Thursday 19 November 2009

[பாடம்-70] ஆடை அணிகலன்கள்.

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் ஆடை நரகம் செல்லும்.

1984. கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு பிடித்த ஆடை.

1985. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : அணிவதற்கு (பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான ஆடையாக இருந்தது.

1986. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்: ''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் உடல் (பருத்தியாலான) யமன் நாட்டுப் போர்வையால் போர்த்தி மூடப்பட்டது'' என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

1987. அபூ தர்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். பிறகு அவர்கள் விழித்துக்கொண்டபோது (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ்'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் மனிதர் எவராயினும், அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்றார்கள். நான் (மீண்டும்) 'அவர் விபச்சார புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்)'' என்றார்கள். நான் (மூன்றாவது முறையாக) 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரி (சொர்க்கம் புகுந்தே தீருவார்). அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அபுல் அஸ்வத் அத்துஅலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூ தர்(ரலி) அவர்கள் இதை அறிவிக்கும்போது 'அபூ தர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வினாலும் சரியே'' என்று கூறி வந்தார்கள்.

ஆண்கள் பட்டாடை அணிவதும் பட்டில் பயன்படுத்த அனுமதிக்கப் பட்ட அளவும்.

1988. அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத்(ரலி) அவர்களுடன் (ஈரானிலுள்ள) ஆதர்பைஜானில் இருந்தபோது எங்களிடம் உமர்(ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டு விரல்களால் நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அறிவிப்பாளர் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அறிந்தவரை (அவர்கள் குறிப்பிட்ட 'இந்த அளவு' என்பது, ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டைக் குறிக்கிறது.

1989. அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : நாங்கள் உத்பா இப்னு ஃபர்கத்(ரலி) அவர்களுடன் (ஆதர்பைஜானில்) இருந்தோம். அப்போது அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் எழுதிய கடிதத்தில் (நபி(ஸல்) அவர்கள், 'இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்றார்கள் எனக் குறிப்பிடப் பட்டிருந்தது. மற்றோர் அறிவிப்பில், 'அபூ உஸ்மான்(ரஹ்) அவர்கள் தங்களின் சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் சைகை செய்தார்கள்'' என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

பட்டுத் துணியை விரிப்பாகப் பயன்படுத்துதல்.

1990. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருக வேண்டாமென்றும், அவற்றில் உண்ண வேண்டாமென்றும், (ஆண்கள்) சாதாரண பட்டையும் அலங்கார பட்டையும் அணிய வேண்டாமென்றும், பட்டின் மீது அமர வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப் பூச் சாயமிட்டுக் கொள்வது தடை செய்யப்பட்டதாகும்.

1991. அனஸ்(ரலி) அறிவித்தார்: ஆண்கள் (தங்களின் மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளும் மற்றவைகளும்.

1992. ஸயீத் அபூ மஸ்லமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுது வந்தார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம் (தொழுது வந்தார்கள்)'' என்றார்கள்.

முதலில் இடது கால் காலணியைக் கழற்ற வேண்டும்.

1993. நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரேயொரு காலணியில் நடக்கலாகாது.

1994. நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றி விடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவித்தார்.

''என்னுடைய மோதிரத்தின் இலச்சினை போன்று வேறு யாரும் இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

1995. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' (இறைத்தூதர் முஹம்மது) என்று இலச்சினை பொறித்தார்கள். மேலும், 'நான் வெள்ளி மோதிரம் ஒன்றைச் செய்து, அதில் 'முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' என இலச்சினை பொறித்துள்ளேன். எனவே, வேறு யாரும் அதைப் போன்று இலச்சினை பொறிக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.

பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல்.

1996. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார் : நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், 'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர்(ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.

இணைவைப்போருக்கு மாறுசெய்தல்.

1997. இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர்(ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடிப்பதுப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்.

(நரை முடிக்குச்) சாயமிடுதல்.

1998. யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் தலைமுடி.

1999. கத்தாதா(ரஹ்) அவர்கள் அறிவித்தார் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (தலை) முடி பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (தலை) முடி அலையலையானதாக இருந்தது. படிந்த முடியாகவும் இல்லை. சுருள் முடியாகவும் இல்லை. அவர்களின் காது மடல்களுக்கும் அவர்களின் தோளுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது'' என்று பதிலளித்தார்கள்.

2000. அனஸ்(ரலி) அறிவித்தார்: நபி(ஸல்) அவர்கள் பருத்த கைகளும் பருத்த பாதங்களும் உடையவர்களாகவும், முகம் அழகானவர்களாகவும் இருந்தார்கள். நான் அவர்களுக்கு முன்போ அவர்களுக்குப் பின்போ அவர்களைப் போன்று (வேறு யாரையும்) பார்க்கவில்லை. அவர்களின் உள்ளங்கைகள் விசாலமானவையாக இருந்தன.

தலைமுடியில் சிறிதளவு மழித்துவிட்டு சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது.)

2001. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசுவது.

2002. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு, அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசிவந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களின் தலையிலும் அவர்களின் தாடியிலும் என்னால் காணமுடிந்தது.

நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்வது.

2003. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்) அறிவித்தார்: அனஸ்(ரலி) (தமக்கு அன்பளிப்பாகத் தரப்படும்) நறுமணப் பொருளை மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட) நறுமணப் பொருளை மறுத்ததில்லை'' என்று கூறினார்கள்.

('தரீரா' எனும்) வாசனைத் தூள்.

2004. ஆயிஷா(ரலி) அறிவித்தார் : இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதா) 'விடைபெறும்' ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியபோதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் என் இரண்டு கைகளால் அவர்களுக்கு ('தரீரா' எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.

உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாளில் கிடைக்கும் வேதனை.

2005. இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)'' என (இடித்து)க் கூறப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உருவப் படங்களைச் சிதைத்தல்.

2006. அபூ ஸுர்ஆ இப்னு அம்ர் இப்னி ஜரீர்(ரஹ்) கூறினார்: நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைவபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்'' என்றார்கள். பிறகு (அங்கசுத்தி செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இருகைகளையும் அக்குள் வரை கழுவினார்கள். நான், 'அபூ ஹுரைரா அவர்களே! இது (அக்குள் வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?' எனக் கேட்க, அவர்கள், '(அங்கசுத்தி செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்'' (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள்.

0 comments:

Post a Comment