Monday, 19 October 2009

[பாடம்-57B] நபி காலத்துப் போர்கள்.

ஹிஜ்ரி எட்டாமாண்டு ஷவ்வால் மாதம் நடந்த 'தாயிஃப்' போர்.

1668. (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள். இப்னு உயைனா(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் 'ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றோர் அறிவிப்பில், 'அப்போது நபி(ஸல்) அவர்கள் தாயிஃபை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

1669. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்டபோது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, 'இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்'' என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், 'இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா?' என்று பேசிக்கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒரு முறை, 'நாம் திரும்பிச் செல்வோம்'' என்று கூறினார்கள். பிறகு (தோழர்களின் தயக்கத்தைக் கண்டு) முற்பகலிலேயே போர் புரியுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் முற்பகலில் போர் புரிய, (அதனால்) (பலத்த) காயங்களுக்கு ஆளானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சியை அளித்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

1670. நபி(ஸல்) கூறினார்கள்: எவன் தெரிந்து கொண்டே தன்னைத்தானே தந்தையல்லாத (வேறு) ஒருவருடன் இணைத்து, (''நான் அவரின் மகன் தான்'' என்று) வாதாடுகிறானோ அவனுக்கு சொர்க்கம் (புகுவது) தடை செய்யப்பட்டதாகும். இதை ''இறைவழியில் ஓர் அம்பை முதன் முதலாக எய்தவரான ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடமிருந்தும் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய தாயிஃப் நகர மக்களின் அடிமைகள்) சிலரோடு தாயிஃப் கோட்டையின் சுவரைத் தாண்டிக் குதித்து நபி(ஸல்) அவர்களிடம் வந்த அபூ பக்ரா(ரலி) அவர்களிடமிருந்தும் இதை செவியுற்றேன்'' என்று அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) கூறினார்கள்.

1671. மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. அறிவிப்பாளர் ஆஸிம் இப்னு சுலைமான்(ரஹ்), (தமக்கு இதை அறிவித்த அபுல் ஆலியா, அல்லது அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம் 'உங்களிடம் (இந்த நபிமொழிக்கு) இருவர் சாட்சியம் பகர்ந்துள்ளனர்; அவர்கள் இருவரும் உங்களுக்குப் போதும்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'ஆம்; அவ்விருவரில் ஒருவர் இறைவழியில் (முதன் முதலாக) ஓர் அம்பை எறிந்தவராவார். மற்றொருவரோ, நபி(ஸல்) அவர்களிடம் தாயிஃபிலிருந்து வந்து இருபத்து மூன்று பேரில் மூன்றாமவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

1672. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே 'ஜிஃரானா' என்னுமிடத்தில் பிலால்(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் - அவர்களிடம்) வந்து, 'நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தியைப் பெற்றுக் கொள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லிவிட்டீர்களே!'' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால்(ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். 'இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், 'நாங்கள் ஏற்றுக் கொண்டோம்'' என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் . பிறகு (எங்களிடம்), 'இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, 'உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா(ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, '(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.

1673. அனஸ்(ரலி) அறிவித்தார் மக்கா வெற்றியின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். எனவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தரவில்லையே என்று) கோபித்துக் கொண்டார்கள். (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், 'ஆம், (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ தான் செல்வேன்'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பியது.

1674. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக் கொடுத்தார். அவர்களுக்கு 'அஸ்லம்னா - நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம்' என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. எனவே, அவர்கள் (தங்களின் வழக்குப்படி) 'ஸபஃனா, ஸபஃனா' - நாங்கள் மதம் மாறி விட்டோம். மதம் மாறிவிட்டோம்'' என்று சொல்லானார்கள். உடனே காலித்(ரலி), அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் காலித், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை கொல்ல மாட்டேன். மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்லமாட்டார்'' என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, 'இறைவா! 'காலித் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை' என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று இருமுறை கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) மற்றும் அல்கமா இப்னு முஜஸ்ஸிஸ் அல் முத்லிஜீ(ரலி) ஆகியோரின் படைப்பிரிவு.

1675. அலீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்து விட) அவர்களின் மீது அவர் கோபமுற்று, 'நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம் (கட்டளையிட்டார்கள்)'' என்று பதிலளித்தனர். அவர், 'அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்'' என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், 'நெருப்பு மூட்டுங்கள்'' என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், 'இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்'' என்று கூற, அவர்கள் அதில் நுழையப் போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும், அவர்கள், '(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித் தான் நாம் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம்'' என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும்வரை இவ்வாறே கூறிக் கொண்டிருந்தனர். பிறகு, படைத்தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, 'அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள் வரையிலும் கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில் தான்'' என்று கூறினார்கள்.

அபூ மூஸா(ரலி) அவர்களும் முஆத்(ரலி) அவர்களும் 'ஹஜ்ஜத்துல் வதா'வுக்கு முன்பு யமன் நாட்டு அனுப்பப்படுதல்.

