ ராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னுஅத்தீக்(ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூ ராஃபிஉ இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் புண்படுத்தி வந்ததுடன், அவர்களுக்கெதிராக (ப் பகைவர்களுக்கு) உதவியும் செய்து வந்தான். அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்து தன்னுடைய கோட்டையில் இருந்தான். எனவே, அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்து விட்டிருந்தது. மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் இப்னு அத்தீக்(ரலி) தம் சகாக்களிடம், 'நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு) உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்து வருகிறேன்'' என்று கூறினார். உடனே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார். பிறகு, தம் ஆடையினால் தம்மை மூடிக் கொண்டு இயற்கைக்கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில்) அமர்ந்தார். (கோட்டை வாசிகளான) மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்துவிட்டனர். அப்போது காவலன், 'அல்லாஹ்வின் அடியானே! (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்து கொள். நான் வாசலை மூடப் போகிறேன்'' என்று கூறினான். உடனே நான் உள்ளே நுழைந்து (ஓரிடத்தில்) பதுங்கிக் கொண்டேன் மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடிவிட்டான். பிறகு சாவிகளை ஒரு கொழுவி(கொக்கி)யில் தொங்கவிட்டான். நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக் கொண்டேன். பிறகு வாசலைத் திறந்தேன். அபூ ராஃபிஉவிடம் இராக்கதை சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவன் தன்னுடைய மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து (விடைபெற்றுச்) சென்றபோது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன். (கோட்டையின்) ஒவ்வொரு வாசலையும் திறக்கும் போதும் உள்ளிருந்து நான் தாழிட்டுக் கொண்டே சென்றேன். மக்கள் என்னை இனம் கண்டு கொண்டாலும் அபூ ராஃபிஉவை நான் கொன்று விடும் வரையில் அவர்கள் என்னை வந்தடைய போவதில்லை'' என்று நான் (என் மனத்திற்குள்) கூறிக் கொண்டேன். பிறகு அவனிடம் போய்ச் சேர்ந்தேன். அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான். அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது நான், 'அபூ ராஃபிஉவே!'' என்று அழைத்தேன். அவன், 'யார் அது?' என்று கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன். (இருப்பினும், என் நோக்கம்) எதையும் நான் நிறைவேற்றி (விட்)ட(தாகத் கருத)வில்லை. அப்போது அவன் கூச்சலிட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன். சிறிது நேரம் தாமதித்து மீண்டும் அவனிடம் வந்து, 'அபூ ராஃபிஉவே! இது என்ன சத்தம்'' என்று (அவனுக்கு உதவ வந்தவன் போல்) கேட்டேன். அதற்கு அவன், 'உன்னுடைய தாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து) சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான்'' என்று கூறினான். உடனே நான் ஆழப்பதியும் படி இன்னொரு வெட்டு வெட்டினேன். (அப்போதும்) அவனை நான் கொல்ல (முடிய) வில்லை. பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன். அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்து கொண்டேன். பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்து கொண்டே சென்று அவனுடைய ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்.) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டு என்னுடைய காலை வைத்தேன். (ஆனால்,) நிலவு காயும் (அந்த) இரவில் நான் விழுந்து விட்டேன். அப்போது என்னுடைய கால் உடைந்துவிட்டது. உடனே நான் தலைப்பாகதை(த் துணி)யால் அதற்குக் கட்டுப்போட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை) வாசலில் அமர்ந்து கொண்டேன். 'நான் அவனைக் கொன்று விட்டேன் என்று (உறுதியாக) அறியும் வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து) நரக மாட்டேன்'' என்று (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். பிறகு, அதிகாலையில் சேவல் கூவியபோது மரணச் செய்தி அறிவிப்பவன் கோட்டைச் சுவர் மீது நின்று, 'ஹிஜாஸ் வாசிகளின் (பிரபல) வியாபாரி அபூ ராஃபிஉ இறந்துவிட்டார்'' என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து, 'விரைவாகச் செல்லுங்கள். அபூ ராஃபிஉவை அல்லாஹ் கொன்றுவிட்டான்'' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், 'உன்னுடைய காலை நீட்டு'' என்று கூறினார்கள். நான் என் காலை நீட்டினேன். அதில் (தம் கரத்தால்) தடவிவிட்டார்கள். (என்னுடைய கால் குணமடைந்து) ஒருபோதும் நோய் காணாதது போல் அது மாறிவிட்டது.

உஹதுப்போர்.

1618. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறினார்: உஹுதுப் போரின்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தம் கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்துவிட்டு (களத்தில் குதித்து), தாம் கொல்லப்படும் வரையில் போரிட்டார்.

1619. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்: உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களை பார்த்தேன். அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விரு வரையும் நான் பார்த்ததில்லை.

1620. ஸஅத் இப்னு அபீ வாக்காஸ்(ரலி) அறிவித்தார்: உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அம்புக் கூட்டிலிருந்து எனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (என்னிடம்), 'அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினார்கள்.

1621. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்: (உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு - ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறியதற்குப் பின்னால், நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை'' என்னும் (திருக்குர்ஆன் 03: 128-வது) வசனத்தை இறக்கியருளினான்.

1622. சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்டபோது எதிரிகளான) ஸஃப்வான் இப்னு உமய்யா, சுஹைல் இப்னு அம்ர், ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, 'அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற 3:129-வது வசனம்) அருளப்பட்டது.

ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) கொல்லப்பட்ட நிகழ்ச்சி.

