'அல்ஃபாத்திஹா' அத்தியாயம்.
1712. அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார் நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் (தொழுது முடித்தபின்), 'இறைத்தூதர் அவர்களே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள்,'உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள்'' என்று (திருக்குர்ஆன் 08:24வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு என்னிடம், 'குர்ஆனின் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு என் கையைப் பிடித்தார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், 'நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்' என்று சொல்லவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஃஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும்'' என்று கூறினார்கள்.
2) 'அல்பகரா' அத்தியாயம்
1713. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது'' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்'' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது'' என்று கூறினார்கள்.
''மேலும், நாம் உங்களின் மீது மேகத்தை நிழலிடும்படி செய்தோம். உங்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். 'நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்' (என்றும் உங்களிடம் கூறினோம். இக்கட்டளைகளை மீறியதால்) எமக்கொன்றும் அவர்கள் தீங்கிழைத்து விடவில்லை. மாறாக, தமக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:57வது) இறைவசனம்.
1714. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும் எனக் கூறினார்கள் என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
1715. பனூ இஸ்ராயீல்களுக்கு, '(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். 'ஹித்தத்துன்' (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள்'' (திருக்குர்ஆன் 02:58) என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப் பட்டதை) அவர்கள் மாற்றி, 'ஹித்தத்துன்; ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து)'' என்று (பரிகாசமாகக்) கூறினார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
1716. உமர்(ரலி) அறிவித்தார். எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்'' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்'' என்று கூறியுள்ளான் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ் (தனக்குச்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்' என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (அதிலிருந்து) தூய்மையானவன்'' (எனும் 02:11வது வசனத் தொடர்).
1717. ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும் அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, 'அவனை நான் முன்பிருந்தது போன்றே மீண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது' என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, 'எனக்குக் குழந்தை உண்டு' என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக் கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்'' என்று அல்லாஹ் கூறினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
''மேலும் (நினைவு கூருங்கள்:) நாம் (கஅபா எனும்) இந்த ஆலயத்தை மக்களுக்கு ஒன்று கூடும் இடமாகவும், அமைதி அளிக்கும் இடமாகவும் ஆக்கினோம். மேலும், 'இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள்' என்றும் மக்களுக்கு நாம் கட்டளையிட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 02:125வது) வசனத் தொடர்.)
1718. உமர்(ரலி) அறிவித்தார் 'மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்' அல்லது 'என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்'. நான் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!'' என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும், நான், (அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி தாங்கள் கட்டளை யிடலாமே!'' என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா(சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, 'நீங்கள் (நபி(ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ள வேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்'' என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, 'உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!'' என்று கேட்டார். அப்போது அல்லாஹ், 'இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்'' எனும் (திருக்குர்ஆன் 66:5வது) வசனத்தை அருளினான். இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
1719. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'வேதக்காரர்கனை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்'' (திருக்குர்ஆன் 02:136) என்று கூறினார்கள்.
இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (எனும் 02:143வது வசனத்தொடர்.)
1720. மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், 'இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்'' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், '(நம்முடைய செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்து விட்டீர்களா?' என்று இறைவன் கேட்பான். அவர்கள், 'ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)'' என்று சொல்வார்கள். அப்போது அவர்களின் சமுதாயத்தாரிடம் 'உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை'' என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், 'உங்களுக்கு சாட்சியம் சொல்கிறவர் யார்?' என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், 'முஹம்மதும் அவரின் சமுதாயத்தினரும்'' என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், 'நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்து விட்டார்கள்'' என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே 'இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக'' எனும் (திருக்குர்ஆன் 02:143) இறைவசனம் குறிக்கிறது. 'நடுநிலையான' (வசத்) என்பதற்கு 'நீதியான' என்று பொருள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பின்னர் மக்கள் (அனைவரும்) திரும்பி வருகிற ('அரஃபாத்' எனும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பி வாருங்கள் (எனும் 02:199 வது வசனத் தொடர்).
1721. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் - புனித எல்லையை விட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) 'உறுதி மிக்கவர்கள்' எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9 வது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் 'மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:199 வது) இறைவசனமாகும்.
(அல்லாஹ்வைப் பல வழிகளிலும் நினைவு கூரும் மக்கள் உள்ளனர்.) அவர்களில் சிலர், 'எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக!'' எனப் பிரார்த்திக்கின்றனர் (எனும் 02:201 வது இறைவசனம்.)
1722. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! எங்கள் இறைவனே! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக?' எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
1723. ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், 'அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்'' எனும் (இந்த 02:273 வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
3) 'ஆலுஇம்ரான்' அத்தியாயம்;
1724. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் 'கோணல்' உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், அவற்றின் (உண்மை) விளக்கத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். அறிவில் முதிர்ந்தவர்களோ 'இவற்றை நாங்கள் நம்பினோம். (இவ்விரு வகையான வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்தே வந்துள்ளன' என்று கூறுகின்றனர். (எதையும்) அறிவாளிகளன்றி எவரும் (சரியாக) உணர்வதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:7 வது) வசனத்தை ஓதிவிட்டு, 'முதஷாபிஹாத்தான வசனங்களைத் தேடித் திரிபவர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் தாம் (இந்த வசனத்தில்) அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டவர்கள் (என்பதைப் புரிந்து கொண்டு) அவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' என்று கூறினார்கள்.
1725. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார் இரண்டு பெண்கள் 'ஒரு வீட்டில்' அல்லது 'ஓர் அறையில்' (காலுறை) தைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்விருவரில் ஒருத்தி தம் கையில் (தைக்கும்) ஊசி குத்தப்பட்ட நிலையில் வெளியே வந்து மற்றொருத்தியின் மீது குற்றம் சாட்டினாள். இந்த வழக்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (தீர்ப்புக்காகக்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'மக்களின் வாதத்தை (முறையீட்டை) மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால் பலருடைய உயிர்களும் செல்வங்களும் (வீணாக பலி கொள்ளப்பட்டுப்) போய்விடும்' என்று கூறினார்கள்' எனக் கூறிவிட்டு, (பிரதிவாதியான) அந்த மற்றொருத்திக்கு அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டி, அவளுக்கு 'அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும், தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்பவிலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவளுக்கு மக்கள் அல்லாஹ்வைப் பற்றி நினைவூட்டினார்கள். அவளும் தன் (தோழியின் கையில் ஊசியால் குத்திய) குற்றத்தை ஒப்புக் கொண்டாள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள், 'பிரதிவாதி (தன் குற்றத்தை மறுத்தால்) சத்தியம் செய்யவேண்டும்' என்று கூறினார்கள்'' எனக் கூறினார்கள்.
'இவர்களிடம் 'நிச்சயமாக மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணி திரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்' என்று மக்கள் (சிலர்) கூறினர். ஆனால், இது இவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் இவர்கள் கூறினார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 03:173 வது) இறைவசனம்.
1726. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது 'அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத்(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக (மீண்டும் தாக்குதல் தொடுக்க எதிர்த்தரப்பு) மக்கள் உங்களுக்கெதிராக அணி திரண்டுள்ளனர்; எனவே, அவர்களுக்கு அஞ்சுங்கள்'' என மக்கள் (சிலர்) கூறியபோது கூறினார்கள். இ(வ்வாறு அச்சுறுத்திய)து அவர்களுக்கு நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. 'எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.
இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணை வைப்போரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும் (எனும் 3:186 வது) வசனத் தொடர்.)