1676. அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூ மூஸா(ரலி) அவர்களையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'யமன் இரண்டு மாகாணங்களாகும்'' என்று கூறினார்கள். பிறகு, '(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றி விடாதீர்கள்'' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர்கள் இருவரும் தத்தம் பணி(இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்துவிட்டால் (அவருடன்) தம் சந்திப்பைப் புதுப்பித்துக் கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத்(ரலி) தம் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது தம் சகாவான அபூ மூஸா(ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்துவிட, தம் கோவேறுக் கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்று சேர்ந்தார். அப்போது அபூ மூஸா(ரலி), தம்மிடம் மக்கள் ஒன்று கூடியிருக்க (தம் அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இருகைகளும் தம் கழுத்துடனும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒருவர் நின்றிருந்தார். முஆத்(ரலி), அபூ மூஸா(ரலி) அவர்களிடம், 'அப்துல்லாஹ் இப்னு கைஸ் அவர்களே! என்ன இது?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ மூஸா(ரலி), 'இவன் இஸ்லாத்தை ஏற்ற பின் அதை நிராகரித்துவிட்டவன்'' என்று பதிலளித்தார்கள். முஆத்(ரலி), 'இவன் கொல்லப்படும் வரை நான் (என் வாகனத்திலிருந்து) இறங்க மாட்டேன்'' என்றார்கள். அபூ மூஸா(ரலி), 'இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத் தான். எனவே, நீங்கள் இறங்குங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு முஆத், 'இவன் கொல்லப்படும் வரை நான் (வாகனத்திலிருந்து) இறங்க மாட்டேன்'' என்று (மீண்டும்) கூறினார்கள். உடனே அபூ மூஸா(ரலி) அவனைக் கொல்லும் படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு, முஆத் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, 'அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அபூ மூஸா(ரலி), '(இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஓதிவருகிறேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அவர்கள், 'முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகீறீர்கள்?' என்று கேட்க, முஆத்(ரலி), 'இரவின் முற்பகுதியில் நான் உறங்கி விடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். எனவே, நான் எழு(ந்து வணக்கம் புரிவ)தற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன்'' என்று பதிலளித்தார்கள்.

1677. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, '(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)'' என்று (அறிவுரை) கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான 'பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். பின்பு, நாங்கள் இருவரும் (எங்கள் பணிக்குச்) சென்றுவிட்டோம். (பின்னர் ஒரு முறை சந்தித்த போது) முஆத், என்னிடம், 'நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?' என்று கேட்டார். நான், 'நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வாகனத்தின் மீதிருந்தபடியும் அடிக்கடி ஓதுகிறேன்'' என்று பதிலளித்தேன். முஆத், 'நானோ உறங்குவேன்; எழுந்திருப்பேன். நான் எழு(ந்து வணக்கம் புரி)வதற்கு (இறைவனிடம்) பிரதிபலன் எதிர்பார்ப்பது போன்றே என் உறக்கத்திற்காகவும் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறினார். பிறகு முடியாலான கூடாரமொன்றை அமைத்துக் கொண்டார். பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் (அடிக்கடி) சந்திக்கலானோம். முஆத் என்னைச் சந்தித்தபோது என்னிடம் ஒருவர் கட்டி வைக்கப்பட்டிருந்தார். (அதைக் கண்ட) முஆத்(ரலி) 'என்ன இது?' என்று கேட்டார். நான், 'இவன் இஸ்லாத்தை ஏற்று, பிறகு மதம் மாறிவிட்ட ஒரு யூதன்'' என்று பதிலளித்தேன். முஆத், 'இவனுடைய கழுத்தை நான் துண்டிப்பேன்'' என்றார்.

அலீ இப்னு அபீ தாலிப், காலித் இப்னு வலீத்(ரலி) ஆகிய இருவரும் 'ஹஜ்ஜத்துல் வதா'வுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்.

1678. பராஉ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீதின் இடத்தில் அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அலீயே! காலிதின் சகாக்களில் 'உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வரவிரும்புவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்கிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!' என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்'' என்று கூறினார்கள். நான் அலீ(ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந்தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் 'ஊக்கியா'க்களை நான் பெற்றேன்.

1679. புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் முன் நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னன். அதற்கு அவர்கள், 'புரைதாவவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.

1680. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் அலீ(ரலி) கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: உயைனா இப்னு பத்ர்(ரலி), அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி), ஸைத் அல் கைல்(ரலி) நான்காவது நபர் அல்கமா(ரலி); அல்லது ஆமிர் இப்னு துஃபைல்(ரலி) அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்'' என்று கூறினார். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்த வண்ணமுள்ளன'' என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப் பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்'' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடு தான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?' என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திருமபிச் சென்றார். அப்போது காலித் இப்னு வலீத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரின் தலையைக் கொய்து விடட்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கு காலித்(ரலி), 'எத்தனையோ தொழுகையாளிகள் தம் இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்'' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை'' என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். மேலும், கூறினார்கள்; 'இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நிறைய ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் 'ஆது' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்து விடுவேன்.