1623. ஜஅஃபர் இப்னு அம்ர் இப்னி உமய்யா அள்ளம்ரீ(ரஹ்) அறிவித்தார்: நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் இப்னு அதீ இப்னி கியார்(ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு வந்து சேர்ந்தபோது என்னிடம், உபைதுல்லாஹ் இப்னு அதீ அவர்கள், '(உஹுதுப் போரின்போது ஹம்ஸா - ரலி - அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா(ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!'' என்று கூறினார்கள். நான், சரி என்றேன். வஹ்ஷீ அவர்கள் ஹிம்சில் வசித்துக் கொண்டிருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். 'அவர் தம் அந்த கோட்டைக்குள் இருக்கிறார். அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல்பை போன்று (பருமனாக) இருப்பார்'' என்று எங்களிடம் கூறப்பட்டது. பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு, அவருக்கு சலாம் சொன்னபோது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் கூறினார். உபைதுல்லாஹ்(ரலி) தம் தலைப்பாகைத் துணியினால், தம் இரண்டு கண்களையும் கால்களையும் தவிர வேறெவதையும் வஹ்ஷீ அவர்கள் பார்க்காத முடியாத அளவிற்கு சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ்(ரலி), 'வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?' என்று கேட்டார்கள். அப்போது வஹ்ஷீ, உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு, 'அல்லாஹ்வின் மீதாணையாக!'' இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அது பின்கியார் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார். அவருக்கு, 'உம்மு கித்தால் பின்த் அபில் ஈஸ்' என்று சொல்லப்படும். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஓர் ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்கு பாலூட்டும் செவிலித் தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டுபிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது பார்த்தேன்.) உன் இரண்டு பாதகங்களைப் பார்த்தல் அது போன்றே இருக்கிறது'' என்று கூறினார். அப்போது உபைதுல்லாஹ்(ரலி), மூடியிருந்த தம் முகத்தைத் திறந்தார்கள். பிறகு, 'ஹம்ஸா(ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். வஹ்ஷீ, 'சரி'' (சொல்கிறேன்)'' என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:) ஹம்ஸா(ரலி) பத்ருப்போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா இப்னு அதீ இப்னி கியார் என்பாரைக் கொலை செய்தியிருந்தார். எனவே, என் எஜமான் ஜுபைர் இப்னு முத்யிம் என்னிடம், 'என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்'' என்று கூறினார். எனவே, அய்னைன் (உஹுது) ஆண்டில் - அய்னைன் என்பது உஹுது மலைக்கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரண்டு மலைகளுக்குடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ இப்னு அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியைவிட்டு) முன்னால் வந்து, '(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?' என்று கேட்டான். அவனை நோக்கி ஹமஸா பின்அப்தில் முத்தலிப்(ரலி) கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் (பகைத்துக் கொண்டு) மோத வந்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். பிறகு ஹம்ஸா(ரலி) அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள். அவன் கழிந்து போய்விட்ட நேற்றைய தினம் போல் (மடிந்தவனாக) ஆகிவிட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (க் கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, என்னுடைய ஈட்டியை அவரின் மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரின் புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்போது, என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார்கள்: (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)'' என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டபோது, 'நீ வஹ்ஷீ தானே?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று கூறினேன். 'நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான், 'உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான்'' என்று கூறினேன். அப்போது அவர்கள், '(உன்னைக் காணும்போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?' என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன். நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போரிடுவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூ பக்ர் ஸித்தீக்(ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), 'நிச்சயம் நான் முஸைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா(ரலி) அவர்களைக் கொன்தற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம்'' என்று கூறிக் கொண்டேன். (அபூ பக்ர் - ரலி அவர்கள அனுப்பிய போர்ப்படையிலிருந்து) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது. அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்றிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) என்னுடைய ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனுடைய இரண்டு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனுடைய பின் தோள்களுக்கிடை யிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தம் வாளால் அவனுடைய உச்சந்தலை மீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முஸைலிமா)

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்:(முஸைலிமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, 'அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்'' என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.

உஹுத் நாளில் நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.

1624. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (உஹுதுப் போரில் உடைக்கப்பட்ட) தம் (முன் வாய்ப்பற்களில், கீழ்வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி 'நபியை (இப்படிச்) செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது'' என்று கூறினார்கள். (மேலும், 'இறைவழியில் (அறப்போரில்) இறைத்தூதர் தம் கரத்தால் எவனைக் கொன்று விடுவார்களோ அவன் மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1625. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்: ''தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் எற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகை யோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு'' என்னும் (திருக்குர்ஆன் 03:172 -வது) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா(ரலி) ஓதிவிட்டு என்னிடம், 'என் சகோதரி மகனே! உன் தந்தை ஸுபைர்(ரலி) அவர்களும் (என் தந்தையும் உன் பாட்டனாருமான அபூ பக்ர்(ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம். உஹுத் நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோது இணைவைப்பவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி(ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) 'அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்?' என்று கேட்டார்கள். (உஹுதில் பங்கெடுத்த) நபித்தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர்'' என்று கூறினார்கள். அவர்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களும், ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களும் இருந்தனர்.

1626. அய்மன் அல்ஹபஷீ(ரஹ்) அறிவித்தார் நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: நாங்கள் அகழ்ப் போரின்போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுப பற்றித் தெரிவிக்க) நபி(ஸல்), அவர்களிடம் சென்று, 'இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது'' என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் இறங்கிப் பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களின் வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்), நாங்கள் மூன்று நாள்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் குத்தாலி (சுத்தியலை) எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! வீடு வரை செல்ல அனுமதியுங்கள்'' என்று கேட்டேன். (அவர்கள் எனக்கு அனுமதி வழங்கினார்கள். பிறகு, நான் வீட்டுக்குச் சென்று) என் மனைவி (சுஹைலா பின்த் மஸ்ஊத்) இடம், 'நபி(ஸல்) அவர்கள் பசியோடிருப்பதை பார்த்தேன். அதைப் பார்த்துக்கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது'' என்று கூறினாள். உடனே நான் அந்த ஆட்டுக் குட்டியை அறுத்தேன். என் மனைவி கோதுமையை அரைத்தாள். பிறகு நாங்கள் இறைச்சியை சட்டியிலிட்டோம். குழைத்த மாவு இளம் (பக்குவ நிலைக்கு) வந்தது. மூன்று கற்களலானா அடுப்புக்கு மேல் சட்டியிருந்தது. அது முழுமையாக வெந்து விடும் நிலையிலிருந்தது. இந்த நிலையில் நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். 'என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. இறைத்தூதர் அவர்களே! நீங்களும் (உங்களுடன்) இன்னும் ஒருவர் அல்லது இருவர் வாருங்கள்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், '(உன்னிடம்) எவ்வளவு உணவு இருக்கிறது?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு அதை (அதன் அளவை)க் கூறினேன். 'இதுவே அதிகம்; சிறந்ததும் கூட'' என்று கூறினார்கள். பிறகு நபி அவர்கள், 'நான் வரும் வரையில் (அடுப்பிலிருந்து) சட்டியை இறக்க வேண்டாம்; சட்டியிலிருந்து ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீ உன் மனைவியிடம் சொல்'' என்று கூறினார்கள். பிறகு (அங்கிருந்த தம் தோழர்களிடம்) நபி(ஸல்) அவர்கள் '(எல்லாரும்) எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள். உடனே முஹாஜிர்களும் அன்சாரிகளும் எழுந்தனர். நான் என் மனைவியிடம் சென்றபோது, 'அடப்பாவமே! நபி(ஸல்) அவர்கள் தம்மோடு இருக்கும் முஹாஜிர்களுடனும் அன்சாரிகளுடனும் வருகிறார்கள்'' என்று கூறினேன். உடனே என் மனைவி '(உணவின் அளவு குறித்து) உங்களிடம் கேட்டார்களா?' என்று வினவியதற்கு நான், 'ஆம்'' என்று பதிலளித்தேன். (நபி - ஸல் - அவர்கள் தம் தோழர்களுடன் வந்து சேர்ந்து,) '(வீட்டிற்குள்) முண்டியடிக்காமல் நுழையுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்தார்கள். அதிலிருந்து எடுத்தவுடன் சட்டியையும் அடுப்பையும் மூடி வைத்தார்கள். தம் தோழர்களுக்கு அருகில் அதை வைத்தார்கள். பிறகு (சட்டியிலிருந்து இறைச்சியை) எடுத்து (தம் தோழர்களுக்கு)க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டியைப் பிய்த்தபடியும் (பாத்திரத்திலிருந்து இறைச்சியை எடுத்து (ரொட்டியின் மீது வைத்து)க் கொடுத்தபடியும் இருந்தார்கள். அவர்கள் வயிறு நிரம்ப உண்டனர். இறுதியில் சிறிது எஞ்சியது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி), 'இதை நீயும் சாப்பிடு. அன்பளிப்பும் செய். ஏனெனில், மக்கள் பசியோடுள்ளனர்'' என்று கூறினார்கள்.

1627. சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார் அகழ்ப் போர் (முடிந்து குறைஷிகள் தோல்வியுற்றுத் திரும்பிச் சென்ற) தினத்தன்று நபி(ஸல்) அவர்கள், '(இனி போர்தொடுப்பதானால்), நாமே அவர்களின் மீது போர் தொடுக்க வேண்டும்; அவர்கள் நம் மீது (இனி) போர்தொடுக்க (சக்தி பெற) மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.

1628. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அகழ்ப்போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்த எதிர்) அணியினரை அவனே தனியாக சென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப் போவது) இல்லை'' என்று கூறினார்கள்.

1629. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) 'பனூ குறைழா' குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தலைவரை அல்லது உங்களில் சிறந்தவரை நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடுங்கள்'' என்று அன்சாரிகளிடம் கூறினார்கள். பிறகு, '(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?') என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்று விட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திட வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்.'' அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்'' என்று கூறினார்கள்.

'தாத்துர் ரிக்காஉ' போர்.

1630. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் (நபி-ஸல் அவர்கள் செய்த) ஏழாவது போரான 'தாத்துர் ரிகாஉ' போரின்போது தம் தோழர்களுடன் நபி(ஸல்) அவர்கள் அச்ச நேரத்தொழுகையை தொழுதார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையை 'தூ கரத்' என்ற இடத்தில் தொழுதார்கள்.

1631. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம் தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்து சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்துவிட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்துவிட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக் கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததனால் தான் அந்தப் போருக்கு 'தாத்துர் ரிகாஉ - ஒட்டுத் துணிப்போர்' என்று பெயர் சூட்டப்பட்டது. அறிவிப்பாளர் அபூ புர்தா இப்னு அபீ மூஸா(ரஹ்) கூறினார்: இந்த ஹதீஸை அறிவித்த பின் அபூ மூஸா(ரலி), தாம் இதை அறிவித்ததைக் தாமே விரும்பாமல், 'நான் இதை (வெளியே) சொல்ல விரும்பாமல் தான் இருந்தேன்'' என்றார்கள். தம் நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அன்னார் விரும்பவில்லை போலும்.

1632. இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் 'தாத்துர் ரிகாஉ' போரில் பங்கெடுத்த (நபித்தோழர்களில்) ஒருவர் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (அப்போரின் போது) அச்ச நேரத் தொழுகையைத் தொழுதார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி(ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) அணிவகுத்தனர். இன்னோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்திவிட்டு அப்படியே நின்றார்கள். (நபி - ஸல் - அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றிய) அந்த அணியினர் தங்களுக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்து திரும்பிச் சென்று எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்றார்கள். பிறகு, (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்றிருந்த) இன்னோர் அணியினர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு (அப்படியே) அமர்ந்து கொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தங்களுக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைப்) பூர்த்தி செய்தார்கள். பிறகு அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள். இதை ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரஹ்) அறிவித்தார்.

1633. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்: நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், 'என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?' என்று கேட்டார். நான், 'அல்லாஹ்' என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்' என்று கூறினார்கள். பிறகு அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை (மன்னித்து விட்டுவிட்டார்கள்.)

1634. இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார் நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு 'அஸ்ல்' பற்றிக் கேட்டேன். அபூ ஸயீத்(ரலி) கூறினார் : நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும் (அந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது) 'அஸ்ல்' செய்ய நினைத்தோம். (ஆனால்,) நம்மிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா?' என்று (எங்களுக்குள்) பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு, 'நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள்வரை (இறை விதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம். உருவாகியே தீரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

'அன்மார்' போர்

1635. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல் அன்சாரி(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் 'அன்மார்' போரின்போது தம் வாகனத்தின் மீதமார்ந்தவாறு கிழக்குத் திசையை நோக்கி உபரித் தொழுகையைத் தொழுவதை பார்த்தேன்.

1636. பராஉ(ரலி) கூறினார் (''நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியளித்துள்ளோம்'' என்னும் 48:1-ம் வசனத்திலுள்ள) 'வெற்றி' என்பது மக்கா வெற்றி(யைத் தான் குறிக்கிறது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். மக்கா வெற்றியும் வெற்றியாகத்தானிருந்தது. (ஆனால்) நாங்கள் ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்த நாளில் (நடைபெற்ற) 'ரிள்வான்' உறுதிப் பிரமாணத்தையே பெரும் வெற்றியாகக் கருதுகிறோம். (அன்று) நாங்கள் (இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது ஒரு கிணறாகும். அந்தக் கிணற்றிலிருந்து ஒரு துளி நீரைக் கூடவிட்டு விடாமல் நாங்கள் (தண்ணீரைச்) சேந்தி விட்டோம். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அங்கு அவர்கள் வருகை தந்து அந்தக் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்தார்கள். பிறகு ஒரு பாத்திரம் தண்ணீர் கொண்டு வரும்படி கூறினார்கள். (அந்தத் தண்ணீரினால்) உளூச் செய்தார்கள். பின்னர் வாய் கொப்பளித்துவிட்டுப் பிரார்த்தித்தார்கள். பிறகு (உளூச் செய்து வாய் கொப்பளித்த) அந்தக் தண்ணீரைக் கிணற்றுக்குள் ஊற்றினார்கள். பின்பு சிறிது நேரம் அந்தக் கிணற்றை நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் அந்தக் கிணறு நாங்களும் எங்கள் வாகனப் பிராணிகளும் (குடிக்க) விரும்பிய (அளவு) தண்ணீரைத் திருப்பித் தந்தது.

1637. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம், 'பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்'' என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்'' என்று கூறினார்கள். ஜாபிர்(ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பிலும் (அவர்கள்) ஆயிரத்து நானூறு பேர் (இருந்ததாகக் காணப்படுகிறது)

1638. புஷைர் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார் அந்த மரத்தின(டியில் 'பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவரான சுவைத் இப்னு நுஅமான்(ரலி) '(கைபருக்கு அருகிலுள்ள 'ஸஹ்பா' என்னுமிடத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் மாவு கொண்டு வரப்பட்டது. அப்போது அதை அவர்கள் சாப்பிட்டார்கள்'' என்று கூறினார்கள்.

1639. (உமர் - ரலி - அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை) அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் நபியவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர்பின் கத்தாப்(ரலி) ஏதோ ஒன்றைக் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபிகளார் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. 'உமரே! உன்னை உன் தாய் இழக்கட்டும். மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே'' (என்று தம்மை தாமே) உமர் அவர்கள் (கடிந்து) கூறினார்கள். மேலும் உமர்(ரலி), 'அதற்குப் பிறகு நான் என்னுடைய ஒட்டகத்தைச் செலுத்தி முஸ்லிம்களுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) இறங்கிவிடுமோ என்று அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் அழைப்பதைக் கேட்டேன். (நான் நினைத்தது போன்றே) என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என்று அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள், 'இந்த இரவு எனக்கு ஒரு (திருக்குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்'' என்று கூறினார்கள். பிறகு, 'உங்களுக்கு நாம் வெளிப்படையானதொரு வெற்றியினை அளித்துள்ளோம்'' என்று (தொடங்கும் 48:1-ம் வசனத்தை) ஓதினார்கள்.