1727. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஃபதக்' நகர முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து தமக்குப் பின் வாகனத்தில் என்னை அமர்த்திக் கொண்டு ஹாரிஸ் இப்னு அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றார்கள் - இது பத்ருப் போருக்கு முன்னால் நடந்தது. - அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர்களின் தலைவர்) 'அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்' இருந்தார். -அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்வதற்கு முன்பு இது நடந்தது. - அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியினால் கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்திருந்தபோது (நயவஞ்சகன்) அப்துல்லாஹ் இப்னு உபை தன்னுடைய மேல் துண்டால் தன் மூக்கைப் பொத்திக்கொண்டார். பிறகு, 'எங்களின் மீது புழுதி கிளப்பாதீர்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவையோருக்கு சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். இதைக்கேட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் (நபி(ஸல்) அவர்களிடம்) 'மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இதுபோன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச் சொல்லுங்கள்'' என்றார். இதைக்கேட்ட அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி), 'ஆம்! இறைத்தூதர் அவர்களே! அதனை நம் அவைக்கு வந்து எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்'' என்றார். இதைக் கேட்ட முஸ்லிம்களுக்கும் இணைவைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவிற்குச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், மக்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப் படுத்திக் கொண்டேயிருந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறி ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் சென்று, அவரிடம் 'சஅதே! அபூ ஹுபாப் - அப்துல்லாஹ் இப்னு உபை - சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? அவர் இன்னின்னவாறு கூறினார்'' என்றார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீதாணையாக! தங்களுக்குத் தான் அருளிய சத்திய (மார்க்க)த்தை அல்லாஹ் கொண்டுவந்துவிட்டான். இந்த (மதீனா) ஊர்வாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கீரிடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அ(ந்த முடிவு)தனை அவன் நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்'' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கொப்ப இணைவைப்பவர்களையும் வேதக்காரர்களையும் மன்னிப்பவர்களாகவும் (அவர்களின்) நிந்தனைகளைப் பொறுத்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ் கூறினான்: (இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்கு முன்வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிபந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (திருக்குர்ஆன் 03:186)மேலும் அல்லாஹ் கூறினான்: (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறைநம்பிக்கை கொண்டதற்குப்பின் உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களின் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாகும். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) நீங்கள் மன்னித்துக் கொள்ளுங்கள். திண்ணமாக! அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். (திருக்குர்ஆன் 02:109). அவர்களின் விஷயத்தில் அல்லாஹ் (நடவடிக்கையெடுக்க) அனுமதிக்கும்வரை நபி(ஸல்) அவர்கள் மன்னிக்கும் போக்கையே கைக்கொள்பவர்களாக இருந்தார்கள். அப்பால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்ருப்போருக்குச் சென்றபோது அன்னாரின் மூலம் அல்லாஹ் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் தலைவர்களைக் கொன்றான். அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலும் அவருடனிருந்த இணைவைப்பாளர்களும், சிலைவணங்கிகளும் '(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. எனவே, இந்த (இறை)த் தூதரிடம் இஸ்லாத்தை ஏற்றோமென உறுதி மொழியளித்து விடுங்கள்'' என்று கூறி (வெளித்தோற்றத்தில்) இஸ்லாத்தை எற்றனர்.
தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்படவேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு (எனும் 3:188 வது இறைவசனம்).
1728. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புனிதப் போருக்குச் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள் அப்போதுதான் 'தாம் செய்த (தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டப்படவேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' எனும் (திருக்குர்ஆன் 03:188 வது) இறைவசனம் அருளப்பெற்றது.
1729. அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) அறிவித்தார் (மதீனா ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் தம் காவலரிடம் 'ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று, 'தமக்கு அளிக்கப்பட்டவை குறித்து மகிழ்ச்சி அடைகின்ற, தாம் செய்யாத (சாதனைகள் முதலிய)வற்றுக்காகத் தாம் புகழப்படவேண்டுமென்று விரும்புகிற மனிதர் ஒவ்வொரு வரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட்ட வேண்டி வருமே!' என்று (நான் வினவியதாகக்) கேள்'' என்று கூறினார். (அவ்வாறே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) 'உங்களுக்கு இது தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி(ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்கப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்த த(கவலி)ற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்'' என்று கூறிவிட்டு (பின்வரும்) இந்த வசனங்களை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஓதினார்கள்: வேதம் வழங்கப்பட்டவர்களிடம் 'நீங்கள் அதனை மக்களுக்குத் தெளிவாக்கிட வேண்டும்; அதனை மறைக்கக் கூடாது' என அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். ஆனால், அதனை அவர்கள், தம் முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு, அதற்கு பதிலாக அற்ப விலையை வாங்கிக் கொண்டனர் என்பதை (நபியே! அவர்களுக்கு நினைவூட்டுவீராக!) அவர்கள் வாங்கிக் கொண்டது மிக மோசமானதாகும். தாம் செய்த(தீய)வை குறித்து மகிழ்ந்து கொண்டும், தாம் செய்யாதவற்றைக் கொண்டு பாராட்டபடவேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பிவிடுவார்கள் என்று ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 03:187, 188) இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4.) 'அந்நிஸா' அத்தியாயம்
1730. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்களை மணந்து கொண்டு அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக நீங்கள் மணந்து கொள்ளலாம்'' எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்: என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் பொறுப்பில் வளர்கிற அவரின் செல்வத்தில் கூட்டாக இருக்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் அவளுடைய மஹ்ர் (விவாகக் கொடை) விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் - மற்றவர்கள் அவளுக்கு அளிப்பது போன்ற மஹ்ரை அவளுக்கு அளிக்காமல் - அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் எனும் நிலையில் இருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செலுத்தாமல் அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல் அவர்களை மணந்துகொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்றப் பெண்களில் தங்களுக்கு விருப்பமான பெண்களை மணந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். எனவே, அல்லாஹ், 'பெண்களின் விஷயத்தில் தீர்ப்பு வழங்கும்படி (நபியே!) உங்களிடம் கோருகின்றனர்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:127 வது) வசனத்தை அருளினான். மேலும் (இந்த) பிந்திய வசனத்தில் (திருக்குர்ஆன் 04:127) உயர்வுக்குரிய அல்லாஹ் 'மேலும் யாரை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவதில்லையோ...'' என்று கூறியிருப்பது, உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தம் (பராமரிப்பில் இருந்துவரும்) அநாதைப் பெண்ணை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது அவளை (மணந்து கொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகிற்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் 'நீதியான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணந்துகொள்ளலாகாது' என்று அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் (இவ்வாறு) கட்டளையிடுகிறான்... (என்று தொடங்கும் 4:11 வது வசனம்.)
1731. ஜாபிர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (என்) பனூசலிமா குலத்தாரிடையே நான் (நோயுற்றுத் தங்கி) இருந்தபோது நடந்தே வந்து என்னை நலம் விசாரித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் நான் (நோயின் கடுமையால்) சுயநினைவு இழந்தவனாக இருந்த நிலையில் என்னைக் கண்டார்கள். எனவே, சிறிது தண்ணீரைக் கொண்டுவரச் சொல்லி அதிலிருந்து உளூ (அங்கசுத்தி) செய்து என் மீது தெளித்தார்கள். நான் மூர்ச்சை தெளிந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் என் செல்வத்தை என்ன செய்யவேண்டு மென்று எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்!'' என்று கேட்டேன். அப்போதுதான் 'அல்லாஹ் உங்கள் பிள்ளைகளுடைய (பாகப்பிரிவினை) விஷயத்தில் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:11 வது) வசனம் அருளப்பட்டது.
நிச்சயமாக அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான் (எனும் 4:40 வது வசனத் தொடர்).