1681. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார் ''துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், 'சரி (விடுவிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவ்வாறே, 'அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். 'அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தங்களின் கையை என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களின் கையின் அடையாளத்தை நெஞ்சில் பார்த்தேன். அப்போது அவர்கள், 'இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒருபோதும்) எந்த குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை. 'துல் கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த 'கஸ்அம்' மற்றும் 'பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது 'அல்கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறி கேட்கிற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இங்கே (அருகில் தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக் கெண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்'' என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்தபோது நான் அவரருகே சென்று நின்றேன். நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன். 'வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்' என்று சொன்னேன். பிறகு நான் அதை உடைத்து விட்டேன். அந்த மனிதரும் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சாட்சியம் கூறினார். பிறகு 'அஹ்மஸ்' குலத்தவரில் 'அபூ அர்தாத்' என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதரை, 'நபி(ஸல்) அவர்களிடம் இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, 'இறைத்தூதர் அவர்களே! உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றே (ஆக்கி)விட்டு வந்துள்ளேன்'' என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) 'அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும்படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.

ஜரீர்(ரலி) யமன் நாட்டிற்குச் சென்றது.

1682. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன் வாசிகளில் 'தூ கலாஉ' மற்றும் 'தூ அம்ர்' ஆகிய இருவரை சந்தித்தேன். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது 'தூ அம்ர்' என்னிடம், 'நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்து போய் மூன்று நாள்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்'' என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்து கொண்டிருக்கும்போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூடடம் வந்து கொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூ பக்ர் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனைவரும் நல்லவர்களாக உள்ளனர்'' என்று பதிலளித்தனர். உடனே, தூ கலாஉ மற்றும் தூ அம்ர் இருவரும், 'நாங்கள் இருவரும் வந்திருந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம்'' என்று உங்கள் தோழரிடம் (அபூ பக்ரிடம்) சொல்லுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள். நான் அபூ பக்ர் அவர்களிடம் யமன் வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூ பக்ர் அவர்கள், 'அவர்களை (என்னிடம்) நீங்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், 'ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். எனவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வரை நன்மையில் இருப்பீர்கள். (ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந்தால், ஆட்சித் தலைவர்களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடைவார்கள் என்று கூறினார்.

'சீஃபுல் பஹ்ர்' (கடற்கரையோரப்) போர்.

1683. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களைத் தளபதியாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேராக இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம். சிறிது தொலைவு சென்றபின், வழியில் எங்கள் பயண உணவு தீர்ந்து போய்விட்டது. எனவே, அபூ உபைதா(ரலி) படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்று சேகரிக்கப்பட்டன. அவை இரண்டு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன. அபூ உபைதா அவர்கள் அது தீரும் வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். எனவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம்பழம் தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்து வந்தது. அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் இப்னு கைஸான்(ரஹ்) கூறினார்: நான் (ஜாபிர் - ரலி - அவர்களிடம்), '(ஒரு நாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் உங்களுக்குப் போதாதே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதுவும் தீர்ந்து போன போதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது சிறிய மலை போன்ற (திமிங்கில வகை) மீன் ஒன்றைக் கண்டோம். படை வீரர்கள் பதினெட்டு நாள்கள் அதிலிருந்து உண்டார்கள். பிறகு அபூ உபைதா(ரலி) அதன் விலா எலும்புகளில் இரண்டை (பூமியில்) நட்டுவைக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை நட்டு வைக்கப்பட்டன. பிறகு தம் வாகனத்தைச் செலுத்தும் படி அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்புகளின் கீழே அவ்வாகனம் சென்றது. எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே) சென்றுவிட்டது.

1684. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவக்ள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) எங்கள் தலைவராக இருந்தார்கள். நாங்கள் குறை»களின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எனவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். எனவே, அந்தப் படைப் பிரிவு 'கருவேல இலைப்படைப் பிரிவு' என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களுக்காக 'அல் அம்பர்' எனப்படும் (ஒரு வகை மீன் இனப்) பிராணியை (கரையில்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டோம். அதனால் எங்கள் (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூ உபைதா(ரலி) அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்.) மற்றோர் அறிவிப்பில் 'ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு அந்த எலும்பு(க் கூடடுக்)க்குக் கீழே நடந்து சென்றார்கள்'' என்று இடம் பெற்றுள்ளது. ஜாபிர்(ரலி) கூறினார்: அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூ உபைதா(ரலி), '(இனி அறுக்க வேண்டாம்'' என்று) அவரைத் தடுத்துவிட்டார்கள். அபூ ஸாலிஹ்(ரஹ்) அறிவித்தார்: கைஸ் இப்னு ஸஅத்(ரலி), (போரிலிருந்து திரும்பிய பின் தம் தந்தை ஸஅத் இப்னு உபாதா - ரலி அவர்களிடம்) 'நான் அந்தப் படையில் இருந்தேன். அப்போது மக்கள் கடும் பசிக்கு ஆளானார்கள்.'' என்று கூறினார்கள். அவரின் தந்தை, 'நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்'' என்று கூறினார். கைஸ்(ரலி), 'நான் அறுக்கத் தான் செய்தேன்'' என்று சொல்லிவிட்டு, 'அவர்கள் மீண்டும் பசிக்கு ஆளானார்கள்'' என்று சொல்ல, அவரின் தந்தை, 'நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்'' என்று கூறினார். அவர், 'நான் அறுக்கத்தான் செய்தேன்'' என்று சொல்லிவிட்டு, 'மீண்டும் அவர்கள் பசிக்கு ஆளானார்கள்'' என்றார். மீண்டும் அவரின் தந்தை, 'நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்'' என்று கூறினார். உடனே அவர், 'நான் அறுக்கத் தான் செய்தேன்'' என்று சொல்லிவிட்டு 'மீண்டும், அவர்கள் பசிக்கு ஆளானார்கள்'' என்று சொல்ல, அவரின் தந்தை, 'நீ ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்'' என்றார். அவர், '(மூன்று முறைக்குப் பிறகு) நான் அறுக்க வேண்டாமெனத் தடுக்கப்பட்டு விட்டேன்'' என்று கூறினார்.

உயைனா படைப் பிரிவு.

1685. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார் பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூ பக்ர்(ரலி), '(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இல்லை. அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (உமர்(ரலி) அவர்களிடம்), 'நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்'' என்று சொல்ல, உமர்(ரலி), 'உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்ல'' என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக் கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 49:1வது) வசனம் அருளப்பட்டது.

பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழு மற்றும் ஸுமாமா இப்னு உஸால் அவர்களின் செய்தி.

1686. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் 'நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் 'பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, '(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய். ஸுமாமாவே!'' என்று கேட்டார்கள். அவர், 'நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்'' என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்தபோது அவரிடம், 'ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்'' என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, 'நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், 'முஹம்மது, இறைத்தூதர்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்' என்று மொழிந்துவிட்டு, 'முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள்'' என்று சொல்லிவிட்டு, 'மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், 'நீ மதம் மாறிவிட்டாயா?' என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (என்னுடைய நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது'' என்று கூறினார்கள்.

1687. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத் தூதர் என்று வாதிட்ட) 'முஸைலிமா' எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், 'முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்'' என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி(ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, 'இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர்தாம் ஸாபித் இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார்'' என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத் தான் உன்னை காண்கிறேன்'' என்று (முஸைலிமாவிடம்) சொன்னதைப் பற்றி நான் கேட்டபோது அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே, அவ்விரண்டும் பறந்துவிட்டன. எனவே, நான் அவ்விரண்டுக்கும் 'எனக்குப் பின் வெளிப்படவிருக்கிற மகா பொய்யர்கள் இருவர்' என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்ஸீ மற்றொருவன் முஸைலிமா என்று கூறினார்கள்.

1688. நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன. அப்போது அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதினேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன. 'அவ்விரண்டும், எந்த இரண்டு மகா பொய்யர்களுக்கிடையே நான் இருக்கிறேனோ அவர்களைக் குறிக்கும்' என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்ஸீ என்ற) 'ஸன்ஆ' வாசியும் (முஸைலிமா என்ற) 'யமாமா' வாசியும் ஆவர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நஜ்ரான் வாசிகளின் சம்பவம்.

1689. ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார் ஆகிப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'முபாஹலா - சாபப் பிரார்த்தனை' செய்வதற்காக வந்தனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'நீ அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து நாம் சாபப் பிரார்த்தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின்வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருப்படமாட்டார்கள்'' என்று கூறினார். (பிறகு) இருவரும் சேர்ந்து (நபி(ஸல்) அவர்களிடம்), 'நீங்கள் எங்களிடம் கேட்கிறவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்பவேண்டாம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள். அவர் எழுந்து நின்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்'' என்று கூறினார்கள்.

1690. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. இந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களாவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

அஷ்அரீ குலத்தார் மற்றும் யமன் வாசிகளின் வருகை.

1691. ஸஹ்தம் இப்னு முள்ரிப்(ரஹ்) அறிவித்தார் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் கூஃபா நகரின் ஆட்சியாளராக) வருகை தந்தபோது இந்த 'ஜர்ம்' குடும்பத்தாரை (சந்தித்து அவர்களை)க் கண்ணியப்படுத்தினார்கள். (ஒருமுறை) நாங்கள் அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் கோழியைப் பகல் உணவாக உண்டு கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அபூ மூஸா(ரலி) அவரை உணவு உண்ண அழைத்தார்கள். அம்மனிதர், 'இது, (அசுத்தம்) எதையோ தின்று கொண்டிருப்பதை பார்த்தேன். எனவே, நான் இதை அருவருக்கிறேன்'' என்றார். உடனே அபூ மூஸா(ரலி), 'இங்கே வா! என அழைக்க அவர் இதை உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளேன்'' என்று கூறினார். உடனே அபூ மூஸா(ரலி), 'இங்கே வா! உன் சத்தியத்தைப் பற்றி நான் உனக்குத் தெரிவிக்கிறேன். நாங்கள், அஷ்அரீ குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (பயணம் செய்ய) வாகனம் அளித்து உதவும்படி அவர்களிடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு வாகனம் அளிக்க மறுத்துவிட்டார்கள். எனவே, மீண்டும் அவர்களிடம் (பயணம் செய்ய) வாகனம் கேட்டோம். அவர்கள், 'நீங்கள் பயணம் செய்வதற்காக உங்களுக்கு வாகனம் தரமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டார்கள். பிறகு சிறிது நேரம் தான் தங்கியிருந்திருப்பார்கள். அதற்குள் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களுக்கு (பத்துக்குட்பட்ட ஒட்டகங்கள் கொண்ட மந்தைகளில்) ஐந்து மந்தைகள் வழங்கும்படி கட்டளையிட்டார்கள். நாங்கள் அதை எங்கள் கைவசம் பெற்றுக் கொண்டபோது, 'நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கடித்து விட்டோம். எனவே, நாம் ஒருபோதும் முன்னேற முடியாது'' என்று சொல்லிக் கொண்டோம். உடனே நான் அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே!'' நாங்கள் பயணம் செய்ய வாகனம் தரமாட்டேன் என்று தாங்கள் சத்தியம் செய்துவிட்டு இப்போது நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு வாகனம் தந்துவிட்டீர்களே'' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! ஆயினும், நான் ஒரு விஷயத்திற்காகச் சத்தியம் செய்து அதன் பின்னர் அதுவல்லாத வேறொன்றை, அதைவிடச் சிறந்ததாகக் கண்டால் அந்தச் சிறந்ததையே செய்வேன் (சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்)'' என்று கூறினார்கள்.

