Tuesday, 27 October 2009

[பாடம்-61] விவாக ரத்து.

ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமல் (மாதவிடாய் போன்றவற்றிலிருந்து) அவள் தூய்மையானவளாய் இருக்கும் சமயத்தில் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் அளிக்கிற மணவிலக்கு (நபிவழியில் அமைந்த) 'தலாக்குஸ் ஸுன்னா' ஆகும்.

1872. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) இதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், 'உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (திருக்குர்ஆன் 02:228 வது வசனத்தில்) அனுமதித்துள்ள ('இத்தாக்' காலத்தைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற) காலக் கட்டமாகும்'' என்று கூறினார்கள்.

1873. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் (என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தபோது நான் அளித்த) அந்த மணவிலக்கை, நான் கூறிய ஒரு தலாக் என்றே கணிக்கப்பட்டது.

தம் மனைவியை மணவிலக்குச் செய்யும் ஒருவர், அதை மனைவியிடமே நேரடியாகத் தெரிவிக்கலாமா?

1874. அப்துர்ரஹ்மான் இப்னு அல் அவ்ஸாயீ(ரஹ்) அறிவித்தார்: நான் முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், '(நபி(ஸல்) அவர்களிடம்) 'நான் தங்களிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று அவர்களின் துணைவியரில் யார் கூறியது?' எனக் கேட்டேன். அதற்கு ஸுஹ்ரீ(ரஹ்) ஆயிஷா(ரலி) எடுத்துரைத்தபடி உர்வா(ரஹ்) அறிவித்த (பின்வரும்) ஹதீஸைக் கூறினார்கள். அல்ஜவ்ன் குலத்துப் பெண் ஒருவரை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப் பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது அவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நெருங்கினார்கள். அப்போது அவர், 'உங்களிடத்திலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறினார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'மகத்துவமிக்க (இறை)வனிடம் நீ பாதுகாப்புக் கோரிவிட்டாய்! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றுவிடு!'' என்று கூறிவிட்டார்கள். மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

1875. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்'' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!'' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை)வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய் விட்டு விடு'' என்று கூறினார்கள்.

விவாகரத்துச் செய்த முதல் கணவரை மீண்டும் மணக்க...

1876. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ரிஃபாஆ என்னை நோக்கி ஒட்டுமொத்தத் தலாக்கையும் கூறிவிட்டார். நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ அவர்களை மணமுடித்துக் கொண்டேன். ஆனால், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றதுதான்'' என்று கூறினார். (ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அப்துர் ரஹ்மான் மறுத்தார். முதல் மனைவி மூலம் தமக்குப் பிறந்த குழந்தைகளையும் காட்டினார்.) அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீ (உன் பழைய கணவர் 'ரிஃபாஆ'விடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? இல்லை! (அவ்வாறு பழைய கணவரை மீண்டும் மணந்துகொள்ள முடியாது. உன்னுடைய இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் (முன்னாள் கணவரான ரிஃபாஆவை மணக்கமுடியாது)'' என்று கூறினார்கள்.

1877. ஆயிஷா(ரலி) அறிவித்தார்: இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவையாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் செல்வார்கள்; அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். எனவே, நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகரகத்து)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதனை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்'' என்று கூறிக்கொண்டு (நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆவிடம், (ஹஃப்ஸா வீட்டில் தேன் அருந்திவிட்டு) நபி(ஸல்) அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேல பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள்! 'இல்லை' என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேளுங்கள்! அதற்கு நபி அவர்கள் 'எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்' என்று கூறுவார்கள். உடனே நீங்கள் 'இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு (தேனை உறிஞ்சிக் கொண்டு) வந்திருக்கலாம். (எனவேதான் வாடை வருகிறது)' என்று சொல்லுங்கள்! நானும் இவ்வாறே சொல்கிறேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) கூறினேன். (நான் கூறியவாறு செய்துவிட்டு) சவ்தா அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் கூறியபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். என்னை நபி(ஸல்) அவர்கள் நெருங்கியதும், இறைத்தூதர் அவர்களே! கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை' என்றார்கள். 'தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்' என்றார்கள். உடனே நான் 'இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டது போலும்.) என்று சொன்னேன். (தொடர்ந்து ஆயிஷா(ரலி) கூறினார்:) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது நானும் அவ்வாறே கூறினேன். ஸஃபிய்யாவிடம் நபியவர்கள் சென்றபோதும் அவரும் அவ்வாறே கூறினார். பிறகு (மறுநாள்) ஹப்ஸாவிடம் சென்றபோது 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் அருந்துவதற்குச் சிறிது தேன் தரட்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அது எனக்குத் தேவையில்லை'' என்று கூறினார்கள். (இது குறித்து) சவ்தா(ரலி) 'அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களை அதைக் குடிக்கவிடாமல் தடுத்துவிட்டோமே' என்று கூறினார்கள். உடனே அவரிடம் நான் , 'சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது!)'' என்று சொன்னேன்.

1878. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!'' என்று கூறினார்கள்.

பரீராவின் கணவருக்காக நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தது.

1879. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?' என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் 'முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?' என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை'' நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்'' என்றார்கள். அப்போது பரீரா, '(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை'' என்று கூறிவிட்டார்.

அநாதைகளைப் பராமரிப்பதின் சிறப்பு.

1880. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்'' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

இந்தக் குழந்தை தன்னுடையது அல்ல என ஒருவர் குறிப்பால் உணர்த்துவது.

1881. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (கிராமவாசியான) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)'' என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிறம் என்ன?' என்ற கேட்டார்கள். அவர், 'சிவப்பு' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், '(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும்'' என்று கூறினார்கள்.

சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யப்பட்ட பெண்ணின் மஹ்ர் (மணக் கொடை குறித்த சட்டம்).

1882. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன)?' என்று கேட்டேன். அதற்கவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபி(ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள். பிறகு 'உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?' என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மீண்டும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?' என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே) 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா?' என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். எனவே, அவர்கள் இருவரையும் நபி(ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப்(ரஹ்) கூறினார்: இந்த ஹதீஸில் (ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) குறிப்பிட்ட) ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன்'' என்று என்னிடம் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: (சாப அழைப்புப் பிரமாணம் செய்த) அந்த மனிதர், '(மஹ்ராக நான் அளித்த) என்னுடைய பொருள் (என்னாவது)?' என்று கேட்டார். அதற்கு அவரிடம், '(உம்முடைய மனைவி மீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவுகொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகி விடும்.) நீர் பொய் சொல்லியிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அச்செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது' என்று கூறப்பட்டது.

(கணவனை இழந்து) துக்கம் கடைப்பிடிக்கும் பெண் (கண்ணில்) அஞ்சனம் தீட்டிக்கொள்வது (கூடாது).

1883. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். ('இத்தா'வில் இருந்த அவளுடைய கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். எனவே, அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது 'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்து செல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்'' என்று கூறினார்கள்.

0 comments:

Post a Comment