1640. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), மர்வான் இப்னி ஹகம் ஆகிய இருவரும் - ஒருவர் மற்றவரை விடக் கூடுதலாகக் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் தியாகப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாளமும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் 'குஸாஆ' குலத்தாரில் (புஸ்ர் இப்னு சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். 'ஃகதீருல் அஷ்தாத்' எனும் இடத்தில் நபியவர்கள் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் உளவாளி வந்து, 'குறைஷிகள் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல் வேறு குலத்தினரை (ஓரிடத்தில்) ஒன்று திரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல(வோ, மக்காவிற்குள் நுழையவோ) விடாமல் தடுப்பார்கள்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததிகளிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர் புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணை வைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான். அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கி விட்டுச் செல்வோம்'' என்று கூறினார்கள். (அப்போது) அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த இறையில்லத்தை நாடித் தானே நீங்கள் வந்தீர்கள். போரிட வரவில்லையே. எனவே, இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் நம்மை எவன் தடுக்கிறானோ அவனிடம் நாம் போரிடுவோம்'' என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள்.

1641. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் 'உமர்(ரலி) அவர்களுக்கு முன்பே (அவர்களின் புதல்வரான) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) முஸ்லிமானார்கள்' என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். (நடந்தது) அவ்வாறல்ல. மாறாக, ஹுதைபிய்யா தினத்தில் உமர்(ரலி) அன்சாரிகளில் ஒருவரிடமிருந்த தம் குதிரையை அதன் மீது (அமர்ந்து) போரிடுவதற்காக அதனை வாங்கி வருமாறு (தம் புதல்வர்) அப்துல்லாஹ்வை அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மரத்தினருகில் (தம் தோழர்களிடம்) உறுதிமொழி வாங்கிக் கொண்டிருந்தார்கள். உமர்(ரலி) அவர்களுக்கு இது தெரியவில்லை. அப்போது அப்துல்லாஹ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு, போய் அந்த குதிரையை வாங்கி, அதனை உமர்(ரலி) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது உமர்(ரலி) போருக்காக (தம் உருக்குச் சட்டையை) அணிந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மரத்தினடியில் உறுதிமொழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ்(ரலி) தெரிவித்தார்கள். உடனே உமர்(ரலி) (தம் புதல்வர்) அப்துல்லாஹ்(ரலி) அவர்களுடன் சென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். இதைத் தான் மக்கள், 'உமர் அவர்களுக்கு முன்பாகவே (அவர்களின் புதல்வர்) இப்னு உமர் முஸ்லிமானார்' என்று பேசிக் கொள்கிறார்கள்.

1642. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது நாங்களும் அவர்களுடனிருந்தோம். (மக்காவில் நுழைந்ததும் புனித கஅபாவை) வலம் வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் வலம் வந்தோம். அவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். (நாங்களும் ஓடினோம்.) அப்போது (இணைவைக்கும்) மக்காவாசிகளில் எவரும் அவர்களை எந்த விதத்திலும் தாக்கி விடக் கூடாது என்பதற்காக அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக) இருந்தோம்.

'தாத்துல் கரத்' போர்.

1643. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார் முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். 'தூகரத்' என்னுமிடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்குரிய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன'' என்று கூறினான். நான், 'அவற்றை யார் பிடித்துச் சென்றது?' என்று கேட்டேன். அதற்கவன், 'கத்ஃபான் குலத்தார்'' என்று பதில் சொன்னான். உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, 'யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக் கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். 'நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப்போகும்) நாள்'' என்று (பாடியபடி) கூறிக் கொண்டே அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் 'ரஜ்ஸ்' எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்ற போது) அவர்கள் விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக் கொண்டேன். (அப்போது) நபி(ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், 'இறைத்தூதர் அவர்களே! அந்தக் கூட்டத்தினர் தாகமுடன் இருந்த போதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்து விட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச் சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள் என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அக்வஃ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். எனவே, மென்மையாக நடந்து கொள்'' என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.

1644. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா?' என்று கூறினார். ஆமிர்(ரலி) கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். 'இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம். (உன் கட்டளைகளில்) எதனை நாங்கள் கைவிட்டு விட்டோமோ அதற்காக எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க் களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! (அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்து விடுவோம். எங்களிடம் மக்கள் அபயக்குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)'' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங்கின.) அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'யார் இந்த ஒட்டகவோட்டி?' என்று கேட்டார்கள். 'ஆமிர் இப்னு அக்வஃ' என்று மக்கள் பதிலளித்தார்கள். அப்போது, 'அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!' என்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரின் வீர மரணத்திற்கு சுபச்செய்தி கூறினார். மக்களில் ஒருவர், 'இறைத்தூதரே! (அவருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா? என்று கேட்டார். பிறகு நாங்கள் கைபருக்கு வந்து, கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசியேற்பட்டது. பிறகு உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களுக்கு எதிராக (எங்களுக்கு) வெற்றியளித்தான். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'இறைச்சி சமைப்பதற்காக'' என்று மக்கள் கூறினர். 'எந்த இறைச்சி?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நாட்டுக் கழுதைகளின் இறைச்சி' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை கழுவிக் கொள்ளலாமா?' என்று கேட்டார். 'அப்படியே ஆகட்டும்'' என்று கூறினார்கள். (அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது ஆமிர்(ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனின் காலை வெட்டப் போனபோது அன்னாரின் வாளின் மேற்பகுதி, அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது - ஸலமா(ரலி) கூறினார். 'என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன. (அவர் தம் வாளினால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்தார்)'' என்று மக்கள் எண்ணுகிறார்கள்.'' என்று தெரிவித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைக் கூறியவர் தவறிழைத்துவிட்டவர். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு'' என்று கூறியவாறு, தம் இரண்டு விரல்களையும் நபி(ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து)'' அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபுகள் மிகவும் குறைவானவர்களே'' என்று கூறினார்கள். ஹாத்திம்(ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா(ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், '(இவரைப் போன்றவர்) பூமியில் பிறப்பது அரிது'' என்று இடம் பெற்றுள்ளது.

1645. அனஸ்(ரலி) அறிவித்தார் கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று கூறினார்கள். கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைக் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்ட வர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். அவரின் விடுதலையையே மஹ்ராக ஆக்கி (அவரை நபி -ஸல் - அவர்கள் மணமுடித்துக்) கொண்டார்கள்.

1646. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள் மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, 'லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!'' என்று அழைத்தார்கள். 'கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று கூறினார்கள். நான், 'சரி (கட்டாயம் கூறுங்கள்) இறைத்தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினேன். (அந்த வார்த்தை,) 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது என்று கூறினார்கள்.

1647. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தம் படையினரிடமும், மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களிடையே ('குஸ்மான்' என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். அவர், (யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தம் வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, 'இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்து போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் இப்னு அபில் ஜவ்ன் என்ற) ஒருவர் நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன்'' என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார். அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தன்னுடைய வாளை (அதன் கீழ் பகுதியை) பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'தாங்கள் இறைத்தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்'' என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என்ன அது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், 'அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு'' என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்'' என்று கூறினார்கள்.

பாவியான மனிதர் மூலம் இஸ்லாம் வலுப்பெறுதல்.

1648. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவர் நரகவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டுவிட்டன. மக்களில் சிலர், (நபி - ஸல் - அவர்களின் அச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தம் அம்புக்கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் சொன்னது உண்மை தான் என அல்லாஹ் உறுதிப் படுத்திவிட்டான். இன்ன மனிதர் தன்னை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தார்'' என்று கூறினர். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), 'இறைநம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது, அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகிறான்'' என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

1649. யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) கூறினார் ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களின் காலில் ஒரு வெட்டுக் காயத்தின் அடையாளத்தை கண்டேன். அவரிடம், 'அபூ முஸ்லிமே! இது என்ன காயம்?' என்று கேட்டேன். 'இது கைபர் போர் தினத்தில் ஏற்பட்ட காயம். அப்போது மக்கள், 'ஸலமா தாக்கப்பட்டு விட்டார்' என்று கூறினர். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் அந்தக் காயத்தின் மீது மூன்று முறை இலேசாகத் துப்பினார்கள். (அதன்பின்னர்) இந்த நேரம் வரை (அதில்) எனக்கு நோவு ஏற்பட்டதில்லை'' என்று ஸலமா(ரலி) கூறினார்.

1650. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள 'சத்துஸ் ஸஹ்பா' என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாள்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் வலீமா - மண விருந்துக்கு முஸ்லிம்களை அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள், பிலால்(ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். ('ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் 'ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவியரில் ஒருவரா? அல்லது நபி(ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா?' என்று பேசிக் கொண்டனர். 'ஸஃபிய்யா அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக் கொள்ளும் படி கட்டளையிட்)டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்'' என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.

1651. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார் கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'முத்அத்துன்னிஸா.''.. (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்றும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.

1652. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைப்படைக்கு இரண்டு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ(ரஹ்), '(போரில் பங்கெடுத்த) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரண்டு பங்குகளும், உரிமையாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும்'' என்று விளக்கம் அளித்தார்கள்.

இரட்டை ஹிஜ்ரத்வாசிகள்.

1653. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூ புர்தா ஆவார்; மற்றொருவர் அபூ ருஹ்கி ஆவார். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் இப்னு அபீ மூஸா(ரஹ்) கூறினார்: ''என்னுடைய (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்'' என்றோ 'ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்.'' என்றோ (என் தந்தை அபூ மூஸா(ரலி)) கூறினார்கள்.

நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கிவிட்டது. (அபிசினியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்னெவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி(ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, 'உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்துவிட்டோம்'' என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார் அஸமா(ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர்(ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர்(ரலி) அஸ்மா அவர்களைக் கண்டபோது, 'இவர் யார்?' என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். '(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்'' என்று ஹஃப்ஸா(ரலி), 'இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்'' என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர்(ரலி), 'உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா(ரலி) கோபப்பட்டு, 'அல்லாஹ்வின் மீது மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் அல்லது பூமியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறி, அவர்களிடம் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவும் மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்'' என்று கூறினார்கள். 'அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்'' என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு'' என்று கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். அஸ்மா(ரலி) கூறுகிறார்கள் அபூமூஸாவும் அவரின் கப்பல் சகாக்களும் கூட்டங்கூட்டமாக வந்து இந்த ஹதீஸ் குறித்து கேட்டனர்.அவர்களைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் கூறிய இந்த பொன்மொழியை விட இவ்வுலகில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குறியதாகவோ அவர்களுக்கு பெருமைக்குறியதாகவோ இருக்கவில்லை.

1654. அஸ்மா(ரலி) கூறினார்கள்: என்னிடம் அபூமூஸா (ரலி)அவர்கள் இந்த ஹதீஸைத் திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் அஷ்அரி குல நண்பர்கள் இரவில் தம் தங்குமிடங்களில் நுழையும்போது அவர்கள் குர்ஆன்ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்க்காவிட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதுவதை ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் அடையாளத்தை அறிவேன். அவர்களில் விவேகமிக்க ஒருவரும் உள்ளார். அவர் குதிரைப்படையினரைச் சந்தித்தால் அல்லது எதிரிகளைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து என் தோழர்கள் தங்களுக்காக காத்திருக்கும்படி உங்களுக்கு உத்திரவிடுகிறார்கள் எனத்துணிவுடன் கூறுவார் என்று கூறினார்கள்.

1655. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் (அபிசீனியாவிலிருந்து அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த) நாங்கள் கைபர் வெற்றிக்குப் பின் (ஜஅஃபர் (ரலி) அவர்களுடன்) நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) எங்களுக்கும் பங்கு தந்தார்கள். எங்களைத் தவிர (கைபர்) வெற்றியின்போது (படையில்) இருக்காத வேறெவருக்கும் நபி(ஸல்) அவர்கள் பங்கு தரவில்லை.

1656. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் (ஹுதைபிய்யா உடன்படிக்கையின் படி ஹிஜ்ரி 7-ல் உம்ரா செய்வதற்காக) நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் மைமூனா(ரலி) அவர்களை மணந்தார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் அவர்களுடன் வீடு கூடினார்கள். பிறகு மைமூனா(ரலி) (மக்காவிலிருந்து சிறிது தொலையிலுள்ள) 'சரிஃப்' என்னுமிடத்தில் இறந்தார்கள்.

1657. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூத்தா போரின்போது ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஸைத் கொல்லப்பட்டால் ஜஅஃபர் (தலைமையேற்கட்டும்!) ஜஅஃபர் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தலைமையேற்கட்டும்)'' என்று கூறினார்கள். நான் அந்தப் புனிதப் போரில் அவர்களுடன் (பங்கேற்று) இருந்தேன். நாங்கள் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களைத் தேடிச் சென்றபோது கொலையுண்டவர்களில் அவரைக் கண்டோம். அவர்களின் உடலில் இருந்த காயங்கள், ஈட்டிக் காயங்களும் அம்புக் காயங்களுமாக மொத்தம் தொண்ணூற்றுக்கும் அதிகமானவையாய் இருக்கக் கண்டோம்.

ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த 'ஹுரக்கத்' கூட்டத்தாரிடம் நபி(ஸல்) அவர்கள் உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை அனுப்பியது.

1658. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார் எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுரக்கா' கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், 'உஸாமாவே! அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்'' என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான், '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்'' என்று சொன்னேன். (ஆனால், என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான், '(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன்.

1659. ஸலமா இப்னு அக்வஃ(ரலி அவர்கள் அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த படைப் பிரிவுகளில் பங்கெடுத்து ஒன்பது புனிதப் போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒரு முறை எங்களுக்கு அபூ பக்ர்(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை உஸாமா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டி ருந்தார்கள்.

1660. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். இது நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்றது. நபி(ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் நோன்பு நோற்றபடி பயணம் செய்தார்கள். இறுதியில் 'கதீத்' என்னுமிடத்திற்குச் சென்று நேர்ந்தார்கள். - இந்த இடம் உஸ்ஃபானுக்கும் 'குதைத்' எனுமிடத்திற்குமிடையே உள்ள நீர்ப்பகுதியாகும் - (அங்கு) நபி(ஸல்) அவர்கள் நோன்பை விட்டுவிட மக்களும் நோன்பை விட்டுவிட்டார்கள்.

மக்கா வெற்றி.

1661. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மக்கா வெற்றிக்குப் பின்) ஹுனைன் நோக்கி (புனிதப் போருக்காகப்) புறப்ப(டத் திட்டமி)ட்டார்கள். அப்போது மக்கள் (நோன்பு நோற்கும் விஷயத்தில்) பல தரப்பட்டவர்களாயிருந்தனர். சிலர் நோன்பு நோற்றிருந்தார்கள்; சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள், தம் வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்டபோது ஒரு பால் பாத்திரத்தை அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை கெண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் அல்லது தம் வாகனத்தில் வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டுவிட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்களிடம், 'நீங்களும் நோன்பை விடுங்கள்'' என்று கூறினார்கள்.

மக்கா வெற்றி நாளில் (இஸ்லலாமியச் சேனையின்) கொடியை நபி(ஸல்) அவர்கள் எங்கே நட்டு வைத்தார்கள்?

1662. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (அதனை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப், ஹகீம் இப்னு ஹிஸாம், புதைல் இப்னு வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு 'மர்ருழ் ழஹ்ரான்' என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தபோது (அங்கே பல இடங்களில் மூடப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன. அப்போது அபூ சுஃப்யான், 'இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே'' என்று கேட்டதற்கு புதைல் இப்னு வர்கா, 'இது ('குபா'வில் குடியிருக்கும் 'குஸாஆ' எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள்'' என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் (பனூ) அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை)'' என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்துவிட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றார். அதற்குப் பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள். (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்றபோது அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'குதிரைப் படை செல்லும்போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூ சுஃப்யானை நிறுத்திவையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும். (அவர்களின் படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்)'' என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ்(ரலி) அவரை (அந்த இடத்தில்) நிறுத்திவைத்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூ சுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் 'அப்பாஸே! இவர்கள் யார்?' என்று அபூ சுஃப்யான் கேட்டதற்கு அப்பாஸ்(ரலி), 'இவர்கள் ஃகிஃபாரீ குலத்தினர்'' என்று பதிலளித்தார்கள். (உடனே,) 'எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!)'' என்று அபூ சுஃப்யான் கூறினார். பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூ சுஃப்யான் முன் போன்றே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) ஸஅத் இப்னு ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அவ்வாறே அபூ சுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போன்றே அபூ சுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் - ரலி அவர்களும் முன்பு போன்றே பதிலளித்தார்கள்.) கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூ சுஃப்யான் பார்த்திருக்கவில்லை. 'இவர்கள் யார்?' என்று அபூ சுஃப்யான் கேட்க, 'இவர்கள் தாம் அன்சாரிகள். ஸஅத் இப்னு உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது'' என்று அப்பாஸ்(ரலி) பதிலளித்தார்கள். அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'அபூ சுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி) னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும்'' என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் 'அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு)'' என்று கூறினார். பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றபோது அவர், (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்) 'ஸஅத் இப்னு உபாதா என்ன கூறினார் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவர் என்ன கூறினார்?' என்று கேட்டார்கள். இப்படி இப்படி எல்லாம் கூறினார்'' என்று அபூ சுஃப்யான் (விவரித்துச்) கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உண்மைக்குப் புறம்பானதை ஸஅத் கூறிவிட்டார்'' என்று சொல்லிவிட்டு, 'மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கியமான) நாள்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) 'ஹஜூன்' என்னும் இடத்தில் நட்டு வைக்கும்படி உத்தரவிட்டார்கள். (மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ்(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம், 'அபூ அப்தில்லாஹ்வே!'' இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள்'' என்றார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான 'கதா' என்னும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'குதா' வழியாக நுழைந்தார்கள். அன்றைய தினம் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் இப்னு அல் அஷ்அர்(ரலி) அவர்களும் குர்ஸ் இப்னு ஜாபிர் அல்ஃபிஹ்ரீ(ரலி) அவர்களும் (உயிர்த்தியாகிகளாகக்) கொல்லப் பட்டனர்.

1663. முஆவியா இப்னு குர்ரா(ரஹ்) அறிவித்தார் ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி 'அல்ஃபதஹ்' என்னும் (48-வது) அத்தியாயத்தை 'தர்ஜுஉ' என்னும் ஓசை நயத்துடன் ஒதிக்கொண்டிருந்தததை கண்டேன்'' என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூற கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அவர்கள் 'தர்ஜுஉ' செய்து ஓதிக்காட்டியதைப் போல் நானும் ஓதிக்காட்டியிருப்பேன்.

1664. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி(ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், 'சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்துவிட்டது. சத்தியம் வந்துவிட்டது. (இனி) அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிடிக்காது'' என்று கூறிக்கொண்டே, தம் கையிலிருந்து குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.

1665. அம்ர் இப்னு சலிமா(ரலி) அறிவித்தார் நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், 'மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?' என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், 'அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார்'' என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டி) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை) வாக்கை மனப்பகுதி செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போன்று ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்திருந்தார்கள். எனவே, அவர்கள், 'அவரை அவரின் குலத்தா(ரான குறைஷிய)ருடன்விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)'' என்று கூறினார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள், 'இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்' என்று கூறினார்கள்' எனக் கூறினார்கள். எனவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும், (எங்களிடையே) இருக்கவில்லை. எனவே, (தொழுகை நடத்துவதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. எனவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், 'உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?' என்று கேட்டார். எனவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

1666. இஸ்மாயீல் இப்னு அபீ காலித்(ரஹ்) அறிவித்தார் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களின் கையில் வெட்டுக்காயம் ஒன்றைக் கண்டேன். அவர்கள், 'ஹுனைன் போரில் நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது இந்தக் காயம் எனக்கு ஏற்பட்டது.'' என்றார்கள். நான், 'ஹுனைன் போரில் நீங்கள் கலந்து கொண்டீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(ஆம், அதிலும்) அதற்கு முன்பு நடந்த போர்களிலும் கலந்து கொண்டேன்'' என்றார்கள்.

'அவ்தாஸ்' போர்.

1667. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அபூ அமீர் அவர்களை (தளபதியாக்கி) 'அவ்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) 'துரைத் இப்னு ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களின் முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, 'என் தந்தையின் சகோதரரே! உங்களின் மீது அம்பெய்தவன் யார்?' என்று கேட்டேன். 'என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!'' என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, '(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?' என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), 'உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்'' என்று கூறினேன். பிறகு, (''என்னுடைய முழங்காலில் பாய்திருக்கும்) இந்த அம்மைப் பிடுங்கியெடு'' என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. 'என் சகோதரரின் மகனே! நபி(ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு'' என்று அபூ ஆமிர்(ரலி) கூறினார். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமீர்(ரலி) (வீர) மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தங்களின் வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. (எனினும்) கட்டிலின் கயிறு நபி(ஸல்) அவர்களின் முதுகிலும், இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும், அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, 'இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன். உடனே நான், 'எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இறைவா! அப்துல்லாஹ் இப்னு கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அபூ புர்தா(ரலி) கூறினார்: (நபி - ஸல் - அவர்கள் புரிந்த இரண்டு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூ அமீர்(ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூ மூஸா(ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

0 comments:

Post a Comment