1692. யமன் வாசிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் இளகிய நெஞ்சமுடையவர்கள்; மென்மையான இதயமுடையவர்கள். இறைநம்பிக்கை, யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். தற்பெருமையும் அகம்பாவமும் ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிட(மு)ம் காணப்படுகின்றன. கம்பீரமும் (அதே நேரத்தில்) அமைதியும் ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படுகின்றன என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ஜத்துல் வதா.

1693. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது 'கஸ்வா' எனும் (தம்) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உஸாமா(ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால், உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களிடம் '(கஅபாவின்) சாவியை எம்மிடம் கெண்டு வாருங்கள்'' என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபி(ஸல்) அவர்களும் உஸாமா, பிலால், உஸ்மான் இப்னு தல்ஹா) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக் கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கிப் பிறகு வெளியேறினர். மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக் கொண்டு (உள்ளே நுழைந்து) விட்டேன். அப்போது பிலால்(ரலி) கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'அந்த இரண்டு தூண்களுக்கிடையே தொழுதார்கள்'' என்று கூறினார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாசல் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரண்டு தூண்களுக்கிடையே நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?' என்று கேட்க மறந்துவிட்டேன். நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக்கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது.

1694. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் பத்தொன்பது புனிதப் போர்களில் கலந்துகொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்த பின்பு ஒரேயொரு ஹஜ்தான் செய்தார்கள். அந்த ஹஜ்ஜத்துல்வதாவுக்குப் பிறகு அவர்கள் வேறெந்தஹஜ்ஜும் செய்ய வில்லை.அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார் :நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்திற்கு முன்பு) மக்காவில் இருந்தவாறு மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்.

புனித மாதங்கள் நான்கு.

1695. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார் ''வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள 'முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது துல்ஹஜ் இல்லையா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'ஆம்'' என்றோம். (பிறகு,) 'இது எந்த நகரம்?' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள், 'ஆம்'' என்றோம். மேலும், 'இது எந்த நாள்?' என்று கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?' எனக் கேட்க, நாங்கள், 'ஆம்'' என்றோம். (பிறகு,) 'உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்தீர்ப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம். -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) இதை அறிவிக்கும்போது, 'முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள்'' என்று கூறுவார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?' என்று இரண்டு முறை கேட்டார்கள்.

1696. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஹஜ்ஜத்துல் வதாவின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்த பின்) தம் தலையை மழித்துக் கொண்டார்கள். (தோழர்கள்) சிலர் தம் தலைமுடியைக் குறைத்துக் கொண்டார்கள்.

தபூக் போர் - அதுதான் உஸ்ராப் போர்.

1697. அபூ மூஸா(ரலி) அறிவித்தார் என் நண்பர்கள் என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் - உஸ்ராப் போரே தபூக் போராகும் - அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்'' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாது'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கோபத்திலிருந்து சமயத்தில் நான் அவர்களிடம் சென்றுவிட்டேன். நான் அதை அறிந்திருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததனாலும் என் மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தினாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள், 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!'' என்று பிலால்(ரலி) அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் பதிலளித்தேன். அப்போது அவர்கள், 'உங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும் என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி, 'பிடித்துக்கொள்'' என்று கூறினார்கள். அவற்றை அப்போதுதான் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். உங்கள் நண்பர்களிடம் இவற்றை (ஒட்டிக்) கொண்டு சென்று அவர்களிடம், 'அல்லாஹ்' அல்லது 'இறைத்தூதர்' அவர்கள் இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துள்ளார்கள். எனவே, இவற்றிலேறிப் பயணம் செய்யும்படி சொல்லக் கூறினார்கள்' எனத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள். அவர்களிடம் நான் அவற்றை(ஓட்டி)க் கொண்டு சென்று, 'நபி(ஸல்) அவர்கள் இவற்றின் மீது உங்களைப் பயணம் செல்லும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('நான் எந்த வாகனமும் தர மாட்டேன்' என்று) கூறியதைக் கேட்டவர்களிடம் விசாரிக்கும் வரையில் உங்களை நான் விடமாட்டேன். ஏனெனில், நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா?' எனக் கூறினேன். அதற்கு என் நண்பர்கள், '(அதற்கெல்லாம் அவசியமில்லை.) உங்களை உண்மையாளர் என்றே நாங்கள் கருதுகிறோம். (இருந்தாலும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற காரணத்தால்) நீங்கள் விரும்பியபடி நாங்கள் செய்கிறோம்'' என்று கூறினார்கள். நான் அவர்களுக்குத் தரமாட்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே தந்தையும் அறிந்த சிலரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் சொன்னதைப் போன்றே கூறினார்கள்.

1698. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ(ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும் வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ(ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னைவிட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.

கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் நிகழ்ச்சியும், '(தபூக் போரில் தக்க காரணமின்றி கலந்து கொள்ளாமலிருந்து விட்டதற்காக) யாருடைய விஷயத்தில் தீர்ப்பளிக்காமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அல்லாஹ் மன்னித்தான்'' எனும் (திருக்குர்ஆன் 09:118வது) இறைவசனமும்.

1699. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ''தபூக் போரைத் தவிர, நபி(ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இதுவல்லாது நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்துகொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப் போனார்கள். (போன இடத்தில்) போரிடும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான். 'இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்' என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த 'அகபா இரவில்' இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்கு பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கவேண்டும் என நான் விரும்பியதில்லை. 'அல் அகபா' பிரமாணத்தைவிட 'பத்ர்' மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே! (தபூக் போரில் கலந்து கொள்ளாததையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் குறித்த) என்னுடைய செய்திகள் சில பின்வருமாறு:

அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாதபோது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின்போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று (இரண்டு பொருள்படும்படி பேசிப் பாசாங்கு செய்து) அதை மறைக்காமல் இருந்ததில்லை. ஆனால், தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயியில் நபி(ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர் பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள். 'எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனைப் பேருக்கு இடமளிக்காது' எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். (போரில் கலந்து கொள்ளாமல்) தலைமறைவாகி விடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு (வஹீ) வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற) அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில்) காலத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லலானேன். என்னுடைய பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவேன். '(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப்பட வேண்டும்?)' என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடுபட்டனர். (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டு விட்டார்கள். அப்போதும் நான் என்னுடைய பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை. 'நபி(ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்களில் பயண ஏற்பாடுகளைச் செய்து அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொள்வேன்' என்று நான் (என் மனத்திற்குள்) சொல்லிக் கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு (அன்றைய இரவும் கழிந்து) மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் எந்த ஏற்பாடும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) என்னுடைய நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். (எனக்கு) அந்தப் போர் கை நழுவி விட்டது. நான் உடடினயாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஆனால், என்ன செய்வது?) அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும்போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண்டிருக்கும்போது தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'கஅப் என்ன ஆனார்?' என்று கேட்டார்கள். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! அவரின் இரண்டு சால்வைகளும் (ஆடை அணிகலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டன'' என்று கூறினார். உடனே, முஆத் இப்னு ஜபல்(ரலி), (அந்த மனிதரை நோக்கி), 'தீய வார்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியபோது கவலை என் மனத்தில் (குடி) புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன். 'நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?' என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் (ஆலோசனை) உதவி தேடினேன். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கி வந்துவிட்டார்கள் என்று (செய்தி) சொல்லப்பட்டபோது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தைவிட்டு விலகிவிட்டது. 'பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது. அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்துவிடுவான்)' என்று உணர்ந்து, நபி(ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள்.

(பொதுவாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். (வழக்கம் போல்) அதை அவர்கள் செய்தபோது, (தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (தாம் போருக்கு வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்று அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள். அப்போது, நான் இறைத் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்னபோது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போன்று புன்னகைத்தார்கள். பிறகு, 'வாருங்கள்'' என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், '(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்து கொண்டிருக்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவருடைய) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்போது) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களைவிட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை'' என்று கூறினேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் உண்மை சொல்லிவிட்டார்'' (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்'' என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமல் போய்விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்விடம் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, '(தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கிறார்களா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'ஆம், இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போன்றே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) கூறினார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டதும் தான் அப்போது அவர்கள் இருவருக்கும் (பதிலாகச்) சொல்லப்பட்டது.'' என்று கூறினார்கள். உடனே நான், 'அவர்கள்'' இருவரும் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'முராரா இப்னு ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் இப்னு உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும்'' என்று பத்ருப்போரில் கலந்துகொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்களின் விஷயத்தில் மாறிப் போய்விட்டார்கள். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போன்றும் அது எனக்கு அன்னியமானது போன்றும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாள்கள் இருந்தோம். என்னுடைய இரண்டு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டைவிட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்துகொண்டும், கடை வீதிகளில் சுற்றிக்கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேசமாட்டார்கள். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும்போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது (என்னை நபி(ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று) ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொள்வதுமாக இருந்தார்கள். மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்றபோது, நான் நடந்து சென்று அபூ கத்தாதா(ரலி) அவர்களின் தோட்டத்தின் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார் அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், 'அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயா?' என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போன்றே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாயிருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரண்டு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்த அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி)னேன். (நிலைமை இவ்வாறு நீடித்துக் கொண்டிருக்க) ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், 'கஅப் இப்னு மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?' என்று (என்னைக் குறித்து) விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே, அவர் என்னிடம் வந்து, 'ஃகஸ்ஸான்' நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி)விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம். இதை நான் படித்தபோது, 'இது இன்னொரு சோதனையாயிற்றே!'' என்று (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டு அதை எடுத்துச்சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டு எரித்து விட்டேன். ஐம்பது நாள்களில் நாற்பது நாள்கள் கழிந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஒரு தூதர் என்னிடம் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , நீங்கள் உங்கள் மனைவியை விட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்'' என்று கூறினார். அதற்கு நான், 'அவளை நான் விவாகரத்துச செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். அவர், 'இல்லை. (விவாகரத்து செய்யவேண்டாம்.) அவரைவிட்டு நீங்கள் விலகி விடவேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு)'' என்று கூறினார். இதைப் போன்றே என் இரண்டு சகாக்களுக்கும் (நபி(ஸல்) அவர்கள் உத்தரவு) அனுப்பியிருந்தார்கள். எனவே, நான் என் மனைவியிடம், 'உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா!'' என்று சொன்னேன். (என் சகா) ஹிலால் இப்னு உமய்யா(ரலி) அவர்களின் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(என் கணவர்) ஹிலால் இப்னு உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?' என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவுகொள்ள) நெருங்க வேண்டாம்'' என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டேயிருக்கிறார்'' என்றும் (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார்.

கஅப்(ரலி) கூறினார்: என் வீட்டாரில் ஒருவர், 'தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் இப்னு உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடைபுரிய) அனுமதிக்கும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினார். அதற்கு நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்கமாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்ன(பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக (வேறு) இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்)'' என்று கூறி (மறுத்து) விட்டேன். அதற்குப் பின் பத்து நாள்கள் (இவ்வாறே) இருந்தேன். எங்களிடம் பேசக் கூடாதென இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாள்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றி விட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118வது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) 'பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது அப்போது, 'சல்உ' மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், 'கஅப் இப்னு மாலிக்கே! நற்செய்தி பெற்றுக்கொள்!'' என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தபோது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று அறிவித்துவிட்டார்கள்' என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரண்டு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக்கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி கூறினார்.) மேலும், (மலை மீதிருந்து வந்த) அந்தக்குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவருடைய குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரண்டு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூ கத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்துகொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், 'அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்' என்று கூறலாயினர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா(ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னபோது, சந்தோஷத்தினால் அவர்கள் தம் முகம் மின்னிக்கொண்டிருக்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதுல் உன்னைக் கடந்து சென்ற நாள்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன்'' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'இல்லை. (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை.) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஏதாவது) சந்தோஷம் ஏற்படும்போது அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகிப் பிரகாசிக்கும். அவர்களின் முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களின் சந்தோஷத்தை நாங்கள் அறிந்துகொள்வோம். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாக அளித்துவிடுகிறேன்'' என்று சொன்னேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது'' என்று கூறினார்கள். 'கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன். இறைத்தூதர் அவர்களே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்'' என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து என்னுடைய இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் கால(மனை)த்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், 'திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களின் மீதும் அன்சாரிகளின் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான். (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாமல்) விவகாரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்.) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கடியாகத் தோன்றி அவர்கள் உயிர் வாழ்வதும் மிகக் கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் உறுதிபட அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக்கொள்ளும் பொருட்டு அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 09: 117-119) வசனங்களை அருளினான்.

எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒருபோதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்ன(வர்களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போன்று நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருளியபோது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான். 'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது, அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்'' என்று (கடிந்த வண்ணம்) அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 09:95, 96)

குறிப்பாக, எங்கள் மூவரின் விவகாரம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் (பொய்) சத்தியம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களிடமும் உறுதிப்பிரமாணம் பெற்று அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். (எங்களின்) அந்த விவகாரத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும் வரையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தைத் தள்ளிப்போட்டு வந்தார்கள். இதனால் தான் (9வது அத்தியாயத்தின் 118-வது வசனத்தில்) அல்லாஹ் எங்களைக் குறித்து 'போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்' என்று (போரைக் குறிப்பிட்டுக்) கூறவில்லை. (மாறாக, 'பின்தங்கிவிட்ட மூவர்' என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளான்.) 'நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் பொய்யான சாக்குப் போக்குக் கூறியவர்களின் காரணங்களை உடனுக்குடன் ஏற்றது போன்றல்லாமல் எங்கள் விவகாரத்தை (உடனே தீர்க்காது) அல்லாஹ் தள்ளிப்போட்டு வந்தான்'' என்பதே அதன் கருத்தாகும்.

''தபூக் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கிவிட்ட கால கட்டத்தைக் குறித்து தம் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்'' என்று கஅப்(ரலி) முதிய வயதடைந்து கண்பார்வை இழந்துவிட்ட சமயம் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த - அவர்களின் புதல்வர் - அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள்.

