Thursday, 15 October 2009

[பாடம்-56] நபித் தோழர்களின் சிறப்புகள்.

அபூபக்கர்(ரலி) அவர்களின் சிறப்பு.

1520. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடுவதற்காக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, 'நான் வந்து தங்களைக் காண (முடிய)வில்லையென்றால்?' என்று, - நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் (என்ன செய்வது?) என்பது போல்- கேட்டாள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ என்னைக் காணவில்லையென்றால் அபூ பக்கரிடம் செல்'' என்று பதில் கூறினார்கள்.

1521. ஹம்மாம் இப்னு அல்ஹர்ஸ்(ரஹ்) அறிவித்தார் ''(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்'' என்ன அம்மார் இப்னு யாசிர்(ரலி) சொல்ல கேட்டேன்.

1522. அபுத் தர்தா(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) தம் முழங்கால் வெளியே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தோழர் வழக்காட வந்துவிட்டார்'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (நபி - ஸல் - அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். எனவே, உங்களிடம் வந்தேன்'' என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அபூ பக்கரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!'' என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, 'அங்கே அபூ பக்ர்(ரலி) இருக்கிறார்களா?' என்று கேட்க வீட்டார், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். எனவே, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூ பக்ர்(ரலி) பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன்.'' என்று இருமுறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். 'பொய் சொல்கிறீர்' என்று நீங்கள் கூறினீர்கள். அபூ பக்ர் அவர்களோ, 'நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து)விட்டு விடுவீர்களா?' என்று இரண்டு முறை கூறினார்கள். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி) மன வேதனைக்குள்ளாக்கப்படவில்லை.

1523. அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா'' என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)'' என்று பதிலளித்தார்கள். 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)'' என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.

1524. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் ''தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டு செல்கிறவனை அல்லாஹ் மறுமையில் ஏறிட்டும் பார்க்க மாட்டான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி), 'நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கி விடுகிறது'' என்று கூறினார்கள். அதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே'' என்று கூறினார்கள்.

1525. என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

சுவனத்துக்கு நற்செய்தி பெற்றவர்கள்.

1526. அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார் நான் என் வீட்டில் உளூச் செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி(ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்'' என்று கூறினர். நான் (நபி - ஸல் - அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விடப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), 'இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர்கள், '(நானே) அபூ பக்ர் (வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'சற்றுப் பொறுங்கள்'' என்று சொல்லிவிட்டு (நபி - ஸல் - அவர்களிடம்) சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இதோ அபூ பக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் அபூ பக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்'' என்று சொன்னேன். உடனே, அபூ பக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லிவிட்டுவிட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), 'அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்'' என்று சொல்லிக் கொண்டேன்.'' இன்னார்' என்று அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) கூறியது. தம் சகோதரைக் கருத்தில் கொண்டே'' என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்: அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். வந்தவர், '(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்)'' என்று சென்னார். நான், 'கொஞ்சம் பொறுங்கள்'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, 'இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் சென்று, 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்'' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். 'அல்லாஹ் இன்னாருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்'' என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர், '(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)'' என்று பதிலளித்தார். உடனே, 'கொஞ்சம் பொறுங்கள்'' என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், 'உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்'' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள்.அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்:

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), 'நான் (நபி - ஸல் அவர்களும், அபூ பக்ர் - ரலி - அவர்களும், உமர் - ரலி - அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்'' என்று கூறினார்கள்.

1527. அனஸ்(ரலி) அறிவித்தார் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்'' என்று கூறினார்கள்.

குறைஷிக் குலத்தவரான அபூ ஹஃப்ஸ் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் சிறப்புகள்.

1528. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நான் சில மக்களிடையே நின்று கொண்டிருக்க, அவர்கள் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள். அப்போது உமர் அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள் - அப்போது என் பின்னாலிருந்து ஒருவர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் - ரலி - அவர்களை நோக்கி,) 'அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல், அடக்கம் செய்யப்படும் போது) உங்களை உங்களுடைய இரண்டு தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்க)ளுடன் (அவர்களின் மண்ணறைகளுக்கே அருகே) அடங்கச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எனவே, உங்களை அல்லாஹ் அவ்விருவருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று கூறினார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களாக இருந்தார்கள்.

1529. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, 'யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), 'இவர் பிலால்' என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், 'இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), 'இது உமருடையது' என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)'' என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்'' என்று கேட்டார்கள்.

1530. அனஸ்(ரலி) அறிவித்தார் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, 'மறுமை நாள் எப்போது வரும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?' என்று (திரும்பக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை. நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர'' என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்'' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி(ஸல்) அவர்களையும் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் உமர்(ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!

1531. உங்களுக்கு முன்பிருந்த சமுதாயங்களில், (பல்வேறு) பிரச்சினைகளில் சரியான தீர்ப்பு எது என்பது குறித்து இறையருளால்) முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். என் சமுதாயத்தினரில் அப்படிப்பட்டவர் எவரேனும் இருந்தால் அது உமராகத்தான் இருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்: உங்களுக்கு முன்பிருந்த பனூ இஸ்ராயீல்களில் இறைத்தூதர்களாக இல்லாமலேயே (வானவர்களால்) அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள் இருந்துள்ளனர். அத்தகையவர்களில் எவரேனும் என் சமுதாயத்தில் இருந்தால் அது உமராகத் தான் இருக்கும் என்று உள்ளது. மேலும் இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆனின் 22:52-வது வசனத்தில்) 'வலா முஹத்தஸின்' (முன் கூட்டியே அறிவிக்கப்பட்டவரானாலும்) என்று (சேர்த்து) வாசித்துள்ளார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் சிறப்பு.

1532. உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரலி) அறிவித்தார் எகிப்து வாசியான ஒருவர் வந்து, (கஅபா எனும்) இறையில்லத்தை ஹஜ் செய்தார் அப்போது ஒரு கூட்டம் அமர்ந்திருப்பதைக் கண்டு, 'இந்தக் கூட்டத்தார் யார்?' என்று கேட்டதற்கு மக்கள், 'இவர்கள் குறைஷிகள் என்று பதில் கூறினார்கள். அப்போது, 'இவர்களின்ல முதிர்ந்த அறிஞர் யார்'' என்று அவர் கேட்டதற்கு மக்கள், ' அப்துல்லாஹ் இப்னு உமர்'' என்று பதில் அளித்தார்கள். உடனே அவர் அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'இப்னு உமர் அவர்களே நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்கிறேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றிச் சொல்லுங்கள். உஸ்மான்(ரலி) உஹுதுப் போர்க்களத்திலிருந்து வெருண்டோடியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) 'ஆம் அறிவேன்'' என்று பதில் அளித்தார்கள். அப்போது அவர் 'உஸ்மான்(ரலி) பத்ர் போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார். அற்கு இப்னு உமர்(ரலி) 'ஆம் தெரியும்'' என்று பதில் அளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் அவர், 'ஹுதைபியாவில் நடந்த பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்க ஆம் தெரியும் என்று பதில் அளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு உஸ்மான்(ரலி) தாம் நினைத்தது போன்றே இவ்வளவு குறைகளுள்ளவர்தாம் என்று தொனிக்கும் படி) அந்த மனிதர், அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன் என்று என்று கூறினார். அப்போது இப்னு உமர்(ரலி), 'வாரும்! (இவற்றிலெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லை என்பதை உனக்கு நான் விளக்குகிறேன். அவர்கள் உஹத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரின் பிழையைப் பொறுத்து மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியாக இருக்கிறேன். பத்ர் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், நபி(ஸல்) அவர்களின் மகள் (ருகைய்யா(ரலி)) உஸ்மான்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (அவர்கள்) அப்போது நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் பத்ர் போரில் பங்கெடுத்த ஒருவருக்குரிய (மறுமைப்) பலனும், (போர்ப் பொருளில்) உங்களுக்கான பங்கும் கிடைக்கும் (நீங்கள் உங்களுடைய மனைவியைக் கவனியுங்கள்) என்றார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ளமுடியவில்லை.) பைஅத்துர் ரிள்வான் சத்தியப்பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் உஸ்மான்(ரலி) அவர்களையும் விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்கள், குறைஷிகளிடம் பேசுவதற்கு தம் தூதராக அவரை) அனுப்பி இருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை.) எனவேதான், நபி(ஸல்) அவர்கள் உஸ்மானை(ரலி) அனுப்பினார்கள். மேலும் இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குள் போன பின்னர்தான் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் வலக்கரத்தைச் சுட்டிக் காண்பித்து இது உஸ்மானுடைய கை என்று கூறி அதை தம் இடக்கரத்தின் மீது தட்டினார்கள். பிறகு, இப்போது நான் செய்யும் சத்தியப்பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்'' என்றார்கள். என இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, (உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், 'நான் இப்போது சொன்ன பதில்களை நீ எடுத்துச் செல்லலாம்'' என்று கூறினார்கள்.

1533. அலீ(ரலி) அறிவித்தார் திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி(ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே, ஃபாத்திமா(ரலி) அவர்கள் (நபி - ஸல் - அவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கிவரச்) சென்றார். ஆனால், நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆயிஷா(ரலி) அவர்களைத் தாம் அங்கே கண்டார். எனவே, (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தா. நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது ஆயிஷா(ரலி) ஃபாத்திமா வந்ததைத் தெரிவித்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்று விட்டிருந்தோம். நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள்'' என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன். பிறகு, 'நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி) தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத் தரட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன்' என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்து லில்லாஹ் - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.

ஜூபைர் பின் அவ்வாம்(ரலி) அவர்களின் சிறப்பு.

1534. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார் அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்களும் (நபி - ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர்(ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, 'என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்'' என்று சொன்னேன். அவர்கள், 'என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!'' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (பார்த்தேன்)'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, 'என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்'' என்று கூறினார்கள்.

தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அவர்கள் சிறப்பு.

''நபி(ஸல்) அவர்கள் 'தல்ஹா'' அவர்களைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்கள்'' என்று உமர்(ரலி) கூறினார்.

1535. தல்ஹா(ரலி) அவர்களும் ஸஅத்(ரலி) அவர்களும் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை. இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) தல்ஹா(ரலி) மற்றும் ஸஅத்(ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.

1536. அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் (உஹுதுப் போரின் போது) நபி(ஸல்) அவர்களை (நோக்கி வந்த அம்புகள் மற்றும் ஈட்டிகளிலிருந்து அவர்களைக் கேடயம் போன்று நின்று) காத்த தல்ஹா(ரலி) அவர்களின் கையை (துளைகளும் வடுக்களும் நிறைந்து) ஊனமுற்றதாக பார்த்தேன்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் அஸ் ஸுஹ்ரீ(ரலி) அவர்களின் சிறப்புகள்.

1537. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார் ''(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி(ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனச்) கூறினார்கள்'' என்று ஸஅத்(ரலி) சொல்ல கேட்டேன்.

நபி(ஸல்) அவர்களின் மருமகன்கள் சிறப்பு. அவர்களில் அபுல் ஆஸ் இப்னு ரபீஉ(ரலி) அவர்களும் ஒருவராவார்.

1538. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார் அலீ(ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா(ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத் தூதர்(ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது என்று கூறினார்கள். எனவே, அலீ(ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.

1539. மிஸ்வர்(ரலி) கூறியிருப்பதாவது: நான் நபி(ஸல்) அவர்களின் உரையைச் செவியுற்றேன். அவர்கள் பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகன் ஒருவரை (அபுல் ஆஸை) நினைவு கூர்ந்து அவர் (அவரின் மாமனாரான) தன்னுடன் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைப் பாராட்டிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது அவர்கள், 'அவர் என்னிடம் பேசினார். (பேசிய படி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார், அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களின் சிறப்புகள்.

1540. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்... (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்று கூறினார்கள்.

1541. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, என்னிடம் (இருவரின் சாயலை வைத்து) உறவு முறையை கணிப்பவர் ஒருவர் வந்தார். உஸாமா இப்னு ஸைத் அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களும் அப்போது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அந்த மனிதர் (இருவரின் கால்களையும் பார்த்து), 'இந்தக் கால்கள் (ஒன்றுக் கொன்று உறவுள்ளவை.) ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை'' என்று கூறினார். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைந்து அவரை வியந்தார்கள்; அதை எனக்குத் தெரிவித்தார்கள்.

1542. ஆயிஷா(ரலி) அறிவித்தார் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், 'அவள் விஷயத்தில் நபி(ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படிக் கூறி பரிந்து) பேசுவது யார்?' என்று (தமக்குள்) விசாரித்துக் கொண்டனர். எவரும் நபி(ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உஸாமா இப்னு ஸைத்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பனூ இஸ்ராயீல் குலத்தார் தம்மிடையேயுள்ள வலியவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரை தண்டிக்காமல் விட்டுவிடுவார்கள். தம்மிடையேயுள்ள பலவீனர் திருடி விட்டால் தண்டித்து விடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும் கூட அவரின் கையை நான் துண்டித்திருப்பேன்'' என்று கூறினார்கள்.

1543. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் கையிலெடுத்து 'இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!'' என்று பிரார்த்திப்பார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)அவர்கள் சிறப்பு.

1544. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்'' என்று கூறினார்கள். இதை தம் சகோதரி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர்(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.

அம்மார்(ரலி) மற்றும் ஹுதைஃபா(ரலி) ஆகியோரின் சிறப்புகள்.

1545. அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) கூறினார் நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். (அங்கு பள்ளி வாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்துக்கள் தொழுதேன். பிறகு, 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு'' என்று பிரார்த்தித்தேன். பிறகு, ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது முதியவர் ஒருவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், '(இவர்தான் நபித்தோழர்) அபுத்தர்தா'' என்று பதிலளித்தார்கள். நான், அபுத் தர்தா(ரலி) அவர்களை நோக்கி, 'எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். எனவே, அவன் உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறான்'' என்று சொன்னேன். அதற்கு அபுத்தர்தா(ரலி), 'நீங்கள் எந்த ஊர்க்காரர்?' என்று கேட்டார். பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'நபியவர்களின் செருப்புகளையும் தலையணைகளையும் தண்ணீர்க்குவளையையும் சுமந்து வந்த உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)) உங்களிடையே இல்லையா? தன் நபியின் வாயால் எவரை அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றினானோ அவர் (அம்மார் (ரலி) உங்களிடையே இல்லையா? மேலும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா (ரலி) உங்களிடையே இல்லையா?' என்று கேட்டுவிட்டு, பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், 'வல்லய்லி இதா யஃக்ஷா' என்று தொடங்கும் (திருக்குர்ஆனின் 92-ம் அத்தியாயம் அல்லைலின்) இறைவசனங்களை எப்படி ஓதுகிறார்'' என்று கேட்டார்கள். நான், 'அவர்களுக்கு, 'வல்லய்லி இதாயஃக்ஷா வன்னஹாரி இதா தஜல்லா வத்தகரி வல் உன்ஸா(- இப்படித் தான் ஓதுவார்கள்) என்று ஓதிக்காட்டினேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி(ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள் என்று கூறினார்கள்.

அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் - ரலி அவர்களின் சிறப்புகள்.

1546. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. என் சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பேரர்கள்.

1547. பராஉ(ரலி) அறிவித்தார் அலீ(ரலி) அவர்களின் மகன் ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!'' என்று பிரார்த்திக்கக் கண்டேன்.

1548. அனஸ்(ரலி) அறிவித்தார் ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை விட நபி(ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்கவில்லை.

1549. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம்(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் அணிந்தவரைக் குறித்து வினவினார். அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்), 'இஹ்ராம் அணிந்தவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்து கேட்டார் என்று எண்ணுகிறேன்'' என்று கூறுகிறார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்து கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கனவே அல்லாஹ்வின் தூதருடைய மகளின் மகனை (ஹுஸைனைக்) கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் இருவரும் (ஹஸன் - ரலி - அவர்களும் ஹுசைன் -ரலி - அவர்களும்) உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்'' என்று (அவர்களைக் குறித்து) கூறினார்கள்' எனக் கூறினார்கள்.

