Friday 13 November 2009

[பாடம்-68] நோயாளிகள்.

நோய் (பாவங்களுக்கு) ஒரு பரிகாரம் என்பது குறித்து வந்துள்ளவை.

1949. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

1950. இறைநம்பிக்கையாளரின் நிலையானது, இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்றுவிட்டால், அது நேராக நிற்கும். சோதனையின்போது (இறை நம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறே). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேடியாக) உடைத்து (சாய்த்து) விடுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1951. யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கடுமையான நோய்.

1952. ஆயிஷா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1953. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார் : நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். 'தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை'' என்று கூறினார்கள்.

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்குரிய சிறப்பு.

1954. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார் : இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்: நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர் தாம் கஅபாவின் திரை மீது (சாய்ந்த படி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.

கண்பார்வை இழந்தவருக்குரிய சிறப்பு.

1955. அல்லாஹ் கூறினான்: நான் என் அடியானை, அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருட்களை(ப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.('அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருள்கள்' என்பது) அவனின் இரண்டு கண்களைக் குறிக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

1956. ஜாபிர்(ரலி) கூறினார் : நபி(ஸல்) அவர்கள் (நான் நோயுற்றிருந்த போது) என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. குதிரையின் மீது பயணம் செய்தபடியும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்கள்.)

நபி(ஸல்) அவர்களின் நகைச்சுவை.

1957. காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) கூறினார்: (ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), 'என் தலை(வலி)யே!'' என்று சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்'' என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), 'அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்து விட்டு) 'இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) 'என் தலை(வலி)யே!' என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன் தந்தை) அபூ பக்ருக்கும் அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)'' என்று கூறினார்கள்.

நோயாளி மரணத்தை விரும்புவது (கூடாது).

1958. உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!'' என்று கேட்கட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

1959. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார் : நாங்கள் கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தம் வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள: முன்சென்றுவிட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாத நிலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்து விட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம். நபி(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்கா விட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயினால் சிரமப்படுகிறேன்.) மற்றொரு முறை நாங்கள் கப்பாப்(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது தம் (வீட்டுச்) சுவரைக் கட்டிக்கொண்டிருந்த அவர்கள் 'ஒரு முஸ்லிம், தாம் செய்கிற எல்லாச் செலவினங்களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கிற செலவைத் தவிர'' என்று கூறினார்கள்.

1960. அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எவரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனிபெரும் கருணையாலேயே எவரும் சொர்க்க புகமுடியும்)'' என்று கூறினார்கள். மக்கள், 'தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்பதில்லை) இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) என்னையும் தான்; அல்லாஹ் (தன்னுடைய) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர'' என்று கூறிவிட்டு, 'எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர்(உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்'' என்று கூறினார்கள்.

உடல் நலம் விசாரிக்கச் சென்றவர் நோயாளிக்காகப் பிரார்த்திப்பது.

1961. ஆயிஷா(ரலி) கூறினார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச்) சென்றால்' அல்லது 'நோயாளி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்' அவர்கள், 'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்'' என்று பிரார்த்திப்பார்கள்.(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.) மற்றோர் அறிவிப்பில் 'நோயாளி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்'' என்றும், இன்னோர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் சென்றால்'' என்றும் இடம்பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment