Monday 12 October 2009

[பாடம்-55] நபிமார்களின் செய்திகள்.

ஆதம்(அலை) அவர்களையும், அவர்களின் சந்ததிகளையும் படைத்தது.

1399. அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்'' என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்'' என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்'' என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1400. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அவர்களுக்கு (அவர்கள் யூத மதத்திலிருந்தபோது) எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைதூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்கள். பிறகு, '1 இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை (சாயலில்) ஒத்திருப்பது எதனால்?) அது (சாயலில்) தன் தாயின் சகோதரர்களை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் (வானவர்) ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திரைசயில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் (தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்கு காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்தினால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்தினால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது'' என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி), 'தாங்கள் இறைத்தூதர் தாம் என நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக, அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றதை அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத்) தங்களிடம் பொய்யுரைப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வீட்டினுள் புகுந்(து மறைந்)தார்கள். இறைத்தூதர்(ஸல்) (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் எத்தைகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் (மார்க்க) அறிவு மிக்கவரின் மகன் ஆவார்.; எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், மகனும் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!'' என்று கூறினார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக் கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்'' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) அவதூறு பேசலானார்கள்.

1401. பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1402. (மறுமையில்) நரகவாசிகளிலேயே மிக லேசான வேதனை தரப்படுபவரிடம், 'பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தாலும் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன் வருவாய் அல்லவா?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், 'ஆம்'' என்று பதிலளிப்பான். அப்போது அல்லாஹ், 'நீ ஆதமின் முதுகந்தண்டில் (கருவாகாமல்) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை - எனக்கு (எதையும் எவரையும்) இணை கற்பிக்காமலிருப்பதை உன்னிடம் கேட்டிருந்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்குமே நீ ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

முதன் முதலில் கொலை செய்தவர்.

1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

யஃஜுஜ், மஃஜூஜ் கூட்டத்தார்.

1404. (நபி(ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, 'வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டு விட்டது'' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். உடனே, நான் 'இறைத்தூதர் அவர்களே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்...'' என்று பதிலளித்தார்கள்.

1405. அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, 'ஆதமே!'' என்பான். அதற்கு அவர்கள், 'இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்'' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், 'எத்தனை நரகவாசிகளை?' என்று கேட்பார்கள். அதற்கு அவன், 'ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)'' என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்'' (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். உடனே அவர்கள், 'சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) 'அல்லாஹ் அக்பர்'' என்று கூறினோம். அவர்கள், 'சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), 'அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம். அப்போது அவர்கள், 'நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்'' என்று கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

மறுமை நாளில்...

1406. நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித்தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, 'நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட நம்முடைய) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கிறோம்'' (திருக்குர்ஆன் 21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவர். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தின் பால்) கொண்டு செல்லப்படுவார்கள். நான், 'இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்'' என்று (அவர்களை விட்டு விடும்படி) கூறுவேன். அப்போது, 'தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தைவிட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈஸா-அலை அவர்கள்) கூறியதைப் போல், 'நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்தபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்கு தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே, நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கிறாய்'' என்னும் (திருக்குர்ஆன் 05: 117-118) இறைவசனத்தை (பதிலாகக்) கூறுவேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைமறுப்பாளர்களுக்கு சொர்க்கம் தடை.

1407. இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள், 'நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, 'இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்று கூறுவார். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள், 'இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?' என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், 'நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)'' என்று பதிலளிப்பான். பிறகு 'இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்'' என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மக்களில் மிகவும் கண்ணியத்திற்குறியவர்.

1408. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்'' என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், 'நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர்(ஸல்) (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!'' என்று பதிலளித் தார்கள் அதற்கு மக்கள், 'நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அரபுகளின் (பரம்பரையான) கரங்கங்ளைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்'' என்று பதிலளித்தார்கள்.

1409. என்னிடம் இன்றிரவு (கனவில்) இரண்டு வானவர்கள் (ஜீப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரின் தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள் தாம் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

1410. முஜாஹித்(ரலி) அறிவித்தார் இப்னு அப்பாஸ்(ரலி) இருக்கும்போது மக்கள், 'தஜ்ஜாலின் இரண்டு கண்களுக்கிடையே 'காஃபிர்' (நிராகரிப்பவன்) என்றோ 'காஃப், ஃபே, ரே' என்றோ எழுதப்பட்டிருக்கும் (என்பது உண்மையா?)'' என்று பேசிக் கொண்டார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'நான் இப்படிச் செவியுறவில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'இப்ராஹீம்(அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்) என்றால் உங்கள் தோழரான என்னைப் பாருங்கள். மூஸா(அலை) அவர்களோ சுருள்முடி கொண்டவர்களாகவும், (கோதுமை போன்ற) பழுப்பு நிறம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிகப்பு நிற ஒட்டகத்தின் மீது சவாரி செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது 'அல் அஸ்ரக்' எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது' என்று கூறினார்கள்'' எனச் சொல்ல கேட்டேன்.

1411. இப்ராஹீம்(அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் 'கத்தூம்' (எனும் வாய்ச்சி'யின்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1412. இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1413. 'இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) 'நான் நோயுற்றிருக்கிறேன்'' என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், 'இப்படிச் செய்தது யார்?' என்று கேட்டபோது, 'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும். 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம்(அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா(அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்'' என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா(அலை) அவர்களைப் பற்றி விசாரிக்க அவர் என் சகோதரி என்றார்கள். மன்னன் சாரா (அலை) கூப்பிட்டு அனுப்பினான். சாரா(அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா(அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். உடனே, சாரா(அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை. ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்'' என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா(அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா(அலை) அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின் அல்லது தீயவனின் சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1414. உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது'' என்றும் கூறினார்கள்.

ஹாஜர் (அலை).

1415. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்; பெண்கள் முதன்முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல்(அலை) அவர்களின் தாயார் ஹாஜர்(அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். ஸாரா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மீது ஏற்பட்ட தன்னுடைய பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்தார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள், ஹாஜர்(தன்மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டு வந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றுக்கு மேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்கவில்லை. அங்கு தண்ணீர் கூடக் கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம் பழமுள்ள தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்ப் பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தம் ஷாம் நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர்(அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, 'இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹிம்(அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். அதற்கு ஹாஜர்(அலை) அவர்கள், 'அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்த சென்று மலைக் குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது தம் முகத்தை இறையில்லம் கஅபாவை நோக்கி, இச்சொற்களால் பிரார்த்தித்தார்கள்: 'எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்.) எனவே, இவர்களின் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பார்கள்'' என்று இறைஞ்சினார்கள். (திருக்குர்ஆன் 14:37) இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீலுக்குப் பாலுட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங்கினார்கள். தண்ணீர்ப் பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவரும் தாகத்திற்குள்ளானார். அவரின் மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை அல்லது தரையில் காலை அடித்துக் கொண்டு அழுவதை அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) எவரேனும் கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. எனவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தபோது தன் மேலங்கியின் ஓரத்தை உயர்த்தி சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதரை போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று எவரேனும் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறை செய்தார்கள்.

-இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: 'இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கிற 'சஃயு (தொங்கோட்டம்) ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்றபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, 'சும்மாயிரு'' என்று தமக்கே கூறினார்கள். பிறகு, காதைத் தீட்டி கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, '(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)'' என்று கூறினார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், 'இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள் வளத்தை அளிப்பாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள்வளம் தரும்படி இப்ராஹீம்(அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். எனவேதான், மக்காவைத் தவிர பிற இடங்களில் இவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக் கொள்வதேயில்லை'' என்று கூறினார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், 'உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) ஸலாம் உரை அவரின் (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்'' என்று கூறினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, 'உங்களிடம் எவரேனும் வந்தார்களா?' என்று கேட்க, அவரின் மனைவி, 'ஆம், எங்களிடம் தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்'' என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந்தார். (பிறகு தொடர்ந்து) 'என்னிடம் நம்முடைய பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார். நான், 'நாங்கள் நலமுடன் இருக்கிறோம்' என்ற தெரிவித்தேன்.'' என்று பதில் கூறினார். 'அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?' என்று இஸ்மாயீல்(அலை) கேட்டார்கள். அதற்கு அவர், 'ஆம்; உங்களுக்கு ஸலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகிறார்.'' என்று கூறினார். இஸ்மாயீல்(அலை) அவர்கள், 'அவர் என் தந்தை. நீ தான் அந்த நிலைப்படி உன்னை (மனைவியாக) வைத்துக் கொள்ளும் படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்.'' என்று கூறினார்கள். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம்வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு, (ஒரு நாள்) இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்குக் கீழே தன்னுடைய அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாள்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும்போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள். (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்) பிறகு இப்ராஹீம்(அலை) அவர்கள், 'இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்திரவிட்டுள்ளான்.'' என்று கூறினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள், 'உங்களுடைய இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்'' என்று கூறினார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள், 'நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா?' என்று கேட்க இஸ்மாயீல்(அலை) அவர்கள், 'அப்படியென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்டளையிட்டுள்ளான்.'' என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கலானார்கள். கட்டடம் உயர்ந்துவிட்டபோது இஸ்மாயீல்(அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டு வந்து இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கொடுக்கலானார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கட்டலானார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தந்தார்கள். அப்போது இருவருமே, 'இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக் கொள். நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்'' (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி, 'இறைவா! எங்களிடமிருந்து (இந்த புனிதப் பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம் நீயே நன்கு செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்'' (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவைப் புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள்.

முதல் இறையாலயம்.

1416. அபூதர்(ரலி) அறிவித்தார் நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்'' என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா'' என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது'' என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்'' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) . பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது'' என்று கூறினார்கள்.

1417. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார் மக்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே!'' உங்களின் மீது நாங்கள் எப்படி 'ஸலவாத்து' சொல்வது?' என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹமமதின் வ அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத் இறைவா! இப்ராஹீம் அவர்களின் குடும்பத்தாரின் மீது நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் அவர்களின் மீதும், அவர்களின் மனைவிமார்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள்மீதும் கருணை புரிவாயாக! இப்ராஹீம்(அலை) அவர்களின் குடும்பத்தார் மீது நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போன்று முஹம்மதின் மீதும் அவர்களின் மனைவிமார்களின் மீதும் அவர்களின் சந்ததிகளின் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிவாயாக! நிச்சயம், நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் நிறைந்தவனும் ஆவாய்' என்று சொல்லுங்கள்' என பதிலளித்தார்கள்.

1418. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) ஆகியோருக்காக (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். 'அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் நச்சுப் பிராணியிடமிருந்தும் தீய எண்ணத்துடன் தீண்டும் (பொறாமைக்) கண்ணிலிருந்தும் அவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' எனும் இச்சொற்களின் மூலம் உங்கள் இருவரின் தந்தை(யான இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் மகன்களான) இஸ்மாயீல்(அலை) மற்றும் இஸ்ஹாக்(அலை) ஆகியோருக்காகப் பாதுகாப்புக் கோரி வந்தார்கள் - என்று கூறுவார்கள்.

அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பித்தல்.

1419. (இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம்(அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை. திருக்குர்ஆனின் படி,) இப்ராஹீம்(அலை) அவர்கள், 'என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகிறாய் என்று எனக்குக் காட்டு'' என்று கேட்போது அல்லாஹ்? 'நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டான். அவர்கள், 'ஆம்; (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன்'' என்று பதிலளித்தார்கள். லூத்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப்(அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலையளிக்க அழைத்தவரிடம் (அவரின் அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1420. ஸலமா இப்னுஅக்வஃ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் அம்பெறியும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த, பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இஸ்மாயீலின் மக்களே! அம்பெய்யுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை (இஸ்மாயீல்(அலை) அவர்களும்) அம் பெய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள் . நீங்கள் அம்பெறியுங்கள். நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்'' என்று கூறினார்கள். உடனே, அம்பெய்யும் போட்டியில் ஈடுபட்டிருந்த இரண்டு சாரரில் ஒரு சாரார் தம் கைகளை (அம்பெய்யாமல்) தடுத்து நிறுத்தினார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் அம்பெய்யாமல் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் அவர்களுடன் (எதிர் தரப்பினருடன்) இருக்க, நாங்கள் அம்பெய்வோமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், (மீண்டும்) 'நீங்கள் அம்பெய்யுங்கள். நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன்'' என்று பதிலளித்தார்கள்.

1421. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் கோரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) 'ஹிஜ்ர்' என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும், தம் தோழர்களுக்கு உத்திரவிட்டார்கள். தோழர்கள், 'நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கனவே) மாவு பிசைந்து விட்டோமே! (என்ன செய்வது?)'' என்று கேட்டனர். அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்து விடும்படியும் அந்தத் தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் உத்திரவிட்டார்கள்.

யூஸூப் (அலை).

1422. கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம்(அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வரான யஅகூப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1423. களிர்(அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே, அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர்பெற்று) அசையலாயிற்று. எனவேதான் அவர்களுக்கு 'களிர்' (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1424. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ('மர்ருழ் ழஹ்ரான்' என்னுமிடத்தில்) 'அராக்' (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது'' என்று கூறினார்கள். மக்கள், 'நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?' என்று பதிலளித்தார்கள்.

1425. ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லாவகை உணவுகளை விடவும் 'ஸரீத் உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

1426. நான் யூனுஸ் பின் மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப்பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் யூனுஸ்(அலை) அவர்களை அவரின் தந்தையுடன் சேர்த்து(யூனுஸ் பின் மத்தா) நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

1427. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் தாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது. தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும்படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச் சேணம் பூட்டப்படும். வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார். தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார். அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

1428. அபூதர்(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)'' என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' (ஜெரூசலம் நகரிலுள்ள 'அல் அக்ஸா' பள்ளி வாசல்)'' என்று பதிலளித்தார்கள். நான், 'அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது'' என்று கூறினார்கள். பிறகு, 'உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்'' என்று கூறினார்கள்.