1732. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் சிலர், 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! (காண்பீர்கள்) மேகமே இல்லாத நண்பகல் வெளிச்சத்தில் சூரியனைப் பார்க்க ஒருவரை ஒருவர் முண்டியடிப்பீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள், 'இல்லை'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'மேகமே இல்லாத பௌர்ணமி இரவின் வெளிச்சத்தில் நிலவைக் காண்பதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள் (அப்போதும்) 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொள்ளாதது போன்றே மறுமை நாளில் கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் முண்டியடித்துக் கொள்ளமாட்டீர்கள்'' என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள். மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் 'ஒவ்வொரு சமுதாயமும் (உலக வாழ்வில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்'' என்றழைப்பார். அப்போது அல்லாஹ்வை விடுத்துக் கற்பனைக் கடவுளர்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் (கூட) எஞ்சாமல் (அனைவரும்) நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு நன்மைகளும் புரிந்து கொண்டிருந்தவர்கள், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக்கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) பாவிகள், மேலும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் ஆகியோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவர். அவர்களிடம் 'யாரை நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தீர்கள்'' என்று கேட்கப்படும். அவர்கள், 'அல்லாஹ்வின் மகன் உஸைர் அவர்களை நாங்கள் வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக்கொள்ளவில்லை'' என்று கூறப்படும். மேலும், 'இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்கப்படும். அதற்கவர்கள் 'எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!'' என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக்கூடாதா என (ஒரு திசையைச்) சுட்டிக்காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள். பிறகு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, 'நீங்கள் எதை வணங்கிக்கொண்டிருந்தீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள் 'நாங்கள் அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்று கூறுவர். அப்போது அவர்களிடம், 'நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் (தனக்கு) எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக்கொள்ளவில்லை'' என்று கூறப்பட்ட பின் அவர்களைப் பார்த்து, 'உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்கப்படும். முன்பு (யூதர்கள்) கூறியது போன்று இவர்களும் கூறுவர். இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் (கொண்டு நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லோர், அல்லது (அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோர் தவிர வேறெவரும் மீதியில்லாத நிலையில் அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனின் தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்) அப்போது 'எதை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயம் (உலகில்) தாம் வணங்கிக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்கின்றனரே!'' என்று கேட்கப்படும். அவர்கள், 'உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?) நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த எங்கள் இறைவனையே நாங்கள் (இத்தருணத்தில்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்'' என்று பதிலளிப்பர். அதற்கு அல்லாஹ், 'நானே உங்களுடைய இறைவன்'' என்பான். அதற்கு அவர்கள் 'நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்'' என்று இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ கூறுவர்.
ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்? (எனும் 4:41 வது இறைவசனம்.)
1733. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள்'' என்று கூறினார்கள். நான், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஏனெனில், நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்கு 'அந்நிஸா' அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். 'ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?' எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்போது நபி(ஸல்) அவர்கள், 'நிறுத்துங்கள்'' என்று கூறினார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
1734. முஹம்மத் இப்னு அப்திர் ரஹ்மான் அபுல் அஸ்வத்(ரஹ்) அறிவித்தார் மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப் பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறினார்கள்: (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும்; அல்லது அவர் (வாளால்) அடிபட்டுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி 'இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?' என வினவுவார்கள். அதற்கு அவர்கள், 'பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்'' என பதிலளிப்பார்கள். 'அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?' என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும். இதை அபுல் அஸ்வத்(ரஹ்) அவர்களிடமிருந்து ஸைத் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
1765. நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று என்னைப்பற்றி கூறுகிறவர் பொய்யுரைத்து விட்டார். இதை அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.
5.) 'அல்மாயிதா' அத்தியாயம்.
(எம்) தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்கள் அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள் (எனும் 5:67 வது வசனத் தொடர்).
1736. ஆயிஷா(ரலி) அறிவித்தார் முஹம்மத்(ஸல்) அவர்கள், தம் மீது அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்களிடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ '(எம்) தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்!'' என்று கூறுகிறான்.
''இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:87 வது) வசனத் தொடர்.
1737. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'எங்களுடன் துணைவியர் எவரும் இல்லாத நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஒரு) புனிதப் போரில் கலந்து கொண்டிருந்தோம். எனவே, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)க் கொள்ளலாமா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்.'' என்று கூறிவிட்டு பிறகு, 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி(ஹராமாக்கி)க் கொள்ளாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:87 வது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
1738. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார் நீங்கள் 'ஃபளீக்' என்றழைக்கிற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை. (ஒரு முறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்) அபூ தல்ஹா(ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, 'உங்களுக்குச் செய்தி எட்டியதா?' என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், 'என்ன அது?' என்று கேட்டனர். அவர், 'மது தடை செய்யப்பட்டு விட்டது'' என்று பதிலளித்தார். அப்போது அவர்கள், 'அனஸே! இந்த (மதுப்) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடுங்கள்'' என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை. மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.
''இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்ததை ஏற்படுத்தும்'' எனும் (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம்.
1739. அனஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், 'நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்'' என்று குறிப்பிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், 'என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இன்னார்'' என்று கூறினார்கள். அப்போதுதான் 'இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது. இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
1740. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி(ஸல்) அவர்களிடம்), 'என் தந்தை யார்?' என்று கேட்டார். தம் ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர் 'என் ஒட்டகம் எங்கே?' என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்களின் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான். இறை நம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டு விடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத்தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 05:101)
''(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்களின் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) வசனத் தொடர்.
1741. ஜாபிர்(ரலி) அறிவித்தார் ''(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, 'உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும் வைக்கவும் அதன் ஆற்றலுள்ளவன்'' என்பதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(இறைவா!) உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறினார்கள். 'உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ'' என்று கூறினார்கள். 'அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்'' என்பதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இது (முந்தைய வேதனையை விட) 'எளிதானது' அல்லது 'இது சுலபமானது' ஆகும்'' என்று கூறினார்கள்.
''(நபியே!) அல்லாஹ்வினால் நேர்வழியில் செலுத்தப்பட்டவர்கள்தாம் இவர்கள். எனவே, இவர்களின் நேரான வழியையே நீங்களும் பின்பற்றுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 06:90 வது) வசனத்தொடர்.
1742. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார் நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'ஸாத்'' (எனும் 38 வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம் (திருக்குர்ஆன் 38:24 வது வசனத்தில் சஜ்தா உண்டு)'' என்று கூறிவிட்டு 'நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததிகளாக) வழங்கினோம்'' என்று தொடங்கி 'இவர்களுடைய நேரான வழியையே நீங்களும் பின்பற்றுங்கள்'' என்பது வரை (திருக்குர்ஆன் 06:84-90 வசனங்களை) ஓதினார்கள். பிறகு இப்னு அப்பாஸ்(ரலி), 'தாவூத்(அலை) அவர்கள் இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர் தாம்'' என்று கூறினார்கள். யஸீத் இப்னு ஹாரூன்(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் அதிகப்படியாக இடம் பெற்றிருப்பதாவது: முஜாஹித்(ரஹ்) கூறினார்: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள் 'முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டவர்களில் உங்களில் நபி(ஸல்) அவர்களும் ஒருவர்தாம்'' என்றும் கூறினார்கள்.
''மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை எதனையும் நெருங்காதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 06:151 வது) வசனத்தொடர்.
1743. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் ''அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்'' (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.) அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம் 'இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிட்டார்களா?' என்று கேட்க, அவர்கள், 'ஆம்'' என்று பதில் கூறினார்கள்.
1744. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார் ''(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக!'' எனும் (திருக்குர்ஆன் 07:199 வது) வசனத்தை, மக்களின் நற்குணங்களில் ஒன்றாகவே அல்லாஹ் அருளினான்.
1745. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் எங்களிடம் இப்னு உமர்(ரலி) புறப்பட்டு வந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), 'நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, இப்னு உமர்(ரலி), 'குழப்பம்' (ஃபித்னா) என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா? முஹம்மத்(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் போரிட்டு வந்தார்கள். இணைவைப்பவர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்'' என்று பதிலளித்துவிட்டு, 'அவர்களின் போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களின் போரைப் போன்று இருந்ததில்லை'' என்றும் கூறினார்கள்.
மேலும், தம் குற்றங்களை ஒப்புக்கொண்டிருக்கும் வேறு சிலரும் (அவர்களில்) உள்ளனர்; அவர்கள் நற்செயலுடன் தீயசெயலையும் கலந்து விட்டிருக்கிறார்கள். (ஆயினும்,) அல்லாஹ் அவர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடலாம். நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும், கருணை புரிபவனுமாவான் (எனும் 9:102 வது இறைவசனம்).
1746. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: இன்றிரவு எங்களிடம் (வானவர்கள்) இருவர் வந்து என்னை (தூக்கத்திலிருந்து) எழுப்பி (அழைத்து)ச் சென்றார்கள். அவர்கள் இருவரும் தங்கச் செங்கல்லாலும் வெள்ளிச் செங்கல்லாலும் கட்டப்பெற்றிருந்த ஒரு நகரத்திற்கு சென்று சேர்ந்தார்கள். அப்போது எங்களைச் சில மனிதர்கள் எதிர்கொண்டார்கள். அவர்களின் உடலமைப்பில் பாதி நீ பார்த்திலேயே மிக அழகானதாயும், மற்றொரு பாதி நீ பார்த்ததிலேயே மிக அருவருப்பானதாயும் இருந்தது. அ(ந்த வான)வர்கள் இருவரும் அந்த மனிதர்களிடம், 'நீங்கள் சென்று அந்த ஆற்றில் விழுங்கள்'' என்று கூற அவர்களும் அவ்வாறே அதில் விழுந்தனர். பிறகு எங்களிடம் திரும்பி வந்தனர். (அதற்குள்) அந்த அருவருப்பான தோற்றம் அவர்களைவிட்டுச் சென்றுவிட்டிருந்தது. அவர்கள் மிக அழகான தோற்றமுடையவர்களாக மாறி விட்டிருந்தனர். (என்னை அழைத்துச் சென்ற) அந்த இருவரும் என்னிடம் 'இதுதான் 'அத்ன்' எனும் சொர்க்கம். இதுதான் உங்கள் தங்குமிடம்'' என்று கூறிவிட்டு பிறகு, 'பாதி (தோற்றம்) அழகானதாயும் பாதி (தோற்றம்) அருவருப்பானதாயும் இருந்தவர்கள் (உலக வாழ்வில்) நற்செயலையும் வேறு தீய செயலையும் கலந்துவிட்டவர்கள். அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான்'' என்று (விளக்கம்) கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
''(அப்போது) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மீதிருந்தது'' எனும் (திருக்குர்ஆன் 11:7 வது வசனத் தொடர்.
1747. வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், 'நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவு செய்வேன்'' என்று சொன்னான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்ட எதுவும் அவனுடைய கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்து விடவில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனுடைய கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான் இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
1748. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக் கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 19:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் வான்வெளியை நாம் காத்தோம். (ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது;) எதையேனும் ஒட்டுக் கேட்பவர் தவிர! (அப்படி அவர் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச்சுவாலை அவரைப் பின்சென்று விரட்டும் (எனும் 15:17, 18 ஆகிய வசனங்கள்).
1749. அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னுஅப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்:(சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், '(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச் செய்வான்'' என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது. (இறைக் கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டு பீதி அகற்றப்படும்போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், 'நம் இறைவன் என்ன சொன்னான்?' என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், '(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்'' என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்று விடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்து கொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக் கேட்கின்றனர். சுஃப்யான்(ரஹ்) (தம் அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தம் வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள். அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தன் சகாவிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற்குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாக பூமிவரை அதைச் சேர்த்து விடுகிறார்கள். சுஃப்யான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'கடைசியில் அது பூமிக்கு வந்து சேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகிறான். (இதைக் கேட்கும்) மக்கள், 'இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?' என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்'' என்று இடம் பெற்றுள்ளது. அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், 'சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது' எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
''தள்ளாத முதுமை வயதுவரை (வாழ) விடப்படுகிறவர்களும் உங்களில் உள்ளனர்'' எனும் (திருக்குர்ஆன் 16:70 வது) வசனத் தொடர்.
1750. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் ''(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.
நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றியிருந்த மக்களின் வழித் தோன்றல்களே நீங்கள். திண்ணமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகவே திகழ்ந்தார் (எனும் 17:3 வது இறைவசனம்).
1751. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு 'நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) 'உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், '(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர். எனவே மனிதர்கள், ஆதம்(அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு 'ஆதம்(அலை) அவர்கள் ('நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப்போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது' என்று கூறிவிட்டு 'நீங்கள் வேறெவரிடமாவது சொல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். உடனே மக்களும் நூஹ்(அலை) அவர்களிடம் சென்று 'நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு நூஹ்(அலை) அவர்கள் 'என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!' (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவ்வாறே மக்களும் மூஸா(அலை) அவர்களிடம் சென்று 'மூஸாவே நீங்கள் இறைத்தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப் படுத்தியுள்ளான். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள் 'இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் சொல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.
அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, 'ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈசா(அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை - (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் - நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (எனவே,) நீங்கள் வேறெவரிடமாவது சொல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அப்போது மக்கள் என்னிடம் வந்து 'முஹம்மதே! நீங்கள் இறைத்தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களின் முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி 'இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு 'முஹம்மதே! சொர்க்கத்தின். வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்' என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரண்டு பக்கங்களுக்கிடையேயான தூரம் 'மக்காவிற்கும் (யமனிலுள்ள) 'ஹிகியர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது 'மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்'' என்று கூறினார்கள்.
''இரவில் 'தஹஜ்ஜுத்' எனும் தொழுகையைக் கடைப்பிடிப்பீராக. இது உமக்கு அதிகப்படியான தொழுகையாகும். உம்முடைய இறைவன் உம்மை ('மகாமு மஹ்மூத்' எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்'' எனும் (திருக்குர்ஆன் 17:79 வது) இறைவசனம்.
1752. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, 'இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள்'' என்று கேட்பார்கள். (ஒவ்வொருவராகத் தம்மால் இயலாதென்று மறுத்துக்கொண்டே வர) இறுதியில் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள்.) நபியவர்களை அல்லாஹ் ('மகாமு மஹ்மூத்' எனும்) உயர் அந்தஸ்திற்கு அனுப்பும் நாளில் இது நடக்கும்.
(நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்குமிடையில் ஒரு வழியை (-மிதமான தொனியை-)க் கடைப்பிடியுங்கள் (எனும் 17:110 வது வசனத் தொடர்.)
