Thursday 8 October 2009

[பாடம்-53] அறப்போரும் அதன் வழிமுறைகளும்.

அறப்போரின் சிறப்பு.

1204. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படி எதையும் நான் காணவில்லை'' என்று கூறிவிட்டு, 'அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத்தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார். ''அறப்போர் வீரனின் குதிரை, அதைக் கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்'' என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

''இறைவழியில் உயிரையும், உடைமையும் அர்ப்பணித்துப் போராடும் இறைநம்பிக்கையாளரே மனிதர்களில் சிறந்தவராவார்.''


1205. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ''இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?' என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)'' என்று பதிலளித்தார்கள். மக்கள், 'பிறகு யார்?' என்று கேட்டார்கள். 'மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

1206. இறைவழியில் போராடுபவரின் நிலையானது, உண்மையாகப் போராடுபவர் யார் என்பது (அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வுக்கே தெரியும் - (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும் வருபவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரை சொர்க்கத்தில் நுழைய வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான் அல்லது நன்மையுடனோ, போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்ப வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைவழியில் அறப்போர் புரிபவர்களின் படித்தரங்கள்.

1207.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி'' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், 'சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ் தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்: மேலும், 'அதற்கு மேலே கருணையாள(னான இறைவ)னின் அர்ஷு - சிம்மாசனம் இருக்கிறது. இன்னும், அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன'' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன். மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலைஹ்(ரஹ்), தம் தந்தையிடமிருந்து, 'அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது'' என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சந்தேகத் தொனியின்றி) அறிவித்தார்.

காலையும் மாலையும் சிறிது நேரம் இறைவழியில் (போரிடப்) புறப்படுவதின் சிறப்பும் சொர்க்கத்தில் ஒரு முழம் அளவு இடத்தின் சிறப்பும்.

1208. இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

1209. சொர்க்கத்தில் ஒரு வில்லுக்குச் சமமான (ஒரு முழம்) அளவு (இடம் கிடைப்பது) சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். மேலும், இறைவழியில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1210. இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைவழியில் துன்புறுத்தப்படுபவர்.

1211. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), 'உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் நான் எடுத்துரைக்கிறேன்; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்'' என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள்; அவரை எதுவும் செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், 'அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்'' என்று கூறினார். பிறகு, அவரின் எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர. அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம்(ரஹ்), 'கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக் கொண்டார்)' என்று (அறிவிக்கப்பட்டதாக) கருதுகிறேன்'' என்று கூறுகிறார். ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு, 'நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தான் பெற்ற நற்பலனைக் குறித்து திருப்தி) கொள்ளும்படிச் செய்தான்' என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ' 'நாங்கள் எங்கள் இறைவனைச் சென்றடைந்து விட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்து விட்டான். அவனைக் குறித்து நாங்கள் திருப்தியடைந்தோம். தன்(வெகு மதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்'' என்னும் இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் குலத்தாரைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், பனூ உஸைய்யா ஆகிய கிளையினருக்குக் கேடு நேர, நாற்பது நாள்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள்.

1212. ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், 'நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!'' என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.

இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் (பெறும் சிறப்பு).

1213. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் காயப்படுத்தப்படுபவர் - உண்மையில் தன் பாதையில் காயப்படுத்தப்படுபவர் யார் என்பதை '(அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வே அறிந்தவன் - மறுமை நாளில் இரத்த நிறம் கொண்டவராகவும் கஸ்தூரி மணம் கமழ்கிறவராகவுமே வருவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1214. அனஸ்(ரலி) அறிவித்தார். என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை. இணை வைப்பவர்களுககு எதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், 'இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்'' என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), 'ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்'' என்று கூறினார். ஸஅத்(ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, 'அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை. அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது. ''அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறை நம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்.'' என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.

1215. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்தி விட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)

அறப்போரில் ஈடுபடுவதற்கு முந்தைய நற்செயல்கள்.

1216. பராஉ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்த ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் முதலில் (இறைவழியில்) போர் புரிந்துவிட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) நீ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு'' என்று கூறினார்கள். எனவே, அந்த மனிதர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு (இறை வழியில்) போரிட்டார்; (அதில்) கொல்லப்பட்டார். நபி(ஸல்) அவர்கள் (அவரைப் பற்றி), 'இவர் சிறிதளவே செயல்பட்டு அதிக நற்பலனைப் பெற்றார்'' என்று கூறினார்கள்.

எங்கிருந்தோ வந்த அம்பு பாய்ந்து ஒருவர் கொல்லப்படுதல்.

1217. அனஸ்(ரலி) அறிவித்தார். ஹாரிஸா இப்னு சுராகா(ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றார்'' என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் வாக்கு மேலோங்கியிருக்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவர்.

1218. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகிறார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) இறைவழியில் போரிடுபவர் எவர்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், '(இவர்களில் எவருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

போர் புரிந்த பின்பு குளிப்பதும் (வானவர் ஜிப்ரீல்) புழுதி படிந்தவராக வருவதும்.


1219. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ 4, அல்லது 5-ம் ஆண்டில் நடந்த) அகழ்ப் போரின்போது (போர் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) தம் தலையைப் புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதைக் கீழே வைக்கவில்லை'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள்?' என்று கேட்க, ஜிப்ரீல்(அலை) அவர்கள், 'இதோ இங்கே!'' என்று பனூ குறைழா (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கி சைகை காட்டினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.

இறைமறுப்பாளர் ஒரு முஸ்லிமைக் கொன்ற பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, மார்க்கத்தில் உறுதியுடன் இருந்து, பிறகு கொல்லப்பட்டு விடுதல்.


1220. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

1221. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கைபர் வெற்றிக்குப் பிறகு அங்கிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு (போரில் கிடைத்த செல்வத்தில்) ஒரு பங்கு கொடுங்கள்'' என்று கேட்டேன். அப்போது ஸயீத் இப்னு ஆஸ் உடைய மகன்களில் ஒருவர் (அபான் என்பவர்), 'இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். உடனே நான், 'இவர் (நுஃமான்) இப்னு கவ்கல் அவர்களை (உஹுதுப் போரில்) கொன்றவர்'' என்று கூறினேன். அதற்கு ஸயீத் இப்னு ஆஸ் அவர்களின் மகன் (என்னைப் பற்றி), 'என்ன ஆச்சரியம்! (தன்னுடைய 'தவ்ஸ்' குலத்தார் வசிக்கின்ற) 'ளஃன்' என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் ஒரு முஸ்லிமைக் கொன்றுவிட்டதற்காக என்னைக் குறை சொல்கிறதே! அவரை அல்லாஹ் என் கைகளால் கண்ணியப்படுத்தியுள்ளான். அவர் கைகளால் என்னை அவன் கேவலப்படுத்தி விடவில்லை'' என்று கூறினார்.

நோன்பை விட புனிதப் போருக்கு முதலிடம் கொடுப்பது.


1222. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அபூ தல்ஹா(ரலி), நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (புனிதப்) போர்களில் பங்கெடுத்த காரணத்தால் நோன்பு நோற்காதவராக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இறந்த பின் (இஸ்லாம் பலம் பெற்றுவிட்ட நிலையில்), நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களை ஈதுல் ஃபித்ருடைய நாளிலும் மற்றும் ஈதுல் அள்ஹாவுடைய நாளிலும் தவிர (வேறெந்த நாளிலும்) நோன்பு நோற்காதவராகக் கண்டதில்லை.

1223.
பிளேக் (போன்ற கொள்ளை) நோயால் இறக்கிற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உயிர்த்தியாகியின் அந்தஸ்து கிடைக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

1224. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு, 'இறைநம்பிக்கை கொண்டவர்களில் (அறப்போர் புரியச் செல்லாமல் தங்கள் இருப்பிடத்திலேயே) தங்கிவிட்டவர்களும் இறைவழியில் போரிடச் சென்றவர்களும் சமஅந்தஸ்துடையவர்களாக மாட்டார்கள்'' என்னும் (திருக்குர்ஆன் 04:95) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப்போரில் பங்கெடுத்திருப்பேன்'' என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். எனவே, அப்போது அல்லாஹ் தன் தூதருக்கு (வேத வெளிப்பாட்டை) அருளினான். நபி(ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடை நசுங்கி விடும் என்று அஞ்சினேன். பிறகு அவர்களுக்கு (இந்நிலை நீக்கப்பட்டு) லேசாக்கப்பட்டது. அப்போது அல்லாஹ், 'தகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)'' என்னும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

போர் புரியும்படி ஆர்வமூட்டுதல்.


1225. அனஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அகழ்ப்போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி'' என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம், 'நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்'' என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்'' என்று (பாடியபடி) கூறினார்கள்.

அகழ் தோண்டுதல்.


1226. அனஸ்(ரலி) அறிவித்தார். முஹாஜிர்களும் அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோண்டி மண்ணைத் தம் முதுகுகளின் மீது சுமந்து, (வேறிடத்திற்குக்) கொண்டு செல்லத் தொடங்கினார்கள். அப்போது அவர்கள், 'நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம் என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தி ருக்கிறோம்'' என்று பாடலானார்கள்.அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவும் இல்லை. அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் உன் அருள் வளத்தைக் கொடு'' என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

1227. பராஉ(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்'' தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

1228. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் (தபூக் போரில்) ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், 'மதீனாவில் (நம்முடன் வராமல் தங்கிவிட்ட) சிலர் இருக்கின்றனர். நாம் எந்த மலைக் கணவாயையும் பள்ளத்தாக்கையும், அவர்களும் நம்முடன் அதில் (வந்து கொண்டு) இருக்கும் நிலையிலேயே தவிர வாகனமின்மையால் (புனிதப் போரில் கலந்து கொள்ளவிடாமல்) அவர்களைத் தடுத்து விட்டன'' என்று கூறினார்கள்.

இறைவழியில் நோன்பு நோற்பதின் சிறப்பு.


1229.
இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அறப்போர் வீரருக்குப் பயண வசதி செய்து கொடுப்பவர் மற்றும் அவர் சென்ற பின் அவரின் குடும்பத்தை நல்லவிதமாகக் கவனித்துக் கொள்பவரின் சிறப்பு.


1230.
'இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொக்கிறவரும் புனிதப்போரில் பங்கு கொண்டவராவார். அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின் அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாக்கிறவரும் புனிதப் போரில் பங்கு கொண்டவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.

1231. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, 'நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான்(ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்'' என்றார்கள்.

புனிதப் போரின்போது நறுமணம் பூசிக் கொள்வது.


1232. மூஸா இப்னு அனஸ்(ரஹ்) யமாமா போரை நினைவு கூர்ந்த வண்ணம் கூறினார். (என் தந்தை) அனஸ் இப்னு மாலிக்(ரலி) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம் தொடைகளைத் திறந்து நறுமணம் பூசிக் கொண்டிருந்தார்கள். அனஸ்(ரலி), 'என் சிற்றப்பாவே! நீங்கள் (அறப் போருக்கு) ஏன் வரவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இதோ! இப்போது வருகிறேன்'' என்று கூறிவிட்டு நறுமணம் பூசத் தொடங்கிவிட்டார்கள். பிறகு வந்து (அறப்போர் வீரர்களுடன்) உட்கார்ந்து விட்டார்கள். அப்போது மக்கள் தோற்றுப் பின்வாங்கியதாக (என் தந்தை) கூறினார்கள் - (மக்கள் தோற்றுப் பின்வாங்குவதைக் கண்ட) ஸாபித்(ரலி), 'எனக்கு விலகி வழிவிடுங்கள். நான் எதிரிகளுடன் போரிடுவேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் இருந்த பொழுது இப்படிப் பின்வாங்கி (ஓடி)யதில்லை. நீங்கள் உங்கள் எதிரிகளுக்குப் பழக்கப்படுத்தும் இந்த விஷயம் (நீங்கள் பின்வாங்கியோட, அவர்கள் உங்களை விரட்டி வரும் இந்த குணம்) மிக மோசமானது'' என்று கூறினார்கள். இதை ஹம்மாத்(ரஹ்) அவர்களும் ஸாபித் அல் புனானி(ரஹ்) என்பவர் வாயிலாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்.

ஒற்றர் படையின் சிறப்பு.


1233.
ஜாபிர்(ரலி) அறிவித்தார். அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர்(ரலி), 'நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)'' என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி(ஸல்) அவர்கள், 'அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்க, ஸுபைர்(ரலி), 'நான்'' என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்'' என்று கூறினார்கள்.

(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது.

1234.
(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி)அறிவித்தார்.

1235. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுதல் கிடைக்கும் நன்மையும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உர்வா அல் பாரிகீ(ரலி) அறிவித்தார்.

இறைவழியில் (போரிடுவதற்காக) குதிரையைத் தயாராக வைத்திருப்பதின் சிறப்பு.

1236.
'அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனுடைய வாக்குறுதியை நம்பியும் இறைவழியில் (போரிடுவதற்காக) ஒரு குதிரையைப் கட்டி வைக்கிறவர், அதற்குப் போடுகிற தீனி, புகட்டுகிற தண்ணீர் மற்றும் அதன் சாணம், சிறுநீர் ஆகியவையும் (நன்மைகளாக) அவரின் தட்டில் (வைத்து எடை) போடப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1237. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். எங்கள் தோட்டத்தில் நபி(ஸல்) அவர்களுக்கு (சொந்தமான) 'லுஹைஃப்' என்றழைக்கப்பட்ட குதிரையொன்று இருந்தது.

1238.
முஆத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதில் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்'' என்று பதில் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

1239. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மதீனாவில் (போர் பற்றி) பீதி ஏற்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் 'மன்தூப்' என்றழைக்கப்பட்ட எங்கள் குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். (அதில் ஏறிச் சவாரி செய்த பிறகு) 'பீதி(க்கான காரணம்) எதையும் நாம் பார்க்கவில்லை. மேலும், இந்த குதிரையை தங்கு தடையின்றி வேகமாக ஓடக் கூடியதாக நாம் கண்டோம்'' என்று கூறினார்கள்.

குதிரையில் அபசகுனம் உண்டு என்னும் கூற்று.


1240. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். ''அபசகுணம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே (இருக்க முடியும்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.

(போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு கிடைக்கும் பங்கு.


1241.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து குதிரைக்கு இரண்டு பங்குகளையும் (அதல்லாமல்) அதன் உரிமையாளருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.

பிறருடைய வாகனத்தைப் போரில் ஓட்டிச் செல்வது.


1242.
அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார். ஒருவர் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா(மே, உண்மை தானா)?' என்று கேட்டதற்கு அவர்கள், '(ஆம், உண்மைதான்.) ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்தபோது அவர்களின் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். எனவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (நாங்கள் தான் பின் வாங்கி ஓடிவந்து விட்டோம்.) நான் நபி(ஸல்) அவர்களை தம் 'பைளா' என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபூ சுப்யான்(ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நான் இறைத்தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்'' என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் ஒட்டகம்.


1243. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்'' என்று கூறினார்கள்.

புனிதப் போரில் பெண்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளை மக்களிடம் சுமந்து செல்வது.


1244. சஅலபா இப்னு அபீ மாலிக்(ரலி) கூறினார். உமர் இப்னு கத்தாப்(ரலி) (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா நகரப் பெண்களிடையே பங்கிட்டார்கள். அப்போது அதில் தரமானதொரு கீழங்கி மீதமாயிற்று. அதைக் கண்டு, அவர்களிடமிருந்த சிலர், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதை உங்களிடமிருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய மகளுக்குக் கொடுங்கள்'' என்று கூறினார்கள் - அவர்கள் அலீ(ரலி) அவர்களின் மகளார் உம்மு குல்தூம் அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். (உமர்(ரலி), 'உம்மு சுலைத்(ரலி) தாம் இதற்கு மிகவும் அருகதையுடையவர்கள். உம்மு சுலைத்(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்'' என்று கூறிவிட்டு, 'அவர் உஹுதுப் போரின்போது எங்களுக்காக (இஸ்லாமிய வீரர்களுக்காக) தோல் பைகளைச் சுமந்து நீர் புகட்டுபவராய் இருந்தார்'' என்று கூறினார்கள்.

புனிதப் போரில் காயமுற்றிருந்தவர்களுக்குப் பெண்கள் மருந்திடுவது.


1245.
ருபய்யிஉ பின்த்து முஅவ்வித்(ரலி) கூறினார். (பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.

இறைவழியில் புனிதப் போர் புரியும் வேளையில் காவல் காப்பது.


1246. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, 'என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'யாரது?' என்று கேட்டார்கள். வந்தவர், 'நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். பிறகு நபி(ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

1247. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கருப்புத் துணியின் அடிமையும் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் கோபமடைவான். அவன் துர்பாக்கியவானாகட்டும். அவன் மீண்டும் மீண்டும் சறுக்கி விழட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும். இறைவழியில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரண்டு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கிற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்; பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது. அவன் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1248. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். கைபர் போரின்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டே சென்றேன். நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களுக்கு உஹுது மலை தென்பட்டதும், 'இது எத்தகைய மலையென்றால் இது நம்மை நேசிக்கிறது. நாம் இதை நேசிக்கிறோம்; நாம் இதை நேசிக்கிறோம்'' என்று கூறினார்கள். பின்னர், மதீனாவை நோக்கித் தம் கரத்தால் சைகை செய்து, 'இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று, நான் (இந்த) இருமலைகளுக்கிடையேயுள்ள நிலப் பகுதியை (மதீனாவை) புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! எங்கள் (அளவைகளான) ஸாவுகளிலும், முத்துகளிலும் எங்களுக்கு பரக்கத்தைக் கொடு'' என்று பிரார்த்தித்தார்கள்.

1249. அனஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு பயணத்தில்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் விட்டுவிட்டவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இன்று நோன்பை (நோற்காமல்) விட்டவர்கள் மறுமையில் (அதிக) நன்மையைக் கொண்டு சென்றார்கள்'' என்று கூறினார்கள்.

இறைவழியில் ஒருநாள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவதின் சிறப்பு.


1250. இறைவழியில் ஒருநாள் (நாட்டின்) எல்லையைக் காவல் புரிவது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றை விடவும் சிறந்ததாகும். உங்களில் ஒருவருக்கு சொர்க்கத்தில், ஒரு சாட்டையை வைக்குமளவிற்குள்ள இடம் கிடைப்பது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றை விடவும் சிறந்ததாகும். ஓர் அடியான் இறைவழியில் செல்கிற மாலை நேரம் அல்லது காலை நேரமானது உலகத்தை விடவும் அதன் மீதிருப்பவற்றை விடவும் சிறந்ததாகும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

போரின்போது பலவீனர்கள் மற்றும் நல்லவர்களின் காரணத்தால் உதவி பெறுவது.


1251. முஸ்அப் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), (தம் வீரச் செயல்களின் காரணத்தினால்) தமக்குப் பிறரை விட ஒரு சிறப்பு இருக்க வேண்டும் (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப் பங்கு கிடைக்க வேண்டும்) எனக் கருதினார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள், 'உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகிறது'' என்று கூறினார்கள்.

1252. மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்கிற ஒரு காலம் வரும் அப்போது, 'நபி(ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்கள் எவரும் உங்களிடையே இருக்கிறார்களா?' என்று கேட்கப்படும். அதற்கு, 'ஆம் (இருக்கிறார்கள்)'' என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு, இன்னொரு காலம் வரும். (அப்போதும் புனிதப் போர் புரிய ஒரு குழுவினர் செல்வார்கள்.) அப்போது, 'நபி(ஸல்) அவர்களின் தோழர்களுடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?' என்று கேட்கப்படும். அதற்கு, 'ஆம் (இருக்கிறார்கள்)'' என்று பதிலளிக்கப்படும். உடனே (அவர்களுக்கு) வெற்றியளிக்கப்படும். பிறகு இன்னுமொரு காலம் வரும். (அப்போதும் ஒரு குழுவினர் புனிதப் போருக்காகச் செல்வார்கள்.) அப்போது, 'நபித் தோழர்களின் தோழருடன் நட்பு கொண்டவர்கள் உங்களிடையே இருக்கிறார்களா?' என்று கேட்கப்படும். அதற்கு, 'ஆம் (இருக்கிறார்கள்)'' என்று பதிலளிக்கப்படும். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அம்பெய்தல்.

1253. அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் விåகம் அமைத்து) அணிவகுத்து நின்றபோது நபி(ஸல்) அவர்கள், '(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்'' என்று கூறினார்கள்.

1254. உமர்(ரலி) அறிவித்தார். பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தங்களின் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.

1255.
அலீ(ரலி) அறிவித்தார். ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறியதை கேட்டேன்.

வாட்களை அலங்கரிப்பது.

1256. அபூ உமாமா(ரலி) அறிவித்தார். ஒரு சமுதாயத்தினர் வெற்றிகள் பலவற்றை ஈட்டியுள்ளனர். அவர்களின் வாட்கள் தங்கத்தாலோ வெள்ளியாலோ அலங்கரிக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களின் (வாட்களின்) ஆபரணங்களெல்லாம் (வாளுறையின் அடிமுனை அல்லது மேல் முனையில் சுற்றி வைக்கப்படும்) பச்சைத் தோல், ஈயம் மற்றும் இரும்பு ஆகியன தாம்.

நபி(ஸல்) அவர்களின் கவச உடை மற்றும் போரின்போது அவர்கள் அணிந்த சட்டை.

1257. நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, 'இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகிறேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்)'' என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, 'போதும், இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு 'இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்'' என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (திருக்குர்ஆன் 54:45, 46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நோயின்போது பட்டாடை அணிவது.


1258. அனஸ்(ரலி) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

1259. அனஸ்(ரலி) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களுக்கும் பட்டாடை அணிய நபி(ஸல்) அவர்கள் சலுகை கொடுத்தார்கள்.

ரோமர்களுடன் போரிடுதல் பற்றி...

1260. உமைர் இப்னு அஸ்வத் அல் அன்ஸீ(ரஹ்) அறிவித்தார். உபாதா இப்னு ஸாமித்(ரலி) 'ஹிம்ஸ்' கடற்கரையில் தம் கட்டிடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம்(ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம்(ரலி) எம்மிடம் அறிவித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்க்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்தினார்கள்'' என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் அவர்களில் ஒருத்தியா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அவர்களில் ஒருவர் தாம்'' என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்'' என்று கூறினார்கள். 'அவர்களில் நானும் ஒருத்தியா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள்.

யூதர்களுடன் போரிடுதல்.

1261.
(முஸ்லிம்களாகிய) நீங்கள் யூதர்களுடன் போரிடுவீர்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், 'அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கிறான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் நீங்கள் யூதர்களுடன் போரிடாதவரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், 'முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு'' என்று கூறும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

துருக்கியருடன் போர்.

1262. சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1263. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அகழ்ப்போரின்போது இணை வைப்பவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, 'இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இறைவா! (சத்திய மார்க்கத்தை வேரறுக்கப் பல குலங்களிலிருந்தும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்தக்) கூட்டத்தார்களைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!'' என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்.

யூதர்களுக்கு பதில் ஸலாம்.

1264.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். யூதர்கள் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) 'அஸ்ஸாமு அலைக்க'' (''உங்களின் மீது மரணம் உண்டாகட்டும்'') என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)'' என்று கேட்டார்கள். நான், 'அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'நான் (அவர்களுக்கு பதிலளித்தபோது) அவர்களிடம், 'வ அலைக்கும் - (உங்களின் மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)' என்று கூறியதை நீ கேட்கவில்லையா?' என்றார்கள்.

இணைவைப்பவர்களின் உள்ளம் ஈர்க்கப்படுவதற்காக அவர்களுக்கு நேர்வழி கிடைக்கப் பிரார்த்திப்பது.

1265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். துஃபல் இப்னு அம்ர் அத்தவ்ஸீ(ரலி) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) 'தவ்ஸ்' குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, 'தவ்ஸ் குலத்தார் அழியட்டும்'' என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

1266. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்'' என்று கூறக் கேட்டேன். உடனே, நபித்தோழர்கள், அதை யாரிடம் நபி(ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அலீ எங்கே?' என்று கேட்டார்கள். 'அவருக்குக் கண்வலி'' என்று கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. உடனே, அலீ(ரலி), 'நம்மைப் போல் (முஸ்லிம்களாய்) ஆகும்வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்றார்கள்.

வியாழக்கிழமையில் பிரயாணம்.


1267. அப்துர் ரஹ்மான் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார். என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டால் பெரும்பாலும் வியாழக்கிழமையன்று தான் புறப்படுவார்கள்'' என்று கூறி வந்தார்கள்.

விடை பெறுவதும் வழியனுப்புவதும்.

1268. அபூ ஹுரைரா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை ஒரு படையில் அனுப்பி வைத்தார்கள். அப்போது எங்களிடம், 'நீங்கள் இன்னாரையும் இன்னாரையும் சந்தித்தால் - என்று குறைஷிகளில் இருவரைப் பெயர் குறிப்பிட்டு அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் பயணம் புறப்பட முனைந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் விடைபெறப் போனோம். அப்போது அவர்கள், 'நான் இன்னாரையும் இன்னாரையும் நெருப்பால் எரித்து விடும்படி உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், நெருப்பால் வேதனை செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்பதால், நீங்கள் அவ்விருவரையும் கண்டால் (நெருப்பால் எரிக்க வேண்டாம்;) கொன்று விடுங்கள்'' என்று கூறினார்கள்.

தலைவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது.


1269.
அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, தலைவரின் கட்டளையைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கடமையாகும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் அதைச் செவியேற்பதும் அதற்குக் கீழ்ப்படிவதும் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

தலைவருக்குக் கீழிருந்து போரிடுவதும், அவர் மூலம் பாதுகாப்புப் பெறுவதும்.


1270.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(உலகில்) கடைசியானவர்களான நாமே (மறுமையில்) முந்தியவர்கள்'' என்று கூற கேட்டேன் . 'எனக்குக் கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராவார். எனக்கு மாறு செய்கிறவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். தலைவருக்குக் கட்டுப்பட்டவர் எனக்குக் கட்டுப்பட்டவராவார். தலைவருக்கு மாறு செய்கிறவர் எனக்கு மாறு செய்தவராவார். தலைவர் ஒரு கேடயம். அவருக்குக் கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்தால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத (தீய)வற்றை அவர் கட்டளையிட்டால், அதனால் ஏற்படும் பாவம் அவரின் மீது(ம்) சாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

'போரில் பின்வாங்கி ஓடக்கூடாது' என்று உறுதிமொழி வாங்குவது.

1271. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஹுதைபிய்யா உடன்படிக்கை கையொப்பமான ஆண்டிற்கு) அடுத்த ஆண்டு (ஒப்பந்தப்படி உம்ரா செய்யத்) திரும்பி வந்தோம். 'நாங்கள் (ஹுதைபிய்யா ஆண்டில்) எந்த மரத்திற்குக் கீழே (நபி(ஸல்) அவர்களின் கரத்தில்) உறுதிமொழி எடுத்துக் கொண்டோமோ அந்த மரம் இதுதான்' என்று எங்களில் எந்த இருவரும் ஒருமித்த கருத்துக் கொள்ளவில்லை. அது அல்லாஹ்விடமிருந்து (அவனுடைய) கருணை பொழிந்த இடமாக இருந்தது. அறிவிப்பாளர் ஜுவைரிய்யா(ரஹ்) கூறினார்: (இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டு இதை எங்களுக்கு அறிவித்த) நாஃபிஉ(ரஹ்) அவர்களிடம் நாங்கள், 'எதற்காக நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து உறுதிமொழி பெற்றார்கள்? மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதற்காகவா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'இல்லை. ஆனால், (நிலைகுலைந்து போகாமல்) பொறுமையாக இருக்கும்படி தான் அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கினார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

1272. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். 'ஹர்ரா' போரின் போது என்னிடம் ஒருவர் வந்து, 'அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா(ரலி), மக்களிடம் மரணத்தைச் சந்திக்கத் தாயாராயிருக்கும் படி உறுதிமொழி வாங்குகிறார்கள்'' என்று கூறினார். அதற்கு நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்'' என்று கூறினேன்.

1273. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார். நான் ('இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சகிப்பேன்' என்று) நபி(ஸல்) அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி(ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'அக்வஃ உடைய மகனே! (ஸலமாவே!) நீ உறுதிமொழியளிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். 'நான் ஏற்கனவே உறுதிமொழியளித்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மீண்டும் (அளிப்பீராக!)'' என்று கூறினார்கள். எனவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன். அறிவிப்பாளர் யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) கூறினார். (இதை எனக்கு அறிவித்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம்) நான், 'அபூ முஸ்லிமே! அன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி(ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்'' என்று பதிலளித்தார்கள்.

1274. முஜாஷிஉ(ரலி) அறிவித்தார். நானும் என் சகோதரரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'ஹிஜ்ரத் செய்ய (மார்க்கத்திற்காகத் தாயகம் துறக்க) எங்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஹிஜ்ரத் (அதற்குரிய வேளையில்) அதற்குரியவர்களுக்கு (கடமையாகி) நடந்து முடிந்துவிட்டது. (இஸ்லாம் மேலோங்கிவிட்டதால் இனி அது தேவையில்லை)'' என்று பதிலளித்தார்கள். நான், '(இனி) வேறெதற்காகத் தாங்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்குவீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இஸ்லாத்தைச் செயல்படுவதற்காகவும் (இறைவழியில்) அறப்போரிடுவதற்காகவும் (உறுதிமொழி வாங்குவேன்)'' என்று பதிலளித்தார்கள்.

மக்களால் செய்ய முடிந்ததையே தலைவர் கட்டளையிட வேண்டும்.


1275. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இன்று என்னிடம் ஒருவர் வந்து, ஒரு விஷயத்தைக் குறித்து கேட்டார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவர், 'ஆயுத பாணியான, செயல் வேகமுள்ள ஒருவர் தம் தலைவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்கிறார். அப்போது தலைவர் அவரால் செய்ய முடியாத சில விஷயங்களைச் செய்யும்படி (வற்புறுத்தி) அவருக்கு உத்தரவிடுகிறார் எனில் அவர் என்ன செய்வது?' என்று கேட்டார். நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு என்ன(பதில்) சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், நாங்கள் (இத்தகைய புனிதப் போர்களில்) நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போதெல்லாம் அவர்கள் ஒரு விஷயத்தை ஒருமுறை தான் உத்தரவிடுவார்கள். நாங்கள் அதைச் செய்து விடுவோம். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கும்வரை நன்மையில் இருப்பீர்கள். (நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சித் தலைவருக்குக் கீழ்ப்படிவதால் தீங்கேதும் நேராது.) உங்கள் உள்ளத்தில் சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் (விஷயமறிந்த) யாரிடமாவது கேளுங்கள். அவர், உங்கள் (நெருடலை நீக்கி) சந்தேகத்தை நிவர்த்தி செய்யக்கூடும். (இனிவரும் காலங்களில்) அத்தகைய (தகுதி வாய்ந்த ஒரு)வரை நீங்கள் அடைய முடியாமலும் போகக் கூடும். எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும் இல்லையோ அவன் மீதாணையாக! இந்த உலகத்தில் போனது போக எஞ்சியிருப்பவற்றை, தூய நீர் குடிக்கப்பட்டு கசடுகள் மட்டும் எஞ்சி (தேங்கி நின்று)விட்ட ஒரு குட்டையாகவே கருதுகிறேன்'' என்று கூறினேன்.

நபி(ஸல்) அவர்கள் முற்பகலில் போரிடவில்லையென்றால் சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரை போரைத் தள்ளிப் போட்டு விடுவார்கள்.


1276.
உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களின் அடிமையாகவும் அவர்களின் எழுத்தராகவும் இருந்த சாலிம் அபுள் நள்ர்(ரஹ்) அறிவித்தார். உமர் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) கடிதம் எழுதினார்கள். அதில் எழுதியிருந்ததை நான் படித்துக் காட்டினேன். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க் களத்தில் சந்தித்த நாள்களில் ஒருமுறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பளித்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு, 'இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

1277. யஃலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். நான் இளவயது ஒட்டகம் ஒன்றில் (ஒருவரை அறப்போருக்கு) ஏற்றி அனுப்பினேன். அதை என் நற்செயல்களிலேயே உறுதியானதாக என் மனத்தில் கருதுகிறேன். அப்போது (அறப்போரில் உதவி புரிய) பணியாள் ஒருவரை அமர்த்தினேன். அந்தப் பணியாள் ஒரு மனிதரோடு போரிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் தன்னுடைய கையை, கடித்தவரின் வாயிலிருந்து உருவினார் அப்போது கடித்தவரின் முன்பல்லை பிடுங்கிவிட்டார். பல் பிடுங்கப்பட்டவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். (பல்லைப் பிடுங்கியவர் மீது வழக்கு தொடுத்தார்.) அதற்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது, 'நீ ஒட்டகம் மெல்வது போல் மென்று கொண்டிருக்க, அவர் தன் கையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

1278.
நாஃபிஃ இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். ஸுபைர்(ரலி) அவர்களிடம் அப்பாஸ்(ரலி) (ஹஜூன் என்னுமிடத்தைச் சுட்டிக் காட்டி), 'நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) உங்களை இங்கு தான் கொடியை நடச் சொன்னார்கள்'' என்று கூறினார்கள்.

1279.
நான் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் விதைக்கப்பட்டு எனக்கு உதவப்பட்டுள்ளது. (ஒருமுறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய சாவிகள் கொண்டு வரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன. இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தோண்டி) வெளியே எடுத்து (அனுபவித்துக்) கொண்டிருக்கிறீர்கள்'' என்றார்கள்.

புனிதப் போர் புரியச் செல்பவருக்குப் பயண உணவை எடுத்துச் செல்லுதல்.


1280.
அஸ்மா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய முனைந்தபோது, அவர்களின் பயண உணவை நான் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டில் தயாரித்தேன். அவர்களின் பயண உணவையும் (தண்ணீருக்கான) தோல் பையையும் (ஒட்டகத்தில் வைத்துக்) கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என்னுடைய இந்த இடுப்புக் கச்சைத் தவிர இதைக் கட்டுவதற்குத் தேவையான (சேணக் கச்சு) எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை'' என்று கூறினேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அதை இரண்டாகக் கிழித்து, ஒன்றினால் (தண்ணீருக்கான) தோல்பையையும் மற்றொன்றினால் பயண உணவையும் கட்டு'' என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். இதனால் தான் எனக்கு 'இரட்டைக் கச்சுக்காரர்' என்று பட்டப் பெயர் சூட்டப்பட்டது.

கழுதையின் மீது ஒருவரைத் தமக்குப் பின்னே உட்கார வைத்துக் கொள்வது.


1281.
உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கழுதையின் மீது அமர்ந்து சவாரி செய்தார்கள். கழுதையின் சேண இருக்கையின் மீதிருந்த பூம்பட்டு விரிப்பொன்றின் மேல் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். தமக்குப் பின்னே என்னைக் கழுதையின் மீது அமர்த்தினார்கள்.

1282. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, தம் வாகனத்தின் மீது உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் கஅபாவின் காவல் பொறுப்பில் இருந்த உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களும் இருந்தனர். நபி(ஸல்) அவர்களின் வாகனம் இறுதியில் பள்ளிவாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டு வரப்பட்டதும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவைத் திறந்து கொண்டு உஸாமா(ரலி), பிலால்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள். பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நானே (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால்(ரலி) அவர்களை வாசலின் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே, பிலால்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?' என்று கேட்டேன். பிலால்(ரலி), நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம், 'எத்தனை ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்'' என்று கேட்க மறந்து விட்டேன்.

எதிரியின் நாட்டிற்கு திருக்குர்ஆன் பிரதிகளுடன் பயணம் செய்வது விரும்பத் தக்கதல்ல.


1283. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுடன் (திருக்குர்ஆனின் பிரதியுடன்) எதிரியின் நாட்டிற்குப் பயணம் செய்வதைத் தடை செய்தார்கள்.

தக்பீர் சொல்லும்போது குரலை உயர்த்திச் சொல்வது விரும்பத் தக்கதல்ல.


1284. அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்றும் 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது'' என்று கூறினார்கள்.

பள்ளத்தாக்கில் இறங்கும்போது 'சுப்ஹானல்லாஹ்' என்று சொல்வது.


1285. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். நாங்கள் (மேட்டில்) ஏறும்போது 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்று தக்பீர் கூறி வந்தோம்; (பள்ளத்தாக்குகளில்) இறங்கும்போது 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் குறைகளிலிருந்தும் பலவீனங்களிலிருந்தும் தூய்மையானவன்' என்று தஸ்பீஹ் செய்து வந்தோம்.

ஊரிலிருக்கும்போது ஒருவர் செய்து வந்த நற்செயல்களுக்குக் கிடைத்தது போன்ற (அதே) நற்பலன் அவர் பயணத்தில் இருக்கும் போதும் (பாவம் எதுவும் செய்யவில்லையென்றால்) அவருக்கு எழுதப்படும்.

1286.
அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அறிவித்த அபூ புர்தா(ரஹ்), 'இதைப் பலமுறை (என் தந்தை) அபூ மூஸா அஷ்அரீ(ரலி) சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்'' என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் இப்னு அபீ கப்ஷா(ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.

1287. தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கிற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்ய மாட்டார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

தாய் தந்தையரின் அனுமதியுடன் அறப்போரிடுதல்.


1288. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அறப் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாயும் தந்தையும் உயிருடனிருக்கிறார்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று கூறினார்கள்.

ஒட்டகத்தின் கழுத்தில் மணி போன்றவற்றைத் தொங்க விடுவது.


1289. அபூ பஷீர் அல் அன்சாரி(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, 'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர்(ரஹ்), 'அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள்' என்று அபூ பஷீர்(ரலி) கூறினார் என எண்ணுகிறேன்'' என்று கூறுகிறார்கள்.

ஒருவர் (அறப் போருக்குச் செல்ல) தன் பெயரைப் பதிவு செய்த பின்னர் அவரின் மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்பட்டால் அல்லது (போரில் கலந்து கொள்ள முடியாதபடி அவருக்கு) வேறு ஏதவாது (நியாயமான) காரணம் இருந்தால் அவர் போரில் கலந்து கொள்ளாமலிருக்க அனுமதியளிக்கப்படுமா?

1290. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ''ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்'' என்று கூறினார்கள்.

சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட (போர்க்) கைதிகள்.

1291. சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

எதிரி நாட்டினரின் குழந்தைகளும் பிற மக்களும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பிருக்கும்) பட்சத்தில் அவர்களின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?

1292. ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார். 'அப்வா' என்னுமிடத்தில் அல்லது 'வத்தான்' என்னுமிடத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, 'இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்களின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே'' என்று பதிலளித்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள், '(பிரத்தியேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை'' என்று கூற கேட்டிருக்கிறேன்.

போரில் குழந்தைகளைக் கொல்வது.


1293. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

அல்லாஹ் கொடுக்கும் (நெருப்பு) வேதனையினால் எவரையும் வேதனை செய்யக் கூடாது.

1294.
அலீ(ரலி) ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள். இச்செய்தி இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அளிக்கிற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறவரைக் கொன்று விடுங்கள்' என்று சொன்னதுபோல் நான் அவர்களைக் கொன்று விட்டிருப்பேன்' என்றார்கள்'' என இக்ரிமா(ரஹ்) கூறினார்.

1295. இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே'' என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்.

1296. ஜரீர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

போர் என்பது சூழ்ச்சியாகும்.

1297.
(தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் (போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1298. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் போரை 'சூழ்ச்சி' என்று குறிப்பிட்டார்கள்.

1299. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் காலாட்படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். '(நாங்கள் போரில் கொல்லப்பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க் களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துச் செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்'' என்று அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைத் தோற்கடித்துவிட்டனர். பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களின் கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களின் சகாக்கள், 'போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இன்னும் எதைத் தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?' என்று (உரக்கக்) கூறலாயினர். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட்களை எடுத்துக் கொள்வோம்'' என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்றபோது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்றுவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலியிருந்து அவர்களைப் போர்க்களத்திற்குத் திரும்பி வரும்படி இறைத்தூதர் அழைத்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது. அப்போது, நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பத்ருப் போரின்போது இணைவைப்பவர்களில் (மொத்தம்) நூற்றி நாற்பது பேரை பாதிப்புக்குள்ளாக்கி விட்டிருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்று விட்டிருந்தார்கள். எனவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூ சுஃப்யான் (களத்தில் இறங்கி), '(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?' என்று மூன்று முறை கேட்டார். அவருக்கு பதிலளிக்க வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும் '(உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூ பக்ர்) இருக்கிறாரா?' என்று மூன்று முறை கேட்டார். பிறகு, 'கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?' என்று மூன்று முறை கேட்டார். பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, 'இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்'' என்றார். (இதைக் கேட்டு) உமர்(ரலி), தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், 'பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடு தான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி) தான் இப்போது எஞ்சியுள்ளது?' என்றார்கள். (உடனே) அபூ சுஃப்யான், 'இந்நாள், பத்ருப் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. (உங்கள்) கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது'' என்று சொல்லிவிட்டு பிறகு, 'ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, என்று கவிதை பாடலானார். நபி(ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), 'இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாம் என்ன(பதில்) சொல்வது?' என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன்' என்று சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அபூ சுஃப்யான், 'எங்களுக்கு 'உஸ்ஸா' (எனும் தெய்வம்) இருக்கிறது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே'' என்று கவிதை பாடினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். தோழர்கள், 'நாங்கள் என்ன (பதில்) சொல்வது? இறைத்தூதர் அவர்களே!'' என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு உதவியாளனே இல்லையே!' என்று சொல்லுங்கள்'' என்று பதிலளித்தார்கள்.

எதிரியைக் கண்டவர், 'யா ஸபாஹா!' (உதவி! உதவி! இதோ, அதிகாலை ஆபத்து!) என்று மக்களின் காதில் விழச் செய்யும் விதத்தில் உரக்கக் குரலெழுப்பி அழைப்பது.


1300. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார். நான் மதீனாவிலிருந்து ஃகாபாவை நோக்கிச் செல்வதற்காகப் புறப்பட்டேன். நான் ஃகாபாவின் மலைப் பகுதியை அடைந்தபோது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் அடிமையொருவன் என்னைச் சந்தித்தான். நான், 'அடப் பாவமே! உனக்கு என்ன ஆயிற்று?' என்று கேட்டேன். அவன், 'நபி(ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டு விட்டன'' என்று கூறினான். நான், 'அவற்றை யார் எடுத்துச் சென்றது?' என்று கேட்டேன். அதற்கவன், 'கத்ஃபான் மற்றும் ஃபஸாரா குலத்தார்'' என்று பதில் சொன்னான். உடனே நான் மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையேயிருந்த அனைவருக்கும் கேட்கும்படி உரக்க சப்தமிட்டு 'யா ஸபாஹா! (ஆபத்து!) யா ஸபாஹா! (ஆபத்து!)'' என்று மும்முறை கத்தினேன். பிறகு, விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற) ஒட்டகங்களைக் கையில் பிடித்து நின்றிருந்தனர். அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். 'நான் அக்வஃ உடைய மகன். இன்று அக்வஃ உடைய மகன். இன்று திருடர்கள் (தண்டனை பெறப் போகும்) நாள்'' என்று (பாடியபடி) கூறினேன். பிறகு அவர்கள் (தங்கள் கையிலிருந்த தண்ணீரை) அருந்துவதற்கு முன்னால் அவர்களிடமிருந்து அந்த ஒட்டகங்களை விடுவித்து விட்டேன். பிறகு, திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அந்தக் குலத்தார் தாகமாக இருந்தார்கள். அவர்கள் தண்ணீர் கூட குடிக்க விடாமல் அவர்களை நான் (அம்பெய்து) அவசரமாக ஓட வைத்து விட்டேன். அவர்களைத் துரத்திச் சென்று பிடித்து வரப் படையனுப்புங்கள்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அக்வஃ உடைய மகனே! நீ அவர்களைத் தோற்கடித்துவிட்டாய். எனவே, போனால் போகட்டும் விட்டு விடு. அந்தக் குழுவினர் (தம் சகாக்களைச் சென்றடைந்து விட்டனர்; அங்கு) தம் குலத்தாரிடம் உபசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள்.

(எதிரிகளிடமிருந்து) போர்க் கைதியை விடுவிப்பது.

1301. அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்'' என்று கூறினார்கள்.

1302. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார். அலீ(ரலி) அவர்களிடம், 'உங்களிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டேன். அவர்கள், 'இல்லை. விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை. ஒரு மனிதருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் அளிக்கிற விளக்கத்தையும் தவிர'' என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தாளில் என்ன இருக்கிறது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (பணம் கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் எந்த முஸ்லிமையும் நிராகரிப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காகக் கொல்லக் கூடாது (என்பது)'' என்று பதிலளித்தார்கள்.

இணைவைப்பவர்களிடம் பிணைத் தொகை பெறுவது.


1303. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் தொகையை (வாங்காமல்) விட்டுக் கொடுத்து (இலவசமாக அவர்களை விடுதலை செய்து) விட அனுமதி கொடுங்கள்'' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'பிணைத் தொகையிலிருந்து ஒரேயொரு திர்ஹத்தைக் கூட (வாங்காமல்) விட்டு விடாதீர்கள்'' என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.

எதிரி நாட்டைச் சேர்ந்த ஒருவன் இஸ்லாமிய நாட்டில் எவருடைய அடைக்கலமும் பெறாமல் நுழைந்துவிட்டால்...

1304.
ஸலமா பின் அக்வஃ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அவர்களிடம் இணை வைப்பவர்களிடையேயிருந்து உளவாளி ஒருவன் வந்தான்; நபி(ஸல்) அவர்களின் தோழர்களிடம் பேசியபடி அமர்ந்தான்; பிறகு, திரும்பிச் சென்றுவிட்டான். நபி(ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), 'அவனைத் தேடிப் பிடித்துக் கொன்று விடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். நான் அவனை (தேடிப் பிடித்துக்) கொன்று விட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனுடைய உடைமைகளை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) உபரியாக நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.

'இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற மதத்தவருக்காகப் பரிந்துரை செய்யலாமா? என்பதும், அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள் செய்வதும்.

1305.
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். (ஒரு முறை) இப்னு அப்பாஸ்(ரலி), '(அன்று) வியாழக்கிழமை எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)'' என்று கேட்டுவிட்டு, அவர்களின் கண்ணீர் சரளைக் கல் பூமியை நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள். பிறகு கூறினார்கள் வியாழக்கிழமையன்று இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், 'ஓர் ஏட்டை என்னிடம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (உரத்த குரலில்) சச்சரவிட்டார்கள். ஆனால், ஓர் இறைத் தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல. மக்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்றுவிட்டார்கள்'' என்று கூறினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியை விட நான் இப்போதுள்ள (இறை நினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது?' என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை) மேலும், அவர்கள் தங்களின் மரணத் தருவாயில் மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். அவை: அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள். மூன்றாவது கட்டளையை நான் மறந்து விட்டேன் என்றார்கள்.

1306. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள். நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

(அறப்போருக்குச் செல்ல முன்வரும்) மக்களை தலைவர் எழுதிப் பதிவு செய்வது.

1307. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். ''மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் அவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், 'நாம் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா?' என்று கேட்டோம். (ஆனால், பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.

பகைவர்களை வென்று அவர்களின் திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாள்கள் தங்குவது.

1308. அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தாரை வென்றால் அவர்களின் திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாள்கள் தங்குவார்கள். இதே போன்று முஆத்(ரஹ்) அவர்களும் அப்துல் அஃலா(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

இணைவைப்பவர்கள் முஸ்லிமின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல, அதையே அவர் பிறகு பெற்றால்...

1309. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்திவிட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்தனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது (இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி ரோமர் (பைஸாந்தியர்)களுடன் சேர்ந்து கொண்டான். பைஸாந்தியர்களை முஸ்லிம்கள் வென்றபோது அந்த அடிமையை காலித் இப்னு வலீத்(ரலி) நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

பாரசீக மொழியிலும் (அரபியல்லாத பிற அஜமி) மொழியிலும் பேசுவது.

1310. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (அகழ்ப் போரின் போது) நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கள் ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ஸாவு வாற்கோதுமையை அரைத்து மாவாக்கியுள்ளேன்; எனவே, தாங்களும் இன்னொருவரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் விருந்துச் சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள்'' என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.

1311. உம்மு காலித்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்'' என்றார்கள். நான் (நபி(ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே, என் தந்தை என்னை அதட்டினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(குழந்தை தானே!) அவனை (விளையாட விடுவீராக!'' என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்து விடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்), 'அந்தச் சட்டை, நிறம் பழுத்துப் போய் மக்களால் பேசப்படும் அளவிற்கு உம்மு காலித்(ரலி) நெடுங்காலம் வாழ்ந்தார்கள்'' என்று கூறுகிறார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறிய 'சனா' (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்'' என்றும் கூறுகிறார்கள்.

(போர்ச் செல்வங்களை) மோசடி செய்வது (பெரும் பாவமாகும்).

1312. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, 'மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், 'உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்), அப்போது நான், 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். அல்லது அசைகிற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து வந்து 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

(போர்ச் செல்வத்தில் சிறிதளவு மோசடி செய்வது(ம் பாவமே).

1313. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் பயணச் சுமைகளுக்குக் காவலாக 'கிர்கிரா' என்றழைக்கப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒரு நாள்) இறந்துவிட்டார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் நரகத்தில் நுழைவார்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித்தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்து வைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.

அறப்போர் வீரர்களை வரவேற்பது.

1314. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் இப்னுஅப்பாஸ் அவர்களும் நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம், நபி(ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

1315. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார். நாங்கள் (சிறுவர்களாயிருந்தபோது மற்ற) சிறுவர்களுடன் சேர்ந்து (தபூக் போரிலிருந்து திரும்பி வரும்) இறைத்தூதர்(ஸல்) அவர்களை வரவேற்பதற்காக 'வதா' மலைக் குன்றை நோக்கிச் சென்றோம்.

1316. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஸ்ஃபானிலிருந்து (போர் முடிந்து) திரும்பியபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒட்டகம் கால் சறுக்கி விட அவர்களிருவரும் ஒரு சேரக் கீழே விழுந்தார்கள். உடனே, அபூ தல்ஹா(ரலி) (தம் வாகனத்திலிருந்து) கீழே குதித்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், '(முதலில்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனி'' என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா(ரலி) ஒரு துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா(ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் மீது அந்தத் துணியைப் போட்டார்கள். பிறகு இருவருக்கும் அவர்களின் வாகனத்தைச் சரிசெய்து கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரைச் சுற்றிலும் (வட்டமாக) நின்று அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியவுடன் நபி(ஸல்) அவர்கள், 'பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும்வரை அவர்கள் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

1317. கஅப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து 'ளுஹா' (முற்பகல்) நேரத்தில் திரும்பி வந்தால் பள்ளிவாசலில் நுழைந்து உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.

'குமுஸ்' கடமையாகும்.

1318. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார். நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன் அவர்கள் கூறினார்கள்.

கடும் உச்சி வெயில் அடித்துக் கொண்டிருந்த நீண்ட ஒரு பகல் வேளையில் என் வீட்டாருடன் நான் அமர்ந்திருந்தபோது (கலீஃபா) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் தூதர் ஒருவர் என்னிடம் வந்து, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்'' என்றார். நான் அவருடன் சென்று உமர்(ரலி) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அவர்கள் அங்கே ஒரு கட்டிலில் ஈச்ச ஓலையாளலான மேற்பரப்பில் அதற்கும் தமக்கும் இடையே பாய் எதுவுமிலலாமல் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தேன். அப்போது அவர்கள், 'மாலிக்கே! உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் நம்மிடம் வந்தனர். அவர்களுக்கு (அளவு குறிப்பிடாமல்) சிறிய ஓர் அன்பளிப்புத் தரும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உங்கள் கைவசமாக்கிக் கொண்டு அவர்களிடையே நீங்கள் பங்கிடுங்கள்'' என்றார்கள். நான், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! வேறெவரிடமாவது இந்தப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் அதைக் கைவசமாக்கிக் கொண்டு சென்று அவர்களிடையே பங்கிடுங்கள்'' என்று (மீண்டும்) உமர் அவர்கள் சொன்னார்கள். நான் உமரிடம் அமர்ந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் அவர்களின் மெய்க் காவலர் 'யர்ஃபஉ' என்பவர் வந்து, 'உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?' என்று கேட்டார். உமர்(ரலி), அவர்கள், 'ஆம்'' என்று அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தார்கள். பிறகு 'யர்ஃபஉ' சற்று நேரம் தாமதித்து வந்து, 'அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் தாங்கள் சந்திக்க விரும்புகிறீர்களா?' என்று கேட்டதற்கு உமர் அவர்கள், 'ஆம்'' என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர். அப்பாஸ்(ரலி), 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்'' என்றார்கள். அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து ('ஃபய்உ' நிதியாகக்) கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர். அப்போது உஸ்மான்(ரலி) மற்றும் அவர்களின் தோழர்களின் குழு, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்'' என்று கூறியது. உமர்(ரலி), 'பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான எங்களுக்கு) எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தருமமே'' என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், 'அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்'' என்று பதிலளித்தனர். உடனே, உமர்(ரலி), அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவ்விருவரும், 'ஆம், அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்'' என்று பதிலளித்தனர். உமர்(ரலி), 'அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இச்செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை.''.. (என்று கூறிவிட்டு,) 'அல்லாஹ் எச்செல்வத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் துதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்'' என்னும் (இந்த 59:06) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து, 'எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமுமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள்'' (இவ்வளவும் சொல்லிவிட்டு,) 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன். இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம் (அறிவோம்)'' என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், 'உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன். நீங்கள் இதை அறிவீர்களா?' என்று கேட்டுவிட்டு (தொடர்ந்து), 'பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது அபூ பக்ர்(ரலி), 'நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநியாவேன்' என்று கூறி அ(ந்த செல்வத்)தைக் தம் கைவசம் எடுத்தார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போல் செயல்பட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்தார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் அபூ பக்ர்(ரலி) அவர்களின் பிரதிநிதியாக ஆனேன். அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூ பக்ர்(ரலி) நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்து கொண்டேன்; நேரான முறையில் நடந்து கொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு, நீங்கள் இருவரும் என்னிடம் வந்து பேசினீர்கள்; நான் உங்களிடம் ஒரு முறை பேசினேன். உங்கள் இருவரின் விஷயமும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்ட படி வந்தீர்கள். இவரும் என்னிடம் தன் மனைவிக்கு அவரின் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கை (பெற) விரும்பிய படி வந்தார். அலீ(ரலி) அவர்களைத் தான் அப்படிச் சொன்னார்கள். நான் உங்கள் இருவரிடமும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான நாங்கள்விட்டுச் செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தருமமே' என்றார்கள்' என்றேன். எனினும், 'அதை உங்கள் இருவரிடமே கொடுத்து விடுவது தான் பொறுத்தமானது' என்று எனக்குத் தோன்றியபோது நான், 'நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூ பக்ர்(ரலி) எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன் படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள்' என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன்' என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், 'எங்களிடம் அதைக் கொடுத்து விடுங்கள்' என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன்'' என்றார்கள். பிறகு (குழுவினரை நோக்கி), 'எனவே, நான் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அச்சொத்தைக் கொடுத்து விட்டேனா?' என்று கேட்டார்கள். குழுவினர், 'ஆம் (கொடுத்து விட்டீர்கள்)'' என்று பதிலளித்தனர். பிறகு அலீ(ரலி) மற்றும் அப்பாஸ்(ரலி) ஆகியோரை நோக்கி, 'நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் அதை உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்து விட்டேனா?' என்று கேட்க, அவ்விருவரும், 'ஆமாம்'' என்றார்கள். உமர்(ரலி), 'இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகிறீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்'' என்றார்கள்.

1319. ஈசா இப்னு தஹ்மான்(ரஹ்) அறிவித்தார். அனஸ்(ரலி) எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்து போன இரண்டு செருப்புகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல் புனானீ(ரஹ்), 'அவ்விரண்டும் நபி(ஸல்) அவர்களின் காலணிகள்'' என்று அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.

1320. அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, 'இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்'' என்று கூறினார்கள்.

1321. மற்றோர் அறிவிப்பில் அபூ புர்தா(ரஹ்) கூறினார். ஆயிஷா(ரலி) யமன் நாட்டில் தயாரிக்கப்படுகிற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் 'அல் முலப்பதா' (ஒட்டுப் போட்டது) என்றழைக்கிற வகையிலிருந்து ஒரு போர்வையையும் நபி(ஸல்) அவர்களின் போர்வை என்று) எடுத்துக் காட்டினார்கள்.

1322. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி(ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள். அறிவிப்பாளர் ஆஸிம்(ரஹ்), 'நான் அந்தக் குவளையக் கண்டேன். (பரக்கத்தை விரும்பி) அதில் தண்ணீர் குடித்தேன்'' என்று கூறுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள், 'என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்'' என்றார்கள்.

1323. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் 'காசிம்' என்று பெயர் சூட்டினார். அப்போது மற்ற அன்சாரித் தோழர்கள், 'உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைக்கவும் மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்'' என்று கூறினார்கள். அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் 'காசிம்' என்று பெயர் சூட்டினேன். அன்சாரித்தோழர்கள், 'உம்மை நாங்கள் 'அபுல் காசிம்' என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும் மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்' என்று கூறிவிட்டார்கள்'' என்றார். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அன்சாரிகள் நல்ல வேலை செய்தார்கள். எனவே, என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என்னுடைய (அபுல் காசிம் என்னும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கிடுபவனே' என்று கூறினார்கள்.

1324. நான் (எதையும்) உங்களுக்குக் கொடுப்பதுமில்லை. (எதையும்) உங்களுக்குக் கொடுக்காமல் தடுத்து நிறுத்திக் கொள்வதுமில்லை. நான் பங்கிடுபவனேயாவேன். எங்கு கொடுக்கும்படி (அல்லாஹ்வினால்) எனக்குக் கட்டளையிடப்படுகிறதோ அங்கு கொடுக்கிறேன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1325. மனிதர்கள் சிலர் அல்லாஹ்வின் செல்வத்தை நியாயமாகப் பங்கிடாமல் (அநியாயமாகப் பங்கீடு செய்து) கையாள்கிறார்கள். அவர்களுக்கு மறுமை நாளில் நரகமே உரியதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கவ்லா அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.

போர் வெற்றிப் பொருள்.

1326. இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், 'ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்'' என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, 'நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்'' என்று கூறிவிட்டு, 'இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு'' என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ணவில்லை. எனவே, அந்த இறைத்தூதர் 'உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப் பொருள் ஏதோ ஒன்று உள்ளது. எனவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம் உறுதி மொழி கொடுக்கட்டும்'' என்று கூறினார். (உறுதி மொழி கொடுத்துக் கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத் தூதரின் கையோடு ஒட்டிக்கொண் டது. அப்போது இறைத்தூதர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. எனவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்'' என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவரின் கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது'' என்றார். எனவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டு வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது. பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான். நம்முடைய பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1327. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு படைக் குழுவை 'நஜ்து' நாட்டை நோக்கி அனுப்பி வைத்தார்கள். அதில் நானும் (ஒருவனாக) இருந்தேன். நாங்கள் நிறைய ஒட்டகங்களைப் போர்ச் செல்வமாகப் பெற்றோம். எங்கள் பங்குகள் (ஒவ்வொருவருக்கும்) பன்னிரண்டு ஒட்டகங்கள் அல்லது பதினொரு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஒட்டகம் அதிகப்படியாகத் தரப்பட்டது.

1328. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஜிஇர்ரானா'வில் வைத்து போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் அவர்களிடம், 'நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(இறைத் தூதராகிய) நானே நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் (என்னைப் பின்பற்ற வேண்டிய) நீ வழிதவறிப் போய் விடுவாய்'' என்று பதிலளித்தார்கள்.

அறியாமைக் கால நேர்ச்சை.

1329. உமர் இப்னு கத்தாப்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை தழுவும் முன்பு), ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக நான் நேர்ச்சை செய்திருந்தேன். (அந்த நேர்ச்சையை இன்னும் நான் நிறைவேற்றவில்லை. இப்போது அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படி உமர்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும், உமர்(ரலி) ஹுனைன் போரில் பிடிபட்ட போர்க் கைதிகளிலிருந்து இரண்டு அடிமைப் பெண்களைப் பெற்றிருந்தார்கள். அவ்விருவரையும் மக்காவிலுள்ள ஒரு வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் பிடிபட்ட கைதிகளுக்கு கருணை காட்டி அவர்களை சுதந்திரமாகவிட்டு விட்டிருந்தார்கள். எனவே, அவர்கள் சாலைகளில் (சுதந்திரமாக) நடமாடத் தொடங்கினார்கள். உடனே உமர்(ரலி) தம் மகன் அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம், 'அப்துல்லாஹ்வே! இங்கே பார். என்ன இது?' என்று கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், போர்க் கைதிகளின் மீது கருணை புரிந்து அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டார்கள்'' என்றார்கள். (உடனே) உமர்(ரலி), அப்படியென்றால் நீ சென்று அந்த இரண்டு அடிமைப் பெண்களையும் சுதந்திரமாகச் செல்லவிட்டு விடு'' என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜிஇர்ரானாவிலிருந்து உம்ரா செய்யவில்லை. அப்படி அவர்கள் உம்ரா செய்திருந்தால் அது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுக்குத் தெரியாமலிருந்திருக்காது. மற்றோர் அறிவிப்பில், 'குமுஸ் (ஐந்திலொரு பங்கு) நிதியிலிருந்து இந்த இரண்டு அடிமைப் பெண்களையும் நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்'' என்று வந்துள்ளது. உமர்(ரலி) அறியாமைக் காலத்தில் செய்த நேர்ச்சை குறித்த மற்றோர் அறிவிப்பில், 'இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்'' என்று மட்டுமே வந்துள்ளது. 'ஒரு நாள் இஃதிகாஃப் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தேன்'' என்று ('ஒரு நாள்' எனும் சொல்) இடம் பெறவில்லை.

அபூஜஹ்லைக் கொல்தல்.

1330. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, 'அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, 'என் பெரிய தந்தையே! நீங்கள் அபூ ஜஹ்லை அறிவீர்களா?' என்று கேட்டார். நான், 'ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!'' என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், 'அவன் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)'' என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, 'இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!'' என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் யார் அவனைக் கொன்றது?' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?' என்று கேட்டார்கள். இருவரும், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, 'நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) 'அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை''.

1331. நான் குறைஷிகளுடன் நேசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்குக் கொடுக்கிறேன். ஏனெனில், அவர்கள் அறியாமைக் காலக் கொள்கையை விட்டுவிட்டு (இப்போது தான்) புதிதாக இஸ்லாத்தில் இணைந்துள்ளனர் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.

1332. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ், தன்னுடைய தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷிகளில் சிலருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே அன்சாரிகளில் சிலர், 'தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் எதிரிகளுடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டு விடுகிறாரோ'' என்று பேசிக் கொண்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச் சொல்லி அவர்களை முழுதாகப் பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்று திரண்டுவிட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து, 'உங்களைப் பற்றி எனக்கு எட்டியுள்ளதே, அச்செய்தி என்ன?' என்று கேட்டார்கள். அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள், 'எங்களில் யோசனையுடையவர்கள் எதுவும் சொல்லவில்லை, இறைத்தூதர் அவர்களே! ஆயினும், எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள், 'தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் ஹவாஸின் குலத்தாருடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார். ஆனால், நம்மைவிட்டு விடுகிறாரே' என்று பேசிக் கொண்டார்கள்'' என்று பதில் கூறினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நிராகரிப்பைக் கைவிட்டு இப்போது தான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு கொடுக்கிறேன். மக்கள், செல்வங்களை எடுத்துச் செல்ல, உங்கள் வசிப்பிடத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்) கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்பவற்றை விட நீங்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும்'' என்றார்கள். உடனே அன்சாரிகள், 'இறைத்தூதர் அவர்களே! ஆம்; நாங்கள் (தாங்களே எங்களுக்குப் போதுமென்று) திருப்தியடைந்தோம்'' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்குப் பின், (ஆட்சிப் பொறுப்பிலும் போரில் கிடைக்கும் செல்வங்களைப் பங்கிடுவதிலும்) உங்களை விட மற்றவர்களுக்கு மிக அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்நிலையில் அல்லாஹ்வையும் 'ஹவ்ளுல் கவ்ஸர்' தடாகத்தின் அருகே அவனுடைய தூதரை (என்னை)யும் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்'' என்றார்கள். இதை அறிவித்துவிட்டு அனஸ்(ரலி), 'ஆனால், நாங்கள் பொறுமையைக் கைக் கொள்ளவில்லை'' என்றார்கள்.

1333. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதரைப் பிடித்து (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார்கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக் கொண்டு சென்று அவர்களின் போர்வையைப் பறித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு என் போர்வையைக் கொடுத்து விடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவிற்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்க மாட்டீர்கள்'' என்றார்கள்.

சகிப்புத் தன்மை.

1334. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் ஓரம் தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களைக் கண்டு அந்த சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால் அந்த கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப் பகுதி நபி(ஸல்) அவர்களின் தோளின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்திருந்ததை கண்டேன். பிறகு அவர் (நபி(ஸல்) அவர்களிடம்), 'தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்'' என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

1335. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஹுனைன் போரின்போது நபி(ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா(ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும்போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்'' என்று கூறினார். 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்'' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? அல்லாஹ், (இறைத் தூதர்) மூஸா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்தார்கள்'' என்று கூறினார்கள்.

1336. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். எங்கள் புனிதப் போர்களின்போது எங்களுக்குத் தேனும் திராட்சைப் பழமும் கிடைத்து வந்தன. அதை நாங்கள் உண்போம். ஆனால் அதை நாங்கள் (நபியவர்களிடமோ, சேகரித்து வைப்பதற்காகவோ) கொண்டு செல்வதில்லை.

மஜூஸிகளுடன் திருமண உறவு கூடாது.

1337. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களுடனும் அம்ர் இப்னு அவ்ஸ்(ரஹ்) அவர்களுடனும் அமர்ந்திருந்தேன். அப்போது (அவர்கள் கூறினார்கள்:) முஸ்அப் இப்னு ஸுபைர்(ரஹ்) பஸராவாசிகளுடன் ஹஜ் செய்த ஆண்டான ஹிஜ்ரீ 70-ம் ஆண்டில் அவ்விருவரிடமும் ஸம் ஸம் கிணற்றின் படிக்கட்டின் அருகே பஜாலா(ரஹ்) அறிவித்தார்.

நான் அஹ்னஃப் இப்னு கைஸ்(ரஹ்) அவர்களின் தந்தையின் சகோதரரான ஜஸ்உ இப்னு முஆவியாவுக்கு எழுத்தராக இருந்தேன். அப்போது உமர் இப்னு கத்தாப்(ரலி) இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு 'திருமணம் புரிந்து கொள்ளக் கூடாத இரத்த உறவு தங்களிடையே இருந்தும் ஒருவரையொருவர் மணந்து கொண்டு மஜூஸிகளை (மண பந்தத்திலிருந்து) பிரித்து வையுங்கள்' என்று உத்தரவிட்டு அவர்களின் கடிதம் ஒன்று எங்களுக்கு வந்தது. உமர்(ரலி) மஜூஸிகளிடமிருந்து ஜிஸ்யா வரிவசூலிக்கவில்லை. அதன் காரணத்தால் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஜர் (பஹ்ரைன்) பகுதியில் வசித்து வந்த மஜூஸிகளிடமிருந்து ஜிஸ்யா வரி வசூலித்துள்ளார்கள்'' என்று சாட்சி சொன்னார்கள்.

1338. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். 'பனூ ஆமிர் இப்னு லுஅய்' குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப் அல் அன்சாரீ(ரலி) எனக்குக் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்து வரும்படி அனுப்பினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா(ரலி) வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, 'அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்' என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்'' என்று கூற, அன்சாரிகள், 'ஆமாம், இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தார்கள். 'எனவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1339. பக்ரு இப்னு அப்தில்லாஹ் அல் முஸனீ(ரஹ்) மற்றும் ஸியாத் இப்னு ஜுபைர் இப்னி ஹய்யா(ரஹ்) ஆகிய இருவரும் அறிவித்தார்கள். உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தில்) இணைவைப்போருடன் போர் புரிய மக்களைப் பெரும்பெரும் நகரங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது ('ருஸ்தும்' என்கிற பாரசீகத் தளபதியான) 'ஹுர்முஸான்' இஸ்லாத்தை ஏற்றார். உமர்(ரலி) ஹுர்முஸான்(ரஹ்) அவர்களிடம், 'நான் என்னுடைய இந்தப் (புனிதப்) போர்களில் உங்களிடம் தான் ஆலோசனை கேட்கப் போகிறேன்'' என்றார்கள். அதற்கு அவர், 'சரி, நீங்கள் போரிட விரும்பும் நாடுகளின் நிலையும் அதிலுள்ள எதிரிகளின் நிலையும் ஒரு தலையும் இரண்டு சிறகுகளும் இரண்டு கால்களும் கொண்ட ஒரு பறவையின் நிலை போன்றதாகும். (அதன்) இரண்டு சிறகுகளில் ஒன்று ஒடிக்கப்பட்டு விடுமாயின், கால்கள் இரண்டும் தலையும் (மீதியுள்ள) ஒரு சிறகின் உதவியால் எழுந்து விடும். மற்றொரு சிறகும் ஒடிக்கப்பட்டு விடுமாயின், இரண்டு கால்களும் தலையும் (மீண்டும்) எழும். தலையே நொறுக்கப்பட்டால் இரண்டு கால்களும், இரண்டு சிறகுகளும், தலையும் போய்விடும். (சாசானியப் பேரரசனான) கிஸ்ரா (குஸ்ரூ) தான் தலை. சீசர் ஒரு சிறகும் பாரசீகர்கள் மற்றொரு சிறகும் ஆவர். எனவே, கிஸ்ராவை நோக்கிப் புறப்படும்படி முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுங்கள்'' என்று (ஆலோசனை) கூறினார். அறிவிப்பாளர்கள் பக்ரு இப்னு அப்தில்லாஹ்(ரஹ்), ஸியாத் இப்னு ஜுபைர்(ரஹ்) ஆகிய இருவரும் சேர்ந்து, ஜுபைர் இப்னு ஹய்யா(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாவது.

உடனே, உமர்(ரலி) எங்களை (போருக்குப் புறப்படும்படி) அழைத்து, நுஃமான் இப்னு முகர்ரின்(ரலி) அவர்களை எங்களுக்குத் தலைவராக்கி (அனுப்பி)னார்கள். இறுதியில், நாங்கள் எதிரியின் பூமியில் (ஈரானிலுள்ள நஹாவந்தில்) இருந்தபோது எங்களைத் தாக்கிட கிஸ்ராவின் தளபதி நாற்பதாயிரம் பேர் கொண்ட படையுடன் வந்தான். (அவர்களின்) மொழி பெயர்ப்பாளர் எழுந்து, 'உங்களில் ஒருவர் பேசட்டும்'' என்று சொல்ல, முகீரா இப்னு ஷுஅபா(ரலி), 'நீ விரும்பியதைப் பற்றி கேள்'' என்றார்கள். அந்த மொழி பெயர்ப்பாளர், 'நீங்கள் யார்? (எதற்காக வந்திருக்கிறீர்கள்?)'' என்று கேட்டதற்கு முகீரா(ரலி), 'நாங்கள் அரபு மக்கள். நாங்கள் பசியின் காரணத்தால் (காய்கள், பழங்களின்) தோலையும் கொட்டையையும் சப்பித் தின்று கொண்டிருந்தோம்; முடியையும் கம்பளியையும் அணிந்து கொண்டிருந்தோம். இந்நிலையில் தான், வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி - அவன் புகழ் உயர்ந்தது. அவன் மகத்துவம் தெளிவானது - (அல்லாஹ்) எங்களிலிந்தே ஒரு நபியை எங்களிடம் அனுப்பினான். அவரின் தாய், தந்தையை நாங்கள் (நன்கு) அறிவோம். எங்கள் நபியும், எங்கள் இறைவனின் தூதருமான அவர் உங்களுடன் நாங்கள் போரிட வேண்டுமென எங்களுக்குக் கட்டளையிட்டார். 'ஒன்று, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வழிபட வேண்டும்; அல்லது நீங்கள் 'ஜிஸ்யா' வரி செலுத்த வேண்டும். (இதற்காக நாங்கள் போராடி) இந்தப் போராட்டத்தில் எங்களில் எவரேனும் கொல்லப்பட்டால், அவர் (இதற்கு முன்) ஒருபோதும் கண்டிராத இன்பமயமான சொர்க்கத்திற்குச் செல்வார்; (கொல்லப்படாமல் வெற்றி வாகை சூடி) எங்களில் ஒருவர் உயிர் வாழ்ந்தால் உங்கள் பிடரிகளை அவர் உடைமையாக்கிக் கொள்வார்' என்று எங்கள் இறைவன் தெரிவித்த தூதுச் செய்தியை எங்கள் நபி எங்களுக்கு அறிவித்தார்கள்'' என்றார்கள். (இந்தப் போரின்போது எதிரிகளின் மீது தாக்குதல் தொடுப்பதைத் தாமதிப்பதாக முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) நுஃமான் இப்னு முகர்ரின்(ரலி) மீது குற்றம் சாட்டிய வேளையில்) நுஃமான்(ரலி), 'இதைப் போன்ற (கடும் துன்பம் நிறைந்த) ஒரு போரில் நபி(ஸல்) அவர்களுடன் உங்களை அல்லாஹ் கலந்து கொள்ளச் செய்திருந்தால் (நபி(ஸல்) அவர்களும் தாக்குதலைத் தொடங்கிடத் தாமதப்படுத்தி அதனால் காத்திருக்க வேண்டிய சிரமம் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால், அதனால் கிடைக்கவிருக்கும் மறுமைப் பலன்களின் எதிர்பார்ப்பால்) உங்களுக்கு அது வருத்தம் தந்திருக்காது. அதை இழிவாக எண்ணச் செய்திருக்காது. ஆயினும், நான் அல்லாஹ்வின் தூதருடன் பல போர்களில் கலந்து கொண்டிருக்கிறேன். பகல் காற்று வீசத் தொடங்கி (சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து பிற்பகல்) தொழுகை நேரங்கள் வந்து விடும் வரை காத்திருப்பது அவர்களின் வழக்கமாகும்'' என்று கூறினார்கள்.

ஆட்சித் தலைவர் ஓர் ஊரின் அரசனுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளும் பட்சத்தில் அது அந்த ஊர்வாசிகள் அனைவருக்கும் பொருந்துமா?

1340. அபூ ஹுமைத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டோம். 'அய்லா'வின் அரசன் நபி(ஸல்) அவர்களுக்கு ('தல்தல்' எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தான். நபி(ஸல்) அவர்கள் அவனுக்குச் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவனுக்கு எழுதினார்கள்.

(இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத) ஒப்பந்தப் பிரஜையைக் குற்றமின்றி கொல்வதிலுள்ள பாவம்.

1341. (இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அதன் கீழ் வாழ்ந்து வரும்) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். அதன் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால் அவர்கள் மன்னிக்கப்படுவார்களா?

1342. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், 'சரி (உண்மையைச் சொல்கிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தந்தை யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இன்னார்'' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார் தான்'' என்று கூறினார்கள். அவர்கள், 'நீங்கள் சொன்னது உண்மை தான்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே அதையும் அறிந்து கொள்வீர்கள்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நரகவாசிகள் யார்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு, எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புக மாட்டோம்'' என்று கூறினார்கள். பிறகு, 'நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'சரி, அபுல் காசிமே!'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஆம் (கலந்திருக்கிறோம்)'' என்று பதில் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது'' என்று பதிலளித்தார்கள்.

பணம் முதலானவற்றைக் கொடுத்து இணைவைப்பவர்களுடன் (போர் மறுப்பு) ஒப்பந்தம் செய்து கொள்வதும் ஒப்பந்தத்தை நிறைவேற்றாதவனுடைய பாவமும்.

1343. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவித்தார். (நபித் தோழர்களான) அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் முஹய்யிஸா அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் அவர்கள் கொல்லப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அவர்களிடம் முஹய்யிஸா அவர்கள் வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள். பிறகு (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்வூத் அவர்களும் (அவரின் சகோதரர்) ஹுவைய்யிஸா இப்னு மஸ்வூத் அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) பேசிக் கொண்டே சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'பெரியவர்களைப் பேச விடு. பெரியவர்களைப் பேச விடு'' என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் (வாய் மூடி) மௌனமானார்கள். பிறகு, முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் (நபி(ஸல்) அவர்களிடம்) பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் அவர்களை இன்னார் தான் கொலை செய்தார் என்று) சத்தியம் செய்து நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்துப் பழிவாங்கிக் கொள்ளும்) உரிமை பெற்றுக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வது? நாங்கள் அங்கே (கொலை நடந்த இடத்தில்) இருக்கவில்லை. கொலை செய்தவனை (கொலை செய்யும் போது) பார்க்கவும் இல்லையே'' என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் யூதர்கள் (தாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்பதற்கு) ஐம்பது சத்தியங்கள் செய்து உங்களிடம் தம் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கட்டும்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'நிராகரிக்கும் சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) எடுத்துக் கொள்வது?' என்று கேட்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் தாமே (அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் அவர்களின் கொலைக்கான) உயிரீட்டுத் தொகையை (அவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.

திம்மீ - இஸ்லாமிய அரசின் பிரஜையான பிற மதத்தவர் - ஒருவர் சூனியம் செய்தால் மன்னிக்கப்படுவாரா?

யூனுஸ் இப்னு யஸீத் அல்-அய்லீ(ரஹ்) கூறினார். இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், 'இஸ்லாமிய அரசின் பிரஜைகளான பிற மதத்தார் சூனியம் செய்தால் அவர்களைக் கொல்ல வேண்டுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அவ்வாறு (சூனியம்) செய்யப்பட்டது என்றும், சூனீயம் செய்தவன் வேதம் வழங்கப்பட்ட (யூத) சமுதாயத்தைச் சேர்ந்தவனாக இருந்தும் அவனை அதற்காக நபி(ஸல்) அவர்கள் கொல்லவில்லை என்றும் நமக்குச் செய்தி கிடைத்துள்ளது'' என்று பதிலளித்தார்கள்.

1344. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.

மோசடி செய்யக் கூடாது.

1345. அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். தபூக் போரின்போது நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், 'இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்: 1. என்னுடைய மரணம் 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல். 3. ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்) 4. பிறகு செல்வம் பெருகி வழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார். 5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது. 6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள் என்று கூறினார்கள்.

1346. ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார். (ஒரு முறை) அபூ ஹுரைரா(ரலி), 'திம்மீகளிடமிருந்து (இஸ்லாமிய அரசின் பிரஜைகளான பிற மதத்தாரிடமிருந்து) ஒரேயொரு தங்க நாணயத்தையோ பொற்காசையோ கூடப் பெற முடியாத காலம் வரும்போது உங்கள் நிலை எப்படியிருக்கும்?' என்று கேட்டார்கள். உடனே, 'அபூ ஹுரைராவே! அவ்வாறு (ஒரு காலம்) ஏற்படும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூ ஹுரைரா(ரலி), 'ஆம், அபூ ஹுரைராவின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இதை நான் உண்மையே அறிவிக்கப்பட்டு, உண்மையே பேசிய (நபிய)வர்களிடமிருந்து கேட்டுத்தான் சொல்கிறேன்'' என்று பதிலளித்தார்கள். உடனே மக்கள், 'எதனால் அத்தகைய காலம் ஏற்படும்?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), 'அல்லாஹ்வின் (அடைக்கலப்) பொறுப்பும் அல்லாஹ்வின் தூதருடைய (அடைக்கலப்) பொறுப்பும் அவமதிக்கப்படும். (அதாவது முஸ்லிம்கள் ஒப்பந்தப்படி நடக்காமல் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.) அதனால் அல்லாஹ் (பிற மதங்களைச் சேர்ந்த) ஒப்பந்தப் பிரஜைகளின் உள்ளங்களுக்குத் துணிவைத் தந்து விடுவான். அவர்கள் தங்கள் கரங்களில் இருப்பவற்றைத் தடுத்துக் கொள்வார்கள். (ஜிஸ்யா வரி கட்ட மறுத்துப் போர் புரியவும் துணிந்து விடுவார்கள்.) எனக் கூறினார்கள்.

நல்லவன், கெட்டவன் யாருக்கும் மோசடி செய்பவன் பாவியாவான்.

1347. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு. இதை அனஸ்(ரலி) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவர், 'நடப்படுகிற கொடி ஒன்று உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார். மற்றொருவர், 'அது மறுமை நாளில் காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மற்றொரு அறிவிப்பில் மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்சமிட்டு)க் (காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

0 comments:

Post a Comment