(அப்துல்லாஹ்) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் சிறப்பு.

1550. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் என்னை நபி(ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, 'இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத் தருவாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள்.

1551. 'இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத் தருவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'ஹிக்மத்' என்னும் ஞானம் என்பது, தூதுத்துவம் அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்து கொள்வது என்று பொருள்.

காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களின் சிறப்புகள்.

1552. அனஸ்(ரலி) அறிவித்தார் ஸைத் இப்னு ஹாரிஸா) அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ''(முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தம் கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் (தம் கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் இப்னு வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரின் கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்'' என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) கூறினார்கள்.

அபூ ஹுதைஃபா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட சாலிம்(ரலி) அவர்களின் சிறப்புகள்.

1553. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்'' என்று கூறினார்கள்.

1554. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் ஆயிஷா(ரலி) (தம் சகோதரி) அஸ்மா(ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையொன்ற இரவல் வாங்கினார்கள். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம், தோழர்களில் சிலரை அதைத் தேடுவதற்காக அனுப்பினார்கள். அப்போது அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் உளூவின்றித் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் (திரும்பிச்) சென்றபோது தண்ணீர் கிடைக்காததால் தமக்கேற்பட்ட நெருக்கடியான நிலையை முறையிட்டார்கள். அப்போதுதான் 'தயம்மும்' உடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம் அருளப்பட்டது. எனவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த ஆயிஷா(ரலி) அவர்களை நோக்கி) உஸைத் இப்னு ஹுளைர்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஒரு துன்பம் நேரும் போதெல்லாம் அதிலிருந்து விடுபடுகிற வழியொன்றை அல்லாஹ் உங்களுக்குத் தராமலிருந்ததில்லை. மேலும், அதில் முஸ்லிம்களுக்கு அருள் வளம் ஒன்றைத் தராமலும் இருந்ததில்லை'' என்று கூறினார்கள்.

1555. ஆயிஷா(ரலி) அறிவித்தார் 'புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) வந்தார்கள். எனவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ்தான், தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன் கூட்டியே நிகழச் செய்தான்.

''ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாதிருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது.

1556. அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே, இப்படிக் கூறினார்கள் (என்று கூறிவிட்டு) - என் தந்தையும் என் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும் (நபியவர்கள் இப்படிச் சொன்னதற்குக் காரணம்) அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களுக்கும் புகலிடம் அளித்து அவர்களுக்கு உதவினார்கள்' என்றோ (இவ்விரு வாக்கியங்களுடன் சேர்த்து) வேறொரு வாக்கியத்தையோ கூறினார்கள்.

அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

1557. இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள். அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என பராஉ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், 'நீங்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் பிரியமானவர்கள்'' என்று சொன்னது.

1558. அனஸ்(ரலி) அறிவித்தார்: (அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்'' ஒரு மணவிழாவிலிருந்து வருவதை'' என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நின்று கொண்டு, 'இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

1559. இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்'' என்று இரண்டு முறை கூறினார்கள்.

அன்சாரிகளைப் பின்தொடர்ந்த (நட்புக் கூட்டங்கள் மற்றும் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட)வர்கள்.

1560. ஜைத் இப்னுஅர்கம்(ரலி) கூறினார் அன்சாரிகள் (நபி - ஸல் - அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! இறைத்தூதர்களை ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பின்தொடர்ந்த (சார்பு நிலை கொண்ட)வர்கள் இருந்தனர். நாங்கள் உங்களைப் பின்பற்றினோம். எனவே, எங்களுக்கும் எங்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

1561. அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார் ''அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனுல் ஹாரிஸ், பிறகு பனூ சாஇதா குடும்பங்கள் ஆகும். அன்சாரிக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி) எங்களிடம் வந்து சேர்ந்தார். அப்போது (அவரிடம்) அபூ உஸைத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு (அப்படிக் குறிப்பிட்டவர்களில்) நம்மைக் கடைசியானவர்களாகக் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) உடனே ஸஅத் இப்னு உபாதா(ரலி) நபி(ஸல்) அவர்களை அடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்கள் (தங்களால்) சிறப்பித்துக் கூறப்பட்டபோது (அன்சாரிகளில் ஒரு குடும்பத்தினரான) நாங்கள் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளோமே (ஏன்?)'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் மிகச் சிறந்(குடும்பத்)தவர்களில் இடம் பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், 'என்னை (மறுமையில்) தடாகத்தின் அருகே சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள்'' என்று சொன்னது.

1562. உஸைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார் அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தது போல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குப் பிறகு (உங்களை விட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் 'ஹவ்ளுல்கவ்ஸர்' என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுத்திருங்கள்'' என்று கூறினார்கள்.

1563. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், 'எனக்குப் பிறகு (உங்களை விட ஆட்சியதிகாரத்தில் மற்றவர்களுக்கு) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில்) என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். என்னைச் சந்திக்க உங்களுக்குக் குறித்துள்ள இடம் (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாக இறைவன் வழங்கிவிருக்கும் ஹவ்ளுல் கவ்ஸர் எனும்) தடாகமேயாகும் எனக்கூறினார்கள்.

தமக்குத் தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். (திருக்குர்ஆன் 59:09)

1564. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.' அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)'' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குழந்தைகளுக்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்'' என்னும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

நபி(ஸல்) அவர்கள், 'அன்சாரிகளில் நன்மை புரிவோரிடமிருந்து ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்பவர்களை மன்னித்து விடுங்கள்'' என்று சொன்னது.

1565. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் (நபி - ஸல் - அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தம் சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்) என்று பதிலளித்தார்கள். அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி)), நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிகழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் - அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை - அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, 'அன்சாரிகளின் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்துக் கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை. என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. எனவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.

1566. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது) தம் தோள்களின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு (வீட்டிலிருந்து பள்ளி வாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்களின் மீது கருப்புக் கட்டு ஒன்று (போடப்பட்டு) இருந்தது. மிம்பரின் (மேடை) மீது சென்று அமர்ந்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனைப் போற்றிப் பிறகு கூறினார்கள்; பிறகு, மக்களே! (இஸ்லாத்தில் இணையும்) மக்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். (ஆனால் இறைமார்க்கத்திற்கு) உதவி புரிவோர் (அன்சார்) உணவில் உப்பைப் போன்று ஆகிவிடும் அளவிற்கு குறைந்து போய்விடுவார்கள். எனவே, ஒருவருக்கு நன்மையளிக்கக் கூடிய, அல்லது தீங்கு செய்யக் கூடிய (அளவிற்குள்ள) ஓர் அதிகாரப் பொறுப்பை உங்களில் ஒருவர் ஏற்றால் அன்சாரிகளில் நன்மை புரிந்தவரின் நன்மையை ஏற்றுக் கொண்டு அவர்களில் தவறிழைத்தவரை மன்னித்து விடட்டும் எனக் கூறினார்கள்.

ஸஆத் இப்னு முஆத் (ரலி)அவர்கள் சிறப்பு.

1567. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு (இறைசிம்மாசனம்) அசைந்தது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார். ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஜாபிர்(ரலி) அவர்களிடம், 'பராஉ(ரலி), 'ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்'' என்று சொன்னதற்கு ஜாபிர்(ரலி), 'இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரண்டு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள், 'ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள (னான இறைவ)னின் சிம்மாசனம் அசைந்தது' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்'' என்று பதிலளித்தார்கள்.

உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் சிறப்பு.

1568. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, 'வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும்வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை.' என்றும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), 'என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் சிறப்புகள்.

1569. கதாதா(ரஹ்) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்'' என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள்.

அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சிறப்புகள்.

1570. அனஸ்(ரலி) அறிவித்தார் உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்களை(த் தனியே)விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள். மேலும், அபூதல்ஹா(ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி(ஸல்) அவர்கள், 'அதை அபூ தல்ஹாவிடம் போடு'' என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப்) பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலiயில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களின் சிறப்புகள்.

1571. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், 'இவர் சொர்க்கவாசி'' என்று சொல்லி நான் கேட்டதில்லை. அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைக் குறித்தே, 'மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்'' என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது.

1572. கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார் நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், 'இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, 'நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், 'இவர் சொர்க்கவாசி' என்று கூறினர்'' என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக்கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் - அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் - அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், 'இதில் ஏறு'' என்று சொல்லப்பட்டது. நான், 'என்னால் இயலாதே'' என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து உயர்த்திவிட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், 'நன்கு பற்றிப் பிடித்துக் கொள்'' என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, 'அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) தாம். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 'பணியாள்' என்பதற்கு பதிலாக 'சிறிய பணியாள்' என்னும் சொல் இடம் பெற்றுள்ளது.

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பு.

1573. ஆயிஷா(ரலி) அறிவித்தார் கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி(ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி(ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களோ'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.

1574. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

1575. ஆயிஷா(ரலி) அறிவித்தார் ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா(ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா(ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன்.

ஹிந்த் பின்த் உத்பா(ரலி)அவர்கள் பற்றிய குறிப்பு.

1576. ஆயிஷா(ரலி) அறிவித்தார் ஹிந்த் பின்த் உத்பா, (நபி - ஸல் - அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)'' என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள்.

ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்களைப் பற்றிய செய்தி.

1577. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், தமக்கு வேத வெளிப்பாடு (வஹீ) அருளப்படுவதற்கு முன்பு கீழ் 'பல்தஹில் ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (குறைஷிகளின்) பயணஉணவு ஒன்று நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டது. அந்த உணவை ஸைத் இப்னு அம்ர் உண்ண மறுத்துவிட்டார். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷிகளிடம்), 'நீங்கள் உங்கள் (சிலைகளுக்கு பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ண மாட்டேன்'' என்று கூறினார்கள். ஸைத் இப்னு அம்ர் அவர்கள், குறைஷிகளால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்டவற்றைக் குறை கூறிவந்தார்கள். மேலும், 'ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக, வானத்திலிருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக பூமியிலிருந்து (புற் பூண்டுகளை முளைக்கச் செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ்வின் பெயரால்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்களின்) பெயர் சொல்லி அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட் கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரை கண்ணியப்படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர்கள்'' என்று கூறி வந்தார்கள்.

1578. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் ''சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்'' என்று கூறினார்கள்.

1579. (கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன கவிதைகளில் 'அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' என்னும் சொல்தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1580. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு (வஹீ எனும்) வேத வெளிப்பாடு அருளப்பட்டது. அதன் பிறகு அவர்கள் மக்கா நகரில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு, (இறைமார்க்கத்திற்காகத் தாயகம் துறந்து) ஹிஜ்ரத் செய்து செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. எனவே, அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்கள்; அங்கே பத்தாண்டுகள் தங்கினார்கள். பிறகு அங்கு இறப்பெய்தினார்கள்.

1581. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், 'இணைவைப்பாளர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்'' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் 'ஹிஜ்ர்' பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி(ஸல்) அவர்களின் கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூ பக்ர்(ரலி) முன்னால் வந்து அவனுடைய தோளைப் பிடித்து நபி(ஸல்) அவர்களைவிட்டு விலக்கினார்கள். மேலும், 'என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்'' (திருக்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள்.

ஜின்கள் பற்றிய குறிப்பு.

1582. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஜின்கள் குர்ஆனை செவிமடுத்த இரவில், நபியவர்களை (இன்னாரென்று) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தவர் யார்?' என்று நான் மஸ்ரூக்(ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஜின்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதர் தாம் என்று) அவர்களை அறிவித்துக் கொடுத்தது ஒரு மரம் தான் என உங்கள் தந்தை - அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எனக்கு அறிவித்தார்கள்'' என்று கூறினார்கள்.

1583. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் உளூச் செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி(ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒரு நாள்) அவற்றைச் சுமந்து கொண்டு நான் நபி(ஸல்), அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, 'யார் அது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நான் அபூ ஹுரைரா(ரலி) தான் (வருகிறேன்)'' என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டு வா. நீ என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்து விடாதே'' என்று கூறினார்கள். நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்து கொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பி விட்டேன்.

1584. நபி(ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, 'எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம் என்று ஏன் சொன்னீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் 'நபீன் என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், 'அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்'' என்று பதிலளித்தார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

1585. உம்மு காலித் பின்த் காலித்(ரலி) அறிவித்தார் அபிசீனியா நாட்டிலிருந்து நானும் ஜுவைரிய்யா அவர்களும் வந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றை உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங்களைத் தடவியபடி, 'அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே!'' (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் 'சனா, சனா') என்று கூறலானார்கள்.

அபூ தாலிப் அவர்கள் குறித்த சம்பவம்.

1586. அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அறிவித்தார் நான் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் பெரிய தந்தை (அபூ தாலிபு)க்கு (அவர் செய்த உதவிகளுக்குக் கைமாறாக) நீங்கள் என்ன பயனை அளித்தீர்கள்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக, அவர் உங்களை (எதிரிகளின் தாக்குதலிருந்து) பாதுகாப்பவராகவும், உங்களுக்காக (உங்கள் எதிரிகளிடம்) கோபப்படுபவராகவும் இருந்தாரே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர் இப்போது (கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பில் தான் இருக்கிறார். நான் மட்டும் இல்லையென்றால் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார்'' என்று பதிலளித்தார்கள்.

1587. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டபோது அவர்கள், 'அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளை (தகித்துக்) கொதிக்கும்'' என்று சொல்ல கேட்டேன். மற்றோர் அறிவிப்பில் 'அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதித்துக் கொண்டிருக்கும்'' என்று காணப்படுகிறது.

இஸ்ராஉ பற்றிய நபிமொழியும் அது பற்றிய (திருக்குர்ஆன் 17:01) இறைவசனமும்.

1588. (நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் 'ஹிஜ்ர்' என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

மிஃராஜ் - விண்ணுலகப் பயணம்.

1589. நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில் அல்லது ஹிஜ்ரில் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான அனஸ்(ரலி), 'இங்கிருந்து இது வரையில் அவர் பிளந்தார்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள். அறிவிப்பாளர் கத்தாதா(ரஹ்) கூறினார்: நான் என்னருகிலிருந்து (அனஸ்(ரலி) அவர்களின் நண்பர்) ஜாரூத்(ரஹ்) அவர்களிடம், 'அனஸ்(ரலி), 'இங்கிருந்து, இது வரையில் என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஜாரூத்(ரஹ்), 'நபி(ஸல்) அவர்களின் நெஞ்சின் காறையெலும்பிலிருந்து அடிவயிறு வரை அல்லது நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து அடிவயிறு வரை என்ற கருத்தில் அனஸ்(ரலி) கூறினார்'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. -(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ்(ரலி) அவர்களிடம் ஜாரூத்(ரஹ்), 'அது புராக் எனும் வாகனம் தானே அபூ ஹம்ஸா அவர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு அனஸ்(ரலி), 'ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்'' என்று கூறினார்கள். பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது'' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. அப்போது (அந்த வானத்தின் காவலர்) கதவைத் திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது அங்கு ஆதம்(அலை) அவர்கள் இருந்தார்கள். (என்னிடம் ஜிப்ரீல்) 'இவர்கள் உங்கள் தந்தை ஆதம், இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று கூறினார். அவர்களுக்கு நான் சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு, ஆதம்(அலை) அவர்கள், '(என்) நல்ல மகனும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!'' என்று கூறினார்கள். பிறகு (என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல்) இரண்டாம் வானத்திற்கு உயர்ந்து அதைத் திறக்கும்படி கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளிக்க, உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று வினவப்பட்டது. (அதற்கு) அவர், 'முஹம்மது'' என்று பதிலளித்தார், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்தா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் காவலர் கதவைத்) திறந்தார். நான் அங்கு சென்றடைந்தபோது, அங்கு யஹ்யா (அலை) அவர்களும், ஈசா(அலை) அவர்களும் இருந்தனர் - அவ்விருவரும் சிற்றன்னையின் மக்களாவர். இது யஹ்யா அவர்களும், ஈசா அவர்களும் ஆவர். இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் (அவர்கள் இருவருக்கும்) சலாம் சொன்னபோது அவர்கள் சலாமிற்கு பதில் கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும், 'நல்ல சகோதரரும், நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துக்) கூறினர். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது'' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்று பதிலளித்தார். 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. பிறகு (அந்த வானத்தின் கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் சென்றடைந்தபோது அங்கு யூசுஃப்(அலை) அவர்கள் இருந்தார்கள். 'இவர்கள் தாம் (இறைத்தூதர்) யூசுஃப் இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்களும் எனக்கு பதில் சலாம் கூறினார்கள். பிறகு, 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்தும்) கூறினார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் நான்காம் வானத்திற்கு வந்து சேர்ந்து அதைத் திறக்கும்படி கூறினார். 'யார் அது'' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (இருப்பவர்) யார்?' என்று வினவப்பட்டது. அவர், 'முஹம்மது'' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வருமாறு) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்றார். 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவர் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) சொல்லப்பட்டது. நான் அங்கு சென்றடைந்தபோது இத்ரீஸ்(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் இத்ரீஸ் இவர்களுக்கும் சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு அவர்கள், 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துச்) கூறினார்கள். பிறகு என்னுடன் அவர் ஐந்தாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படிக் கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) 'அவர் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) கூறினார். அங்கு சென்றடைந்தபோது ஹாரூன் (அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் ஹாரூன் இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் கூறினார்கள். பிறகு, 'நல்ல சகோதரரும் நல்ல இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று (வாழ்த்துச்) கூறினார்கள். பின்னர் என்னுடன் ஜிப்ரீல் ஆறாம் வானத்திற்கு உயர்ந்தார். அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். யார்அது? என்று கேட்கப்பட்டது. அவர் ஜிப்ரீல் எனப் பதிலளித்தார். உங்களுடன் யார் எனக் கேட்கப்பட்டது. அவர் முஹம்மது என்றார்.அவரை அழைத்து வருமாறு ஆள்அனுப்பட்டதா என்று வினவ ஆம் என்றார்.அவ்வானத்தின் காவலர் அவர் வரவு நல்வரவாகட்டும் என வாழ்த்துக் கூறினார். அங்கு சென்றபோது மூஸா(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். இவர்கள்தான் மூஸா. இவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் என ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்குப் பதில் ஸலாம் கூறினார்கள். நான் (மூஸா - அலை - அவர்களைக்) கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'தங்கள் அழுகைக்கு என்ன காரணம்?' என்று அவர்களை நோக்கிக் கேட்கப்பட்டது. அவர்கள், 'என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள், எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்பதால் தான் அழுகிறேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் ஏழாவது வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி ஜிப்ரீல் கூறினார். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று வினவப்பட்டபோது அவர், 'முஹம்மது'' என்று பதில் கூறினார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்'' என்றார். (அந்த வானத்தின் காவலர்,) 'அவரின் வரவு நல்வரவாகட்டும், அவரின் வருகை மிக நல்ல வருகை'' என்று (வாழ்த்துச்) கூறினார். நான் அங்கு சென்றடைந்தபோது, இப்ராஹீம்(அலை) அவர்கள் அங்கிருந்தார்கள். 'இவர்கள் தாம் உங்கள் தந்தை. இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினார். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் (எனக்கு) பதில் சலாம் உரைத்தார்கள். அவர்கள், 'நல்ல மகனும், நல்ல இறைத் தூதருமான இவரின் வரவு நல்வரவாகட்டும்'' என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு, (வான எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' என்னும் இடத்திற்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். அதன் (இலந்தைப்) பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜர்' என்னுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போலிருந்தன. 'இதுதான் சித்ரத்துல் முன்தஹா'' என்று ஜிப்ரீல் (அறிமுகப்படுத்திக்) கூறினார். அங்கு (அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் இருந்து ஓடி வருகின்ற) நான்கு ஆறுகள் இருந்தன. இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. 'ஜிப்ரீலே! இவ்விரண்டு ஆறுகள் எவை?' என்று கேட்டேன். அவர், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகியவை)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' (எனும் 'வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்') எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. பிறகு என்னிடம் ஒரு பாத்திரத்தில் பாலும், ஒரு பாத்திரத்தில் மதுவும், இன்னொரு பாத்திரத்தில் தேனும் கொண்டு வரப்பட்டது. நான் பாலை (தேர்ந்து) எடுத்தேன். (பிறகு அதைக் குடித்தேன்.) அப்போது ஜிப்ரீல், 'இதுதான் நீங்களும் உங்கள் சமுதாயத்தாரும் இருக்கும் (இஸ்லாம் எனும்) இயற்கை நெறியாகும்'' என்று கூறினார்கள்.

பிறகு என் மீது ஒவ்வொரு தினத்திற்கு ஐம்பது (வேளைத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் திரும்பி வந்தபோது மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், 'உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?' என்று கேட்டார்கள். 'ஒவ்வொரு நாளும் ஐம்பது (வேளைத்) தொழுகை (கட்டாயக் கடமையாக நிறை வேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது'' என்று நான் பதிலளித்தேன். உங்கள் சமுதாயத்தார் ஒரு தினத்திற்கு ஐம்பது வேளைத் தொழுகையைத் தாங்க மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களுக்கு முன் மக்களிடம் அனுபவப்பட்டுள்ளேன்'' பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் உங்கள் சமுதாயத்தினருக்காக (தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்'' என்று கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். (இறைவனிடம் குறைத்துத் தரும்படி கேட்டேன்) இறைவன் (ஐம்பதிலிருந்து) பத்தை எனக்குக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். முன் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். அப்போது (நாற்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போதும் முன் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும் படி) கூறினார்கள். நான் (இறைவனிடம்) திரும்பிச் சென்றேன். எனக்குக (முப்பதிலிருந்து) பத்தைக் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் முன்போன்றே (குறைத்து கேட்கும்படி) கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். எனக்கு (இருபதிலிருந்து பத்து குறைக்கப்பட்டு) தினந்தோறும் பத்து (வேளைத்) தொழுகைகள் (தொழும்படி) உத்தரவிடப்பட்டது. நான் (மூஸா - அலை - அவர்களிடம்) திரும்பி வந்தேன். அப்போதும் அவர்கள் முன் போன்றே கூறினார்கள். நான் திரும்பிச் சென்றேன். ஒவ்வொரு நாளும் ஐந்து (வேளைத்) தொழுகைகள் (நிறைவேற்றும்படி) எனக்கு உத்தரவிடப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அப்போது 'உங்களுக்கு என்ன உத்தரவிடப்பட்டது?' என்று கேட்டார்கள். ஒவ்வொரு நாளைக்கும் ஐந்து (நேரத்) தொழுகைகள் எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று சொன்னேன். 'ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளை உங்கள் சமுதாயத்தினர் தாங்கமாட்டார்கள். உங்களுக்கு முன்பே மக்களுடன் பழகி நான் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு பக்குவப்பட்டுள்ளேன். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று உங்கள் சமுதாயத்தினருக்காக இன்னும் குறைத்துத் தரும்படிக் கேளுங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு நான், '(கடமையான தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துத் தரும்படி பலமுறை இறைவனிடம்) எனக்கே வெட்கமேற்படும் வரையில் நான் கேட்டு விட்டேன். எனவே, நான் திருப்தியடைகிறேன்; (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொள்கிறேன்'' என்று கூறினேன். பிறகு (அந்த இடத்தை) நான் கடந்தபோது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) 'நான் என் (ஐந்து நேரத்தொழுகை எனும்) விதியை நடைமுறைப் படுத்திவிட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து நேரமாகக் குறைத்துக் கடமையை) எளிதாக்கி விட்டேன்'' என்று ஒரு (அசரீரிக்) குரல் ஒலித்தது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

1590. இக்ரிமா(ரஹ்) அறிவித்தார் ''(நபியே! இப்போது) நாம் உங்களுக்குக் காண்பித்த (அந்த இரவுக்) காட்சியையும், குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரத்தையும் (இந்த) மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்'' என்ற (திருக்குர்ஆன் 17:60) இறை வசனத்திற்கு விளக்கம் தரும்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அவர்களுக்குக் காட்டப்பட்ட காட்சிகளைக் குறிக்கும். குர்ஆனில் சபிக்கப்பட்டுள்ள மரம் என்பது 'ஸக்கூம்' என்னும் (நரகத்திலுள்ள கள்ளி) மரத்தைக் குறிக்கும்'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை மணம் முடித்துக் கொண்டது.

1591. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை மணந்து கெண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்தோம். எனக்கு காய்ச்சல் கண்டு என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகி விட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையயும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், 'நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்'' என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

1592. ஆயிஷா(ரலி) அறிவித்தார் ''நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, 'இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், 'இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

1593. ஆயிஷா(ரலி) அறிவித்தார் என் பெற்றோர் (அபூ பக்ரும், உம்மு ரூமானும்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. (மக்கா நகரில் வாழ்ந்த) முஸ்லிம்கள் (இணை வைப்பவர்களால் பல்வேறு துன்பங்கள்) சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது, அபூ பக்ர் அவர்கள் அபிசீனிய நாட்டை நோக்கி, நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் (யமன் செல்லும் வழியில்) 'பர்குல் கிமாத்' என்னும் இடத்தை அடைந்தபோது இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் 'அல்காரா' எனும் (பிரபல) குலத்தின் தலைவராவார் - அவர் 'அபூ பக்ரே எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். 'என் சமுதாயத்தினர் என்னை (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். எனவே, நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து (நிம்மதியாக) என் இறைவனை வணங்கப் போகிறேன்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது இப்னு தஃகினா, 'அபூ பக்ரே! தங்களைப் போன்றவர்கள் (தாமாகவும்) வெளியேறக் கூடாது, (பிறரால்) வெளியேற்றப்படவும் கூடாது. (ஏனெனில்) நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் என்று (அவர்களின் அறச் சேவைகளைப் புகழ்ந்து) கூறிவிட்டு, 'தங்களுக்கு அடைக்கலம் தருகிறேன். நீங்கள் (மக்காவிற்கே) திரும்பிச் சென்று உங்களின் (அந்த) ஊரிலேயே உங்களுடைய இறைவனை வணங்குங்கள்'' என்று கூறினார். அபூ பக்ர் (அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்துவிட்டு மக்காவிற்குத்) திரும்பினார்கள். அவர்களுடன் இப்னு தஃகினாவும் பயணமா(கித் திரும்பி)னார். மாலையில் இப்னு தஃகினா குறைஷிக்குல பிரமுகர்களைப் போய்ச் சந்தித்து அவர்களிடம் (நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்) அபூ பக்ரைப் போன்றவர்கள் (நாட்டிலிருந்து தாமாக) வெளியேறுவதோ, (பிறரால்) வெளியேற்றப்படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கும், உறவுகளைப் பேணிவாழும், (சிரமப்படுவோரின்) பாரம் சுமந்து வரும், விருந்தினர்களை உபரிசத்து வரும், சத்திய சோதனைகளில் (ஆட்படுத்தப்பட்டோருக்கு) உதவி வரும் ஒரு (ஒப்பற்ற) மனிதரையா (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள்?' என்று கேட்டார். (அபூ பக்ர் - ரலி - அவர்களுக்குத் தாம் அடைக்கலம் தரப் போவதாகக் கோரிய) இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை குறைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, 'அபூ பக்ர், தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஒதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்'' என்று கூறினார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃகினா அபூ பக்ர்(ரலி) தம் இல்லத்திற்கு தம் இறைவனை வணங்கியும், தம் தொழுகையை பகிரங்கப்படுத்தாமலும் தம் வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தம் வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணைவைப்பவர்களின் மனைவி மக்கள் அபூ பக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்களின் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது தம் கண்களை கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூ பக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களின் இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது. அதனால் அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆளப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், 'அபூ பக்ர் தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறிவிட்டு தம் வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுது கொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே, அபூ பக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் அவரின் இறைவனை தம் இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உம்முடைய (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களின் உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூ பக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை'' என்று கூறினார். ஆயிஷா(ரலி) கூறினார்: இப்னு தஃகினா அபூ பக்ர் அவர்களிடம் வந்து, 'நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், அல்லது என்னுடைய (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்த ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்பமாட்டேன் 'என்று கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'உம்முடைய அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணியமிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திபடுத்துகிறேன்'' என்று கூறினார்கள். அன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து, 'இரண்டு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த (மதீனா) பகுதியை நீங்கள் ஹிஜ்ரத் செல்கிற நாடாக நான் (கனவில்) காட்டப்பட்டேன்'' என்று கூறினார்கள். எனவே, மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றவர்கள் சென்றார்கள். (ஏற்கெனவே) அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் பலர் (முஸ்லிம்கள் மதீனாவில் குடியேறுவதைக் கேள்விப்பட்டு) மதீனாவுக்குத் திரும்பினார்கள். (மக்காவிலிருந்து) அபூ பக்ர் அவர்களும் மதீனா நோக்கி (ஹிஜ்ரத் புறப்பட) ஆயத்தமானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சற்று பொறுங்கள். எனக்கு (ஹிஜ்ரத்திற்கு) அனுமதி வழங்கப்படுவதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று (அபூ பக்ர் அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'என் தந்தை தங்களுக்கு அர்ப்பணம்; அனுமதியை(த்தான்) எதிர் பார்க்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம் (எதிர்பார்க்கிறேன்)'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் (ஹிஜ்ரத்) செல்வதற்காகத் தன் (பயணத்தி)னை நிறுத்தினார்கள். மேலும், அபூ பக்ர் அவர்கள் (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரண்டு வாகன (ஒட்டக)ங்களுக்கு நான்கு மாதம் கருவேலந்தழையைத் தீனிபோட்டு (வளர்த்து) வந்தார்கள். ஆயிஷா(ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்: நாங்கள் ஒரு நாள் அபூ பக்ர்(ரலி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூ பக்ர் அவர்களிடம் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தலையை மூடிய வண்ணம் - நம்மிடம் வருகைதராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'என் தந்தையும் என் தாயும் நபி(ஸல்) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச் செய்திருக்கிறது'' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'உங்களிடம் இருப்பவர்களை வெளியே போகச் சொல்லுங்கள். (உங்களிடம் ஒரு ரகசியம் பேச வேண்டும்)'' என்று கூறினார்கள். அதற்கு, அபூ பக்ர் அவர்கள் (இல்லத்திற்குள் இருக்கும்) இவர்கள் உங்களுடைய (துணைவியின்) குடும்பத்தினர் தாம். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் அவர்கள், 'தங்களுடன் நானும் வர விரும்புகிறேன்! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார்கள். 'சரி! (நீங்களும் வாருங்கள்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த என்னுடைய இரண்டு வாகன (ஒட்டக)ங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'விலைக்கு தான் (இதை நான் எடுத்துக் கொள்வேன்)'' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) கூறினார்: அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளை வெகுவிரைவாக நாங்கள் செய்து முடித்தோம். ஒரு தோல்பையில் பயண உணவை நாங்கள் தயார் செய்து வைத்தோம். அப்போது அபூ பக்ரின் மகள் (என் சகோதரி) அஸ்மா தன்னுடைய இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டை(க் கிழித்து) அதனை அந்தப் பையின் வாய் மீது வைத்துக் கட்டினார்கள். இதனால் தான் அவர்களுக்கு 'கச்சுடையாள்' என்று பெயர் வந்தது. பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (பயணம் புறப்பட்டு) 'ஸவ்ர்' மலையில் உள்ள ஒரு குகைக்கு வந்து சேர்ந்து அதில் மூன்று நாள்களில்) அவர்கள் இருவருடன் அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ரும் இரவில் வந்து தங்கியிருப்பார் - அவர் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார். பின்னிரவு (சஹர்) நேரத்தில் அவர்கள் இருவரைவிட்டும் புறப்பட்டு மக்கா குறைஷிகளுடன் இரவு தங்கியிருந்தவர் போன்று அவர்களுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவரைப் பற்றி (குறைஷிகளால் செய்யப்படும்) சூழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு இருள் சேரும் நேரத்தில் அவர்கள் இருவரிடமும் அச்செய்திகளைக் கொண்டு வந்து விடுவார். அவர்கள் இருவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை ஆமிர் இப்னு ஃபுஹைரா (அபூ பக்ர் அவர்களின்) மந்தையிலிருந்து ஒரு பால் தரும் ஆட்டை மேய்த்து வருவார். இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழித்து விடுவார்கள் - அது புத்தம் புதிய, அடர்த்தி அகற்றப்பட்ட பாலாகும் - அந்த ஆட்டை ஆமிர் இப்னு ஃபுஹைரா இரவின் இருட்டு இருக்கும் போதே விரட்டிச் செல்வார். இதை (அவர்கள் இருவரும் அந்தக் குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தில் 