ஆட்சியதிகாரம் பெண்ணிடம் இருக்கலாமா?

1700. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார் ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது. பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கி விட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் 'தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது'' என்று கூறினார்கள். (இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.)

நபி (ஸல்) அவர்கள் மரண தருவாயில் நிகழ்ந்த..

1701. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், எந்த நோயில் இருக்கையில் அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டதோ அந்த நோயின்போது (தம் புதல்வி), ஃபாத்திமா(ரலி) அவர்களை அழைத்து (அவர்களின் காதில்) இரகசியமாக ஏதோ சொல்ல, ஃபாத்திமா அழுதார்கள். பிறகு (மீண்டும்) அவர்களை நபி(ஸல்) அவர்கள் அழைத்து இரகசியமாக ஏதோ சொல்ல, அவர்கள் சிரித்தார்கள். நாங்கள் அதைப்பற்றி (ஃபாத்திமா(ரலி) அவர்களிடம்) விசாரித்தோம். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை அழைத்தபோது), தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே இறந்துவிடப்போவதாக இரகசியமாக என்னிடம் கூறினார்கள். எனவே, நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறையில்), 'அவர்களின் குடும்பத்தாரிலேயே நான்தான் முதலாவதாக அவர்களைப் பின்தொடர்ந்து (உலகைப் பிரிந்து) செல்லவிருப்பவள்'' என்று இரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். எனவே, நான் சிரித்தேன்'' என்று கூறினார்கள்.

1702. ஆயிஷா(ரலி) அறிவித்தார் ''உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை'' என்று நான் (நபி(ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்ட (கம்மிய, கரகரப்பான குரலில்), 'அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்'' எனும் (திருக்குர்ஆன் 04:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். எனவே, 'இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது' என்று நான் எண்ணிக்கொண்டேன்.

1703. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, 'சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில்' அல்லது '(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்' எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை'' என்று சொல்லிவந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களின் தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களின் பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், 'இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்)'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், 'இனி (நபி(ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்'' என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) அறிந்து கொண்டேன்.

1704. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்களின் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.

1705. ஆயிஷாரலி) அவர்கள் அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்கள் என் பக்கம் தம் முதுகைச் சாய்த்தபடி (என் அரவணைப்பில்) இருக்க, அவர்கள் பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள், 'இறைவா! என்னை மன்னித்து எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக'' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்.

1706. ஆயிஷா(ரலி) அறிவித்தார் என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எவருடைய மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒருபோதும் நான் வருந்துவதில்லை.

1707. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்து விட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப் போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்'' என்று பதிலளித்தார்கள்.

1708. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, 'உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?' என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், 'ஆம்'' என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், 'பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?' என்ற கேட்டேன். அவர்கள், தம் தலையால், 'ஆம்'' என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய 'தோல் பாத்திரம் ஒன்று' அல்லது 'பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் (தோல் பாத்திரமா) மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு'' என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, '(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.

1709. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி, 'என்னுடைய வாயில் மருந்தூற்றாதீர்கள்'' என்பது போல் சைகை செய்யலானார்கள். 'நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் எனத் தடை செய்யவில்லை)'' என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, 'என் வாயில் மருந்தை ஊற்ற வேண்டாமென நான் தடுக்கவில்லையா? (அப்படியிருந்தும் ஏன் நான் மயக்கத்திலிருந்தபோது மருந்தூற்றினீர்கள்,'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், '(ஆம்! தடுத்தீர்கள்) நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நீங்களும் இதை வெறுத்து, 'வேண்டாம்' என்கிறீர்கள் என நாங்கள் நினைத்தோம்)'' என்று கூறினோம். அவர்கள், 'நான் பார்த்துக் கொண்டிருக்க, ஒருவர் பாக்கியில்லாமல் இந்த வீட்டிலுள்ள அனைவர் வாயிலும் மருந்தூற்றப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு, 'ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (மருந்தூற்றும்போது) உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1710. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் நோய் கடுமையானபோது, அவர்களுக்கு மயக்கமேற்படத் தொடங்கியது. அப்போது ஃபாத்திமா(ரலி), 'அந்தோ! என் தந்தைக்கு ஏற்பட்ட மரண வேதனையே!'' என்று கூறினார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினத்திற்குப் பின் உன் தந்தைக்கு எந்த வேதனையும் இல்லை'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இறப்பெய்தியவுடன், ஃபாத்திமா(ரலி), 'அழைத்த அதிபதியின் அழைப்பை ஏற்ற என் தந்தையே! ஃபிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை தம் உறைவிடமாக்கிக் கொண்ட என் தந்தையே! இந்த இறப்புச் செய்தியை நாங்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கிறோம், என் தந்தையே!'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டபோது ஃபாத்திமா(ரலி) (என்னை நோக்கி), 'அனஸே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது மண்ணைப் போட உங்கள் மனம் எப்படி இடம் தந்தது?' என்று கேட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்பு(க் காலம்).

1711. ஆயிஷா(ரலி) அறிவித்தார். அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.''இதையே ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) எனக்குத் தெரிவித்தார்கள்'' என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்.

0 comments:

Post a Comment