1429. என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒருவர் தீயை மூட்டி விட, விட்டில் பூச்சிகளும் இதரப் பூச்சிகளும் அந்த நெருப்பில் விழுவதைப் போன்றதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1430. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.

1431. குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு பின்பு, 'இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை என்று கூறினார்கள்.

1432. 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் 'ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபாதா(ரலி) அறிவித்தார்.

தொட்டிலில் பேசிய மூவர்.

1433. மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் 'ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) 'அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?' என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், 'இறைவா! இவனை விபச்சாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!'' என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபச்சாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு 'இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அக்குழந்தை, '(இன்ன) இடையன்'' என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், 'தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறிவிட்டார். (மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், 'இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு'' என் மகனை இவனைப் போல் ஆக்கு'' என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, 'இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே'' என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது - பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், 'இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே'' என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, 'இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு'' என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்டதற்கு அக்குழந்தை, 'வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) 'நீ திருடிவிட்டாய்; விபச்சாரம் செய்துவிட்டாய்' என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை'' என்று பதிலளித்தது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

1433. (மிஃராஜ் இரவில்) நான் ஈசா(அலை), மூஸா(அலை), இப்ராஹீம்(அலை) ஆகியோரைப் பார்த்தேன். ஈசா(அலை) அவர்கள் சிவப்பு நிறமுடையவர்களாகவும் சுருள் முடியுடையவர்களாகவும் அகன்ற மார்புடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ மாநிறமுடையவர்களாகவும், உயரமானவர்களாகவும், படிந்த, நெருங்லான முடியுடையவர்களாகவும் சூடானிய இனத்தவர்களில் ஒருவரைப் போன்று (நீண்டு மெலிந்தவர்களாகவு)ம் இருந்தார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

1434. இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறமான மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரின் தலைமுடி அவரின் தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது. படியவாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவரின் தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மனிதர்களின் தோள்களின் மீது தம் இரண்டு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். 'மர்யமின் மகன் ஈசா அவர்கள்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரண்டு கைகளையும் வைத்திருந்தான். நான், 'யார் இது?' என்று கேட்டேன். 'இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ்'' என்று பதிலளித்தார்கள்.

1435. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஈசா(அலை) அவர்களைக் குறித்து 'அவர்கள் சிவப்பு நிறமுடையவர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக (இப்படித்தான்) கூறினார்கள்: நான் தூங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒருவர் தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க அல்லது வழிந்து கொண்டிருக்க அங்கே இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். 'மர்யமின் குமாரர்'' என்று பதிலளித்தார்கள். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனமான, சுருட்டைத் தலை முடியுள்ள, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், 'யார் இது?' என்று கேட்டேன், 'தஜ்ஜால்'' என்று பதிலளித்தார்கள் (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் 'இப்னு கத்தன்' தான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்: இப்னு கத்தன் 'குஸாஆ' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.

1436. நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள். தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1437. நான் மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1438. மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவனிடம், 'நீ திருடினாயா'' என்று கேட்டார்கள். அதற்கு அவன், 'இல்லை. எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!'' என்று பதிலளித்தான். உடனே ஈசா(அலை) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்தேன் என்று கூறினார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1439. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் ''நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்'' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.

மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவது.

1440. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி), 'வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்' (திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் சந்ததிகள் பற்றிய குறிப்பு.

1441. ரிப்யீ இப்னு ஹிராஷ்(ரஹ்) அறிவித்தார் உக்பா இப்னு ஆமிர்(ரலி) ஹுதைஃபா(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். ஹுதைஃபா(ரலி), 'தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை 'இது நெருப்பு' என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை 'இது குளிர்ந்த நீர்' என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.

1442. மேலும் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற கேட்டிருக்கிறேன்: ஒரு மனிதருக்கு மரணம் வந்தது. அவருக்கு வாழ்வைப் பற்றிய நிராசை ஏற்பட்டவுடன் தம் குடும்பத்தாருக்கு இறுதி உபதேசம் செய்தார். 'நான் இறந்துவிட்டால், எனக்காக நிறைய விறகுகளைச் சேகரித்து அதில் நெருப்பை மூட்டிவிடுங்கள். நெருப்பு என் இறைச்சியைத் தின்று என் எலும்புவரை சென்று விடும்போது நான் கருகிப் போவேன். உடனே, என் கருகிய எலும்புகளை எடுத்துத் தூளாக்கி, பிறகு காற்று அதிகமாக வீசும் ஒரு நாளை எதிர்பார்த்திருந்து (அந்நாள் வந்தவுடன்) கடலில் அதை எறிந்து விடுங்கள்'' என்று அவர் கூறினார். (அவர் இறந்தவுடன்) அவ்வாறே மக்கள் செய்தனர். அவரின் எலும்புத் துகள்களை அல்லாஹ் ஒன்று திரட்டி, 'நீ ஏன் அப்படிச் செய்தாய்?' என்று அவரிடம் கேட்டான். அவர், 'உன் அச்சத்தின் காரணத்தினால் தான் (அப்படிச் செய்தேன்)'' என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான். இதை ஹுதைஃபா(ரலி) சொல்லி முடித்தவுடன் அவர்களிடம் உக்பா இப்னு உமர்(ரலி), 'நானும் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த மனிதர் மண்ணறை(களில் கஃபன் துணிகளைத் திருடும்) திருடனாக இருந்தார்'' என்று கூறினார்கள்.

1443. அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் (மார்க்க விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக) ஐந்தாண்டுகள் (தொடர்பை ஏற்படுத்தி) அமர்ந்திருந்தேன். (ஒரு முறை) அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 'பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப்போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவர்கள் வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் உத்திரவிடுகிறீர்கள்?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, 'அவர்களில் முதலாவதாக வருபவரிடம் உறுதிப் பிரமாணம் (செய்ய வேண்டிய உங்கள் கடமையை) நிறைவேற்றுங்கள். பிறகு அடுத்து வருபவரிடம் (அந்தக் கடமையை நிறைவேற்றுங்கள்.) அவர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பற்றி அவர்களிடம் கேட்கவிருக்கிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1444. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் ''உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.

1445. என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

1446. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.

1447. ஹஸன் பஸரீ(ரஹ்) அறிவித்தார் ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) (இந்த நபிமொழியை பஸராவிலுள்ள) இந்தப் பள்ளி வாசலில் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்ததிலிருந்து நாம் மறக்கவில்லை. ஜுன்தப்(ரலி) இறைத்தூதர் மீது (அவர்கள் சொல்லாதைச் சொன்னதாக) பொய்யுரைத்திருப்பார்கள் என்று நாம் அஞ்சவில்லை.(ஜுன்தப்(ரலி) அறிவித்தாவது: உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒருவர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்கமுடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்தார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், 'என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்தினான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி (அதை அவன் நுழையத் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்கி) விட்டேன்'' என்று கூறினான் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பனூ இஸ்ராயீல்களிடையே வாழ்ந்த தொழுநோயாளி, குருடர், வழுக்கைத் தலையர் ஆகியோர் தொடர்பான நிகழ்ச்சி.

1448. பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், 'எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான்... (என்றோ) அல்லது மாடு தான்... (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே. நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான என் வாழ்வதாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்'' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்'' என்று கூறினார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1449. பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, '(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், கிடைக்காது'' என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், '(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!'' என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார். அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்க்கித்தனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, 'நீ நெருங்கி வா!'' என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, 'நீ தூரப்போ!'' என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, 'அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்'' என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

1450. (பனூ இஸ்ராயீலில்) ஒருவர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தன்னுடைய நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், 'என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத் தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், 'நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் உனக்கு நான் விற்றேன். (எனவே, இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், 'உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா?' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், 'எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று கூறினார். மற்றொருவர், 'எனக்குப் பெண்பிள்ளை இருக்கிறது'' என்று கூறினார். தீர்ப்புச் சொல்பவர், 'அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள்'' என்று தீர்ப்பளித்தார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பிளேக் நோய் பற்றி...

1451. ஆமிர் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார் (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (பிளேக் போன்ற) கொள்ளை நோயைப் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு உஸாமா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கிற ஒரு பூமியில் அது பரவிவிட்டால், அதிலிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்'' என்று கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

1452. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்'' என்று தெரிவித்தார்கள். மேலும், 'கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்'' என்று கூறினார்கள்.

1453. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் (முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. 'அந்த இறைத்தூதரை அவரின் சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்துவிட்டார்கள். அப்போது அவர் தம் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, 'இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்து விடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாயிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1454. (முன் காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற் பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள்வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1455. மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரண்டு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி அறிவித்தார்கள்.

1456. மக்கள் அனைவரும் இந்த (அட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷிகளைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லீமாயிருப்பவர் குறைஷிகளில் முஸ்லீமாயிருப்பவரைப் பின்பற்றுபவராவார். மக்களில் உள்ள இறைமறுப்பாளர் குறைஷிகளில் உள்ள இறை மறுப்பாளரைப் பின்பற்றுபவராவார். மக்கள் சுரங்கங்கள் ஆவர். அறியாமைக் காலத்தில் அவர்களில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்களில் சிறந்தவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மார்க்க அறிவைப் பெற்றால், இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் (வேறுவழியின்றி) சிக்கிக் கொள்ளும் வரை அதைக் கடுமையாக வெறுப்பவரையே மக்களில் சிறந்தவராக நீங்கள் காண்பீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா(ரலி) அறிவித்தார்.

குறைஷிகளின் சிறப்புகள்.

1457. முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார் முஆவியா(ரலி) அவர்களிடம் குறைஷிகளின் ஒரு தூதுக் குழுவில் ஒருவனாக நான் வருகை தந்திருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி), 'கஹ்தான் குலத்திலிருந்து மன்னர் ஒருவர் தோன்றுவார்'' என்று அறிவிப்பதாகச் செய்தி வந்தது. முஆவியா(ரலி) கோபமடைந்து எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிப் படியுள்ள வர்ணனைகளால் புகழ்ந்துவிட்டு பின்னர், 'இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு கூறுகிறேன். உங்களில் சிலர், அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத, அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கப்படாத செய்திகளைப் பேசுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறியாதவர்கள் ஆவர். வழி கெடுத்து விடுகிற வெற்று நம்பிக்கைகளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன் - ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப் பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும்வரை இந்நிலை நீடிக்கும்'' என்று கூற கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

1458. இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1459. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) கூறினார் நானும் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களும் நடந்து (நபி(ஸல்) அவர்களிடம் நீதி பெறச்) சென்றோம். உஸ்மான்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! முத்தலிபின் மக்களுக்கு நீங்கள் கொடுத்தீர்கள். எங்களை விட்டு விடாதீர்கள்! நாங்களும் அவர்களும் உங்களுக்கு ஒரே விதமான (உறவு) நிலையில் தானே இருக்கிறோம்'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'பனூ ஹாஷிமும் (ஹாஷிம் கிளையாரும்) பனூ முத்தலிபும் (முத்தலிப் கிளையாரும்) ஒருவர் தாம் (வெவ்வேறல்லர்)'' என்று பதிலளித்தார்கள்.

1460. குறைஷிகளும், அன்சாரிகளும் ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், அஷ்ஜஉ மற்றும் கிஃபார் குலத்தாரும் என் பிரத்யேக உதவியாளர்கள். அவர்களுக்கு அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் தவிர வேறு பொறுப்பாளர் எவரும் இல்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1461. தன் தந்தை அல்லாத (ஒரு)வரை (அவர் தன் தந்தையல்ல என்று) விவரம் அறிந்து கொண்டே 'அவர்தான் என் தந்தை'' என்று கூறும் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாகிறான். தனக்கு வமிசாவளித் தொடர்பு இல்லாத ஒரு குலத்தைக் குறித்து, தான், அந்தக் குலத்தைச் சேர்ந்தவன் தானென தன்னைப் பற்றிக் கூறிக் கொள்பவன், தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூதர்(ரலி) அறிவித்தார்.

1462. 'பொய்களிலேயே மிகப் பெரும் பொய், ஒரு மனிதன் தன்னைத் தன் தந்தையல்லாதவருடன் இணைத்து (நான் அவரின் மகன் என்று) கூறுவதும், தன் கண்கள் பார்க்காத ஒன்றை (ஒரு கனவை) அவை பார்த்தாகக் கூறுவதும், இறைத்தூதர் சொல்லாத ஒன்றை அவர்கள் சொன்னதாகச் சொல்வதும் ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என வாஸிலா இப்னு அல் அஸ்கவு(ரலி) அறிவித்தார்.

1463. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, 'கிஃபார்' குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! 'அஸ்லம்' குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! 'உஸைய்யா' குலம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டது'' என்று கூறினார்கள்.

1464. அஸ்லம், கிஃபார் ஆகிய குலங்களும் முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலங்களில் சிலரும் - அல்லது ஜுஹைனா அல்லது முஸைனா ஆகிய குலங்களில் சிலரும் அல்லாஹ்விடம் அல்லது மறுமை நாளில் அஸத், தமீம், ஹவாஸின் மற்றும் கத்ஃபான் ஆகிய குலங்களை விடச் சிறந்தவர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

'கஹ்தான்' குலத்தினர்.

1465. கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறியாமைக் கால (மாச்சரியங்களுக்கு) அழைப்பு விடுப்பது தடை செய்யப்பட்டதாகும்.

1466. ஜாபிர்(ரலி) கூறினார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகி விட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக் காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, 'அன்சாரிகளே!'' என்றழைத்தார். முஹாஜிர், 'முஹாஜிர்களே!'' என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, 'அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?' என்று கேட்டுவிட்டு, 'அவ்விருவரின் விவகாரம் என்ன?' என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது'' என்று கூறினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், 'நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?' நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்'' என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), 'இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!'' என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், 'முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்'' என்று பேசுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

1468. அம்ர் இப்னு லுஹை இப்னி கம்ஆ இப்னி கிந்திஃப் என்பவர் தம் குஸாஆ குலத்தாரின் தந்தையாவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1469. ஸயீத் இப்னு அல்முஸய்யப்(ரஹ்) கூறினார் 'அல் பஹீரா' என்பது (ஒட்டகங்களில்) எதனுடைய பாலை(க் கறக்கலாகாது என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டக(த்தின் நாம)மாகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். 'சாயிபா' என்பது அரபுகள் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேயவிட்ட ஒட்டகமாகும். எனவே, அதன் மீது சுமை எதுவும் சுமத்தப்படாது. மேலும், நபி(ஸல்) அவர்கள், 'குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு ஆமிர் இப்னி லுஹை என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்தான் முதன் முதலில் 'சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி)விட்டவர்'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூதர் கிஃபாரீ(ரலி) இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி.

1470. அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார் எங்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'அபூதர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்க, நாங்கள், 'சரி (அறிவியுங்கள்)'' என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அபூதர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது 'ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், 'நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா'' என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், 'உன்னிடம் என்ன செய்தி உண்டு'' என்று கேட்டேன். 'நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்'' என்றார். நான் அவரிடம், 'போதிய செய்தியை எனக்கு நீ கொண்டு வரவில்லை'' என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன். அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்பவில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம் ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ(ரலி) (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார். (என்னைக் கண்டதும்), 'ஆள் (ஊருக்குப்) புதியவர் போன்று தெரிகிறதே'' என்று கேட்டார். நான், 'ஆம்' என்றேன். உடனே அவர்கள், 'அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)' என்று கூறினார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும் (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும நபி(ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ(ரலி) என்னைக் கடந்து சென்றார்கள். 'மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?' என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், 'இல்லை' என்றேன். உடனே, அலீ(ரலி), 'என்னுடன் நடங்கள்' என்று சொல்லிவிட்டு, 'உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்'' என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், 'அவ்வாறே செய்கிறேன்'' என்று கூறினார்கள். நான் அப்போது 'இங்கே தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டபடி ஒருவர் புறப்பட்டிருக்கிறார்' என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. எனவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். எனவே, என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில், (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகிற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோராமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்'' என்று கூறினார்கள். இறுதியில், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்'' என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூதர்ரே! (நீ இஸ்லாத்தை ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கிவிட்ட செய்தி உனக்கு எட்டும்போது எங்களை நோக்கி வா'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்'' என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், 'குறைஷிக் குலத்தாரே!'' அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்'' என்று சொன்னேன். உடனே, அவர்கள் 'இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ்(ரலி) என்னை அடையாளம் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?)'' என்று கேட்டார்கள். உடனே, அவர்கள் என்னைவிட்டு விலகிவிட்டார்கள். மறுநாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போன்றே சொன்னேன். அவர்கள், 'இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்'' என்று கூறினார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போன்றே நடந்து கொண்டார்கள். அப்பாஸ்(ரலி) என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போன்றே (அன்றும்) கூறினார்கள்.

(இதை அறிவித்து பிறகு) இப்னு அப்பாஸ்(ரலி), 'இது அபூதர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அபூதருக்கு கருணை காட்டுவானாக!'' என்று கூறினார்கள்.

குலங்களின் பெயர் சொல்லி அழைத்தல்.

1471. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் '(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!'' என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!'' என்று குறைஷிகளின் கிளைக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.

ஒருவர், தம் வமிசம் ஏசப்படக் கூடாது என்று விரும்புவது.

1472. ஆயிஷா(ரலி) அறிவித்தார் (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசை பாடியபோது) இணைவைப்பவர்களுக்கு எதிராக வசைக் கவிதை பாடுவதற்கு நபி(ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் என் வமிசம் அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது எப்படி?' என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான்(ரலி), 'மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்'' என்று கூறினார்கள்.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் (ஒரு முறை) நான் ஹஸ்ஸான்(ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்'' என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் சிறப்புப் பெயர்கள்.

1473. எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன். நான் அஹ்மத் - இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ - அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

1474. குறைஷி (மறுப்பாளர்)களின் திட்டுதலையும், அவர்களின் சபித்தலையும் என்னை விட்டு அல்லாஹ் எப்படி திருப்பி விடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? (என்னை) 'முதம்மம்' (இகழப்படுவர்)' என்று (சொல்லி) ஏசுகிறார்கள்; சபிக்கிறார்கள். ஆனால் நானோ 'முஹம்மத்' (புகழப்படுபவர்) ஆவேன் என இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹூரைரா (ரலி)அறிவித்தார்.

நபிமார்களில் இறுதியானவர்.

1475. என்னுடைய நிலையும் (மற்ற) இறைத்தூதர்களது நிலையும் ஒரு வீட்டைக் கட்டிய மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் அதனை, ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்டு முழுமையாகவும் அழகாகவும் கட்டி முடித்திருந்தார். மக்கள் அதனுள் நுழைந்து (பார்வையிட்டு விட்டு) வியப்படைந்து, 'இச்செங்கல்லின் இடம் மட்டும் (காலியாக) இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!'' என்று கூறலானார்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

1476. என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும்விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, 'இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?' என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் இறப்பு.

1477. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள்.

''ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) இதே போன்ற ஹதீஸை எனக்கு அறிவித்தார்கள்'' என்று இப்னு ஷிஹாப் அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

1478. ஜுஅய்த் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார் சாயிப் இப்னு யஸீத்(ரலி) அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, (அந்த வயதிலும்) திடகாத்திரமானவர்களாக (கூன் விழாமல்) முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அவர்கள், 'எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின் நலம் அல்லாஹ்வின் தூதரின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிந்திருக்கிறேன். என் தாயின் சகோதரி என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார். இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள்'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் தன்மை.

1479. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார் அபூ பக்ர்(ரலி) அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலிலிருந்து) நடந்தபடி புறப்பட்டார்கள். அப்போது ஹஸன்(ரலி) அவர்களைக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். உடனே, அவர்களைத் தம் தோளின் மீது ஏற்றிக் கொண்டு, 'என் தந்தை உனக்கு அர்ப்பணமாகட்டும்! நீ (தோற்றத்தில் உன் பாட்டனார்) நபி(ஸல்) அவர்களை ஒத்திருக்கிறாய்; (உன் தந்தை) அலீ அவர்களை ஒத்தில்லை'' என்று கூறினார்கள். அப்போது அலீ(ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களின் இந்தக் கூற்றைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

1480. இஸ்மாயீல் இப்னு அபீ காலித்(ரஹ்) அறிவித்தார் ''நபி(ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அலீயின் மகன் ஹஸன் அவர்கள் அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி பொழிவதாக! நபி(ஸல்) அவர்களை (தோற்றத்தில்) ஒத்திருந்தார்கள்'' என்று அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார். நான் அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்களின் தன்மையை எனக்கு கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் பொன்னிறமுடையவர்களாக, வெண்மை கலந்த கருநிற தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். எங்களுக்கு பதின்மூன்று பெண் ஒட்டகங்கள் தரும்படி உத்திரவிட்டார்கள். அதை நாங்கள் கைவசம் பெற்றுக் கொள்வதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.

1481. ஹரீஸ் இப்னு உஸ்மான்(ரஹ்) கூறினார் நான் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு புஸ்ர்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் வயது முதிர்ந்தவளாக இருக்கும் நிலையில் அவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(நான் அவர்களைப் பார்த்தபோது) அவர்களின் கீழுதட்டின் அடியில் (தாடைக்கு மேலே) உள்ள குறுந்தாடியில் வெள்ளை முடிகள் இருந்தன'' என்று பதிலளித்தார்கள்.

1482. ரபீஆ இப்னு அபீ அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார் அனஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களின் உருவ அமைப்பை விவரிக்கக் கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் மக்களில் நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள்; நெட்டையானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை. பொன்னிறமுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள் சுத்த வெள்ளை நிறமுடையவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. முழுக்கவே படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வகை முடியை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருந்தபோது அவர்களுக்கு குர்ஆன் அருளப்படலாயிற்று. குர்ஆன் அருளப்படும் நிலையிலேயே மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கி வசித்து வந்தார்கள். மதீனா நகரிலும் பத்து ஆண்டுகள் வசித்து வந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையிலேயே இறந்துவிட்டார்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் ரபீஆ(ரஹ்) கூறினார்: நான் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒன்றை (நபியவர்களின் மறைவுக்குப் பின்) பார்த்தேன். அது சிவப்பாக இருந்தது.) நான் (அது குறித்து, நபியவர்கள் மருதாணி பூசி இருந்தார்களா என்று) கேட்டேன். அதற்கு, '(நபியவர்கள் பூசிய) நறுமணப் பொருளின் காரணத்தால் அது சிவப்பாகி விட்டது'' என்று பதிலளிக்கப்பட்டது.

1483. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு அதிக உயரமானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை. சுத்த வெள்ளை நிறம் உடையவர்களாகவும் இல்லை. மாநிறம் கொண்டவர்களாகவும் இல்லை. கடும் சுருள் முடியுடையவர்களாகவும் இல்லை. (தொங்கலான) படிந்த முடியுடையவர்களாகவும் இல்லை. நாற்பது வயதின் தொடக்கத்தில் அல்லாஹ் அவர்களைத் தம் தூதராக அனுப்பினான். அதன் பிறகு, அவர்கள் மக்கா நகரில் பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். அவர்களின் தலையிலும் தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.

1484. பராஉ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அழகிய முகம் உடையவர்களாகவும் அழகிய உருவ அமைப்பு உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகத் தெரியும் அளவிற்கு உயரமானவர்களாகவும் இல்லை. குட்டையானவர்களாகவும் இல்லை.

1485. கத்தாதா(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் மருதாணி பூசியிருந்தார்களா?' என்று கேட்டேன் அதற்கு அவர்கள், 'இல்லை. அவர்களின் நெற்றிப் பொட்டு முடியில் சிறிதளவு நரை இருந்தது. அவ்வளவுதான்'' என்று பதிலளித்தார்கள்.

1486. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை.

1487. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்)அவர்களின் முகம் வாளைப் போன்று மின்னிக்கொண்டு நீண்டதாக இருந்ததா? என்று பராஉ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை. ஆயினும் அவர்களின் முகம் சந்திரனைப் போல் பிரகாசமாகவும் வட்டமானதாகவும் இருந்தது எனப் பதிலளித்தார்கள்.

1488. அபூஜூஹைஃபா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்)அவர்கள் ஹஜ்ஜின்போது ஒருநாள் நண்பகல் கடும் வெயிலில் பத்ஹாவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் உளுசெய்து விட்டு ளுஹர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது அஸர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் சிறு ஈட்டி ஒன்று நடப்பட்டு இருந்தது. அந்த ஈட்டிக்கு அப்பால் பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். மக்கள் அப்போது எழுந்து நபி(ஸல்) அவர்களின் இரு கரங்களையும் எடுத்து தங்கள் முகங்களில் வருடிக்கொண்டனர். நான் நபி(ஸல்) அவர்களின் கரத்தை எடுத்து என்முகத்தில் மீது வைத்துக் கொண்டேன். அது பனிக்கட்டியை விடக் குளிர்ச்சியாகவும் கஸ்தூரியை விட நறுமணம் மிக்கதாகவும் இருந்தது.

1489. ஆதமின் சந்ததிகளில் தலைமுறை தலைமுறையாக நான் சிறந்த தலைமுறை வழியே (மரபணுக்களில் பாதுகாக்கப்பட்டு வந்து இப்போது) நான் தோன்றியிருக்கும் (இந்தச்) சிறந்த தலைமுறையில் தோன்றி இறைத்தூதராக்கப்பட்டுள்ளேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1490. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (முன் தலை) முடியை, (தம் நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரண்டு பக்கமும் தொங்கவிட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடி)களை (நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை, (இரண்டு பக்கங்க ளிலும்) பிரித்துக் கொண்டார்கள்.

1491. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. 'உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே'' என்று அவர்கள் கூறுவார்கள்.

1492. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே - அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை. அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.)

1493. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் உள்ளங்கையை விட மென்மையான பூம்பட்டையோ, (பூ வேலைப்பாடு செய்யப்பட்ட) தூய்மையான பட்டையோ நான் தொட்டதில்லை.

1494. நபி(ஸல்) அவர்களின் (உடல்) மணத்தை விட சுகந்தமான ஒரு நறுமணத்தை நான் நுகர்ந்ததேயில்லை.வேறு சில அறிவிப்புகளில் 'உடல் மணம்' என்பதற்கு பதிலாக 'வியர்வை' என்று இடம் பெற்றுள்ளது.

1495. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தனர். ஷுஅபா(ரஹ்) இதே போன்றதை அறிவித்துவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள் எதையாவது வெறுத்தால், அது அவர்களின் முகத்தில் தெரிந்துவிடும்'' என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.

1496. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.

1497. ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தை பேசுகிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக, தெளிவாகப் பேசி வந்தார்கள்.)

1498. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார் ''இன்னாரின் தந்தை (அபூ ஹுரைராவைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள் ஆயிஷா(ரலி).) உனக்கு வியப்பூட்டவில்லையா? அவர் வந்தார்; என் அறையின் பக்கமாக அமர்ந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து (தாம் கேட்டதை) என் காதில் விழுமாறு அறிவித்துக் கொண்டிருந்தார். நான் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தேன். நான் என் தஸ்பீஹை முடிப்பதற்குள் அவர் எழுந்து (சென்று) விட்டார். நான் அவரைச் சந்தித்திருந்தால் அவரை (ஒன்றன் பின் ஒன்றாக விடுவிடுவென்று நபிமொழிகளை அறிவித்துக் கொண்டே சென்றதை)க் கண்டித்திருப்பேன். நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக, வேகவேகமாக அறிவிப்பதைப் போல் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை'' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

1499. அப்துல்லாஹ் இப்னு அபீ நமிர்(ரஹ்) அறிவித்தார் எங்களிடம் அனஸ் இப்னு மாலிக்(ரலி), நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் பள்ளிவாசலிலிருந்து (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசினார்கள்: நபி(ஸல்) அவர்களுக்கு (மீண்டும்) வஹீ (இறைச்செய்தி) வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்தபோது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், 'இவர்களில் அவர் யார்?' என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், 'இவர்களில் சிறந்தவர்'' என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், 'இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்'' என்று கூறினார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் -(உறக்கநிலையில்)- அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்காது. இறைத் தூதர்கள் இப்படித்தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.

1500. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள், (மதீனாவிலுள்ள) 'ஸவ்ரா' என்னுமிடத்தில் இருந்தபோது அவர்களிடம் (தண்ணீர் இருந்த) ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் தம் கரத்தைப் பாத்திரத்தினுள் போட, அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து தண்ணீர் (ஊற்று போல்) பொங்கி வரலாயிற்று. மக்கள் அனைவரும் (அந்தத் தண்ணீரில்) உளூச் செய்தார்கள். அறிவிப்பாளர் கதாதா(ரஹ்) கூறினார்: நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் (மொத்தம்) எத்தனை பேர் இருந்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'முன்னூறு பேர்'' என்றோ, 'முன்னூறு பேர் அளவிற்கு'' என்றோ கூறினார்கள்.

1501. அல்கமா(ரஹ்) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நாங்கள் வழமைக்கு மாறான நிகழ்வுகளை அருள்வளம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம். நீங்களோ அவற்றை அச்சுறுத்தல் என்று எண்ணுகிறீர்கள். நாங்கள் (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மீதமான தண்ணீர் ஏதும் இருக்கிறதா என்று தேடுங்கள்'' என உத்திரவிட்டார்கள். மக்கள் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் கரத்தைப் பாத்திரத்தில் நுழைத்து, 'அருள் வளமிக்க, தூய்மை செய்யும் தண்ணீரின் பக்கம் வாருங்கள். பரக்கத் - அருள்வளம் என்பது அல்லாஹ்விடமிருந்து கிடைப்பதாகும்'' என்று கூறினார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துப் பொங்குவதைக் கண்டேன். (நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) உணவு உண்ணப்பட்டுக் கொண்டிருக்கும்போது அது இறைவனின் தூய்மையை எடுத்துரைப்பதாக - தஸ்பீஹ் செய்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

1502. முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினரோடு நீங்கள் போரிடாத வரையிலும், சிறிய கண்களும் சிவந்த முகங்களும் சப்பை மூக்குகளும், தோலால் மூடப்பட்ட கேயடங்களைப் போன்ற (அகலமான) முகங்களும் கொண்ட துருக்கியருடன் நீங்கள் போரிடாத வரையிலும் உலக முடிவு நாள் வராது. இந்த ஆட்சியதிகாரத்தில் தாம் சிக்கிக் கொள்ளும் வரை அதை அதிகமாக வெறுப்பவர்களை மக்களில் சிறந்தவர்களாக நீங்கள் காண்பீர்கள். (குணங்கள் மற்றும் ஆற்றல்களைப் பொருத்த வரை) மக்கள் சுரங்கங்கள் (போன்றவர்கள்) ஆவர். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள். (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1503. நீங்கள் (அரபியரல்லா) அந்நியர்களில் 'கூஸ்' வாசிகளுடனும் 'கிர்மான்' வாசிகளுடனும் போரிடாதவரை உலக முடிவு நாள் வராது. அவர்கள் சிவந்த முகங்களும் சப்பையான மூக்குகளும் சிறிய கண்களும் உடையவர்கள். அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட (அகன்ற) கேடயங்களைப் போன்றிருக்கும். அவர்கள் முடியாலான செருப்புகளை அணிந்திருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1504. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்'' என்று கூறினார்கள். மக்கள், '(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

1505. ஸயீத் அல் உமவி(ரஹ்)அவர்கள் கூறினார் நான் (முஆவியா - ரலி - அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் அவர்களுடனும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடனும் இருந்தேன். அப்போது அபூ ஹுரைரா(ரலி), உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான நபி(ஸல்) அவர்கள் 'குறைஷிகளில் சில இளைஞர்க(ளான ஆட்சியாளர்க)ளின் கைகளால் தான் என்னுடைய (இன்றைய) சமுதாயத்தின் அழிவு உண்டு' எனக் கூறக்கேட்டேன்'' என்றார்கள். உடனே மர்வான், அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், 'இளைஞர்களா?' என்று கேட்க, அபூ ஹுரைரா(ரலி) அவர்களை, 'இன்னாரின் சந்ததிகள், இன்னாரின் மக்கள்' என்று தனித்தனியே பெயர் குறிப்பிட்டுச் சொல்வேன்'' என்று பதிலளித்தார்கள்.

1506. ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார் என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி - ஸல் - அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் நபி - ஸல் - அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

1507. அலீ(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்து விடுவது, நபி அவர்களின் மீது புனைந்து சொல்வதை விட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி) லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்.'' என்று கூறினார்கள்.

1508. கப்பாப் இப்னு அல் அரத்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி, 'எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழிதோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட, ரம்பம் கொண்டு வரப்பட்டு அவரின் தலை மீது வைக்கப்பட்டு அது இரு கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும், அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. (பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும் நரம்பையும் சென்றடைந்து விடும். அ(ந்தக் கொடூரமான சித்திரவதையும் செய்)தும் கூட அவரை அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) 'ஸன்ஆ' விலிருந்து 'ஹளர மவ்த்' வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர, அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்சமாட்டார். ஆயினும், நீங்கள் தான் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவரசப்படுகிறீர்கள்'' என்று கூறினார்கள்.

1509. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு தங்களிடம் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம் சென்றார். ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம் வீட்டில் தலையைக் (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். 'உங்களுக்கு என்ன ஆயிற்று?' என்று அவரிடம் கேட்டதற்கு அவர், '(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி(ஸல்) அவர்களின் குரலை விட என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். எனவே, என் நற்செயல்கள் வீணாகிவிட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகி விட்டேன்'' என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் கூறினார் என்று தெரிவித்தார். அறிவிப்பாளர் மூஸா இப்னு அனஸ்(ரஹ்) (தம் தந்தை அனஸ் இப்னு மாலிக் - ரலி - அவர்களிடமிருந்து) அறிவித்தார்கள். அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரிடம்) நபி(ஸல்) அவர்கள் 'நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, 'நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்க வாசிகளில் ஒருவரே' என்று சொல்'' என்று கூறினார்கள்.

1510. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார் ஒருவர் (உசைத் இப்னு ஹுளைர் - ரலி-) தம் வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) 'அல் கஹ்ஃப்' (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து (பிரார்த்தனை புரிந்துவிட்டு சும்மாயிருந்து) விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடியது. இதை அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் (மறுநாள்) சொன்னபோது நபி(ஸல்) அவர்கள், 'இன்னாரே! ஓதிக் கொண்டே யிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்களின் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்'' என்று கூறினார்கள்.

1511. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், 'கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (தம் அந்த வழக்கப்படியே) நபி(ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், 'கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அந்தக் கிராமவாசி, 'நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கிற சூடாகிக் கொதிக்கிற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்'' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.)'' என்று கூறினார்கள்.

1512. அனஸ்(ரலி) அறிவித்தார் ஒருவர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு, அவர் இஸ்லாத்தைத் தழுவினார். 'அல்பகரா' மற்றும் 'ஆலு இம்ரான்' அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி(ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிறிஸ்தவராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) 'முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்தைத் தவிர வேறெதுவும் தெரியாது'' என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தையளித்தான். அவரை மக்கள் புதைத்துவிட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பிவிட்டிருந்தது. உடனே, (கிறிஸ்தவர்கள்), 'இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைவிட்டு ஓடி வந்துவிட்டதால் அவரின் மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டுவிட்டார்கள்'' என்று கூறினார். எனவே, அவருக்காக இன்னும் அழகாக ஒரு புதை குழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பி விட்டிருந்தது. அப்போதும், 'இது முஹம்மது மற்றும் அவரின் தோழர்களுடைய வேலைதான். நம் தோழர் அவர்களைவிட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்'' என்று கூறினர். மீண்டும் குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரை முடிந்த அளவிற்கு மிக ஆழமான குழியை அவருக்காகத் தோண்டி எடுத்து புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல. (இறைவனின் தண்டனை தான்) என்று புரிந்து கொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டுவிட்டனர்.

1513. ஜாபிர்(ரலி) அறிவித்தார் ''(எனக்குத் திருமணம் ஆன பொழுது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், 'எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்'' என்று பதிலளித்தார்கள். பின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம் 'எங்களைவிட்டு உன் விரிப்புகளை அப்புறப்படுத்து'' என்று கூறுவேன். அவள், 'நபி(ஸல்) அவர்கள், 'விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்' என்று கூறவில்லையா?' என்று கேட்பாள். 'அப்படியானால் அவற்றை (அவ்வாறே)விட்டு விடுகிறேன்'' (என்று நான் கூறுவேன்.)

1514. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் ஸஅத் இப்னு முஆத்(ரலி) உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணை வைப்போரின் தலைவர்களில் ஒரவனான) உமய்யா இப்னு கலஃப் அபூ ஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியாபாரத்திற்காக) ஷாம் நாட்டிற்கு மதீனா வழியாகச் செல்லும்போது ஸஅத்(ரலி) அவர்களிடம் தங்கு(ம் பழக்கம் உடையவன் ஆ)வான். உமய்யா, 'நண்பகல் நேரம் வரும் வரை சற்றுக் காத்திருந்து, மக்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் (அந்த) நேரத்தில் நீங்கள் சென்று (கஅபாவை) வலம் வரலாமே'' என்று கேட்டான். அவ்வாறே, ஸஅத்(ரலி) வலம் வந்து கொண்டிருந்தபோது அபூ ஜஹ்ல் வந்து, 'கஅபாவை வலம் வருவது யார்?' என்று கேட்டான். ஸஅத்(ரலி), 'நானே ஸஅத்'' என்று கூறினார்கள். அதற்கு அபூ ஜஹ்ல், '(மதீனாவாசிகளான) நீங்கள் முஹம்மதுக்கும் அவரின் தோழர்களுக்கும் (மதீனாவில்) புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா?' என்று கேட்டான். அதற்கு ஸஅத்(ரலி), 'ஆம் (அதற்கென்ன?)'' என்று கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே, உமய்யா, ஸஅத்(ரலி) அவர்களிடம், 'அபுல் ஹகமை விட குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்'' என்று சொன்னான். பிறகு ஸஅத்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வரவிடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன்'' என்று கூறினார்கள். அப்போது உமய்யா, ஸஅத்(ரலி) அவர்களிடம், 'உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்'' என்று சொல்லத் தொடங்கினான். அவர்களைப் பேசவிடாமல் தடுக்கலானான். எனவே, ஸஅத்(ரலி) கோபமுற்று, 'உம் வேலையைப் பாரும். (அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காதீர்.) ஏனெனில், நான் முஹம்மத்(ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொல்ல கேட்டிருக்கிறேன்'' என்று உமய்யாவிடம் கூறினார்கள். அதற்கு அவன், 'என்னையா (கொல்ல விருப்பதாகக் கூறினார்?)'' என்று கேட்டான். ஸஅத்(ரலி), 'ஆம் (உன்னைத் தான்)'' என்று பதிலளித்தார்கள். அவன், 'அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பேசினால் பொய் பேசுவதில்லை'' என்று சொல்லிவிட்டு தம் மனைவியிடம் சென்று, 'என்னிடம் என் யஸ்ரிப் (மதீனா) நகர தோழர் என்ன கூறினார்?' என்று வினவினாள். 'முஹம்மது என்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னாதாக அவர் கூறினார். என்று அவன் பதிலளித்தான். அவள், 'அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பொய் சொல்வதில்லை'' என்று சொன்னாள். மக்காவாசிகள் பத்ருப் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)தபோது உமய்யாவிடம் அவனுடைய மனைவி, 'உம் யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?' என்று கேட்டாள். எனவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை. அபூ ஜஹ்ல் அவனிடம், 'நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். எனவே, (நீயே போரில் கலந்து கொள்ளாமல் போய்விட்டால் நன்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களக்காவது போ(ய்க் கலந்து கொள்)'' என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாள்களுக்காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம் வரை சென்று விட, அங்கே) அல்லாஹ் அவனைக் கொன்றுவிட்டான்.

1515. அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா(ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா (என்ற நபித்தோழர்)'' என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தாம்'' என்று உம்மு ஸலமா - ரலி - அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்று எனக்குத் தெரியவந்தது)'' என்று கூறினார்கள்.

நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், 'யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்று பதிலளித்தார்கள்.

1516. நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு பொட்டல் வெளியில் ஒன்று திரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூ பக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி அல்லது இரண்டு வாளிகள் இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! பிறகு அதை உமர் எடுத்துக்கொள்ள, அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

வேதம் அறிந்தவர்கள் உண்மையை மறைத்தல்.

1517. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபச்சாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு'' என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத் தான் செய்கிறது'' என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.

இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (நபிகளார் இறைத்தூதரே என்பதற்கு) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும் படி கோரியதன் பேரில் நபி(ஸல்) அவர்கள், சந்திரன் பிளவுபடுவதை அவர்களுக்குக் காட்டியது.

1518. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்'' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.

1519. ஷபீப் இப்னு ஃகர்கதா(ரஹ்) அறிவித்தார் என் குலத்தார் உர்வா இப்னு அபில் ஜஅத்துல் பாரிகீ(ரலி) அவர்களைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன். உர்வா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அவர் ஓர் ஆட்டை வாங்குவதற்காக ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு தீனாருக்கு விற்றுவிட்டு ஒரு தீனாரையும் ஓர் ஆட்டையும் கொண்டு வந்தார். (அதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் அவரின் வியாபாரத்தில் அவருக்கு பரக்கத் (எனும் அருள்வளம்) கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார்.

0 comments:

Post a Comment