'பனூ அத்தீல்' என்னும் கிளையைச் சேர்ந்த கை தேர்ந்த ஒருவரை பயண வழி காட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினர். அவர் ஆஸ்பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்னும் குலத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். (ஆனாலும்) அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பி, தங்களின் இரண்டு வாகன (ஒட்டக)ங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப் பின் 'ஸவ்ர்' குகைக்கு வந்து விடுமாறு வாக்குறுதி வாங்கியிருந்தனர். மூன்றாம் (நாள்) அதிகாலையில் அந்த இருவாகனங்களுடன் (அவர் ஸவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார்.) அவர்கள் இருவருடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் பயண வழிகாட்டியும் சென்றனர். பயண வழிகாட்டி அவர்களைக் கடற்கரைப் பாதையில் அழைத்துச் சென்றார். மேலும் சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும்(ரலி) அறிவித்தார்: குறைஷிக்குலத்தின் தூதுவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அபூ பக்ர்(ரலி) அவர்களையும் கொலை செய்பவருக்கு, அல்லது (உயிருடன்) கைது செய்து வருபவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் (நூறு ஒட்டகம் என்று) பரிசை நிர்ணயம் செய்(து அறிவித்)தவர்களாக எங்களிடம் வந்தனர். அப்போது நான் எங்களின் பனூ முத்லிஜ் சமுதாயத்தின் அவைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து, அமர்ந்து கொண்டிருந்த எங்களிடையே நின்று கொண்டு, 'சுராகாவே! சற்று முன் நான் கடலோரத்தில் சில உருவங்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவரின் தோழர்களும் தாம் என்று கருதுகிறேன்'' என்று கூறினார். அவர்கள் முஹம்மதும் தோழர்களும் தாம் என்று அறிந்து கொண்டேன். (இருப்பினும் அவரைத் திசை திருப்புவதற்காக) 'அவர்கள் முஹம்மதும் அவர்களின் தோழர்களும் அல்லர். மாறாக, இன்னார் இன்னாரைத்தான் நீ பார்த்திருப்பாய். அவர்கள் எங்கள் கண்ணெதிரே தான் (தங்களின் காணாமல் போன ஒட்டகங்களைத் தேடிப்) போனார்கள்'' என்று நான் அவரிடம் கூறினேன். பிறகு அந்த அவையிலேயே சிறிது நேரம் இருந்தேன். அதற்குப் பிறகு எழுந்து (என்னுடைய இல்லத்திற்குள்) நுழைந்து என் அடிமைப் பெண்ணிடம் என்னுடைய குதிரையை வெளியே கொண்டு வரும்படி உத்தரவிட்டேன் - அப்போது குதிரை ஒரு மலைக்குன்றுக்கு அப்பால் இருந்தது. - எனக்காக அதை அவள் (அங்கே) கட்டிவைத்திருந்தாள். பின்பு, நான் என்னுடைய ஈட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின் புற வாசல் வழியாக வெளியேறினேன். (ஈட்டியை நான் தாழ்த்திப் பிடித்திருந்ததால்) அதன் கீழ் முனையால் (என்னையும் அறியாமலேயே) தரையில் கோடு கிழித்தேன். மேலும் அதன் மேல் நுனியை தாழ்த்திக் கொண்டு என் குதிரையிடம் வந்து அதன் மீது ஏறிக் கொண்டேன். அதன் முன்னங்கால் இரண்டையும் ஒரே நேரத்தில் உயர்த்தி ஒரே நேரத்தில் பூமியில் வைக்குமாறு செய்து மிக வேகமாகப் புறப்பட்டு அவர்களை நெருங்கினேன். அப்போது என்னுடைய குதிரை காலிடறி அதிலிருந்து நான் விழுந்து விட்டேன். உடனே நான் எழுந்து தன்னுடைய கையை அம்புக்கூட்டை நோக்கி நீட்டி, அதிலிருந்து (சகுனச் சொற்கள் எழுதப்பட்ட) அம்புகளை எடுத்தேன். அவற்றின் மூலம் என்னால் அவர்களுக்கு பாதிப்பை உருவாக்க முடியுமா அல்லது முடியாதா என்று குறிபார்த்தேன். நான் விரும்பாத (வகையில், என்னால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்ப)தே வந்தது. என்னுடைய அம்புகளுக்கு மாறு செய்துவிட்டு என்னுடைய குதிரையில் ஏறினேன். அது பாய்ந்த வண்ணம் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (திருக்குர்ஆன்) ஓதியதை கேட்டேன். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அபூ பக்ர் அவர்கள் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அப்போது) என்னுடைய குதிரையின் முன்கால்கள் இரண்டும் முட்டுக்கால்கள் வரையிலும் பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டேன். பிறகு (அதை எழச் செய்வதற்காக) அதை நான் அரற்றினேன். அது எழுந்(திருக்க முயற்சித்)தது. (ஆனால்,) அதன் கால்களை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அது நேராக எழுந்து நின்றபோது இரண்டு முன்னங்கால்களின் அடிச் சுவட்டிலிருந்து புகை போன்று வானத்தில் பரவலாகப் புழுதி கிளம்பிற்று. உடனே நான் (என்னுடைய) அம்புகளைக் கொண்டு (சகுனக்) குறிபார்த்தேன். நான் விரும்பாததே வந்தது. உடனே, நான் எனக்கு (உயிர்) பாதுகாப்பு நல்கும்படி அவர்களை அழைத்தேன். உடனே, அவர்கள் நின்றுவிட்டனர். நான் என்னுடைய குதிரையிலேறி அவர்களிடம் வந்து சேர்ந்தேன். அவர்களைவிட்டும் (என்னுடைய குதிரை) தடுக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை நான் கண்டபோது என்னுடைய மனதிற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (மார்க்க) விஷயம் மேலோங்கும் என்று தோன்றியது. நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'உங்களுடைய (குறைஷி) சமுதாயத்தினர் உங்களுக்காகப் பரிசை நிர்ணயித்துள்ளனர்'' என்று கூறிவிட்டு அந்த (குறைஷி) மக்கள் முஸ்லிம்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்ற தகவல்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். மேலும், என்னுடைய பயண உணவுப் பொருள்களை எடுத்துக் காட்டினேன். அவர்கள் என்னிடமிருந்து ஒன்றையும் (எடுத்து) எனக்கு குறைவு செய்யவுமில்லை. மேலும், (என்னிடமிருந்த எதையும்) அவர்கள் இருவரும் என்னிடம் கேட்கவுமில்லை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'எங்களைப் பற்றி(ய செய்தியை) மறைத்து விடு'' என்று கூறினார்கள். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் எனக்கு ஒரு பாதுகாப்புப் பத்திரம் எழுதித்தரும்படி வேண்டினேன். அப்போது, நபி(ஸல்) அவர்கள் ஆமிர் இப்னு ஃபுஹைராவுக்கு உத்தரவிட அவர் பாடமிடப்பட்ட தோல் துண்டில் (பாதுகாப்புப் பத்திரத்தின் வாசகத்தை) எழுதினார். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சகாக்களுடன் மதீனா நோக்கிச்) சென்றார்கள்.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: ஷாம் நாட்டிலிருந்து (வியாபாரத்தை முடித்துக் கொண்டு) திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம்களின் வணிகக் குழுவிலிருந்த ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும், அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும், வெண்ணிற ஆடைகளைப் போர்த்தினார்கள். மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் (மதீனாவின் புறநகர்ப் பகுதியிலிருந்த கருற்கற்கள் நிறைந்த) 'ஹர்ரா' எனுமிடத்திற்கு வந்து நண்பகலின் வெப்பம் அவர்களைத் திருப்பியனுப்பும் வரையில் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தனர். அப்படி ஒரு நாள் நீண்ட நேரம் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துவிட்டு (ஊருக்குள்) அவர்கள் திரும்பித் தத்தம் வீட்டுக்குள் ஒதுங்கியபோது யூதர்களில் ஒருவர் அவர்களின் கோட்டைகளில் ஒன்றின் மீது எதையோ பார்ப்பதற்காக ஏறியிருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் வெண்ணிற ஆடையில், கானல் நீர் விலக வருவதைப் பார்த்தார். அந்த யூதரால் (தம்மைக்) கட்டுப்படுத்த இயலாமல் உரத்த குரலில், 'அரபுக் குழாமே! இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய நாயகர்.'' என்று கூவினார். உடனே, முஸ்லிம்கள் (நபி - ஸல் - அவர்களைப் பாதுகாப்புடன் வரவேற்பதற்காக) ஆயுதங்களை நோக்கி கிளர்ந்தெழுந்தனர். அந்த (கருங்கற்கள் நிறைந்த) ஹர்ராவின் பரப்பில் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி ('குபா'வில் உள்ள) பனூ அம்ர் இப்னு அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூ பக்ர்(ரலி) எழுந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த நபி(ஸல்) அவர்களைப் பார்த்திராத - அன்சாரிகளில் சிலர் (அபூ பக்ர்(ரலி) அவர்களை இறைத்தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது நிழலிட்டார்கள். அப்போதுதான் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ அம்ர் இப்னு அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து 'இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை' நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாள்களில்) அந்தப் பள்ளியில் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தம் வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களின்) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது ஸஅத் இப்னு ஸுராரா(ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த ஸஹ்ல், சுஹைல் என்ற இரண்டு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலர வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ் இதுதான் (நம்முடைய) தங்குமிடம்'' என்று கூறினார்கள். பிறகு அந்த இரண்டு சிறுவர்களையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து அந்தக்களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், 'இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள். (அப்போது,) 'இந்தச் சுமை கைபரின் சுமையல்ல. இது எங்களின் இறைவனிடம் (சேமித்து வைக்கப்படும்) நீடித்த நன்மையும் (கைபரின் சுமையை விடப் பரிசுத்தமானதுமாகும்'' என்று ('ரஜ்ஸ்' எனும் யாப்பு வகைப் பாடலைப் பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள். மேலும், 'இறைவா (உண்மையான) பலன் மறுமையின் பலனே. எனவே (மறுமைப் பலனுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் கருணையன்பு காட்டுவாயாக'' என்று கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவரின் கவிதையை நபியவர்கள் பாடிக்காட்டினார்கள். அவரின் பெயர் என்னிடம் கூறப்படவில்லை (என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறிவிட்டு தொடர்ந்து) இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்தப் பாடல்(வரி)களைத் தவிர ஒரு முழுமையான கவிதையின் பாடலைப் பாடியதாக எனக்கு ஹதீஸ்களில் (செய்தி) எட்டவில்லை.

முஹாஜிர்களின் முதல் குழந்தை.

1594. அஸ்மா(ரலி) அறிவித்தார் நான் (என் மகன்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை (மக்காவில்) சூலுற்றிருந்தேன். சூல்காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன். மதீனா வந்தேன் (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களின் மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனுடைய வாயில் உமிழ்ந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனுடைய வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனுடைய வாயினுள் வைத்து தேய்த்துவிட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள்வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான். வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 'அஸ்மா(ரலி) நபி (-ஸல் - அவர்களிடம் மதீனா) நோக்கி கர்ப்பிணியான நிலையில் ஹிஜ்ரத் செய்தார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

1595. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். (ஹிஜ்ரத் பணயித்தின்போது வழியில்) நபி(ஸல்) அவர்களுடன் நான் ('ஸவ்ர்' மலைக்குகையில் (தங்கி) இருந்தேன். நான் தலையை உயர்த்தியபோது (எங்களைத் தேடி வந்த) கூட்டத்தாரின் பாதங்கள் என் (தலைக்கு) மேலே தெரிந்தன. நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்களில் எவராவது தம் பார்வையைத் தாழ்த்தி (குகைக்குள் உற்று நோக்கி)னால் நம்மைப் பார்த்து விடுவாரே! (இப்போது என்ன செய்வது?' என்று சொன்னேன். (நபி(ஸல்) அவர்கள், 'அமைதியாயிருங்கள்; அபூ பக்ரே! (நாம்) இருவர்;. நம்முடன் அல்லாஹ் மூன்றாமவன். (அவன் நம்மைக் காப்பாற்றுவான்)'' என்று கூறினார்கள்.

முதலில் முஹாஜிராக மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்கள்.

1596. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் எங்களிடம் (மதீனாவுக்கு முஹாஜிராக) முதலில் வருகை தந்தவர்கள் முஸ்அப் இப்னு உமைர்(ரலி) அவர்களும் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களும் தாம். இவர்கள் மக்களுக்கு (குர்ஆன்) ஓதக் கற்றுக் கொடுத்து வந்தனர். பிறகு பிலால்(ரலி) அவர்களும், ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களும், அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்களும் வருகை தந்தனர். பிறகு உமர்பின் கத்தாப்(ரலி), நபித்தோழர்கள் இருபது பேர் (கொண்ட ஒரு குழு) உடன் வந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள(து வருகையால்) மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் பார்க்கவில்லை. எந்த அளவுக்கென்றால் (மதீனாவின்) அடிமைப்பெண்கள், 'இறைத்தூதர் வந்துவிட்டார்கள்'' என்று பாடி (மகிழலா)னார்கள். 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' என்னும் (87-வது) அத்தியாயத்தை, குர்ஆனின் (மற்ற) விரிவான (முஃபஸ்ஸல்) அத்தியாயங்கள் சிலவற்றுடன் நான் (மனப்பாடமாக) ஓதும் வரை நபி(ஸல்) அவர்கள் (மதீனா) வருகை தரவில்லை.

முஹாஜிர் தம் (ஹஜ் அல்லது உம்ரா) வழிபாடுகளை நிறைவேற்றிய பின்பு மக்காவில் தங்குவது.

1597. அப்துர் ரஹ்மான் இப்னு ஹுமைத் அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் நமிர் அல் கிந்தீயின் சகோதரி மகனான சாயிப் இப்னு யஸீத்(ரலி) அவர்களிடம் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்), 'முஹாஜிர், (ஹஜ் வழிபாடுகளை நிறைவேற்றிவிட்டு மினாவிலிருந்து வந்த பிறகு) மக்காவில் தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றிருக்கிறீர்கள்?' என்று வினவினார்கள். அதற்கு சாயிப்(ரலி), 'மினாவிலிருந்து வந்த பின்பு மூன்று நாள்கள் (மக்காவில் தங்க) முஹாஜிருக்கு அனுமதியுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அலா இப்னு ஹள்ரமீ(ரலி) சொல்ல கேட்டேன்'' என்று பதிலளித்தார்கள்.

1598. யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment