Saturday 31 October 2009

[பாடம்-63] உணவு வகைகள்.

பசியில் நபித்தோழர்.

1887. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் : எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்து விட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), 'அபூ ஹுரைரா!' என்று அழைத்தார்கள். நான், 'இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே கட்டளையிடுங்கள்'' என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்!'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு 'மீண்டும் (அருந்துங்கள்)'' என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகிவிட்டது. பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். '(என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களை விட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்து விட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும்படி உங்களிடம் கேட்டேன்'' என்று சொன்னேன். உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும்'' என்று கூறினார்கள்.

உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுவதும், வலக்கரத்தால் உண்பதும்.

1888. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்: நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!'' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

1889. ஆயிஷா(ரலி) அறிவித்தார் இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும்.

1890. கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அறிவித்தார் நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருந்தார். அப்போது 'நபி(ஸல்) அவர்கள் தாம் இறக்கும் வரை மிருதுவான ரொட்டியையோ, வெந்நீரால் முடி களையப்பட்டுத் தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டையோ உண்டதில்லை'' என்று அனஸ்(ரலி) கூறினார்.

1891. அனஸ்(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை. இதன் அறிவிப்பாளரான கத்தாதா(ரஹ்) அவர்களிடம், 'அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டு வந்தார்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'உணவு விரிப்பில்'' என்று பதிலளித்தார்கள்.

ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமாகும்.

1892. இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.

1893. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார் இப்னு உமர்(ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர்(ரலி) 'நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

சாய்ந்து கொண்டு சாப்பிடுதல் கூடாது.

1894. அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார் நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், 'நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை.

1895. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

வாற்கோதுமையில் (உமியை நீக்க) ஊதுவது.

1896. அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (சலித்து) சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை மாவை நீங்கள் பார்த்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நான், 'அப்படியானால் நீங்கள் வாற்கோதுமையைச் (சல்லடையில்) சலிப்பீர்கள் தானே?' என்று கேட்க, அவர்கள் 'இல்லை. ஆனால், நாங்கள் அதை (வாயால்) ஊதி (சுத்தப்படுத்தி) வந்தோம்'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் சாப்பிட்டு வந்தவை.

1897. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் ஏழு பேரீச்சம் பழங்களை வழங்கினார்கள். எனக்கும் ஏழு பேரீச்சம் பழங்கள் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத காய்ந்த) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.

1898. ஸயீத் இப்னு அபீ ஸயீத் அல்மக்புரீ(ரஹ்) கூறினார்: (நபித்தோழர்) அபூ ஹுரைரா(ரலி) (ஒரு நாள்), தம் முன்னே பொரிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களை(த் தம்முடன் அதைச் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாற்கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்றார்கள்'' என்று கூறினார்கள்.

1899. ஆயிஷா(ரலி) கூறினார் முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

'அத்தல்பீனா' (பால் பாயசம்).

1900. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் 'தல்பீனா' (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா(ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு 'ஸரீத்' (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் 'தல்பீனா' ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா(ரலி) 'இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், 'தல்பீனா' (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்'' என்று சொல்வார்கள்.

வெள்ளி கலந்த பாத்திரத்தில் உண்பது.

1901. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார் : நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள 'தைஃபூன்' நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அக்னி ஆராதனை செய்பவர் (மஜூஸி) ஒருவர் (வெள்ளிப் பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கோப்பையை அவர்களின் கையில் அவர் வைத்தபோது அதை அவர்கள் அவரின் மீது வீசியெறிந்தார்கள். பிறகு 'நான் பலமுறை இவரை (வாய்மொழியால்) தடுத்திராதிருந்தால்...'' என்று கூறினார்கள். (அதாவது 'பல முறை வாய்மொழியால் தடுத்தபோது அவர் இணங்கியிருந்தால்) நான் இவ்வாறு (வீசியெறியும் செயலைச்) செய்திருக்க மாட்டேன்'' என அவர்கள் சொல்வதைப் போன்றுள்ளது. ஆயினும், (நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்றால்,) நபி(ஸல்) அவர்கள் 'சாதாரண பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்'' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஒருவர் தம் சகோதரர்களுக்காக உணவு தயாரிக்க சிரமம் எடுத்துக்கொள்வது.

1924. அபூ மஸ்வூத் உக்பா இப்னு ஆமிர் அல்அன்சாரி (ரலி) கூறினார்: அபூ ஷுஐப் என்று அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவர் அந்தப் பணியாளரிடம், 'எனக்காக உணவு தயாரித்து வை! (ஐந்து பேரை விருந்துக்கு அழைக்கவிருக்கிறேன். அந்த) ஐவரில் ஒருவராக இறைத்தூதர்(ஸல்) அவர்களை அழைக்கவிருக்கிறேன்'' என்று கூறிவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களை ஐந்து பேரில் ஒருவராக அழைத்தார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்துவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் என்னை ஐந்து பேரில் ஒருவராக (விருந்துக்கு) அழைத்தீர்கள்! இந்த மனிதரோ எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் விரும்பினால் அவருக்கு அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரைவிட்டு விடலாம்'' என்று கூறினார்கள். அதற்கு அபூ ஷுஐப்(ரலி) 'இல்லை. அவருக்கு நான் அனுமதியளித்து விட்டேன்'' என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு யூசுஃப்(ரஹ்) கூறினார்: முஹம்மத் இப்னு இஸ்மாயீல் (அல்புகாரீ (ரஹ்) அவர்கள், '(விருந்தில்) ஒரு வட்டிலில் (ஸஹனில்) அமர்ந்துள்ள நபர்கள் மற்றொரு வட்டிலில் இருந்து (உணவை) எடுத்துண்ணலாகாது. ஆனால், ஒரே வட்டிலில் அமர்ந்திருப்போர் (வேண்டுமானால், அதிலுள்ள உணவை) ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளலாம்; அல்லது (அதைச் செய்வதைக்கூட) கைவிடலாம்'' என்று கூறினார்கள்.

பேரீச்சச் செங்காய்களுடன் வெள்ளரிக்காயை(யும் சேர்த்து) உண்பது.

1903. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை கண்டேன்.

நபித்தோழர் கடனை அடைக்க நிகழ்ந்த அற்புதம்.

1904. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்: மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம் பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்) வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத்திருந்தார். 'ரூமா' கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. எனவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப்போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் (கடனைத் திருப்பிக் கேட்டு) வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. எனவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டு வரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்களிடம் 'புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம்'' என்று கூறினார்கள். நான் என்னுடைய பேரீச்சந் தோப்பில் இருந்தபோது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர் 'அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன்'' என்று கூறலானார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சம் மரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அவர் யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி(ஸல்) அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு '(நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே, ஜாபிர்?' என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி(ஸல்) அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு, எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்துவிட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு, 'ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உன்னுடைய கடனை) அடைப்பாயாக!'' என்று கூறினார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (என்னுடைய கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதமிருந்தது. நான் புறப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், 'நான் இறைத்தூதர்தாம் என்று நானே சாட்சியம் அளிக்கிறேன்'' என்று கூறினார்கள்.

'அல்அஜ்வா' (எனும் அடர்த்தியான மதீனாப் பேரீச்சம் பழம்).

1905. தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது. எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

விரல்களைக் கைக்குட்டையால் துடைப்பதற்கு முன் அவற்றை நாக்கால் வழித்து உறிஞ்சுவது.

1906. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ள வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

கைக்குட்டை(யால் துடைப்பது).

1907. ஸயீத் இப்னு ஹாரிஸ்(ரஹ்) கூறினார் நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம், 'நெருப்புத் தீண்டிய (சமைத்த) உணவை உண்பதால் (தொழுகைக்காக மீண்டும்) அங்கசுத்தி (உளூ) செய்ய வேண்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'தேவையில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அது போன்ற உணவு அரிதாகவே எங்களுக்குக் கிடைத்துவந்தது. அவ்வாறு எங்களுக்கு அது கிடைக்கும்போது எங்கள் முன்கைகள், மேல்கைகள் மற்றும் பாதங்கள் தாம் எங்களின் கைகுட்டைகளாக இருந்தன. பிறகு நாங்கள் தொழுவோம். (நெருப்பால் சமைத்த உணவை உண்டதற்காகப் புதிதாக) அங்கசுத்தி செய்யமாட்டோம்'' என்று பதிலளித்தார்கள்.

உணவு உண்ட பின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.

1908. அபூ உமாமா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு விரிப்பை எடுக்கும்போது 'அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது. கைவிடப்படக் கூடாதது. தவிர்க்க முடியாதது ஆகும்.)

1909. அபூ உமாமா(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் 'உணவு உண்ட பின்' அல்லது 'தம் உணவு விரிப்பை எடுக்கும் போதோ' 'அல்ஹம்துலில்லாஹி கஅபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின்'' என்று கூறுவார்கள். (பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, எங்களின் தாகம் தணித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது. இப்புகழ் முற்றுப் பெறாதது. மறுக்க முடியாதது ஆகும்.) சில வேளைகளில், 'ல(க்)கல் ஹம்து ரப்பனா, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் ரப்பனா'' என்று கூறுவார்கள். (பொருள்: உனக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது எங்கள் இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது. கைவிடப்படக் கூடாதது. தவிர்க்க இயலாதது ஆகும்.)

''நீங்கள் உணவருந்திவிட்டால் (உடனே) கலைந்து சென்று விடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத் தொடர்.

1910. அனஸ்(ரலி) கூறினார்: பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் அருளப்பட்ட சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நானே. உபை இப்னு கஅப்(ரலி) என்னிடம் அது பற்றிக் கேட்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை வலீமா மணவிருந்துக்காக அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்ற பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறு சிலரும் அமர்ந்திருந்தார்கள். இறுதியில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களின் அறைவாசலை அடைந்தார்கள். பிறகு வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறி விட்டதாகக் கருதித் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போதும் அந்தச் சிலர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் திரும்பி விட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (ஸைனப்(ரலி) அவர்களின் இல்லத்திற்கு) நபியவர்கள் திரும்ப, நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் எழுந்து சென்று விட்டிருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டார்கள். அப்போதுதான் பர்தா(வின் சட்டத்தைக் கூறும் இறைவசனம்) அருளப்பெற்றது.

0 comments:

Post a Comment