1753. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் இப்னு அப்பாஸ்(ரலி), '(நபியே!)'' உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) இறைவசனம் தொடர்பாகக் கூறினார்கள்: 'இறைத்தூதர்(ஸல) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் தம் தோழர்களுடன் மறைந்து தொழும்போது குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்கள். அதை இணைவைப்பவர்கள் கேட்கும்போது, குர்ஆனையும் அதை இறக்கியருளிய இறைவனையும், அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, உயர்ந்தவனாகிய அல்லாஹ் தன் நபியிடம் 'நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தாதீர்கள். அதாவது உரத்த குரலில் ஓதாதீர்கள். (ஏனெனில்,) இணைவைப்போர் அதைக் கேட்டுவிட்டு குர்ஆனை ஏசுவார்கள். (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு ஒரேயடியாகக் குரலைத் தாழ்த்தவும் செய்யாதீர்கள். இவ்விரண்டுக்குமிடையே, மிதமான போக்கைக் கைக்கொள்ளுங்கள்'' என்று கூறினான்.
''அவர்கள்தாம் தம் இறைவனின் வசனங்களையும் (மறுமையில்) அவனுடைய சந்திப்பையும் ஏற்க மறுத்தவர்கள் ஆவர். எனவே, அவர்களின் செயல்கள் வீணாகி விட்டன. மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனம்.
1754. மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(நபியே!) துக்கத்திற்குரிய அந்த (மறுமை) நாளைக் குறித்து இவர்களை எச்சரியுங்கள் (எனும் 19:39 வது வசனத் தொடர்.)
1755. (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்'' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே!' என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்'' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை'' என்று கூறுவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அறிவித்த அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்..இதைக் கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்று இருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள்.
''யார் தம் மனைவியர் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாக தாம் (தம் குற்றச்சாட்டில்) உண்மையாளர் தாம் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கவேண்டும்'' எனும் (திருக்குர்ஆன் 24:6 வது) இறைவசனம்.
1756. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் 'பனூ அஜ்லான்' குலத்தாரின் தலைவராயிருந்த ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்களிடம் (அதே குலத்தைச் சேர்ந்த) 'உவைமிர்' என்பவர் வந்து 'தன் மனைவியுடன் வேறொரு அன்னிய ஆடவன் (தகாத உறவுகொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த அன்னிய ஆடவனைக் கொன்று விடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழி வாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள்'' என்று கூறினார். எனவே, ஆஸிம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே!'' என்று (விஷயத்தைச் சொல்லி) கேட்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை (என்பதை உணர்ந்து கொண்டு திரும்பி வந்துவிட்டார்). நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்று ஆஸிம்(ரலி) அவர்களிடம் உவைமிர்(ரலி) கேட்க, அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இத்தகைய கேள்விகளை விரும்பவில்லை. மேலும், இப்படிக் கேட்பதை அவர்கள் அசிங்கமாகக் கருதுகிறார்கள்'' என்று பதில் கூறினார்கள். உடனே உவைமிர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்காமல் ஓயமாட்டேன்'' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அன்னிய ஆடவன் இருக்கக் கண்டால் அவன் அம்மனிதனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் உம்முடைய விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் குர்ஆன் வசனத்தை அருளியுள்ளான்'' என்று கூறி, அவ்விருவருக்கும் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ள ('லிஆன்' எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்யும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே, தம் மனைவி மீது (குற்றம் சாட்டி) உவைமிர்(ரலி) 'லிஆன்' செய்தார்கள். பிறகு 'இறைத்தூதர் அவர்களே! நான் இவளை (விவாகரத்துச் செய்யாமல் என் மனைவியாகவே) வைத்திருந்தால், இவளுக்கு அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' என்று கூறிவிட்டு, அவளை விவாகரத்துச் செய்துவிட்டார். இந்த வழிமுறையே அவர்களுக்குப் பின் 'லிஆன்' செய்யும் கணவன் மனைவியருக்கு முன் மாதிரியாகிவிட்டது. பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'கவனியுங்கள்! கரு நிறமும் கன்னங்கரிய கண் பாவையும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையை இவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றி உண்மை பேசியதாகவே, கருதுகிறேன். அரணையைப் போல், சிவப்பான பிள்ளையை அவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றிப் பொய் பேசியதாகவே நான் கருதுவேன்'' என்று கூறினார்கள். பின்னர் உவைமிர் சொன்னதை மெய்ப்பிக்கும் விதத்தில் அவள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வர்ணித்த தோற்றத்திலேயே (கருநிறமும், கன்னங்கரிய கருவிழியும் தடித்த கால்களும் உடைய) பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இதனால் அக்குழந்தை தன் தாயுடன் இணைத்தே ('இன்னவளின் மகன்' என்று) அழைக்கப்படலாயிற்று.
(தன் மீது தன்னுடைய கணவன் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) அவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டும் அகற்றி விடும் (எனும் 24:8 வது இறைவசனம்.)
1757. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ஹிலால் இப்னு உமய்யா(ரலி) (கர்ப்பவதியான) தம் மனைவியை 'ஷரீக் இப்னு சஹ்மா' என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்'' என்று கூறினார்கள். அதற்கு ஹிலால்(ரலி), 'தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். என்னுடைய முதுகைக் கசையடிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்'' என்று கூறினார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி(ஸல்) அவர்களுக்கு 'யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால்(ரலி) அவர்களின் மனைவியிடம் ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால்(ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகிறவர் யார்?' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால்(ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி 'இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)'' என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், 'காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை'' என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இவளைக் கவனித்து வாருங்கள். இவள் கரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது 'ஷரீக் இப்னு சஹ்மா'வுக்கே உரியதாகும்'' என்று கூறினார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், 'இது பற்றிய இறைச்சட்டம் ('லிஆன்' விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்'' என்று கூறினார்கள்.
''நரகத்தை நோக்கி தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படவிருப்பவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிகத் தவறானதாகும்'' எனும் (திருக்குர்ஆன் 25:34 வது) இறைவசனம்.
1758. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?' என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். (இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) 'ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!'' என்று கூறினார்கள்.
1759. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார் கிந்தா எனும் இடத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது 'மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப்புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கையாளருக்கு ஜலதோஷம் ஏற்படுவது போன்றிருக்கும்'' என்று கூறினார். (இதைக்கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்து கொண்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் 'சொல்லுங்கள்: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனல்லன்'' என்று (திருக்குர்ஆன் 38:86) கூறியுள்ளான். மேலும், குறைஷியர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் குறைஷியருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், 'இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்!'' என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்து போனார்கள். மேலும், பலர் செத்தவற்றையும் எலும்புகளையும் உண்ண வேண்டியதாயிற்று. இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே புகை போன்ற ஒன்றையே கான்பார். இந்நிலையில் அபூ சுஃப்யான் வந்து முஹம்மதே நீர் எங்ககளிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர். உம் சமுதாயத்தினரோ அழிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார் அப்போது நபி (ஸல்)அவர்கள் (நபியே) வெளிப்படையானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது துன்புறுத்தும் வேதனையாகும் என்று தொடங்கி மெய்யாகவே (நீங்கள் உணர்ச்சிபெறக் கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். எனினும் நீங்கள் (பாவம் செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள் என்பது வரையிலான (திருக்குர்ஆன் 44: 10- 15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றுவிட்டாலும் மறுமை வேதனை வந்தால் அது அவர்களை விட்டு அகற்றப்படவா போகிறது (இல்லை. பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறை மறுப்புக்கே திரும்பி விட்டனர். இதைத்தான் அல்லாஹ் மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயமாக அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம் என்று (திருக்குர்ஆன் 44:16 வது வசனத்தில் பத்ருப் போர்க் குறிக்கும் வகையிலும் வ லிஸாமன் (தண்டனை உங்களை பிடித்தே தீரும்) என்று (திருக்குர்ஆன் 25:77 வது வசனத்தில் அதே பத்ருப் போரைக் குறிக்கும் வகையிலும் கூறுகிறான். மேலும் , 'அலிஃ. லாம். மீம் . (நபியே) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்டிக்கப்பட்டு விட்டார்கள். (எனினும்) அவர்கள் இத்தோல்விக்குப்பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள்'' என்றும் அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 30:1-3) இது முன்பே (நடந்து) முடிந்துவிட்டது.
''அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைந்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 32:17 வது) இறைவசனம்.
1760. அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், 'என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்'' என்று கூறுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), 'நீங்கள் விரும்பினால், 'அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 32:17 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் எனக்கூறினார். மற்றோர் அறிவிப்பிலும் இவ்வாறே காணப்படுகிறது. அதில் (கூடுதலாக:) அறிவிப்பாளர் சுஃப்யான்(ரஹ்) அவர்களிடம் 'இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?)'' என வினவப்பட, அன்னார் '(இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன?' என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
1761. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், 'ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?' எனும் சொல்லிக் கொண்டேன். '(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்கவைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் 'உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்'' என்று(நபியவர்களிடம்) சொன்னேன்.
1762. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா(ரஹ்) அறிவித்தார் ''(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார். நான், 'அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! (வேறொரு மனைவிக்காக என்னுடைய நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களைவிட்டுக் கொடுக்க விரும்பமாட்டேன்' என்று சொல்வேன்'' என்றார்கள். இதே ஹதீஸ் வேறுவழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1763. ஆயிஷா(ரலி) அறிவித்தார் பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப்(ரலி) பார்த்துவிட்டு 'சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!'' என்று கூறினார்கள். சவ்தா(ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா(ரலி) வீட்டினுள் வந்து, 'இறைத் தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர்(ரலி) என்னிடம் இவ்வாறெல்லாம் கூறினார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு 'வஹீ' (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள்.
''நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (நபியின் துணைவியரான) அவர்களின் மீது தம் தந்தையர், தம் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தம் (மார்க்கத் தோழியரான) பெண்கள் மற்றும் தம் வலக்கரம் உடைமையாக்கிக் கொண்டவர்கள் (ஆன அடிமைகள்) ஆகியோர் விஷயத்தில் (பர்தாவைக் கைவிடுவதில்) குற்றமில்லை. அல்லாஹ்வுக்கு பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 33:54, 55) வசனங்கள்.
1764. ஆயிஷா(ரலி) அறிவித்தார் பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்ற பிறகு, என் வீட்டினுள் வருவதற்கு அபுல் குஅய்ஸின் சகோதரர் 'அஃப்லஹ்'(ரலி) அனுமதி கேட்டார்கள். அப்போது, 'நபி(ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்டுப் பெறாதவரை உள்ளே வர அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன்'' என்று கூறிவிட்டேன். ஏனெனில், எனக்குப் பாலூட்டியவர், அஃப்லஹின் சகோதரரான அபுல் குஅய்ஸ் அல்லர். அபுல் குஅய்ஸின் மனைவிதான் எனக்குப் பாலூட்டியவர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அபுல் குஅய்ஸின் சகோதரான 'அஃப்லஹ்' என்னிடம் (வீட்டினுள் வர) அனுமதி கேட்டார். தங்களிடம் அனுமதி கேட்காத வரை அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் (பால்குடித்) தந்தையின் சகோதரருக்கு நீ ஏன் அனுமதி தரவில்லை?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குப் பாலூட்டியவர் அந்த (அபுல் குஅய்ஸ் என்ற) ஆண் அல்லவே? மாறாக, அபுல் குஅய்ஸின் மனைவிதானே எனக்குப் பாலூட்டினார்!'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு (அஃப்லஹுக்கு) அனுமதி கொடு! ஏனென்றால், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாம். உன் வலக்கரம் மண்ணாகட்டும்'' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளரான) உர்வா(ரஹ்) கூறினார்: இதனால்தான் ஆயிஷா(ரலி), 'பிறப்பினால் (ஏற்படும் நெருங்கிய உறவுகளில்) யாரை மணப்பதற்குத் தடை விதிக்கிறீர்களோ, அவர்களை மணக்கப் பால்குடி உறவினாலும் தடைவிதியுங்கள்'' என்று கூறுவார்கள்.
''அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும், நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரின் மீது ஸலவாத்தும், சலாமும் சொல்லுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:58 வது) இறைவசனம்.
1765. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மீது 'சலாம்' கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். (தங்களின் மீது) 'ஸலவாத்' கூறுவது எப்படி?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலாஇப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்'' என்று சொல்லுங்கள்!'' என பதிலளித்தார்கள்.
1766. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார் நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! இது (தங்களின் மீது) சலாம் கூறும் முறை (தொழுகையில் ஓதப்படும் 'அத்தஹிய்யாத்' மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்களின் மீது நாங்கள் 'ஸலவாத்' சொல்வது எப்படி?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம'' என்று சொல்லுங்கள்'' என்றார்கள். மற்றோர் அறிவிப்பில், 'கமா பாரக்த்த அலா அலீ இப்ராஹீம' (இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ சுபிட்சத்தை வழங்கியதைப்போன்று) என்று காணப்படுகிறது. யஸீத் இப்னு ஹாத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: ''கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம' (என்று சொல்லுங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.)
''மூஸாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:69 வது) வசனத் தொடர்.
1767. மூஸா(அலை) அவர்கள் அதிகம் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். 'மூஸாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து அவர் தூய்மையானவர் என்பதை அல்லாஹ் நிரூபித்தான். அவர் அல்லாஹ்விடம் கண்ணியம் பொருந்தியவராய் இருந்தார்'' எனும் (திருக்குர்ஆன் 33:69 வது) இறைவசனம் அதைத்தான் குறிக்கிறது.
(இறைத்தூதரான) அவரோ ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார் (எனும் 34:46 வது வசனத்தொடர்.)
1768. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் 'ஸஃபா' மலைக்குன்றின் மீது ஏறி, 'யா ஸபாஹா!'' (''உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!'') என்று கூறினார்கள். உடனே அவர்களை நோக்கி குறைஷியர் ஒன்றுதிரண்டு வந்து, 'உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'எதிரிகள், காலையிலோ, மாலையிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?' என்று கேட்டார்கள். 'ஆம் (நம்புவோம்)' என்று அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவனாவேன்'' என்று கூறினார்கள். உடனே அபூ லஹப், 'உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை (இங்கே) ஒன்று கூட்டினாயா?' என்று கேட்டான். உடனே அல்லாஹ், 'அபூ லஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்...'' எனும் (திருக்குர்ஆன் 111:1 வது) வசனத்தை அருளினான்.
''(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகிறான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணை காட்டுபவனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 39:53 வது) இறைவசனம்.
1769. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினர். அப்போது, '(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை. மேலும் விபசாரம் செய்வதில்லை...'' எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனம் அருளப்பெற்றது. மேலும், '(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்...'' எனும் (திருக்குர்ஆன் 39:53 வது) வசனமும் அருளப்பெற்றது.
'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்கவேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத் தொடர்.
1770. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் யூத அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, 'நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்'' என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.
''மறுமை நாளில் பூமி முழுவதும் அல்லாஹ்வின் கைப்பிடியில் இருக்கும். மேலும் வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டு இருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூய்மையானவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத் தொடர்.
1771. நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ் பூமியை தனது கைப் பிடிக்குள் அடக்கிக் கொள்வான். வானங்களை தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான். பிறகு நானே அரசன். எங்கே பூமியின் அரசர்கள் என்று கேட்பான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
1772. அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், 'அந்த இரண்டு எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். அவர்களின் நண்பர்கள், 'அபூ ஹுரைரா அவர்களே! நாள்களில் நாற்பதா?' என்று கேட்டனர். '(இதற்கு பதில் சொல்வதை விட்டும்) நான் விலகிக் கொள்கிறேன்'' என்று அபூ ஹுரைரா(ரலி) பதிலளித்தார்கள். நண்பர்கள், 'ஆண்டுகள் நாற்பதா?' என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), 'நான் விலகிக்கொள்கிறேன்'' என்று பதில் கூறினார்கள். நண்பர்கள், 'மாதங்கள் நாற்பதா?' என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), 'நான் விலகிக் கொள்கிறேன். (ஏனெனில், எனக்கே இது குறித்துத் தெரியாது)'' என்று கூறிவிட்டு, 'மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால் அவனுடைய (முதுகந்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்'' என்று கூறினார்கள்.
''உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர, இந்த (இறை)ப் பணிக்காக உங்களிடம் நான் எந்தப் பிரதிபலனையும் கேட்கவில்லை என (நபியே!) கூறுக!'' எனும் (திருக்குர்ஆன் 42:23 வது) வசனத் தொடர்.
1773. தாவூஸ் இப்னு கைஸான் அல்யமானீ(ரஹ்) அறிவித்தார் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர'' எனும் (திருக்குர்ஆன் 42:23 வது) வசனத் தொடர் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்), '(இந்த வசனத்திலுள்ள) 'உறவினர்கள்' என்பது 'முஹம்மத்(ஸல்) அவர்களின் உறவினர்களை (பனூ ஹாஷிமை)க் குறிக்கும்'' என்று கூறினார்கள். உடனே, இப்னு அப்பாஸ்(ரலி), 'அவசரப்பட்டுவிட்டீர்; குறைஷிக் குலத்தின் எல்லாக் கிளையினருக்கும் நபி(ஸல்) அவர்களுடன் உறவு முறை இருக்கத்தான் செய்தது'' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள், (குறைஷியரின் அனைத்துக் கிளையினரையும் நோக்கி) குறைந்தபட்சம் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள உறவு முறையைப் பேணி (நல்ல முறையில்) நடந்து கொள்ளவேண்டுமென்றே பெரிதும் விரும்புகிறேன் என்று கூறினார்கள்'' என விளக்கமளித்தார்கள்.
''எங்கள் இறைவனே! எங்களைவிட்டு இந்த வேதனையை நீக்கிடுவாயாக! நிச்சயமாக, நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம் (என்று அப்போது கூறுவார்கள்)'' எனும் (திருக்குர்ஆன் 44:12 வது) இறைவசனம்.
1774. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார் (ஒருமுறை) நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நீங்கள் அறியாத ஒன்றைக் குறித்து (கேட்கப்படும் போது,) 'அல்லாஹ்வே நன்கறிவான்'' என்று கூறுவது அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரிடம், '(நபியே! அவர்களிடம்) நீங்கள் கூறிவிடுங்கள்: இந்த (அழைப்பு)ப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்'' என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 38:86). குறைஷியர் நபி(ஸல்) அவர்களிடம் வரம்பு மீறி நடந்து, மாறுசெய்தபோது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. மக்கள் (பசிக்) கொடுமையால் எலும்புகளையும், செத்தவற்றையும் தின்றனர். அவர்களில் ஒருவர் பசி மயக்கத்தால், (கண் பஞ்சடைந்து) தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அவர்கள் 'எவர்கள் இறைவனே! எங்களைவிட்டு இந்த வேதனையை நீக்கிடுவாயாக! நிச்சயமாக, நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்'' என்று கூறினர். (திருக்குர்ஆன் 44:12)அப்போது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) 'நாம் அவர்களைவிட்டுச் சற்று வேதனையை அகற்றிவிட்டால், அவர்கள் (பழைய இணைவைப்பு நிலைக்குத்) திரும்பச் சென்றுவிடுவர்'' என்று கூறப்பட்டது. ஆனாலும், நபி(ஸல்) அவர்கள் (அவர்களுக்காக) தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், அவர்களைவிட்டு (தன்னுடைய வேதனையை) அகற்றினான். உடனே அவர்கள் (பழைய இணைவைக்கும் நிலைக்கே) திரும்பச் சென்றனர்.
1775. (சத்திய நெறியை ஏற்போம் என்று அவர்கள் (குறைஷியர்கள்) செய்து கொடுத்த வாக்குறுதியை விட்டெறிந்தனர்.) எனவே, அல்லாஹ் பத்ருப் போர் நாளில், அவர்களைப் பழிவாங்கினான் இதைத்தான் '(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்'' என்று தொடங்கி, 'நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்'' என்று முடியும் (திருக்குர்ஆன் 44:10-16) வசனங்கள் குறிப்பிடுகின்றன என மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.
காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என (மறுமையை நம்பாத) அவர்கள் கூறுகிறார்கள் (எனும் 45:24 வது வசனத் தொடர்).
1776. வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது. நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
''ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும்' என்று கூறினார்கள். 'அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவரசப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது (புயல்) காற்று; இதில் துன்புறுத்தக் கூடிய வேதனை உண்டு' (எனக் கூறப்பட்டது)'' எனும் (திருக்குர்ஆன் 46:24 வது) இறைவசனம்.
1777. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்'' என பதிலளித்தார்கள்.
மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவுகளைத் துண்டித்துவிட முனைகிறீர்களா? (எனும் 47:22 வது வசனத் தொடர்.)
1778. அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், 'என்ன?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்'' என்று கூறியது. 'உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ் 'இது (அவ்வாறுதான்) நடக்கும்'' என்று கூறினான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி), 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
1779. ஸயீத் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார் மேற்கண்ட இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப் பிறகு, 'நீங்கள் விரும்பினால், '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று கூறினார்கள்.
'இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும்'' எனும் (திருக்குர்ஆன் 50:30 வது) வசனத் தொடர்.
1780. (நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) 'இன்னும் அதிகம் இருக்கிறதா?' என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தன்னுடைய பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, 'போதும்! போதும்!'' என்று கூறும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
1781. சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், 'பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப் பட்டுள்ளேன்'' என்று சொன்னது. சொர்க்கம், 'எனக்கு என்ன நேர்ந்தோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்'' என்று கூறியது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் சொர்க்கத்திடம், 'நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்'' என்று கூறினான். நரகத்திடம் 'நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்'' என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் 'போதும்! போதும்!'' என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை. மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.
1782. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் 'அத்தூர்' எனும் (52 வது) அத்தியாயத்தை ஓதக்கேட்டேன். '(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கிறார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை. (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்களுடைய இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள் தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?' எனும் இந்த (திருக்குர்ஆன் 52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்து விடுமளவுக்குப் போய்விட்டது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: ''மஃக்ரிப் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் 'அத்தூர்' அத்தியாயத்தை ஓதினார்கள்'' என்று முஹம்மத் இப்னு ஜுபைர்(ரஹ்) தம் தந்தை (ஜுபைர் இப்னு முத்யிம்)யிடமிருந்து அறிவித்தார்கள்'' என்பதை மட்டுமே ஸுஹ்ரி(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து செவியேற்கவில்லை.
1783. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், 'வா சூது விளையாடுவோம்'' என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
''தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 54:46 வது) இறைவசனம்.
1784. யூசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார் நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், 'நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு, 'தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 54:46 வது) இறைவசனம் அருளப்பெறற்து'' என்று கூறினார்கள்.
'அவ்விரு சோலைகள் நீங்கலாக வேறிரு சோலைகளும் (அங்கு) இருக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 55:62 வது) இறைவசனம்.
1785. நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் :இரண்டு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியினால் ஆனவை.(வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும். 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது என அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.
1786. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர். மேலும், இரண்டு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரண்டு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் தங்கத்தினால் ஆனவை. 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது என அப்துல்லாஹ் இப்னு கைஸ் (அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
(இறை நம்பிக்கையாளர்களே!) எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் (எனும் 60:1 வது வசனத்தொடர்.)
1787. அலீ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், மிக்தாத் இப்னு அஸ்வத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்துகாக்' எனுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு 'ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ' நம்முடைய இரகசியத் திட்டங்களை எழுதித் தெரிவித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்!'' என்று கூறியனுப்பினார்கள். உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த 'ரவ்ளத்து காக்' எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், 'கடிதத்தை வெளியே எடு!'' என்று சொன்னோம். அதற்கு அவள், 'என்னிடம் கடிதம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தாள். நாங்கள், 'ஒன்று, நீயாயக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உன்னுடைய) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும்'' என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில் 'ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ(ரலி) மக்காவாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி) (தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு), 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்து வந்த) ஒருவனாகவே இருந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும், சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிசளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை'' என்று (காரணம்) கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இவர் உங்களிடம் உண்மையே கூறினார்'' என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி) இறைத்தூதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகளை செய்த) இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்'' என்று கூறினார்கள்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப்போரில் பங்கேற்றவர்களிடம் 'நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்துவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம்'' என்று கூறினார்கள். 'ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ'(ரலி) விஷயத்தில்தான் 'இறைநம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 60:1 வது) வசனம் அருளப்பட்டது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள்.
நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12 வது இறைவசனம்.)
1788. உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார் நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்க மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்ஞை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தம் கையை பின்வாங்கினார். மேலும், அவர் 'இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரி வைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்'' என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரிவைத்து) விட்டுத் திரும்பி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.
''இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)'' எனும் (திருக்குர்ஆன் 62:3 வது) வசனத்தொடர்.
1789. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு 'அல்ஜுமுஆ' எனும் (62 வது) அத்தியாயத்தில் 'இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)'' எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, 'அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் 'சில மனிதர்கள்' அல்லது 'இவர்களில் ஒருவர்' அதனை அடைந்தே தீருவார்' என்று கூறினார்கள்.
''(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது, 'திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கிறோம்' என்று கூறுகின்றனர். திண்ணமாக, நீங்கள் தன்னுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 63:1 வது) இறைவசனம்.
1790. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார் ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்'' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்'' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர்(ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை'' என்று அவர்கள் சாதித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை'' என்று கூறினார்கள். அப்போது, 'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது'' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப் படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவு படுத்திவிட்டான்)'' என்று கூறினார்கள்.
(நபியே!) நீங்கள் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடல் அமைப்பு உங்களை வியப்பில் ஆழ்த்தும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர்கள். ஆனால், உண்மையில் இவர்கள் (சுவரில்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள் தாம் (கடும்) பகைவர்கள்; இவர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருங்கள். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனர்? (எனும் 63:4 வது இறைவசனம்.)
1791. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை தம் நண்பர்களிடம், 'அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் செல்வார்கள்'' என்றும், 'நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்'' என்றும் சொன்னான். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான். அன்சாரிகள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்'' என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது. அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் '(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது...'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பினார்கள். (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள 'குஷுபும் முசன்னதா' (சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டை)என்பது அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.
''அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்குச் செலவழிப்பதை நிறுத்திவிடுங்கள். (அவரிடமிருந்து) அவர்கள் விலகிச் செல்வார்கள் என்று சொல்கிறவர்கள் இவர்கள்தாம். உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 63:7 வது) இறைவசனம்.
1792. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்: அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக'' என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன். அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி(ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா? இல்லையா என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஃபள்ல்(ரஹ்) தெரிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தபோது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் இப்னு அர்கம் பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ்(ரலி) '(நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்துவிட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளியபோது) 'இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்துவிட்டான்' என்று இவர் தொடர்பாகத்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என பதிலளித்தார்கள்.
1793. ஆயிஷா(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம், (அவர்களின் அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி(ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ அவர், நபி(ஸல்) அவர்களிடம் 'கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே'' என்று கூறிட வேண்டும். (வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு, நபி(ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், 'இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன்'' என்று கூறிவிட்டு, 'இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!'' என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1 வது இறைவசனம் அருளப்பெற்றது.)
1794. ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.
காலின் திரை அறக்கப்ப(ட்)டு (இறைவன் காட்சியளிக்கு)ம் அந்த (மறுமை) நாளில் (மக்களெல்லாம் தாமாகவே) சிரவணக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும்போது கூட (இறைமறுப்பாளர்களான) இவர்கள் (அதற்கு) சக்திபெறமாட்டார்கள் (எனும் 68:42 வது இறைவசனம்).
1795. நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதைஅபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
1796. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறக்கேட்டேன்.
1797. குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனை) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் (எனும் 83:6 வது இறைவசனம்)
1798. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், '(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்'' எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) இறை வசனத்தை ஓதிவிட்டு, 'அன்று தம் இரண்டு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார்'' என்று கூறினார்கள்.
எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக்கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும் (எனும் 84:8 வது) இறைவசனம்).
1799. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்'' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ''எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக்கரத்தில் வழங்கப்படுமோ, அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும்'' என்றல்லவா அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:8 வது வசனத்தில்) கூறுகிறான்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான்'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்வீர்கள் (எனும் 84:19 வது இறைவசனம்.)
1800. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார் இப்னு அப்பாஸ்(ரலி), '(திருக்குர்ஆன் 84:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தபக்கன் அன் தபக்கின்' எனும் சொற்றொடருக்குத் 'திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது'' என்று பொருள்'' என்று கூறிவிட்டு, 'இந்த வசனம் உங்களுடைய நபி(ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்திப் பேசுகிறது'' என்று கூறினார்கள்.
1801. அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், '(இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது...'' எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, 'அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக்காக முன் வந்தான்'' என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள். உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, '(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) 'உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?' என்று கேட்டபடி உபதேசித்தார்கள். இன்னோர் அறிவிப்பில், '(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூ ஸம்ஆவைப் போன்று (செல்வாக்கு மிக்கவனாக) இருந்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார்.
''அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனுடைய நெற்றிமுடியைப் பற்றி இழுப்போம்; கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை!'' எனும் (திருக்குர்ஆன் 96:15,16ஆகிய) இவைசனங்கள்.
1802. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் 'கஅபா' அருகில் முஹம்மது தொழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரின் கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூ ஜஹ்ல் சொன்னான். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, 'அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப்பார்கள்'' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
1803. தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், 'ஜிப்ரீலே, இது என்ன?' என்று கேட்டேன். ''இது அல்கவ்ஸர்'' என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
1804. அபூ உபைதா ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னி மஸ்வூத்(ரலி) அறிவித்தார்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம்,''(நபியே!) நாம் உங்களுக்கு அல்கவ்ஸரை அருளினோம்'' எனும் (திருக்குர்ஆன் 108:1 வது) இறை வசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், '(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்'' என்று கூறினார்கள்.
1805. ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அறிவித்தார்: நான் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் 'முஅவ்விஃதத்தைனி' (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா? என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இது குறித்து நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'என்னிடம் (நபியே!) கூறுக: நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் ஸிர்ருபின் ஹுபைஷ்(ரஹ்) கூறினார்:) எனவே, நாங்களும் (நானும் உபை இப்னு கஅபும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.
Wednesday, 21 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment